Tuesday, 4 March 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 59





திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 59
ஊடலுவகை:
கடந்த வாரம் புலவி நுணுக்கம் அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம்; ஊடலுவகை அதிகாரத்தில் இருந்து பார்ப்போம்.; புலவியின் பின்பு கிடைக்கக் கூடிய இன்பத்தினைக் குறிக்கின்றது. 
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு -1321
பிணங்கிக் கொள்வதும் ஒருவகையில் அன்பு செலுத்துதல் தானே? இதோ தலைவி சொல்வதைக் கேளுங்கள்...’ அவர் மீது தவறே ஏதும் இல்லையென்றாலும், அவரோடு பிணங்கிக் கொள்வது, அவர் நம்மீது மிகுதியாக அன்பைச் செலுத்தும்படி செய்யவல்லதாகும்” என்கிறார். 
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும் -1322
இந்த ஐயனைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை...உங்களுக்குப் புரிகிறதா என்று பாருங்கள்... ‘அவருடன் நான் கொண்ட ஊடல் காரணமாக தோன்றும் துன்பம், அந்தப் பொழுதிலே அவர் செய்யும் நல்ல அன்பினை வாடச் செய்வதற்குக் காரணமான இருந்தாலும், பின்னர் பெருமை பெறும்” என்கிறார். 
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து -1323
நீரானாது எத்தகைய நிலத்தினை அடைகின்றதோ அத்தகைய நிறத்தினைப் பெறுகின்றது. அதுபோன்றே எது உள்ளது என்று வள்ளுவர் எடுத்தியம்புகிறார் என்று பாருங்கள் ‘நிலத்தோடு நீர் பொருந்தினாற் போல அன்புடைய என்னுடைய காதலரிடத்தில் ஊடிப் பெறும் இன்பத்தைப் விடப் புதிய உலகம் வேறொன்று இருக்க முடியுமா?” என்று கேட்கிறார். 
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை -1324
ஊடல் என்ன தான் செய்யும்? பதில் வள்ளுவர் உரைக்கிறார் தலைவி வழி நின்று...
‘என் காதலனை இறுகத் தழுவி இணை பிரியாமல் இருப்பதற்குக் காரணமாக ஊடல் அமைகிறது. அந்த ஊடலில்தான் என் உள்ளத்து உறுதியை உடைக்கும் படைக்கலனும் இருக்கிறது”
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து -1325
‘தவறே செய்யாமல் இருந்த நிலையிலும் கூட தன் தலைவியின் ஊடலுக்கு ஆளாகித் அவளுடைய மெல்லிய தோள்களை கூடிப் பெறாத போது, அந்த ஊடலிலும் ஓர் இன்பம் இருக்கிறது” அன்பின் ஆழத்தை நன்கு உணர்ந்த ஒருவரால் மட்டுமே இதுபோன்று எழுத இயலும். 
உணலிலும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது -1326
சாப்பிட்ட சாப்பாடு செரிக்காமல் இருந்தால் அந்த நிலையில் அடுத்த வேளை சாப்பாடு சாப்பிடும் நிலை வந்தால் அதன் நிலைமைய அனுபவிக்கும் போது தான் புரியும். ‘உண்பதைக் காட்டிலும் ஏற்கனவே உண்டது செரித்தலே இன்பமாகும், அதுபோல, கூடிக் கலப்பதை விட ஊடல் கொள்வதிலேயே காதலர்க்கு ஒரு சுகம் உண்டு” என்கிறார்.
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் 
கூடலிற் காணப் படும் -1327
கணவன் மனைவிக்கும் அன்னியோனியம் கூடுவதற்கு விட்டுக் கொடுத்தல் முக்கியமாகக் கைகொடுக்கும் இதனை வள்ளுவர் எவ்விதம் எடுத்துரைக்கிறார் என்பதைப் பாருங்கள். ‘ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆகிறார், அந்த உண்மையை, ஊடல் முடிந்த பின் கூடி மகிழும் இன்பத்தில் அறியலாம்” என்கிறார். வள்ளுவர் ஞானி தானே?
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு -1328
ஊடலும் நல்லதுதானோ காதலரின் கூற்றைக் கேட்கும் போது...
‘நெற்றி வியர்க்கும் படியாக கூடும்போது உண்டாகும் இன்பத்தை, மறுபடியும் ஒருமுறை ஊடல் தோன்றினால், அதன் வாயிலாகப் பெற முடியும் அல்லவா?”
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப 
நீடுக மன்னோ இரா -1329
காதலில் அடங்கிப் போதல் என்பது இதுதானோ? 
‘ஒளி மிகும் அணிகலன்களை அணிந்த இவள் இன்னும் என்னுடன் ஊடட்டும், அப்போது அதிக நேரம் இருக்கும்படி நான் வேண்டிக் கொள்ள, இந்த இரவு விடியாது நீளட்டும்”
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின் -1330
இன்பத்தில் இன்பம் ஊடலா? கூடலா? பதில் கீழே:
‘காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அது அந்த ஊடலுக்கு மிகுந்த இன்பமாகும்” என்கிறார்.
இத்துடன் காமத்துப் பால் அதிகாரம் முற்றிற்று. 
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

No comments:

Post a Comment