Monday, 11 November 2019

Never Ever Give Up

இன்று அதிகாலை 4.30 மணி இருக்கும் திருச்சி நெம்.1 டோல்கேட்டில் இருந்து இலால்குடி நோக்கி தனியார் நகரப்பேருந்தில் பயணம். பேருந்தின் உள்புறம் இரண்டு பக்கமும் இரண்டு இரண்டு இருக்கைகள். இருக்கைகளில் ஆட்கள் அமர்ந்திருந்த இருக்கையில் அமர இயலாதவர்கள் நிற்பதற்கும் இருக்கைக்கு சென்று அமர்வதற்கும் உள்ள வழியெங்கிலும் காய்கறி மூட்டைகளின் ஆக்கிரமிப்பு. கடைசி இருக்கையின் அடியில் தக்காளி பெட்டிகள். பின்புற படிகட்டிற்கு நேரே உள்ள இருக்கையின் அருகே உள்ள காய்கறி மூட்டையை ஓட்டுநர் வண்டியை வேகமாக நிறுத்தினாலோ அல்லது திடீரென நிறுத்தினால் படிக்கட்டு வழியாக விழுந்து விடாமல் இருப்பதற்காக இருக்கையின் கைப்பிடியில் பெரியவர் ஒருவர் கட்டியிருந்தார். அவருக்கு வயது சுமார் 70 இருக்கும். அங்கே காய்கறி மூட்டை வைத்திருந்தவர்கள் அனைவரும் அந்த வயதை ஒத்தவர்களே!
அதில் 7 பெரியம்மாக்களும் அடங்குவர்!(இந்த வயதிலும் அவர்களது தளராத உழைப்பு அவர்களை அப்படி அழைக்க தோன்றுகிறது) நான் கடைசி வரிசையில் அமர்ந்திருந்தேன். எனது அருகில் அமர்ந்திருந்தவர் குடித்திருந்தார்.(சரக்கை பத்திரப்படுத்தி வைத்திருந்து அடித்திருப்பார் போல!) ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் நடத்துனர் ஒரு முறை நிறுத்தம் வந்ததை அறிவித்தால் இவர் பத்து முறை உரக்கக் கூறினார். மீதி நேரத்தில் தொடர்ந்து தகாத வார்த்தைகள் வாயிலிருந்து சரளமாக கொட்டிக்கொண்டே இருந்தது. இடையிடையே நடத்துனரிடம் எச்சரிக்கை, தன்னை அவர் ஊர் வந்தவுடன் இறக்கி விட வேண்டும் என்று...
"பச்சாம்பேட்டை வளைவு"
நடத்துனர் உரக்கக் கத்துகிறார். இவர் உடனே " ஏன்யா ஸ்டாப்பிங்கு வந்தோனே சொல்ல சொன்னேன்ல?" உரக்க கத்தினார்.
"அதெப்படி உன்னை இறக்காம போவோம்? இறங்கு"
அவரும் தன் ஊர் பெயரை இந்த முறை பாடிக்கொண்டே இறங்கி சென்றார்.
இலால்குடியும் வந்தது, மக்கள் தங்கள் காய்கறி மூட்டைகளை இறக்கினர். வயதானவர்கள் என்பதால் நானும் என் பங்கிற்கு ஒரு பெரிய மூட்டையை இறக்கினேன். அடுத்த மூட்டைக்கு எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இன்னொரு பெரியம்மா தரையில் நின்று கொள்ள பேருந்தில் இருந்த ஒரு பெரியம்மா பேருந்தின் முதல் படியில் இருந்து மூட்டையை சரித்து கொடுக்க கீழிருந்த பெரியம்மா மூட்டையை இறக்கி தரையில் வரிசையாக வைத்தார்கள்.
மூட்டைகளை இறக்கிய சில வினாடிகளிலேயே ஒரு ஆட்டோ வந்து நின்றது. நான் பேருந்தில் இருந்து இறக்கிய மூட்டையை அவர் ஆட்டோவில் ஏற்றினார். அந்த மூட்டைக்கு சொந்தக்கார பெரியம்மா தன் பங்கிற்கு ஒரு மூட்டையும் ஒரு கூடையும் ஆட்டோவில் ஏற்றினார். ஆட்டோ கிளம்புகிறது. அந்த பெரியம்மா என்னை பார்த்து இருகரம் கூப்பி தன் பொக்கை வாயில் சிரித்து தனது நன்றியை தெரிவிக்கிறார். திடீரென்று இந்த நிகழ்வு என்னை திக்குமுக்காட செய்தது. என்னுடைய பதில் வணக்கத்தை தெரிவித்தேன். இந்த நிகழ்வுகள் மொத்தத்தில் 20 நிமிடங்களில் அரங்கேறி விட்டது. ஆனால், அதில் இருந்த பாடங்கள் நிறைய...
இரண்டு நாட் கள் முன்பு செய்தியில் இளைஞர்கள் அதிகம் வேலைகிடைக்காமல் மரத்தடிகளில் பொது இடங்களில் தாயம், ஆடுபுலி ஆட்டம் போன்றவற்றை ஆடி பொழுது போக்குகின்றனர் என்ற செய்தி, அந்த செய்தியின் கீழேயே வேலைவாய்ப்பு செய்தி! ஒரு பக்கம் இப்படி என்றால் மறுபக்கம் வயதான காலத்திலும் உழைத்து வாழும் பெரியவர்கள். நானும் என்னுடைய முதுநிலை படிப்பில் இருந்தே சில தொழில்களை செய்து ஒரு சில காரணங்களால் கைவிட்டுருக்கிறேன். ஆனால், தொழில் முனைவு எண்ணம் என்னை எப்போதும் ஆட்கொண்டேதான் இருக்கிறது.
இந்த பெரியவர்களிடம் இருந்து இன்று முக்கியமாக கற்று கொண்டது. எப்போதும் கைவிடக்கூடாது, விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதே.
கீழ்வரும் வாசகம் அனைத்து தொழில் முனைவோருக்கும் பொருந்தும்.
#Never ever Give up

