Tuesday, 11 February 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 56:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 56:
நெஞ்சோடு புலத்தல்
கடந்த வாரம் புணர்ச்சி விதும்பல்



அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம்; நெஞ்சோடு புலத்தல் அதிகாரத்தில் இருந்து பார்ப்போம்.; நெஞ்சோடு புலத்தல்
என்பது காதலர்கள் தன் மனத்தோடு பிணங்தல் அல்லது ஊடல் கொள்ளுதல்  என்பதாகும். மனநலத்தில் ஒரு விடயம் உள்ளது, மற்றவரை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவர்கள் நிலையில் நின்று பார்க்க வேண்டும் என்பதே அது. இந்த மனிதர் எவ்வாறு அவரவர் மனதில் நின்று இந்தக் குறள்களை வடிக்கிறார் என்பது ஆச்சரியத்தின் உச்சம். நெஞ்சோடு புலத்தல் அதிகாரத்திலும் ஐயன் திருவள்ளுவர் காதலர்கள் மனதில் எப்படி சண்டை போடுகிறார் என்று பாருங்கள்...
முதல் குறளில் காதலியானவள் தன் நெஞ்சைக் கோபித்துக் கொள்வது போல் அமைத்துள்ளார்.
அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது -1291
‘என் நெஞ்சமே! என் காதலரின் நெஞ்சமானது நம்மை மறந்து அவர் விருப்பத்தையே மேற்கொள்வதைக் கண்ட பிறகும் நீ எனக்குத் துணையாக நிற்காமல், அவரையே நினைக்கக் காரணம் என்ன?” என்று கோபித்துக் கொள்வது போல் அமைத்துள்ளார். 
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு -1292
முந்தையக் குறளின் அடுத்த நிலையாக இந்தக் குறள் அமைத்துள்ளார். ‘ என் நெஞ்சமே! நம்மீது அன்பு கொள்ளாதவரை உள்ளபடியே நீ அறிந்திருந்தும் நாம் போனால் அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி நீ அவரிடமே செல்கின்றாயே?” என்ன நியாயம் இது என்று நெஞ்சைப் பார்த்துக் ஊடல் கொள்வது போல் அமைத்துள்ளார். 
கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல் -1293
கெட்டவர்க்கு துணையில்லை என்பது போல காதலி புலம்புவதாக அமைத்துள்ளார். ‘என் நெஞ்சமே! நீ என்னிடம் விருப்பம் இல்லாமல் உன் விருப்பத்திற்கு அவர் பின்னாடியே செல்கின்றாயே? துன்பத்தால் கெட்டுப் போனவர்க்கு நண்பராக யாருமே இல்லை என்னும் எண்ணமோ?” என்று நெஞ்சத்திடம் கோபித்துக் கொள்கிறார் காதலி. 
இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று -1294
‘என் நெஞ்சமே! நீ அவரைப் பார்க்கும் போது இன்பம் நுகரத்தான் எண்ணுகிறாயே தவிர, அவருடைய தவறுகளை எண்ணி ஊடல் கொண்டு பிறகு உறவு கொள்ள எண்ண மாட்டாய், எனவே அதைப் பற்றி உன்னிடம் யார் பேசப் போகிறார்? நான் பேசுவதாக இல்லை” என்று தன் நெஞ்சத்திடம் பிணங்கிக் கொள்வதாக அமைத்துள்ளார். 
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு -1295
மேற்காணும் குறளைக் காணும் போது தெனாலி படத்தில் கமல்ஹாசன் அவர்களின் எல்லாம் பய மயம் என்ற உரையாடல் தான் ஞாபகத்திற்கு வருகிறது. ‘காதலரைக் பெறாத போதும் அஞ்சும், அவரைப் பெற்ற போதும் அவருடைய பிரிவை நினைத்து அஞ்சும், இவ்வாறு என் நெஞ்சம் நீங்காத துன்பத்தைப் பெற்றிருக்கின்றது” என்று காதலியின் நிலையாகக் குறிப்பிடுகிறார். 
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் 
தினிய இருந்ததென் நெஞ்சு -1296
உற்ற நண்பன் ஆபத்தில் துணையாக இல்லாத நிலையை என்னவென்று சொல்வது? அப்படி நெஞ்சமே இல்லாத நிலையை விளக்குகிறார் திருவள்ளுவர். ‘காதலர் பிரிவை தனியே இருந்து  நினைத்த போது ,  என் நெஞ்சம் எனக்குத் துணையாகமல் என்னைத் தின்பது போல கொடுமையாக இருந்தது”. 
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு -1297
இந்தப் பொல்லாத நெஞ்சோடு சேர்;ந்ததால் என்னுடைய சிறப்பினை நான் இழந்தேன் என்று காதலி எண்ணுவதாக அமைத்துள்ளார். ‘அவரை மறக்க முடியாமல் வாடும் என்னுடைய நிலையில்லாத மட நெஞ்சத்தோடு சேர்ந்து, மறக்கக் கூடாததாகிய நாணத்தையும் மறந்தேனே!” என்று புலம்புவதாகக் குறிப்பிடுகிறார். 
எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு -1298
மேற்கூறிய குறளில் காதலின் நெஞ்சத்தில் ஏற்பட்டுள்ள போராட்டத்தைக் காட்டுகிறார். ‘’அவர் மேல் உயிர் போலக் காதல் கொண்ட என் நெஞ்சமானது, ‘பிரிந்து சென்ற கொடுமையாளரை இகழ்ந்தால் அது தமக்கும் இழிவாகும்” என்று எண்ணி அவருடைய உயர்ந்த பண்புகளையே நினைக்கின்றது”.
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி -1299
தன்னுடன் இருப்பார்கள் என்று நினைத்த நினையில் தனித்து நிற்கும் ஒருவரின் புலம்பல் என்ன என்பதே மேலேயுள்ள குறளாகும். ‘ஒருவருக்குத் துன்பம் வந்த போது, தாம் உரிமையாகப் பெற்றுள்ள நெஞ்சமே தமக்குத் துணையாகத போது, வேறு யார்தான் துணையாவார்?”
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி -1300
தம்முடைய உடைமையே நமக்குச் சாதகமாக இல்லாத போது, அயலானாகிய காதலனிடம் மட்டும் எப்படி அன்பு எதிர்பார்க்க முடியும் என்று கேட்கிறார் திருவள்ளுவர் காதலயின் நிலையாக… ‘ஒருவருக்குத் தாம் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே தமக்கு உறவாகாத போது, அயலார் உறவில்லாதவராக இருப்பது என்பது எளிதான ஒன்றேயாகும்” என்கிறார். 
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

No comments:

Post a Comment