Monday, 23 September 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 37

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 37:
கடந்த வாரம் காதற் சிறப்புரைத்தல் அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம் நாணுத் துறவுரைத்தல் அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். காமத்துப்பாலில் கடந்த அதிகாரங்கள் வரை குறிஞ்சித் திணையைச் சார்ந்தது. நாணுத் துறவுரைத்தல் முதல் வரும் 5 அதிகாரங்கள் பாலைத் திணையைச் சார்ந்தது ஆகும். அதாவது பிரிந்து இருத்தலைக் குறிப்பிடுபவை. ஏற்கனவே நான் ஒருமுறை மடலேறுதல் என்பதைக் குறித்து விளக்கியிருக்கின்றேன். ஒருவேளைஅதனைக் குறித்து அறியாதவர்கள் கீழ்க்கண்ட சுட்டியை சொடுக்கி விவரம் பெறலாம். சரி நாம் குறளைக் காண்போம்...
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி – 1131 என்கிறார். 
அப்படியென்றால் காதலன் வருந்தி யோசிப்பதாக உள்ள கூற்று. அதாவது காதல் நிறைவேற முடியாமல் வருந்தியருக்கு வலிமையானத் துணை என்பது மடலேறுதல் தவிர வேறு ஏதும் இல்லை என்கிறார். காதல் கைக்கொள்ளாதது அவ்வளவு துன்பத்தைத் தருகின்றது என்று உரைக்கின்றார். 
அடுத்தப்பாடலில், காதலியின் அன்பைப் பெறாமல் தவிக்கும் துயரத்தைத் தாங்கமுடியாத என் உடம்பும் உயிரும், என்னுடைய நாணத்தை என்னிடமிருந்து நீக்கி விட்டு மடலூரத் துணிந்து விட்டன என்கிறார். காதலியின் அன்பை பெறத் துடிக்கும் துயரத்தைக் குறிப்பிடுகிறார். 

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து -1132 
அதே போன்று அடுத்தப் பாடலிலும், 
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல் -1133
நல்ல ஆண்மையும் நாணத்தையும் கொண்டிருந்த நான் இப்பொழுதோ காதலியின் பிரிவுத் துயரத்தால் காமநோய் மிகுந்தவர் ஏறும் மடலையே பெற்றுள்ளேன் என்று புலம்புகிறார் காதலன். 
அடுத்தப் பாடலில் காமத்தின் கொடுமையினைக் குறிப்பிடுகிறார். நாணத்தோடு நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்கின்ற கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போகின்றதே, நான் என்ன செய்வது? என்று பிரிதலின் கொடுமையாக காதலன் புலம்புவதைக் குறிப்பிடுகிறார். 
காமம் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணை – 1134. 
மலைபோல தொடர்ந்த சிறு வளையல்களை அணிந்திருக்கும் என் காதலி எனக்கு மாலைப் பொழுதில் நான் அடையும் மயக்கத்தையும் துயரத்தையும் அதற்கு மருந்தாகிய மடலேறுதலையும் எனக்குத் தந்துவிட்டாள் என்று வருந்துகிறார். 
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்  - 1135
மேலும், அடுத்தப்பாடலில் அந்தப் பேதைப் பெண்ணை நினைத்து நினைத்து என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன. அதனால் நடுச்சாமத்திலும் கூட நான் மடலேறுதலைக் குறித்தே நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று காதலனின் நிலையாகக் குறிப்பிடுகிறார். நினைத்து நினைத்துப் பார்த்தால் நெருங்கி அருகில் வருவேன் பாடல் போல இருக்கிறது அல்லவா..?
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லாப் பேதைக்கென் கண் -1136
அடுத்தப் பாடலில், ஒரு பெண் எந்த அளவிற்குப் பெருமை உடையவள் என்றால், கடல் அளவிற்கு காம நோயால் வருந்திய போதிலும், ஆண்களைப் போலாமல் மடலேறாமல் தன் துயரத்தைப் பொறுத்துக் கொண்டிருக்கும் பெண்ணைப் போல பெருமை உடைய பிறவி இல்லை என்கிறார் வள்ளுவர். 
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்கது இல் -1137
இவர் மன அடக்கம் மிக்கவர், மனதில் உள்ளதை ஒளித்து வைக்கத் தெரியாதவர், பரிதாபத்திற்கரியவர் என்று பார்க்காமல் இந்தக் காதலானது எங்களுக்கும் இருக்கும் இரகசியத்தைக் கடந்து ஊருக்குள்ளேயும் தெரியப் போகிறது. 
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும் - 1138
அடுத்தப் பாடலில், 
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு – 1139 என்கிறார், 
அதாவது, என்னுடைய காமநோயானது எனது மன அடக்கத்தால் எல்லோரும் அறிந்திருக்கவில்லை என்று எண்ணி அதைத் தெரிவிக்க தெருவவெங்கும் தானே அம்பலப்படுத்திச் சுற்றி வருகிறது. 
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு – 1140
மேற்கூறிய குறளில், காதல் நோயினால் நான் பட்ட துன்பத்தை அனுபவித்து அறியாதவர்கள் தான் அந்த நோயினால் வருந்துவோரைப் பார்த்து சிரிக்கின்றனர். 
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

