Thursday, 18 June 2020

புதுக்கோட்டையிலும் தோண்டுங்க...



புதுக்கோட்டையிலும் தோண்டுங்க...

நமது நாகரீகங்களை பாரம்பரியங்களை நாம் பூமிக்கு அடியில் தேடிக்கொண்டிருக்கிறோம். அதிலே கிடைக்கும் சிறு சிறு விடயங்கள் நமது முன்னோர்கள் குறித்து அவர்களுடைய நாகரீகமான, அறிவுப்பூர்மான செயல்பாடுகள் நமக்கு பெருமையினையும் மகிழ்ச்சியினையும் ஏற்படுத்துகின்றன. அதினால் தான் கீழடி பெரிய அளவில் கொண்டாடப்பட்டது, ஆதிச்சநல்லூர் மீண்டும் தோண்டப்படுகிறது.
ஆனால்... பூமிக்கு அடியில் தோண்டி எடுப்பதை விட பூமிக்கு மேலே இருப்பதில் தெரியும் நாகர்Pகம்... பாரம்பரியம்...அறிவுப்பூர்வமான ஆச்சரியப்படுத்தும் செயல்கள் பார்க்க வேண்டும் என்றால்...? இன்னும் எவ்வளவு குதூகலம் அடையும். என்னைப் பொருத்தவரை அப்படி ஒரு இடம் பார்க்க வேண்டும் எனில் நீங்கள் சுற்றி வர வேண்டியது புதுக்கோட்டை மாவட்டம் எனப் பரிந்துரை செய்வேன். நான் பணி நிமித்தம் களப்பகுதிகளில் சுற்றி வந்த போதே பல ஆச்சரியங்களை கண்டேன். எனக்கு அகழ்வாராய்வில் அறிவிருந்தால் என் அறிவுக்கு எட்டியவாறு பலவற்றை காண முற்பட்டிருப்பேன். அப்படியொரு ஆச்சரிய பூமி அது... அதில் சில விடயங்களை மட்டும் இங்கே சுருக்கமாகக் கொடுக்கிறேன். வேண்டுமானால் நீங்களும் பொருத்தி பார்த்துக் கொள்ளலாம்.

