திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-82:
அடக்கமுடைமை:
கடந்த வாரம், அடக்கமுடமை அதிகாரத்தின் முதற்பகுதியைப் பார்த்தோம், இந்த வாரம் அதன் பிற்பகுதியைப் பார்ப்போம், தாமதத்திற்கு பொறுத்துக் கொள்க:
மனித வள மேலாண்மையில், அல்லது நிறுவனத்தில் எந்த ஒரு சூழலிலும் பணியாளர்களை அல்லது சக ஊழியர்களை கையாள்வதற்கு முக்கியமாக நெருக்கடியான அல்லது பிரச்சனைக்குரிய நேரங்களில் கையாளுவதற்கு தனித்திறமை வேண்டும் முக்கியமாக வார்த்தைகளில் தனிக் கவனம் தேவைப்படுகிறது மேலும், கவனிப்பதும் அவசியமான ஒன்றாகிறது. அதற்குப் பிரதிபலிப்பது என்பது மற்றுமொரு அம்சம், இதனை (Emotional Intelligence) உணர்வுசார் நுண்ணறிவு என்கின்றனர். இதனையே வள்ளுவர் பின்வரும் குறள்களில் விளக்குகிறார்.
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுநம்யும் ஏமாப் புடைத்து – 126
ஆமையானது தன்னுடைய நான்கு கால்கள், ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் மறைத்துக் கொள்வது போல ஒருவன் தன் ஒரு பிறப்பில் மெய், வாய், கண், மூக்கு மற்றும் செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அறத்திற்கு எதிரான தீமை வரும்போது அடக்கும் ஆற்றல் பெறுவான் எனில் அது அவனுக்குப் ஏழு வகையான பிறப்புகளிலும் அரணாக இருந்து உதவும் என்கிறார்.
அடுத்தக் குறளில் வார்த்தைப் பயன்பாட்டின் அவசியம் முக்கியம் என்கிறார்.
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு -127
ஒருவர் எப்படிப்பட்ட காரியம் வேண்டுமானாலும் காத்து நின்றிருக்கலாம். ஒருவேளை காக்க முடியாலும் போயிருக்கலாம். ஆனால், எதனைக் காக்கா விட்டாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு காக்கத் தவறினால் அவர் நாவில் இருந்தும் வார்த்தையே அவரைத் துன்பத்தில் கொண்டு போய் சேர்க்கும். அதனால் வார்த்தைப் பிரயோகம் முக்கியான ஒரு விடயம் என்பதனை உணர்த்துகிறார்.
நிறைய பேர் ‘வெடுக் வெடுக்” என்று பேசுவதைக் கேட்டிருப்போம், அவ்வாறு பேசும் போது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல பேச்சில் நஞ்சையும் ஏற்றுவது உண்டு. தொலைக்காட்சி விவாதங்களில் அடிக்கடி விவாதம் சர்ச்சையாக மாறுவதற்குக் காரணம் தீச்சொற்கள் பயன்படுத்துதால் சிலசமயம் அவதூறுகள் பரப்பப்படுவதையும் பார்த்திருப்போம். அந்த மாதிரி தீச்சொல்லையே தவறான சொற்களையோ ஒருவர் பிரயோகிக்கும் போது அவர் குறித்த மதிப்புக் கெடுகிறது. அடுத்த முறை அவர் பேசும்போது அவர் பேச்சை விரும்பிக் கேட்டவர்களே முகத்தைச் சுளித்துக் கொண்டு கடந்து செல்வதுண்டு. இதுபோன்ற விடயத்தை முக்காலமும் உணர்ந்த ஞானி விளக்குகிறார் பின்வருமாறு:
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும் -128
தீய சொற்களின் பொருளால் விளையும் தீமையானது சிறியதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையும் தீமையாகப் போய்விடும்.
அடுத்தக் குறள் பெரும்பாலானோருக்குப் பரிச்சயமான குறள், ‘ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும்” என்று சொல்வடை உண்டு. நாவில் இருந்து வெளிவரும் நாவிற்கு அந்த அளவிற்கு வலு உள்ளது. பாருங்கள்..
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு -129 என்கிறார்.
ஒருவனை தீயினால் சுட்டப் புண்ணால் ஏற்பட்ட தீ;க்காயமும் வடுவும் வெளியே இருந்தாலும் உள்ளே ஆறிவிடும், ஆனால், நாவினால் உதிர்க்கும் தீய சொல்லானது சுடும் மேலுமம் அதன் வடு புண்ணாகவே கிடந்து ஒரு நாளும் ஆறாமல் இருக்கும் என்கிறார்.
தமிழக அரசின் முக்கிய வாசகமாக ‘வாய்மையே வெல்லும்” என்று பார்த்திருப்போம். எவன் ஒருவன் அறத்துடன் வாழ்ந்து வருகின்றானோ, உணர்வுசார் நுண்ணறிவுடன் வாழ்கின்றாரோ அவருக்கு அவதூறுகள் அநீதியான பொய்யான குற்றச்சாட்டுகள் அவர் மீது வீசப்பட்டாலும், அவருடைய நேர்மை அவரைக் காத்து பொய்யர்களை பொதுவெளியில் தெரியப்படுத்தும். இதற்கு நாம் பல உதாரணங்களை பொதுவாழ்வில் நேர்மையானவர்கள் பெற்ற வெற்றியில் இருந்து உணரலாம். இதனையே
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து -130 என்கிறார். அதாவது
கல்வி கற்று மனதினுள் கோபம் பிறக்காமல் காத்து, அடக்கமாக வாழும் ஆற்றல் படைத்தவனை அடைவதற்கான நேரத்தை எதிர்பார்த்து அறம் அவன் வழியில் நுழைந்து காத்து நிற்கும் என்கிறார்.
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி
No comments:
Post a Comment