Monday, 11 November 2019

Never Ever Give Up

இன்று அதிகாலை 4.30 மணி இருக்கும் திருச்சி நெம்.1 டோல்கேட்டில் இருந்து இலால்குடி நோக்கி தனியார் நகரப்பேருந்தில் பயணம். பேருந்தின் உள்புறம் இரண்டு பக்கமும் இரண்டு இரண்டு இருக்கைகள். இருக்கைகளில் ஆட்கள் அமர்ந்திருந்த இருக்கையில் அமர இயலாதவர்கள் நிற்பதற்கும் இருக்கைக்கு சென்று அமர்வதற்கும் உள்ள வழியெங்கிலும் காய்கறி மூட்டைகளின் ஆக்கிரமிப்பு. கடைசி இருக்கையின் அடியில் தக்காளி பெட்டிகள். பின்புற படிகட்டிற்கு நேரே உள்ள இருக்கையின் அருகே உள்ள காய்கறி மூட்டையை ஓட்டுநர் வண்டியை வேகமாக நிறுத்தினாலோ அல்லது திடீரென நிறுத்தினால் படிக்கட்டு வழியாக விழுந்து விடாமல் இருப்பதற்காக இருக்கையின் கைப்பிடியில் பெரியவர் ஒருவர் கட்டியிருந்தார். அவருக்கு வயது சுமார் 70 இருக்கும். அங்கே காய்கறி மூட்டை வைத்திருந்தவர்கள் அனைவரும் அந்த வயதை ஒத்தவர்களே!
அதில் 7 பெரியம்மாக்களும் அடங்குவர்!(இந்த வயதிலும் அவர்களது தளராத உழைப்பு அவர்களை அப்படி அழைக்க தோன்றுகிறது) நான் கடைசி வரிசையில் அமர்ந்திருந்தேன். எனது அருகில் அமர்ந்திருந்தவர் குடித்திருந்தார்.(சரக்கை பத்திரப்படுத்தி வைத்திருந்து அடித்திருப்பார் போல!) ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் நடத்துனர் ஒரு முறை நிறுத்தம் வந்ததை அறிவித்தால் இவர் பத்து முறை உரக்கக் கூறினார். மீதி நேரத்தில் தொடர்ந்து தகாத வார்த்தைகள் வாயிலிருந்து சரளமாக கொட்டிக்கொண்டே இருந்தது. இடையிடையே நடத்துனரிடம் எச்சரிக்கை, தன்னை அவர் ஊர் வந்தவுடன் இறக்கி விட வேண்டும் என்று...
"பச்சாம்பேட்டை வளைவு"
நடத்துனர் உரக்கக் கத்துகிறார். இவர் உடனே " ஏன்யா ஸ்டாப்பிங்கு வந்தோனே சொல்ல சொன்னேன்ல?" உரக்க கத்தினார்.
"அதெப்படி உன்னை இறக்காம போவோம்? இறங்கு"
அவரும் தன் ஊர் பெயரை இந்த முறை பாடிக்கொண்டே இறங்கி சென்றார்.
இலால்குடியும் வந்தது, மக்கள் தங்கள் காய்கறி மூட்டைகளை இறக்கினர். வயதானவர்கள் என்பதால் நானும் என் பங்கிற்கு ஒரு பெரிய மூட்டையை இறக்கினேன். அடுத்த மூட்டைக்கு எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இன்னொரு பெரியம்மா தரையில் நின்று கொள்ள பேருந்தில் இருந்த ஒரு பெரியம்மா பேருந்தின் முதல் படியில் இருந்து மூட்டையை சரித்து கொடுக்க கீழிருந்த பெரியம்மா மூட்டையை இறக்கி தரையில் வரிசையாக வைத்தார்கள்.
மூட்டைகளை இறக்கிய சில வினாடிகளிலேயே ஒரு ஆட்டோ வந்து நின்றது. நான் பேருந்தில் இருந்து இறக்கிய மூட்டையை அவர் ஆட்டோவில் ஏற்றினார். அந்த மூட்டைக்கு சொந்தக்கார பெரியம்மா தன் பங்கிற்கு ஒரு மூட்டையும் ஒரு கூடையும் ஆட்டோவில் ஏற்றினார். ஆட்டோ கிளம்புகிறது. அந்த பெரியம்மா என்னை பார்த்து இருகரம் கூப்பி தன் பொக்கை வாயில் சிரித்து தனது நன்றியை தெரிவிக்கிறார். திடீரென்று இந்த நிகழ்வு என்னை திக்குமுக்காட செய்தது. என்னுடைய பதில் வணக்கத்தை தெரிவித்தேன். இந்த நிகழ்வுகள் மொத்தத்தில் 20 நிமிடங்களில் அரங்கேறி விட்டது. ஆனால், அதில் இருந்த பாடங்கள் நிறைய...
இரண்டு நாட் கள் முன்பு செய்தியில் இளைஞர்கள் அதிகம் வேலைகிடைக்காமல் மரத்தடிகளில் பொது இடங்களில் தாயம், ஆடுபுலி ஆட்டம் போன்றவற்றை ஆடி பொழுது போக்குகின்றனர் என்ற செய்தி, அந்த செய்தியின் கீழேயே வேலைவாய்ப்பு செய்தி! ஒரு பக்கம் இப்படி என்றால் மறுபக்கம் வயதான காலத்திலும் உழைத்து வாழும் பெரியவர்கள். நானும் என்னுடைய முதுநிலை படிப்பில் இருந்தே சில தொழில்களை செய்து ஒரு சில காரணங்களால் கைவிட்டுருக்கிறேன். ஆனால், தொழில் முனைவு எண்ணம் என்னை எப்போதும் ஆட்கொண்டேதான் இருக்கிறது.
இந்த பெரியவர்களிடம் இருந்து இன்று முக்கியமாக கற்று கொண்டது. எப்போதும் கைவிடக்கூடாது, விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதே.
கீழ்வரும் வாசகம் அனைத்து தொழில் முனைவோருக்கும் பொருந்தும்.
#Never ever Give up

No comments:

Post a Comment