Monday, 16 September 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 36

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 36
காதல் சிறப்புரைத்தல்:

கடந்த வாரம் காதல் சிறப்புரைத்தல் அதிகாரத்தில் முற்பகுதியில் இருந்து பார்த்தோம். இந்த வாரம் பிற்பகுதியைப் பார்ப்போம். முற்பகுதியில் காதலன் தன் காதலியை/தலைவியை சிறப்புரைத்தவற்றைப் பார்த்தோம் இந்த வாரம் காதலி/தலைவி தன் காதலன்/தலைவனைக் குறித்து சிறப்புரைத்தலைக் குறித்துக் காணலாம். 
கடந்த வாரம் ஒரு பாடலில், தலைவன் தன் கண்ணின் பாவையையே போய்விடு, ஒளிதரும் என்னவள் எனக்குப் பார்வையாக இருக்கிறாள் அவளுக்கு இடம் கொடு என்று அன்பின் மிகுதியால் கேட்டதைக் கண்டோம். அதே போன்று பின்வரும் பாடலில் காதலி குறிப்பிடுகிறார்,
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
நுண்ணியர் எம்காத லவர் - 1126
‘என்னுடைய காதலர் என் கண்களில் இருந்து ஒரு போதும் போக மாட்டார், நான் கண்ணை மூடி இமைத்தாலும் அதற்காக வருந்த மாட்டார், ஏனென்றால் அவர் அவ்வளவு நுட்பமானவர்” என்று குறிப்பிடுகிறார். பொதுவாகவே ஒரு சொல்லடை உண்டு ‘அவளைப் பாரு தன் புருசனை கைக்குள்ள போட்டு வச்சிருக்கா, நீயும் தான் இருக்கறியே?” என்று கட்டுக்கு அடங்காத கணவனின் மனைவியிடம் அவர் தோழியர் பிறரைக் காட்டி சொல்வதுண்டு. ஆனால் மேற்கூறிய பாடலில் ‘காதலனை தன் கண்ணுல போட்டு வச்சிருக்கா” என்று சொல்லலாமா...?

அடுத்தப் பாடலில்,
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து -1127 என்கிறார்.
ஏற்கனவே காதலரை கண்ணிலே அடைச்சி வச்சிருக்கா என்று பார்த்தோமல்லவா அதன் நீட்சியாக இப்பாடல் அமைந்துள்ளது. அதாவது, எனக்கே உரிய என் காதலன் என் கண்ணிலேயே இருக்கின்றார். ஆதலால், நான் கண்ணுக்கு மை தீட்டினால் அவர் மறைந்து விடுவாரோ என்று நினைத்து, என்னுடைய கண்களுக்கு நான் மை தீட்ட மாட்டேன் என்கிறார். 
அடுத்தப் பாடல், முந்தைய பாடலின் மிஞ்சிய பாடல் ஆகும்
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து -1128 என்கிறார். 
அதாவது, என்னுடைய காதலர் என் நெஞ்சிலே நிறைந்திருக்கிறார். அதனால், நான் எதைச் சாப்பிட்டாலும் அவருக்கு சூடு உண்டாகும். ஆதலால் அதை நினைத்து சூடாக நான் எதையும் சாப்பிடுவதற்கு அஞ்சுகிறேன் என்று காதலி குறிப்பிடுகிறார். புரிந்து கொள்ள முடிகிறதா காதலின் அளவினை...?
அடுத்தப் பாடலில் அதற்கு அடுத்த ஒரு படி முன்னேறுகிறார். 
இமைப்பின் கரப்பார்க்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும்இவ் வூர் -1129
தன் கண்ணுக்குள்ளே காதலன் இருப்பதால் தான் இமைத்தால் அதனால் அவன் மறைந்துவிடுவான் என்பதால் நான் இமைக்காமல் இருக்கின்றேன். ஆனால், இந்த அன்பினை புரிந்து கொள்ளாத ஊர் மக்கள் என்னவரை அன்பற்றவர் என்கின்றனர். என்று காதலியின் கூற்றாகக் குறிப்பிடுகிறார். மேலும், 
உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும்இவ் வூர் -1130 என்கிறார். 
அதாவது, என்னவர் என் உள்ளத்திலேயே குடி கொண்டிருக்கிறார். அவரோ உள்ளத்திலே நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பது எனக்குத்தான் தெரியும். ஆனால், இதனை அறியாத ஊர் மக்கள் அவர் ‘பிரிந்து போய் விட்டார்” ‘அன்பற்றவர்” என்று புரியாமல் திட்டுகின்றனர். இந்தக் கூற்றை மடமை என்பதா? அல்லது காதலின் ஆழம் என்பதா? அது காதலியின் நிலையில் இருந்து பார்த்தால் தான் விளங்கிக் கொள்ள முடியும் என்று உணர்த்துகிறார் ஞானி திருவள்ளுவர். 
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி






