திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 55:
புணர்ச்சி விதும்பல்
கடந்த வாரம் குறிப்பறிவுறுத்தல் அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம்; புணர்ச்சி விதும்பல் அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். புணர்ச்சி விதும்பல் என்பது காதலர்கள் கூடி மகிழ விரைதல்; என்பதாகும்.
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு -1281
‘நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்” என்ற திரைப்பட பாடலைக் கேட்டிருப்போம், மதுவின் மயக்கத்திலே திளைப்பவரின் குரல் அது, திருவள்ளுவர் காலத்திலும் சரி நமது காலத்திலும் கள் களிப்பினை ஏற்படுத்துகிறது. ஆனால், அதனைத் தாண்டிய களிப்பு எது? ‘நினைத்த போது களிப்படைவதும் கண்ட பொழுதிலே மகிழ்ச்சி அடைவது ஆகிய இரண்டு நிலையும் கள்ளுக்குக் கிடையாது, ஆனால், காதல் வயப்பட்டவருக்கு உண்டு”
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின் -1282
காதல் மிகுதியான நிலையில், சின்ன சண்டை கூட வேண்டாம். காதல் நிலை மாறிவிடக் கூடாது என்கிறார். ‘பெண்களுக்குக் காதல் பனையளவாக மிகப் பெரிதாக இருக்கும்போது தினையளவுக்குச் சிறிதாகவேனும் ஊடல் கொள்ளாமல் இருக்க வேண்டும்” என்கிறார் திருவள்ளுவர்.
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண் -1283
அளவுகடந்த அன்பு தான் புறக்கணிக்கப்பட்டாலும் நிற்பதில்லை என்பதை மேற்கூறிய குறளில் குறிப்பிடுகிறார். ‘என்னை அவமதித்து அவர் தம் விருப்பப்படியே செய்தாலும் என் கண்களை அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை” என்கிறார்.
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு -1284
மேற்கூறிய குறள், தலைவி தோழியிடம் கூறுவதாக அமைந்துள்ளது. ‘தோழி!, காதலரைக் காண்பதற்கு முன், அவர் செய்த தவற்றை எண்ணி ஊட நினைத்தேன், அவரைப் பார்த்த பிறகு, அதை மறந்து, அவருடன் கூடனே என் மனம் சென்றது”
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து -1285
மேற்கூறிய குறளில் ஒரு சிறந்த கவிஞரைக் காண முடியும், இப்படியெல்லாம் கற்பனை செய்ய இயலுமா? காதலுக்குக் கண்கள் இல்லை என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அது உண்மைதான் என்கிறார் ஐயன். ‘மை தீட்டும் நேரத்தில் மையைத் தீட்டும் தீட்டு கோலைக் காணாத கண்களின் தன்மையைப் போல, என் காதலனைக் கண்ட போது, அவன் குற்றங்களையும் நான் காணாமற் போகின்றேன்”.
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை -1286
எனக்கு ஒரு நகைச்சுவை ஞாபகத்திற்கு வருகிறது. இரண்டு நண்பர்களுக்கு மத்தியில் நெடுநாள் பகை ஆதலால் அவர்கள் பேசிக் கொள்வதில்லை, ஒருவரையொருபர் பார்த்தால் முறைத்துக் கொள்வதும், இல்லையென்றால் அடித்துக் கொள்வதும் வாடிக்கையாகிவிட்டது, அவர்களுக்கான பிள்ளைகள் பிறந்து அவர்களும் பெரியவர்களான பிறகும் பகை தொடர்கிறது. அந்தப் பிள்ளைகளுக்கும் பிள்ளைகள் பிறந்தது. ஒரு நாள் அவர்கள் பேரன் ஒருவன் இரண்டு நண்பர்களில் ஒருவரிடம் கேட்டான். உங்களுடைய பகைக்குக் காரணம் என்ன? அப்போது அந்த இரண்டு நண்பர்களுக்கும் தாம் எதற்காகக் கோபப்படுகிறோம். பகையாக இருக்கிறோம் என்பது ஞாபகத்திற்கு வரவில்லை. அதன் பிறகு தங்கள் பகையை மறந்தனர். தங்களுடைய பழைய நாட்களை நினைத்தனர். அவர்களை விட மிகச் சிறந்த நண்பர்கள் யாரும் இல்லை என்பதை உணர்ந்தனர். இதுபோன்று தான் மேற்கூறிய குறளும், ‘ என்னுடையக் கணவனை நான் காணும் போது அவரது தவறுகள் என் கண்களுக்குத் தெரிவதி;ல்லை. ஆனால், அவரைக் காணாத போதோ தவறல்லாத நல்ல செயல்களையே நான் காண்பதில்லை” என்கிறார்.
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து -1287
பொய் சண்டையினால் ஏதேனும் பயன் உள்ளதா? ‘பெருக்கெடுத்துச் செல்லும் வெள்ளத்தில் பாய்ந்தால் அது தன்னை இழுத்துச் செல்லும் என்று தெரிந்தும் பாய்கின்றவரைப் போல், தன்னுடைய சினத்தினால் எந்த பலனும் அளிக்காது என்று தெரிந்தும் ஊடுவதால் என்ன பயன்?” என்று கேட்கிறார்.
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு -1288
மேற்கூறிய குறளில் , ‘கள்வனே, இழிவு வரத் தகுந்த துன்பங்களையே தந்தாளும், கள்ளுண்டு களித்தவர்க்கும் மேன்மேலும் ஆசையூட்டும் கள்ளைப் போல், நின் மார்பும் ஆசையூட்டுகிறதே” என்கிறார்.
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார் -1289
மேற்கூறிய குறளில், ‘காதல் இன்பமானது மலரை விட மிக மென்மையானது, அந்த உண்மையை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர்கள் உலகத்தில் சிலரே ஆவார்கள்” என்கிறார்.
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று -1290
மேற்கூறிய குறளில், பாசமிகு ஆள் மீது கோபம் இருந்தாலும் நேரில் பார்க்கும் போது தன்னை மறந்துப் பாசப் புன்னகை மலர்வது உண்டு அதனையே காதலர்கள் மத்தியில் எப்படியிருக்கும் என்பதை குறிப்பிடுகிறார். ‘ தன் கண் அளவில் என்னோடு ஊடி, என்னைத் தழுவதை என்னைக் காட்டிலும் அவள் விரைந்து விரும்புவதால், பிணங்கிய தன்னுடைய நிலையையும் மறந்து வி;ட்டாள்” என்கிறார்.
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி
No comments:
Post a Comment