திருக்குறள் வழிநின்று திருவள்ளுவரை அறிதல்-3
சமீபமாக திருவள்ளுவருக்கு காவி உடைகள் அணிந்து திருநீறு பூசிய நிலையில் இருப்பதை வெளியிட்டு பல சர்ச்சைகள் கிளம்பின. ஆனால், பல்வேறு காலகட்டங்களில் திருவள்ளுவர் எப்படி இருந்திருப்பார் என்று யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா?
திருக்குறளை ஒவ்வொருவரும் தங்கள் பாணியில் உள் வாங்கினார்கள். ஆதலால் தாங்கள் புரிந்து கொண்டதன் அடிப்படையில் திருவள்ளுவருக்கு உருவம் கொடுக்கப்பட்டது. வள்ளுவர் கோட்டத்தில் உட்கார்ந்த நிலையில், கன்னியாகுமரியில் நின்ற நிலையில் என்று அவருக்கு உருவம் கொடுக்கப்பட்டது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் சிலையினை அகழ்ந்தபோது கிடைத்த சிலையானது கிபி 10-15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனத் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வாளர் சா. கிருஸ்ணமூர்த்தி கூறியுள்ளார். இச்சிற்பம் பீடம் மீது அரை பத்மாசனத்தில் வலக்கையில் சின்முத்திரையுடன் இடக்கையில் ஓலைச்சுவடி ஏந்தி, உச்சிக் கொண்டை போட்டு தாடியுடன், நீண்ட காது வளர்த்து உடலில் ஓடும் பட்டையான ஆடையுடன் இடை ஆடையும் அணிந்த மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது.
கி.பி.1752 இல் வெளிவந்த ஆனந்த நாயனார் என்ற நூலில் ஒரு புகைப்படம் வெ
ளிவந்து உள்ளது. ஆதில் தாடி மீசை இல்லாமல் வலது கை சின்முத்திரை இடது கையில் ஓலைச் சுவடியுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது.
ளிவந்து உள்ளது. ஆதில் தாடி மீசை இல்லாமல் வலது கை சின்முத்திரை இடது கையில் ஓலைச் சுவடியுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது.
கி.பி. 1810-1815 காலத்தில் 4 தங்க நாணயங்களில் திருவள்ளுவர் உருவத்தை அன்றைய சென்னை ஆட்சியராக இருந்த எல்லிஸ் துரை வெளியிடுகிறார். அவற்றின் ஒரு பக்கத்தில் இருந்த உருவமானது ஒரு பீடத்தின் மீது பத்மாசனமிட்டு வலது கை தொடை மீதும் இடது கையில் ஓலைச் சுவடியும், இடையில் வேட்டியும், இடது தோளில் மடித்துப் போட்டு துண்டும் அணிந்து மழித்த தலை, தலைக்கு மேலே ஒரு குடை, பீடத்துக்கு முன் ஒரு தீர்த்த பாத்திரத்துடனும் நாணயத்தின் மறுபுறம் நட்சத்திரப் புள்ளிகளால் ஆன வட்டத்துக்குள் பொறிக்கப்பட்டுள்ளது.
1952 இல் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட திருக்குறள் நூல்நயம் புத்தகத்தின் அட்டையில் திருவள்ளுவர் புகைப்படம் ருத்ராட்சம், விபூதி பட்டடை, சின்முத்திரையுடன் காணப்படுகிறது.
1958ல் பண்டிதர் கிருஸ்ணசாமி அவர்கள் வெளியிட்ட நூல் மற்றும் 1962 இல் கே.எம். பாலசுப்பிரமணியன் அவர்கள் வெளியிட்ட நூலிலும் திருவள்ளுவரின் படம் இடம் பெற்றது.
