திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-62:
தொழில் முனைவோருக்கான எச்சரிக்கைகள்:
தனக்கான அணியினைத் தேர்வு செய்தல், வலுப்படுத்தல் மற்றும் நலம் பயத்தல்:
முதலில் ஒரு தொழிலாளியை அல்லது தனக்கான அணியினைத் தேர்வு செய்யும் போது திறமையின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும், பிறப்பின் அடிப்படையில் கூடாது என்று குறிப்பிடுகிறார்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் -972 என்ற குறளின் அடிப்படையில் எல்லா உயிர்களும் பிறப்பினால் சமம். ஆயினும் செய்யும் தொழிலின் தரத்தால், மாறுபாட்டால் அவர்தம் சிறப்பும் மேன்மையும் வேறுபடுகின்றன என்கிறார்.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல் -517 என்று எந்த நபருக்கு என்ன திறமை இருக்கிறதோ அதனை சரியாக உணர்ந்து அந்தப் பணியினை அவரிடம் விட்டாலே வெற்றி நிச்சயம் என்கிறார். இந்த ஒரு குறளே ஒருவனை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பதற்கான விடையைத் தந்து விடும்.
தொழில் தெரியாதவருக்கு சோம்பேறிகளுக்குத் தொழிலைக் கொடுத்தால் துன்பம் தான் வந்து சேரும் என்று குறள்களில் 507, 508, 468, 509, 510 திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். உதாரணமாகச் சொல்ல வேண்டுமெனில்
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பைத் தரும் -508 என்ற குறளே போதும். அதாவது, தெளிவாக அறியாமல் ஒருவனைத் துணையாக நம்பியவனுக்கு அவனுக்கு மட்டுமின்றி அவன் வழிமுறைகளில் வருபவர்களுக்கும் தீராத துன்பம் உண்டாகும் என்கிறார்.
மேலும் அடுத்தக் குறளில்
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும் -510 என்கிறார். இந்தக் குறள் ஒரு மிகச் சிறந்த ஆளுமையை அடையாளப்படுத்தும் குறளாகக் கொள்ளலாம். அதாவது ‘ஆராயாமல் நம்புவதையும், அப்படி ஆராய்ந்து நம்பியவனிடத்திலே சந்தேகம் கொள்ளுவதும் தீராத துன்பத்தையே தரும்” என்கிறார்.
தொழிலில் நேர்மையையும், உண்மைத்தன்மையாகவும், வாய்மையுடனும், நாநயத்துடனும், பணிவாகவும் இருத்தல் உயர்த்தும் என்கிறார். அவ்வாறு இருக்கும் நிலையில் மக்களால் போற்றப்பட்டு வியாபாரப் பெருக்கத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதனை உணர்த்துகின்றார்.
வாணிகம் செய்வோர்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின் - 120
நடுவு நிலைமை பூண்டு, வாங்கும் பிறர்பொருளையும் விற்கும் தம் பொருள் போலவே மதிக்கப் பழகினால் அதுவே வணிகருக்குப் புகழ் தரும் வாணிகம் என்ற குறளே இதனை தெளிவாக உணர்த்தும். மேலும், உதவும் குறள்- 113,115,116,117,118,119,124,125,127,134,198, 200,973,975,978,989 ஆகும்.
தொழிலில் கண்காணிப்பு மற்றும் சரியாகத்திட்டமிடல்;:
நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு – 520 என்ற குறளில் மன்னன் ;நாள்தோறும் அ;வனுடைய நிலைமையை ஆராய வேண்டும் என்று வலியுறுத்துகின்றார். இதனைப் போன்றே 429 551, 578, 584, 612, 669,512,516,605 குறள்களில் கண்காணிப்பினைக் குறித்து எடுத்துரைக்கின்றார்.
மேலும், தொழிலில் சரியாகத் திட்டமிடுதலைக் குறித்து 429, 435, 463, 675, 758, 484,461,465,466,467,468,481,482,483, 489,490, 631 குறள்களில் எடுத்துரைக்கின்றார்.
வாடிக்கையாளரின் அதாவது நமது தொழிலுக்கு நன்மை பயக்கும் பங்குதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் நன்றியுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தினை 93, 97, 108, 105,813,140,667,1023 என்ற குறள்களில் உணர்த்துகிறார் திருவள்ளுவர்.
No comments:
Post a Comment