Thursday, 7 November 2019

வீரமாமுனிவர்

தமிழில் நாம் எழுதும் முதல் எழுத்து உயிரெழுத்து  'அ'   இரண்டாவது எழுத்து 'ஆ' என்று எழுதுவோம். ஆனால் .கி . பி.1710 ற்கு முன்பே பிறந்திருந்தோமேயானால் 'அ' வை தொடர்ந்து 'அர' ...'எ' வை தொடர்ந்து 'ஏ' 
அல்ல 'எர'அதே போன்று பழைய தமிழ் எழுத்துகளில் மெய்யெழுத்துக்களுக்கு மேலே புள்ளி வைக்கும் வழக்கம் இல்லை அதற்கு மாறாக நீண்ட கோடு இருக்கும். இத்தகைய சீர்திருத்தத்தை செய்தவர் இத்தாலி நாட்டுக்காரர் என்றால் ஆச்சரியப்படாமல் இருக்க முடிவதில்லை.
மேலும் இவரே தமிழ் முதல் நகைசுவை இலக்கியமாகவும் தமிழில் முதல் சிறுகதையாகவும் வெளிவந்த 'பரமார்த்த குருவின் கதை'யின் ஆசிரியர்.
இப்போது கண்டு கொண்டிருப்பீர்கள், இத்தாலியில் பிறந்து தமிழ் மொழிக்கு தொண்டாற்றி மறைந்த  கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி Constantine Joseph Beschi என்ற இயற்பெயருடைய வீரமாமுனிவர். 
ஆரம்பத்தில் இவர் தன் பெயரை தமிழில் மாற்ற விரும்பி  'தைரியநாதசாமி ' என்று வைத்திருந்தார். ஆனால் அது வட மொழி என அறிந்ததும் தன் பெயரை வீரமாமுனிவர் என்று மாற்றிக்கொண்டார்.
தமிழ்நாட்டில் ஆவூர், ஏலாக்குறிச்சி, வடுகர்பேட்டை போன்ற பல ஆலயங்களை எழுப்பினார்.
இவர் தமிழ் மொழி மீது தீராத பற்று கொண்டிருந்தார். 

இலக்கிய சுவடிகளை தேடி பல இடம் அலைந்து திரிந்ததால் இவர் 'சுவடி தேடும் சாமியார்' என்று அழைக்கப்பட்டார்.

தமிழ் சிறப்பை பிறர் நாட்டினரும் உணரும் வகையில் திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திச்சூடி ஆகிவற்றை ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்த்தார்.
அப்போது தமிழ் இலக்கியங்கள் செய்யுள் வடிவில் இருந்ததால் அவற்றை மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உரைநடையில் எழுதினார். 

தமிழ் இலக்கியத்தில் இவர் இயற்றிய தேம்பாவணி புகழ் பெற்றது. 
வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, வாமன் கதை, திருக்காவல் ஊர் கலம்பகம், செந்தமிழ் இலக்கணம், கித்தேரி அம்மன் அம்மானை  ஆகியவை இவருடைய பிற நூல்கள்.

பிற நாட்டவர் தமிழ் கற்க ஏதுவாக தமிழ்-லத்தீன் அகராதியை உருவாக்கினார். இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும்.
பிறகு தமிழ்-போர்த்துகீசிய அகராதியை உருவாக்கினார். 

இவருக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தவர்  சுப்ரதீபக் கவிராயர் 