கி.பி.1904 இல் தமிழ் பண்டிதர் கோ. வடிவேலு செட்டியார் திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும் என்ற நூலில் திருவள்ளுவ நாயனார் என அச்சிடப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ஜடா முடி, தாடி, மீசையுடன் மார்புக்குக் குறுக்காக யோக பட்டை, துண்டு அணிந்து, நெற்றியில் பட்டை நடுவில் குங்குமம், வலது கையில் சின்முத்திரையுடன், இடது கையில் ஓலைச் சுவடியும் ஏந்தியவாறு உள்ளது. நூயனார் சொரூபஸ்துதி என்ற பாடலை அடிப்படையாக வைத்து இந்த உருவம் கொடுக்கப்பட்டதாக விளக்கமும் அந்த நூலில் உள்ளது.
இதன் ஆங்கிலப் பதிப்பில் திருவள்ளுவர் படம் கோட்டுருவமாகவும் சைவ சமய அடியார் போன்று கரங்களில், நெற்றியில் விபூதி பட்டையுடன் மரத்தடியில் இரண்டு அடியார்கள் தொழுவது போல் உள்ளது.
கி.பி.1935 இல் வினோதன் பத்திரிக்கை, கி.பி.1949 இல் புலவர் குழந்தை எழுதிய நூலில் திருவள்ளுவர் புகைப்படம் வெளிவந்துள்ளது.
ஆனால், நாம் பேருந்துகளிலும் முன்னர் பாடப் புத்தகங்களிலும் பார்த்த தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட தீர்க்கமான பார்வையுடன் கூடிய ஒரு கையில் எழுத்தாணியும் மறு கையில் ஓலைச் சுவடியுடன் பலகையில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் திருவள்ளுவர் படத்தினை வரைந்தவர் ஓவியர் திரு. கே.ஆர். வேணுகோபால் சர்மா.
தந்தைப் பெரியார், பேரறிஞர் அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், கக்கன், தோழர் ஜீவா, நாவலர் நெடுஞ்செழியன், கிருபானந்த வாரியார், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மு. வரதராசனார், கவியரசர் கண்ணதாசன், எஸ்.எஸ். வாசன் என பல்வேறு அறிஞர்கள் இந்தத் திருவள்ளுவர் படத்தைப் பார்த்து அங்கீகரித்துள்ளனர். அதன்பிறகு 1964 ஆம் ஆண்டு திரு. பக்தவச்சலம் அவர்கள் தமிழக முதல்வராக இருந்தபோது, அன்றைய துணை ஜனாதிபதியாக இருந்த ஜாகீர் உசேனால் சென்னைச் சட்டசபையில் 23.3.1964 அன்று திறக்கப்பட்டது. இந்த ஓவியம்தான் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு நாட்டுடைமையாக்கப்பட்டது. பிறகு கலைஞர் கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது இப்படம் அரசுப் பேருந்தில் இடம் பெற்றது. இந்தப் படத்தை மத்திய அரசு அஞ்சல் தலையாகவும் வெளியிட்டது.
1968 இல் சுவாமி சுத்தானந்த பாரதியார் திருக்குறள் உரைநடையை
உலகத் தமிழ் மாநாட்டில் அரங்கேற்றினார். திருவள்ளுவர் படம் இடம் பெற்றுள்ளது.
1995 தஞ்சையில் நடந்த எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டின் அடையாளமாக திருவள்ளுவர் நாணயங்கள் வெளியிடப்பட்டன
ஆனால், நாம் நமது கட்டுரையின் தலைப்பில் சொன்னவாறு திருவள்ளுவரை திருக்குறள் வழி நின்றல்லவா நோக்க வேண்டும். அவ்வாறுதான் வரையப்பட்டதாக ஓவியர் கே.ஆர். வேணுகோபால் சர்மா குறிப்பிடுகிறார். திருவள்ளுவரின் ஒவ்வொரு பாகமும் எதன் அடிப்படையில் வரையப்பட்டன என்பதனை அவரே தெரிவித்தக் கருத்துக்களை வரும் வாரம் காண்போம்.