7000 வருட வயதுடைய பாறை ஓவியம்:
நீங்கள் ஒருவேளை திருமயம் கோட்டை சென்று வந்திருப்பீர்கள் என்றால் உச்சியில் உள்ள பீரங்கியினைப் பார்த்திருக்கலாம் பார்த்துவிட்டு கீழே இறங்கி வரும் போது வெண்ணை உருட்டுப் பாறை போன்று இருக்கும் பாறையின் கீழ் இளைப்பாறி விட்டுச் சென்றிருக்கலாம். அப்போது சற்றே தலையை தூக்கி 7000 வருட பாறை ஓவியத்தினைப் பார்த்திருப்பீர்கள் என்றால் நீங்கள் பாக்கியசாலி. அப்படி தலையைத் தூக்கி அதனை சரியாக விளங்க இயலாதவர்கள் அந்த ஓவியத்தில் நீரைத் தெளித்தால் ஓவியம் தெளிவாகத் தெரிவதைக் காணலாம்.
அந்தப் பாறையின் கீழ் நம் பாரம்பரிய விளையாட்டுகளான பல்லாங்குழி, தாயம், ஆடுபுலி ஆட்டம், நேர் கோடு விளையாட்டுக் கட்டம் போன்ற விளையாட்டுக்கள் பல வருடத்திற்கு முன்பே விளையாடிக் கொண்டிருந்ததின் கீரல்களைக் காண முடியும்.
அப்படியே மற்றொருப் பகுதியில் குகையினைக் குடைந்த அதில் சிவலிங்கம் இருக்கும் கோயில். அக்கோயிலுக்குப் போக வேண்டுமெனில் ஏணியில் தான் போக வேண்டும். மலையில் இருந்து கீழிறங்கி பின் பக்கம் சென்றால்... பிற்பக்கத்தில் சிவன் கோயிலையும் பெருமாள் கோயிலையும் அருகருகேக் காண முடியும்.
சிவன் கோயிலும் பெருமாள் கோயில் இரண்டுமே குடைவரைக் கோயில்கள் குறிப்பாக சிவன் கோயிலுக்குச் சென்றால்... மிகப்பெரிய குகைப்பாறையிலேயே வெட்டப்பட்டுள்ள லிங்கோத்பவரைக் காண முடியும். அந்த இடத்திலேயே குகையில் மற்றொரு பக்கத்தில் திரும்பிப் பார்த்தால் ஒரு யாழ் இசைக்கருவியின் வரைபடம் கீறப்பட்டிருப்பதையும் கண்டு ரசிக்கலாம்.  பெருமாள் கோயிலிலும் மிகப்பெரிய குகைப் பாறையில் செதுக்கப்பட்ட பெரிய பெருமாள் சிலையை சயன கோலத்தில் பார்க்க இயலும். இங்கு தைலக்காப்பு மட்டுமே நடைபெறுகிறது. பெருமாள் கோயிலில் இருந்து வெளியே வந்தீர்களெனில் எண்;கோண வடிவ குளத்தினையும் கண்டு இரசிக்கலாம்.
சித்தன்னவாசல்:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசலை எடுத்துக் கொண்டால் “சித்தன்னவாசலின் ஓவியமே...” என்ற பாடல் நினைவுக்கு வரலாம். ஒருவேளை அந்த இடத்திற்குச் சென்றிருந்தால் அக்காலத்தில் சமண முனிகள் வெட்டி வைத்த சிற்பங்களை, கற்களால் செய்யப்பட்ட சமணர் படுக்கைகளை எல்லாவற்றிற்கும் மேலாக இன்றும் அழியாமல் நிற்கும் கலைநயம் மிக்க அற்புதமான ஓவியங்களைக் கண்டு ரசித்திருக்கலாம். ஆனால் அங்கு எத்தனை பேர், குடைவரை கோயிலின் ஒரு மூலையில் நின்று ‘ஓம்’ என்ற மந்திரத்தை உள்ளிருந்து உச்சரித்தால் குகையின் நடுவிலும் வாயிலிலும் அதன் அதிர்வை உணர்ந்தவர்கள் இருக்கிறோம்? முக்கியச் சாலையில் இருந்து சித்தன்னவாசல் குகை நோக்கிச் செல்லும் போது வலதுபக்கம் அமைந்துள்ள முதுமக்கள் தாலியுடன் புதைக்கப்பட்ட இடங்களை எத்தனை பேர் பார்த்து உணர்ந்திருப்போம். முதுமக்கள் தாழி என்று வரலாற்றின் பக்கத்தில் படித்திருந்த நாம் நமது ஊரில் அருங்காட்சியகத்தில் சென்றிருந்தால் ஒருவேளை அது அங்கிருந்தால் பார்த்திருக்கலாம். சித்த்ன்னவாசலில் முதுமக்கள் புதைக்கப்பட்ட இடத்தின் மேல் அதன் அடையாளமாக கற்களை வட்டமாக பதித்து வைத்திருக்கும் காட்சியினையும் காணலாம். வெறுமனே பெரிய பானையில் மட்டுமே புதைக்கப்பட்டிருந்திருக்கலாம் என்று நினைத்தால் அதையும் விட பெரிய ஆச்சரியத்தைத் தரவல்லது புதுக்கோட்டை. Cist Burial (கல் பதுக்கை) என்று வார்த்தையடித்து google இல் தேடினால் நான் சொல்வதின் அர்த்ததினை உங்களால் விளங்கிக் கொள்ள முடியும். இதுபோன்ற கல்பதுக்கைகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன.