Monday, 9 September 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 35





திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 35

கடந்த வாரம் நலம் புனைந்துரைத்தல்  அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம் காதற் சிறப்புரைத்தல் அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். இது தலைவனும் தலைவியும் தம் காதலின் சிறப்பைச் சொல்லுதல் ஆகும். இனிய சொற்களைப் பேசக் கூடிய ஒருவரை தீயவர் என்றாலும் அவரை தவறாக எண்ணுவதற்கு வாய்ப்புகள் குறைகின்றது. வார்த்தைப் பிரயோகமானது அவ்வளவு வலுவானது ஆகும். அப்படியிருக்கையில் திருவள்ளுவர் இனிய மொழிகளைப் பேசும் பெண்ணை எவ்விதம் கூறுகிறார். கீழ்வரும் குறளைக் காண்போம். 
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்  - 1121
அதாவது இனிய மொழியினைப் பேசுகின்ற தலைவியின் முத்துப் பற்களிடையே வெளிவரும் உமிழ்நீரானது பாலோடு தேன் கலந்த கலவையாகும் என்கின்றார். இதனை இனிய சொற்களைக் கூறுதலின் சிறப்பைக் குறிப்பிடுகிறார். 
அடுத்து வரும் பாடலில், 
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு -1122 என்கிறார். 
அதாவது, இரண்டு நெருங்கிய நட்புடன் அன்புடன் இருப்பவர்களை நாம் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தும் வார்த்தைகள் தான். ஆனால் மேற்கூறிய பாடலைப் பார்க்கும் போது இவருடைய குறளைக் கடனாகப் பெற்றுத்தான் இத்தனை நாட்களாக நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோமா? என்று சொல்லத் தோன்றும். நீங்களே பாருங்கள் என்ன சொல்லியிருக்கிறார் என்று, உடலுக்கும் உயிருக்கும் இடையேயான நட்பு எத்தகைய தன்மை வாய்ந்ததோ, அதே போன்றது தான் என்னவளுடன் எனக்கு இருக்கும் நட்பாகும் என்று தலைவன் கூறுவது போல் அமைத்துள்ளார். நான் சொல்வது சரிதானே?
கருமணியிற் பாவாய்நீ போதாய்யாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம் - 1123
நான் விரும்புகின்ற இவளுக்கு கண்ணில் இருப்பதற்கு இடம் இல்லாமல் இருக்கின்றது, ஆதலால், என் கண்ணின் கருமணியில் பாவையே நீ போய் விடு என்கின்றார். கண்ணிற்கு ஒளியாய் விளங்கும் பாவையையே போ எனது பார்வையே என்னவள் தான் அவளுக்கு இடம் கொடு என்று தலைவனின் காதலைச் சிறப்புரைக்கின்றார். 
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கு மிடத்து -1124
ஆராய்ந்து சிறந்த பண்புகளைக் கொண்ட என்னவள் என்னிடம் சேர்ந்திருக்கையில் உயிருக்கு வாழ்வளிப்பதைப் போன்றும் நீங்குகையில் உயிருக்கு சாவைப் போன்றும் இருக்கிறாள் என்கிறார். 
ஒருவர் மீது மிகுந்த அன்புடன் இருக்கையில் வெளியூரிலோ அல்லது பார்க்க முடியாத இடத்தில் இருந்தாலோ அலைபேசியில் பேசும்போது சொல்ல வாய்ப்புண்டு, ‘என்னிடம் ஃபோன் பேச கூட நேரமில்லையா? எங்களை ஞாபகம் இருக்கா என்ன? என்று கேள்வி எழுமின் சொல்லக் கேட்டிருப்போம் அல்லது சொல்லியிருப்போம்... மறந்தால் தானே நினைப்பதற்கு என்று..” 
பின்வரும் பாடலில், இப்படித் தெரிவிக்கிறார்…
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம் -1125 
அதாவது, ‘ஒளியுடன் கூடிய கண்களை உடைய என்னவளின் குணங்களை நான் மறந்தால் பிறகு நினைக்க முடியும். நான் ஒருபோதும் மறந்ததில்லையே...” 
மறந்தால் தானே நினைக்க முடியும், சரிதானே?

