Tuesday, 25 February 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 58:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 58:
புலவி நுணுக்கம்:
கடந்த வாரம் புலவி அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம் புலவி அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். புலவி என்பது விலகுதல் பிணக்கு, ஊடுதல் போன்றவற்றைக் குறிக்கிறது என்று பார்த்தோம். நுணுக்கம் என்பது இன்னும் ஆழமாகப் பார்ப்பதை உணர்த்துகிறது. புலவி நுணுக்கத்தின் குறட்பாக்களைப் பார்த்தல் எந்தளவுக்கு நுணுக்கமாகச் சென்றிருக்கிறார் என்று தெரியவரும். சரி இப்போதுஇ புலவி நுணுக்கம் அதிகாரத்தில் நுழைந்து பார்ப்போம்...
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு -1311
சில சமயங்களில் நமது விருப்பம் இல்லாமலேயே தொடர்பு இல்லாமலேயே நாம் சிக்கலில் மாட்டிக் கொள்வது உண்டு, மேற்கூறிய பாடலில் காதலனின் நிலையும் அதுதான், காதலனை நோக்கி காதலி இப்படிக் குறிப்பிடுகிறாள், ‘ பரத்தன்மை உடைய என் காதலனே! உன்னைக் காணும் பெண்கள் எல்லாம் உன் மார்பு அனைவருக்கும் பொதுவெனக் கருத்pக் கண்ணால் உன் அழகைப் பருகி மகிழ்வர். எனவே பலரது பார்வைக்கும் விருந்தாகும் உன் மார்பினை நான் தழுவ மாட்டேன்” என்கிறார். 
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து -1312
சாப்பிடும் போது புரை ஏறினால் யாரோ நினைப்பார்கள் என்று தலையைத் தட்டுவோம்இ திருவள்ளுவர் காலத்தில் தும்மினால் வாழ்த்து சொல்ல வேண்டும் போல...’நான் அவரோடு ஊடிப் பேசாமல் இருந்தேன், ‘நீடுழி வாழ்க” என்று சொல்லி அவரோடு பேசுவேன்இ என்று எண்ணி வேண்டும் என்றே அவர் தும்மினார்! நூனா பேசுவேன்?” என்றாள் தலைவி

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் 
காட்டிய சூடினீர் என்று -1313
வீட்டில் பிணங்கிக் கொண்டிருக்கும் போது எப்படி வேண்டுமானாலும் வார்த்தைகள் வருவது சகஜம் தான்...’மரக்கிளையிலிருந்து மலர்ந்த மலர்களைச் சூட்டினாலும்இ நீர் இந்த அழகை எவளோ ஒருத்திக்குக் காட்டுவதற்காகவே எனக்குச் சூட்டினீர் என்று சினம் கொள்வாள்” என்கிறார் திருவள்ளவர் தலைவியின் நிலையில் இருந்து...
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று -1314
தீவிர அன்பு இருக்கும் போது, அடிக்கடி ஊடல் வருவது எதார்த்தம் தான், அப்போது ஒவ்வொரு வார்த்தையும் ஆராய்ச்சி செய்வது தவிர்க்க முடியாதது தான் என்பதை படம் பிடித்துக் காட்டுகிறார். ‘யாரையும் விட உன்னையே நான் மிகுதியாக விரும்புகிறேன்”என்றேன். ஆனால், அவளோ..’யாரையும் விட என்றால்... யாரை விட..? யாரை விட..? என்று கேட்டு ஊடிப் பிணங்கிக் கொண்டாள்”
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் 
கண்நிறை நீர்கொண் டனள் -1315
முந்தைய குறளின் நீட்சியாகக் கூடக் கருதலாம்...இப்படியெல்லாம் பேசினால் என்னதான் செய்வது என்று யோசிக்க வைக்கிறார்... ஆனால், ஆழமான காதலில் இது நடக்கவில்லையென்றால் தான் ஆச்சரியம்...’இந்தப் பிறப்பிலே நாம் பிரியமாட்டோம்” என்று சொன்னேன்இ உடனே அவள் அப்படியெனில் மறு பிறவி என்று உண்டா? அதில் பிரிந்து விடுவோமா? ஏன்று கூறியதாக நினைத்து கண்களில் கண்ணீருடன் இருக்கின்றாள்”
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் 
புல்லாள் புலத்தக் கனள் -1316
காதலுக்கு கண்ணில்லை என்பது போல அன்பின் ஆழம் செல்லச் செல்ல அறிவிற்கும் அங்கு வேலையில்லை...அன்பு மட்டுமே நிரந்தரம் அதற்கு எதுவும் புரியாது இந்தக் குறளைப் போல...’உன்னை நினைத்தேன்” என்று சொன்னதுதான் தாமதம், ‘மறந்தால் தானே நினைக்க முடியும்? அப்படியென்றால் என்னை ஏன் மறந்தீர்? என்கிறாள்” 
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று-1317
வடிவேல் அவர்களின் வார்த்தையில் சொன்னால் கொஞ்சம் ஓவராத்தான் போயிகிட்டு இருக்கு எனலாம்... தலைவன் நிலையை நினைப்பதா? அல்லது தலைவியின் அளவற்ற அன்பை நினைப்பதா? நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்... ‘நான்; தும்மினேன், உடனே அவள் என்னை ‘நூறாண்டு வாழ்க” என்று வாழ்த்தினாள், மறுகணமே... ‘யார் நினைத்ததால் நீங்கள் தும்மினீர்கள்” என்று கேட்டு அழுதாள்” என்கிறார். 
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று -1318
முந்தைய குறளின் தொடர்ச்சி தான் இது, ‘அவள் பிணங்கிக் கொள்வாள் என்று வந்த தும்மலை அடக்கினேன்... அதனைக் கண்ட அவள் ‘உன் ஆள் உன்னை நினைப்பதை எனக்குத் தெரியக் கூடாது என்று மறைக்கிறீரோ” என்று அவள் அழுதாள்” பாவம் இருவரும்...
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று -1319
தலைவன் சமாதானம் படுத்திவிடலாம் என்று முடிவெடுத்து விட்டான். ஆனாலும் அவ்வளவு எளிதாக சரி செய்து விட முடியுமா என்ன? ‘அவள் என்னிடம் ஊடல் கொண்டபோது நான் பணிந்து அவளுடைய ஊடலை நீக்கி சமாதானப்படுத்தினாலும், உடனே அவள், ‘ஓ! அப்படியென்றால் மற்ற பெண்களுக்கும் நீங்கள் இப்படிதான் சமாதானம் செய்வீர்களா?” என்று சினம் கொள்வாள்” என்கிறார். 
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று -1320
பார்த்தது குற்றமாயா? என்று வடிவேல் அவர்கள் கேட்பது போல் இருக்கிறது தலைவனின் நிலை. ‘ஒப்பற்ற அவளுடைய அழகை நினைத்து அவளிடம் எதுவும் பேசாமல் இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாலும், ‘யாரை நினைத்து என்னை ஒப்பிட்டு உற்றுப் பார்க்கிறீர்கள்?” என்று கோபம் கொள்வாள்” என்று தலைவி கேட்கிறாள் என்கிறார் திருவள்ளுவர்.

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

No comments:

Post a Comment