Thursday, 13 March 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-60

கடந்த வாரம் வரை காமத்துப்பாலின் அதிகாரங்களில் உள்ள குறள்களின் விளக்கங்களைப் பார்த்தோம். இனி தொழில் குறித்த திருவள்ளுவரின் சிந்தனைகளைப் பார்ப்போம். இந்த வாரம் எனது ஆராய்ச்சிக் கட்டுரையின் சில பகுதிகளை திருக்குறளின் தொழில் புரட்சி சிந்தனைகளாக வழங்குகின்றேன். 
வால்டேர், ரூசோ, மாண்டெஸ்கியூ, திதரோ போன்ற தத்துவஞானிகள் பிரெஞ்சுப் புரட்சியில் பிரான்சின் குடிமக்களை தங்கள் புரட்சிகர சிந்தனைகளால் ஊக்குவித்து, அநீதிகளுக்கு எதிராகப் போராட அவர்களைத் தயார்படுத்தினார். மக்களிடையே மாற்றம் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் மக்களிடையே ஏற்படுத்தும் விழிப்புணர்வு ஆகும். நம்மிடையேயும் தத்துவஞானி இருக்கிறார். அவர், அரசன் முதல் அனைத்து மக்களுக்கும் பொதுவான அறத்தினை திருக்குறள் மூலம் விளக்கியுள்ளார். அதில் பல்வேறு தலைப்புகள் குறித்து கருத்துக்கள் பதிந்திருப்பதைப் போலவே தொழில் வளர்ச்சிக்கும் தொழில் மேம்பாடு குறித்த பதிவுகளையும் இட்டுச் சென்றுள்ளார். திருவள்ளுவர் அவர்கள் திருக்குறளில் 65ற்கும் மேற்பட்டதொழில்களை குறிப்பிட்டுள்ளார். பல்வேறு தொழில்கருவிகளையும் பதிவிட்டுள்ளார். 
உழவே முதன்மைத் தொழில்:
இன்றைய நவநாகரீக உலகில் உழவுத் தொழிலையும், உழவர்களையும் இழிநிலையில் பார்க்கும் மனிதர்கள் உண்டு. மேலும், மருத்துவம், பொறியியல் போன்றவையே உயர்நிலைத் தொழிலாக பார்க்கும் பாங்கும் உள்ளது. ஒருவர் எந்த நிலைத் தொழிலினை மேற்கொண்டாலும் அவர் தனது பசிக்கு சாப்பிட்டாக வேண்டும். அந்த உணவிற்கு ஆதாரம் உழவே ஆதலால். சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் (குறள்:1031) என்று துவங்கும் குறளிலேயே உழவையும், உழவர்களையும்; தாழ்வாகப் பார்க்கும் அத்துணை மனநிலைக்கும் சம்மட்டி அடி என்றே கூறலாம். இன்னும் கொஞ்சம் கூடுதலாகச் சென்று உழுதுண்டு வாழ்வாரே ..(குறள்:1033) என்று துவங்கும் குறளில்  உழுபவர்களே உயர்ந்தவர்கள் மற்றவரெல்லாம் அவர்களைத் தொழுதுண்டு பின் செல்வார்கள் என்ற ஒற்றைக் குறளில் மொத்தமாக வக்காலத்து வாங்கி நிற்கின்றார் திருவள்ளுவர். மேலும், இன்றும் பல்வகையான உரங்களை மண்ணில் இட்டு மண்ணையும் அதில் உள்ள உயிர்களையும் பாழ்படுத்தி வருகின்றனர். ஆனால், தொடிப்புழுதி கஃசா ..(குறள்:1037) என்று துவங்கும் குறளில் ஒரு பலப் புழுதியானது காற்பலமாக ஆகும்படி உழுது காயவிடுவானானால், அதனிடம் செய்த பயிர், ஒரு பிடி எருவு இடுதலையும் வேண்டாமலே நன்றாக விளையும் என்கிறார். இதனால் மண்ணைப் பாழ்படுத்தும் தன்மையும் இல்லை, உழவருக்கான செலவும் குறைகின்றது. 
உழவுத் தொழில் மட்டுமல்ல கல்விக்கும் தனி அதிகாரம் வழங்கியுள்ளார். அதில், ஒருவன் கற்கவில்லையென்றால் அவனுக்கு இருப்பது கண்கள் அல்ல வெறும் புண்களே என்று இடித்துரைக்கிறார். (குறள்: 391-340)
இனி வரும் வாரத்தில் தொழில்முனைவோருக்குத் தேவையான புரட்சிகர சிந்தனைகள் என்னவெல்லாம் பதிவிட்டுள்ளார் எனக் காண்போம்...
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி
ஒரு நாள் தாமதப் பதிவிற்கு பொறுத்துக் கொள்க




No comments:

Post a Comment