தொழில்முனைவோருக்கானத் தகுதிகள்:
நாட்டில் பல்வகை வளங்கள் இருந்தும் தற்போதைய கால கட்டத்தில் அரசு பல சலுகைகளை வழங்கிய போதிலும் பலர் தொழிலினைத் துவக்கி வருமானத்தைப் பல்மடங்காகப் பெருக்க முயலாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அதற்கான தைரியம் இல்லாமை...
அதனால் தான் ‘எண்ணித் துணிக கருமம்” என்கிறார். சரியான திட்டமிடல் இல்லாமை, மேலும், செய்தக்க அல்ல என்று துவங்கும் குறள் (குறள்:466) குறிப்பிடுவது போல எது செய்யத் தக்கது எது செய்யத் தகாதது என்ற தெளிவு இன்மையும் பயத்தை ஏற்படுத்துகின்றன. இதுவே, தொழில் துவங்காமல் இருப்பதற்கு முதன்மை காரணமாகிறது.
அப்படியென்றால் என்ன செய்ய வேண்டும்?
• திட்டமிடல் திறன்:
பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்- குறள்:676 ஒரு செயலைச் செய்ய அதற்குரிய பொருள், கருவி, காலம், செய்தொழில், இடம் ஆகிய ஐந்தையும் தவறாமல் சிந்தித்துச் செய்ய வேண்டும். அதாவது ஒரு தொழில் துவங்கப் போகிறோம் என்றால், அதனைப் பற்றிய அனைத்து நிலைகளையும் நன்கு ஆராய்ந்து அதனைத் துவக்குவதற்கு முயல வேண்டும்
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு- குறள்: 467 என்ற வாக்கினுக்கேற்ப ஒரு செயலை நன்கு திட்டமிட்டு ஆழ்ந்து ஆராய்ந்த பின் ஒரு செயலை துவங்க வேண்டும்.
துணிவு
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற- குறள்: 661 என்று திருவள்ளுவர் குறிப்பிடுவது போல் மேற்கொண்ட செயலைச் செம்மையாக முடிக்கும் திறமை என்பது ஒருவனது மனவலிமையே ஆகும், பிற வலிமைகள் எல்லாம் சிறந்த வலிமைகள் ஆகாது. ஆதலால், தொழிலுக்கு மனவலிமை முக்கியம் என்பதனை உணர வேண்டும்.
செயல்படுத்துதல் திறன்
தொழில் முனைவோர்களின் செயலுக்கு ஊக்குவிக்கும் புரட்சிகர சிந்தனைகள் என்று பார்த்தால் அவர்கள் எடுக்கும் முயற்சிக்கான விளைவுகளுக்கு ஆதரவளித்தல் ஆகும். அதனை திருவள்ளுவர் செம்மையாக செய்திருக்கின்றார்.
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும் குறள்: 616 இல். ஒரு படி மேலே சென்று,.
தெய்வத்தா னாகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் -619 என்று! குறிப்பிடுகிறார். உதவும் பிற குறள்: 620, 670
• விடாமுயற்சி
தமிழ்நாட்டில் தொழில் துவங்கியவரில் 30-40 சதவீதத்தினரே வெற்றிகரமாக தொழிலை செய்து வருகின்றனர் என்று ஒரு அறிக்கைக் குறிப்பிடுகிறது. ஆதலால், விடாமுயற்சி மிகவும் அவசியம்., செயலைத் தொடங்கி இடையில் விட்டவரையும் திருவள்ளுவர் இடித்துரைக்கிறார்.
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு- 612
ஒரு செயலைச் செய்து முடிக்காமல் இடையிலேயே கைவிட்டவரை உலகமும் கைவிடும் என்கிறார். .
• வாய்மை:
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொரு
கோடாமை சான்றோர்க்கு அணி -118.
தூலாக் கோல் என்னும் ஒருவகையான தராசு எவ்விதம் நடுநிலையாக இருக்கின்றதோ அதேபோல் எந்நிலையிலும் ஒருபக்கம் சாயாமல் நடுநிலை தவறாமல் இருப்பது சான்றோர்க்கு அழகாகும். உதவும் பிற குறள்: 113
• இன்சொல் மற்றும் பேச்சுத் திறன்:
முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம் -93
மலர்ந்த முகம் காட்டி மகிழ்ச்சி தரும் இனிய சொற்களைக் கூறுவதே தலை சிறந்த அறமாகும். தன்னைக் காண வருவோரை தூரத்தில் கண்டவுன் முகம் மலர இனிதாக நோக்கி பக்கத்தில் வந்ததும் இனிய சொற்களைச் சொல்லுதல் அறத்தின் கூறுகளாகும். உதவும் பிற குறள்: 97, 291,294,295,296,
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி
.jpg)
.jpg)
.jpg)


No comments:
Post a Comment