சித்தன்னவாசல் சென்றவர்கள், ‘பள்ளிக்கூடம்” (இதைப் பற்றித் தெரிந்து கொள்ள தொ. பரமசிவன் அவர்கள் எழுதியுள்ள அறியப்படாத தமிழகம் என்ற புத்தகத்தையோ, மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் புத்தகங்களையோ புரட்டினால் அதற்கான விடைக் கிடைக்க வாய்ப்புண்டு) என்ற வார்த்தை வருவதற்குக் காரணமாக அமைந்த சமணப்படுக்கைகளைக் காணலாம். நவச்சுனைப் பக்கம் சென்றவர்கள் ஒருவேளை குடைவரைக் கோயிலையும் கண்டிருக்க அரிதான வாய்ப்புள்ளது. இங்கும் இதே போன்று நார்த்தாமலையில் உள்ள குடைவரை சிவலிங்கக் கோயில் பெரும்பாலும் நீரால் மூடியிருக்கின்றன.
நார்த்தாமலை:
நார்த்தாமலைக்கு மாரியம்மனை தரிசிக்கச் சென்றவர்கள் கோயிலில் இருந்து வெளியே வந்து கோயிலுக்கு இடப்புறமாகவும் பின்புறம் வலப்பக்கமாகவும் கண் நோக்கினால் இடப்புறம் உள்ள குன்றுகள் தஞ்சைப் பெரிய கோயிலுக்கு தாங்கள் பாறைகளைக் கொடுப்பித்தக் கதை சொல்லும். ஆளுருட்டி மலையில் மக்கள் தண்டிக்கப்பட்ட வரலாறு சொல்லும், சோழர்கால கோயில்கள், சமணக் பாறைச் சிற்பங்கள் என்று பல வரலாற்றினைச் சொல்லும். பின்பக்கம் உள்ள மலை உள்ளே மறைத்து வைத்திருக்கும் குடைவரை சிவலிங்கத்தினைச் சொல்லும். பல்லவர் கால குடைவரைக் கோயிலைக் காட்டும், முத்தரையர் கால விஜயாழசோழீஸ்வரத்தைக் காட்டும். கொஞ்சம் முன்னேறிச் சென்றால் பள்ளிவாசலையும் கண்டுவரலாம்.
பொம்மாடிமலை:
மலையில் இருந்து கீழிருந்து பின்னோக்கிச் சென்றால், மண்ணிலே தன் கை வண்ணத்தை அந்நாளில் இருந்து இந்தாள் வரை எப்படி மக்கள் செதுக்கி வைத்தனர். அதில் தன் குடும்பப் பாரம்பரியத்தை எப்படி அடுக்கி வைத்தனர் என்பதை அறியலாம். புரவி எடுத்தல் என்பதனை நீங்கள் ஒரு வேளை கேள்விப் பட்டிருக்கலாம் அதன் முடிவு எப்படி இருக்கும் என்பதை அறிய விரும்பினால் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சுற்றி வந்தால் பல இடங்களில் காவல் தெய்வமாக அய்யனார் குடி கொண்டிருப்பதையும் அதில் புரவிகள் வரிசையில் நிற்பதையும் காணலாம்.
கொடும்பாளுர்:
பொன்னியின் செல்வன் படித்தவர்கள் பட்டென மனதி;ல் நிற்கும் ஊர் கொடும்பாளுர். சிலப்பதிகாரம் படித்திருந்தாலோ கொடும்பாளுரை கடந்து கண்ணகி பயணம் செய்த கதை சொல்லும். அங்கே தொல்லியல் துறையினரால் மீட்டெடுக்கப்பட்ட மூவர் கோயில் (தற்போது இரு கோயில்கள் மட்டுமே காணப்படுகிறது) இராஜராஜசோழனின் தந்தை காலத்திய வரலாற்றினைக் கூறும். தஞ்சாவூர் பெரிய கோயில் கருவறை சென்று கீழிருந்து மேல் நோக்கினால் கோபுரம் எப்படி இருக்கும் என்று பார்க்க இயலாதவர்கள் கொடும்பாளளுர் மூவர் கோயில் சென்று பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். அதன் அருகேயே சிதிலமடைந்து கிடக்கும் ஐவர் கோயில் கோயில்களி;ல் பாறைகளை எப்படிப் பொருத்திக் கட்டுகிறார்கள் என்ற விடையை உங்களுக்கு அளிக்கவல்லது.
குடுமியான் மலை:
குடுமியான் மலைக்குச் சென்றீர்கள் என்றால் உச்சி மலையில் இருந்து கீழ் கோபுரம் வரை பல வரலாறுகளை உள்ளடக்கியது. அதில் குடைவரைக் கோயிலாக இருக்கட்டும்... பாறையில் செதுக்கி வைக்கப்பட்டுள்ள இசைக் குறிப்புகளாக இருக்கட்டும் (ஆரளiஉயட ழேவநள), ஆயிரங்கால் மண்டபங்களாக இருக்கட்டும், தூண்களில் வடிக்கப்பட்ட கலை நயம் மிக்கச் சிற்பங்களாக இருக்கட்டும் பறைசாற்றும் பலவித சங்கதில் ... மாலிக்கபூர் படையெடுப்பு முதற்கொண்டு...
பொற்பனைக் கோட்டை:















