Thursday, 7 November 2019

வீரமாமுனிவர்

தமிழில் நாம் எழுதும் முதல் எழுத்து உயிரெழுத்து  'அ'   இரண்டாவது எழுத்து 'ஆ' என்று எழுதுவோம். ஆனால் .கி . பி.1710 ற்கு முன்பே பிறந்திருந்தோமேயானால் 'அ' வை தொடர்ந்து 'அர' ...'எ' வை தொடர்ந்து 'ஏ' 
அல்ல 'எர'அதே போன்று பழைய தமிழ் எழுத்துகளில் மெய்யெழுத்துக்களுக்கு மேலே புள்ளி வைக்கும் வழக்கம் இல்லை அதற்கு மாறாக நீண்ட கோடு இருக்கும். இத்தகைய சீர்திருத்தத்தை செய்தவர் இத்தாலி நாட்டுக்காரர் என்றால் ஆச்சரியப்படாமல் இருக்க முடிவதில்லை.
மேலும் இவரே தமிழ் முதல் நகைசுவை இலக்கியமாகவும் தமிழில் முதல் சிறுகதையாகவும் வெளிவந்த 'பரமார்த்த குருவின் கதை'யின் ஆசிரியர்.
இப்போது கண்டு கொண்டிருப்பீர்கள், இத்தாலியில் பிறந்து தமிழ் மொழிக்கு தொண்டாற்றி மறைந்த  கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி Constantine Joseph Beschi என்ற இயற்பெயருடைய வீரமாமுனிவர். 
ஆரம்பத்தில் இவர் தன் பெயரை தமிழில் மாற்ற விரும்பி  'தைரியநாதசாமி ' என்று வைத்திருந்தார். ஆனால் அது வட மொழி என அறிந்ததும் தன் பெயரை வீரமாமுனிவர் என்று மாற்றிக்கொண்டார்.
தமிழ்நாட்டில் ஆவூர், ஏலாக்குறிச்சி, வடுகர்பேட்டை போன்ற பல ஆலயங்களை எழுப்பினார்.
இவர் தமிழ் மொழி மீது தீராத பற்று கொண்டிருந்தார். 

இலக்கிய சுவடிகளை தேடி பல இடம் அலைந்து திரிந்ததால் இவர் 'சுவடி தேடும் சாமியார்' என்று அழைக்கப்பட்டார்.

தமிழ் சிறப்பை பிறர் நாட்டினரும் உணரும் வகையில் திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திச்சூடி ஆகிவற்றை ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்த்தார்.
அப்போது தமிழ் இலக்கியங்கள் செய்யுள் வடிவில் இருந்ததால் அவற்றை மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உரைநடையில் எழுதினார். 

தமிழ் இலக்கியத்தில் இவர் இயற்றிய தேம்பாவணி புகழ் பெற்றது. 
வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, வாமன் கதை, திருக்காவல் ஊர் கலம்பகம், செந்தமிழ் இலக்கணம், கித்தேரி அம்மன் அம்மானை  ஆகியவை இவருடைய பிற நூல்கள்.

பிற நாட்டவர் தமிழ் கற்க ஏதுவாக தமிழ்-லத்தீன் அகராதியை உருவாக்கினார். இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும்.
பிறகு தமிழ்-போர்த்துகீசிய அகராதியை உருவாக்கினார். 

இவருக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தவர்  சுப்ரதீபக் கவிராயர் 

# இன்று வீரமாமுனிவர் பிறந்த நாள் 

No comments:

Post a Comment