# இன்று வீரமாமுனிவர் பிறந்த நாள் 

கற்க வேண்டியது உலகளவு

என்னுடைய அலுவல் பணி நிமித்தமாக இன்று பயணம் செய்துக்கொண்டிருந்தபோது, சட்டென அந்த காட்சி என் கண்ணில் பட்டது. வண்டியை திருப்பிக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றேன். ஒரு வாய்க்காலில் ஒருவர் வட்ட வடிவிலான வலைக்கூடையை ஒரு கையில் பிடித்துக்கொண்டு மற்றொரு கையில் ஒரு தகரத்தை கொண்டு வாய்க்காலின் அடிப்பகுதியை வாரி வாரி அந்த வலைக்கூடையில் போட்டு அப்படியே நீருக்கு மேலே தூக்கினார். அவ்வப்போது தண்ணீரில் முங்கி தண்ணீருக்குள் அடியில் கிடைத்ததை உள்ளேயே வாரி போட்டு மேலே கொண்டு வந்து தேடிக்கொண்டிருந்தார். அதில் சிறு சிறு கற்களும் ஒரு கண்ணாடி துண்டும் இருந்தது. பின்பக்கம் ஒரு சிறுமீன் துள்ளிக்கொண்டிருந்தது. வாய்க்காலின் கரையில் ஒருவர் அமர்ந்து கொண்டு வெற்றிலை மென்று கொண்டே அவரிடம் பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தார். அவர்களிடம் சென்று "என்ன அய்யா பண்றீங்க, நத்தை ஏதும் பிடிக்கிறீங்களா?" என்றேன். "இல்லங்க சார், மக்கள் வந்து குளிக்கிறப்ப நகை நட்டு ஏதாவது விட்டு போயிருப்பாங்க? அதான், பார்த்துகிட்டு இருக்கோம்" கரையில் உட்கார்ந்து இருந்தவர் சொன்னார்."ஏன்யா தமாசு பண்றீங்க? என்னதான் பண்றீங்க சொல்லுங்க ?" புரியாமல் கேட்டேன்.தண்ணீரில் இருந்தவர் "சார், அவர் சொல்றது உண்மைதான்" "என்ன?" புரியாமல் விழித்தேன். "ஆமா சார், நிதானமா கேளுங்க..." கரையில் இருந்தவர் தான் சொன்னார் " இங்க வந்து சனமெல்லாம் குளிச்சிட்டு போகும் சார், அதுல சிலபேரு நகை நட்ட தவற விட்டுருவாங்க, நாங்க மக்கள் இல்லாதபோது வந்து இதுமாதிரி தடவி ஏதாவது கிடைச்சா எடுத்து வித்துடுவோம்...""இங்க பாருங்க மிஞ்சி மாதிரி இருக்கு..." தண்ணீரில் இருந்தவர் சலித்து மெட்டிபோன்ற ஒரு பொருளை எடுத்தார். எடுத்து தன் விரலில் மாட்டிப்பார்த்தவர் அது மதிப்பற்ற பொருள் போல தோற்றமளிக்கவும் தூக்கி எறிந்தார்!"இப்படி தான் சார் ஏதாவது தட்டுப்படும். சில சமயம் குளிக்கும் போது மக்கள் யாரவது நகையை அல்லது பொருளை தண்ணீரில் தொலைந்துவிட்டால் எங்களிடம் தகவல் தெரிவிப்பர்... அப்புறம் நாங்கள் தேடி தருவோம்...""இதே தங்க நகையாக இருந்தால், எடுத்து கொடுத்தால் 5000 வரை வாங்கி கொள்ளுவோம். எங்களுக்கு முன்னாடியே சொல்லிடணும், நாங்களாக தேடி கிடைத்ததென்றால் தர மாட்டோம்..." தண்ணீரில் இருந்தவர் இடைமறித்து சொன்னார்." நீங்க இப்பநாங்க தேடுறத பார்க்கறீங்க பார்த்துட்டு நீங்களே அது என் நகைன்னு சொல்லலாம் அல்லவா?"வாஸ்தவம்தான்!"இங்க பாருங்க யாரோ சாவியை விட்டுட்டு போயிருக்காங்க, எங்கெல்லாம் தேடிருப்பாங்களோ பாவம்..." என்று சொல்லிக்கொண்டே அந்த சாவியை மக்கள் குளிக்க வரும் கரையை நோக்கி எறிந்தார்.
"நீங்க வலையெல்லாம் வச்சிருக்கிறதா பார்த்தால் இதற்கென்றே தயாரிச்சது மாதிரி அல்லவா இருக்கிறது?" புரியாமல் கேட்டேன்."ஆமா சார், இதற்காகத்தான் வச்சிருக்கோம்""அப்படின்னா, இது போல வேறு யாரவது செய்வார்களா?""எங்க ஆட்கள் ஆங்காங்கே இருக்கிறார்கள் சார்?""அப்படியா?""அப்படின்னா தனி இனமா?""ஆமா சார், எங்களை குxxxxடை னு சொல்லுவாங்க சார்""அப்படியா?" ஆச்சரியத்துடன் கேட்டேன்."வேறு என்ன தொழில் செய்வீங்க?""எல்லா வேலையும் செய்வோம் சார், விவசாயம் செய்வோம், எதிர்த்தாற்போல் இருக்க காட்டுல நான்தான் முழுக்க களை எடுத்தேன்" என்று எதிர்பக்கம் இருந்த நெல்வயலை காட்டினார். " சரி வருகிறேன், நான் வாய்க்காலின் அடியில் ஏதோ பிடிக்கிறீர்கள் என்று வந்தேன் எதிர்பாராத செய்தி கிடைத்தது?விடை பெற்றேன்.
#கற்க வேண்டியது உலகளவு.