பொற்பனைக் கோட்டையில் அரசு அதிகாரிகள் முதல் அனைத்து தரப்பினரும் சென்று தரிசித்து வருவது பொற்பனைக் கோட்டை முனிசுவரர் கோயில். இது மக்களின் தெய்வமாக அங்குள்ள உள்ளுர் மக்களால் பூசை செய்யப்படுவது சிறப்பு.... கோயிலை மட்டும் பார்த்தவர்கள் பொதுவாக பார்க்காத விடயம் என்னவென்றால் அதன் அருகே எச்சங்களாக அமைந்திருக்கும் உற்று நோக்கினால் மட்டுமே தெரியும் கோட்டைச் சுவர்...

அலுமினியம் இரும்பு உருக்கு உலை:
பொற்பனைக் கோட்டையில் இருந்து ஒரு இரண்டு கிலோ மீட்டர் தூரம் தைலக் காட்டின் உள்ளே சென்றால்  தாதில் இருந்து அலுமினியத்தையும் இரும்பையும் பிரிப்பதற்கு வைத்திருந்த கலன்களைக் காணலாம். இதில் 2500 வருடத்திற்கு முன்பே அவர்கள் அதற்கான அறிவியலைக் கொண்டிருந்தது நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது..
புதிர்திட்டை  (labarinth):
சிறுவயதில் நாம் ஒருவேளை சிறுவர்களுக்கான வார இதழிலோ நாளிதழிலோ இந்த விளையாட்டினை விளையாண்டிருக்கலாம். குட்டி ஆடு காட்டில் சென்று மாட்டிக் கொண்டது அது தன் தாய் ஆடு இருக்கும் இருப்பிடத்தை அடைய அதற்கு உதவுங்களேன் என்று இருக்கும். நாமும் பென்சிலைக் கொண்டு கோடு வரைந்து சிக்கலான வழிப்பாதைகளுக்கு நடுவே சரியான வழிப்பாதையைக் கண்டிறிவோம். அதற்கு  ஆங்கிலத்தில் பெயர், லாபரிந்து என்றும் அழைக்கப்படும். தமிழில் புதிர்த்திட்டை என்று வழங்கப்படும். இது புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலத்தில் இருந்ததற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
சமண மதத்தின் எச்சங்கள்:
புதுக்கோட்டை மாவட்டத்தில் சமண மதம் கோலோச்சி நின்றதற்கான பல்வேறு எச்சங்கள் மாவட்டம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. அதில் முக்கியமானவை சித்தன்னவாசல் ஏழடிப்பட்டம், சித்தன்னவாசல் சிற்பம், அன்னவாசலில், நார்த்தாமலையில் தலையில்லாமல் இருக்கும் மகாவீரரின் சிற்பங்கள், நார்த்தாமலையில் செதுக்கப்பட்டுள்ள சமணச் சிற்பங்கள், சமணர்கள் எப்படிக் கொல்லப்பட்டனர் என்பதை விவரிக்கும் பெருவுடையார் கோயில் சிற்பங்கள் என விரிகிறது. சிலர் சமணச் சிற்பங்களை தங்களது வழிபாட்டு முறையில் வழிபட்டும் வருகின்றனர்.
இது போன்று பல்வேறு விடயங்கள்
- பெருவுடையார் கோவிலில், குன்றாண்டார் கோவிலில் , மலையடிப்பட்டியில், பிரகதாம்பாள் கோயிலில், திருவேங்கைவாசலில், விராலிமலையில், தமிழகத்தின் இரண்டாவது பெரிய அருங்காட்சியகத்தில், அரண்மனையில், பொன்னமராவதி பெயர் உருவாக்கத்தில், புதுக்கோட்டை கோட்டை உருவாக்கத்தில், புதுக்குளத்தில், ஆவூர் ஆலயத்தில்... என்று பட்டியல் நீள்கிறது.
நார்த்தாமலையில் விஜயசோழீசுவரம் கோயில் இருக்கும் மலையில் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டால் பாறை ஓவியமோ அல்லது மூதாதையர்கள் தங்கிருந்ததற்கான எச்சங்கள் ஏதேனும் இருக்கலாம் என என் உள்மனது சொல்கிறது.
ஆகவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் வெளிப்பகுதியிலேயே நிறைய விடயங்கள் காண இயலுகிறது. எச்சங்கள் காணப்படும் பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டால் பல விடயங்கள் வெளிவரும் என்று எண்ணுகிறேன். சம்மந்தப்பட்டவர்கள் முயற்சி எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில்...

No comments:

Post a Comment