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொருத்துக் கொள்க.
நன்றி

Monday, 2 September 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 34

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 34:
நலம் புனைந்துரைத்தல்:
கடந்த வாரம் நலம் புனைந்துரைத்தல் அதிகாரத்தின் முற்பகுதியைப்



பார்த்தோம். தற்போது பிற்பகுதியைக் காண்போம். 
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன் -1116
ஐய வினாவிற்கு உதாரணமாக, அங்கே தெரிவது பாம்பா? அல்லது கயிறா? என்று தூரத்தில் இருந்து பார்ப்பவர்கள் குறித்துச் சொல்வதுண்டு. அதுபோன்று தன் தலைவியின் முகம் நிலவின் முகத்திற்கு ஒப்பானவள் என்பதை எப்படிச் சொல்கிறார்கள் என்று பாருங்கள்!
நிலா எது?  என்னுடையவளின் முகம் எது? என்று வேறுபாடு தெரியாமல் விண்மீன்கள் கலங்கித் திரிகின்றன!
அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து -1117
எப்பொழுதும் பாடப்பெறுபவரை குறையின்றி பாடப்படுவது வழக்கம் ஆனால் வள்ளுவரின் பாணி எப்படித் தெரியுமா? நிலவு தேய்வது போலவும் வளர்வது போலவும் உணர்வது இயற்கையே.. இதனை நட்சத்திரங்கள் ஏன் கலங்குகின்றன? தேய்ந்து பின்னர் வளர்ந்து நிறைவாகும் ஒளிமிகுந்த நிலவிற்கு உள்ளது போல என்னவளின் முகத்தில் களங்கம் உண்டா என்ன? என்று கேட்கிறார். என்னே ஒரு அருமையான வர்ணணை!
மேலும், பின்வரும் பாடலில் பெண்மையை மேலும் மெருகூட்டுகிறார்?
‘நிலவே, மாதரின் முகத்தைப் போல உன்னால் ஒளி வீசக்கூடிய வல்லமை உனக்கும் உண்டு என்றால், நிலவே நீ வாழ்க! நீயும் என்னால் காதலிக்கப்படுவாய்” என்கிறார். 
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி -1118
மேலும், நிலவிடம் குறிப்பிடுகிறார்... மதியே! மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்திற்கு ஒப்பாக நீயும் அழகாக இருப்பாய் என்றால், பலரும் பார்க்குமாறு இனி வானத்தில் தோன்றாமல் இருப்பாயாக (ஒருவேளை தோன்றினால் யார் அழகு என்ற போட்டியில் நீ தோற்றுவிடாமல் இருப்பதற்காக) என்கிறார். 
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்                                       
பலர்காணத் தோன்றல் மதி – 1119 
ஏற்கனவே அனிச்ச மலரினை மென்மைத் தன்மைக்கு ஒப்பிட்டுள்ளார் வள்ளுவர். அன்னப்பறவையும் மென்மைக்கு அடையாளமாகக் கருதப்படுவதுண்டு. ஆனால், இவ்விரண்டும் இந்த மாதின் முன் என்னவாக இருக்கிறது என்று வள்ளுவர் குறிப்பிடுவதைப் பார்ப்போமா?
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்                                               
அடிக்கு நெருஞ்சிப் பழம் - 1120
மிக மிக மென்மையான அனிச்ச மலர்களும், அன்னப் பறவைகளின் மெல்லிய இறகுகளும் மாதரின் மெல்லிய பாதங்களுக்கு நெருஞ்சிமுள் துளைத்தது போல வருத்தத்தைத் தருகின்றது என்கிறார். 

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொருத்துக் கொள்க.
நன்றி