திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-83:
ஒழுக்கமுடைமை:
திருவள்ளுவர் அவர்கள் உடைமை என்னும் தலைப்பில் எழுதிய அதிகாரங்களைப் பற்றிப் பார்க்கின்றோம். கடந்த வாரங்களில் அன்புடைமை;, அறிவுடைமை மற்றும் அடக்கமுடைமை பற்றிப் பார்த்தோம். புலன்களைத் தீய வழிகளில் செல்லாமல் கட்டுப்படுத்துவதைப் பற்றி அடக்கமுடைமையில் திருவள்ளுவர் குறிப்பிட்டார். அடக்கம் என்பது பெரும்பாலும் தீயவற்றிலிருந்து விலகி நிற்றல் என்ற எதிர்மறைச் செயலைக் குறிக்க, ஒழுக்கம் என்பது நல்லவற்றைச் செய்தல், சமூகத்தோடு இயைந்து ஒழுகுதல் என்ற நேர்மறையான, செயலாக்க ரீதியான நடத்தைகளைக் குறிக்கிறது. அடக்கம் என்ற அடித்தளத்தின் மீது கட்டியெழுப்பப்படும் அற மாளிகையே ஒழுக்கம் ஆகும். இந்த வாரம் ஒழுக்கமுடைமை அதிகாரத்தினைப் பார்ப்போம்.
திருவள்ளுவரின் அறவியலில் ஒழுக்கம் என்பது மற்ற அறங்களைப் போல ஒருசார்புநிலைப் பண்பாகக் கருதப்படவில்லை. மாறாக, அது ஒரு முழுமுதற் பண்பாக, அனைத்து அறங்களுக்கும் அடித்தளமாக விளங்குகிறது. இந்த அதிகாரத்தின் முதற் குறளே இதை ஆணித்தரமாக நிறுவுகிறது.
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும் - 131
உயிர்தான் வாழ்வின் அடிப்படை நிபந்தனையாக அனைவரும் கருதி வரும் நிலையில், அதையும் விட மேலானதாக ஒழுக்கத்தை நிலைநிறுத்துகிறார். இதன் உள்ளார்ந்த பொருள், ஒழுக்கமற்ற உயிர்வாழ்வு பொருளற்றது என்பதாகும். இதன் மூலம், மனிதன் ஒரு உயிரியல் தன்மையானவன் என்பதனைத் தாண்டி, ஒரு அறவியல் தன்மையானவன் என்பதனை ஆணித்தரமாக நிறுவுகிறார். ஒழுக்கமே மனிதனை விலங்குகளிடமிருந்து வேறுபடுத்தும் அடிப்படை பண்பாகிறது.
அடுத்தக் குறட்பாவில்,
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை -132
எந்தெந்த வழியில் பலஅறங்களை ஆராய்ந்து அதனைக் கொண்டு தெளிவடைந்தாலும், ஒழுக்கமே உயிருக்குத் துணையாகும், எத்தகைய துன்பத்தை ஏற்றுக் கொண்டாவது அதனைக் காத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்தக் குறட்பாவில்,
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும் - 133 என்கிறார், அதாவது தங்களை உயர்ந்தக் குடி என்று ஒருவன் சொல்லிக் கொள்ள வேண்டும் என்றால் அவர், ஒழுக்கம் உடையவராக இருப்பது தான் உயர்ந்தக் குடிப்பிறப்பின் தன்மை, அப்படி இல்லாமல் ஒழுக்கம் கெடுதலாக இருத்தல் இழிந்த பிறப்பின் தன்மையாகி விடும் என்கிறார்.
மீண்டும் உயர்பிறப்பு என்று ஒருவன் தன்னை பெருமை பாராட்டிக் கொள்ள வேண்டும் என்றால் அவன் ஒழுக்கமுடையவராக இருத்தலே ஆகும் என்பதனை அடுத்தக் குறட்பாவில் வலியுறுத்துகிறார்.
மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் -134 என்கிறார். அதாவது, கற்றதை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ளலாம், ஆனால், வேதமோதுவான் பிறப்பால் வந்த உயர்வு, அவன் ஒழுக்கம் குன்றினால் கெடும் என்கிறார்.
அடுத்த குறட்பாவில்,
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு -135 என்கிறார், அதாவது
பொறாமை உடையவனுக்குச் செல்வம் அமையாதது போல, ஒழுக்கம் இல்லாதவன் வாழ்க்கையிலும் எந்த உயர்வு என்பதும் இல்லை என்கிறார்.
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி
No comments:
Post a Comment