Sunday, 28 April 2019

தங்க மங்கை கோமதியும், குகையில் முடங்கிய சிங்கங்களும்:

'இந்தியாவிற்கு  முதல்  தங்கத்தை பெற்று தந்தார் கோமதி மாரிமுத்து', கதாரிலில் உள்ள தோகாவில் 23 வது ஆசிய விளையாட்டு போட்டியில்  இந்த அறிவிப்பை கேட்டவுடன்,  அத்துடன் கூட இவருடைய  வெற்றியை தொடர்ந்து தேசிய  கீதம் இசைக்கப்பட்டபோது   'நம்ம பொண்ணு', 'நம்ம தமிழ் பொண்ணு' என்று  ஆங்காங்கே மகிழ்ச்சி கீற்றுகள் எட்டிப்பார்க்கின்றன. தன்  குடும்பத்தில்  உள்ளவரே பதக்கம் பெற்ற   மகிழ்ச்சியில் மக்கள் கொண்டாடுவதை பார்க்கையில்  உள்ளம்   உத்வேகம் கொள்கிறது. 
ஆனால், இதற்காக அவர் எதிர் கொண்ட சவால்கள் எத்தனை , எத்தனை, கிழிந்த காலணியுடன் இந்தியாவுக்காக  ஓடி வெற்றி பெற்றுள்ளார் என்றால்... காலணி கிழிந்த நிலையிலும் ஓடி வெற்றி பெற்றுள்ளார் என்று பெருமை கொள்வதா?  அல்லது நாட்டின் சார்பாக விளையாடும் ஒருவருக்கு  ஒரு காலணி கூட கொடுக்க அரசால் இயலவில்லையா?  என்ற கேள்வி எழுகிறது. அதனை விட  கொடுமை வெற்றி பெற்று தாயகம் திரும்பியபோது  அரசு சார்பில் மக்கள் பிரதிநிதிகளோ அதிகாரிகளோ கண்டுகொள்ளாததுதான்.
நான், புது வாழ்வு  திட்டத்தில் பணி புரிந்தபோது மாற்று திறனாளிகள், நலிவுற்றோர் மேம்பாட்டு பணிக்கான வாய்ப்பு கிட்டியது. இத்திட்டம்  மூலம் மாற்று திறனாளிகள் மாவட்டம், மாநிலம், மண்டலம், தேசியம், சர்வதேசம் என்று 1000 பதக்கங்களுக்கு மேல் நீச்சல், தடகளம், சக்கர நாற்காலி கூடை பந்து, கபடி என்று பலபோட்டிகளில் பதக்கங்களை குவித்தனர். அதில் ரியோ சிறப்பு ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவும் அடங்கும்.
இங்கே குறிப்பிட காரணம், அவர்கள் வருடம் முழுவதும், பயிற்சி பெற்றவர்கள்/பெறுபவர்கள் இல்லை (ஒரு சிலரை தவிர), விளையாட்டு போட்டி இருக்கிறது என்று தகவல் தெரிந்தால், நாங்கள் வழங்கும் சிறப்பு பயிற்சிகளில் பங்கேற்பார்கள் அல்லது நேரிடையாக வந்து கலந்து பதக்கம் பெறுபவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு பயிற்சியில் சொல்லப்படும் விஷயங்கள் பெரும்பாலும் விளையாட்டினை முறையாக விதிமுறைப்படி எப்படி விளையாட வேண்டும் என்பதே! குறுகிய  கால பயிற்சியிலோ அல்லது பயிற்சியே இல்லாமலோ அவர்களால் சிறப்பாக செயல் பட முடிகிறது. அனைவரும் கிராமத்தில் இருந்து  வந்தவர்கள். தங்களுடைய பொருளாதார காரணங்களால் மிக திறமை வாய்ந்தவர்கள் அனைவருமே  வெளிவருவதில்லை. சக்கர நாற்காலியில் சிறப்பாக கூடையில் பந்தை  செலுத்தும் மாற்று திறனாளி, வறுமை நிலை காரணமாக அவரால் விளையாட்டில் கவனம் செலுத்தவில்லை. 
ஒருமுறை தேசிய அளவிலான  விளையாட்டு போட்டிக்காக  மத்தியப்பிரதேசத்தில் உள்ள இந்தூர் சென்ற போது,ஒரு மாற்றுத்திறனாளி  தன் வாழ்நாளில் அப்போதுதான் முதன் முதலாக புகைவண்டியில் பயணம் செய்வதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அப்போது அவருக்கு வயது 22. அதாவது தேசிய அளவில் சாதிக்கும்   திறமை உள்ள நபர்  முடக்கப்பட்டு இருந்திருக்கிறார்.புது வாழ்வு திட்டம் முடிந்தது. இப்போது ஒரு சில நபர்களே விளையாட்டு போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகின்றனர். மற்றவர்கள் திறமை, ஆர்வம் இருந்தும் விளையாடுவதற்கு வழிகாட்டுதல் இல்லை, வசதி இல்லை என்று வேறு பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர். புது வாழ்வு திட்டம் இருந்த காலத்தில் மாற்றுத்திறனாளிகள் திரளாக பங்கு பெற வாய்ப்பளிக்கப்பட்டது. இப்போது  அவர்களில் சிலரே போட்டிகளில் பங்கு பெறுகின்றனர். 

திறமையானவர்களுக்கு  வாய்ப்புகள் அரசு அதிகம் ஏற்படுத்தி தர வேண்டும்.

அரசில் விளையாட்டு திறனை /திறமையாளர்களை மேம்படுத்த வாய்ப்புகள் குறிப்பாக திட்டங்கள் குறித்த  விழிப்புணர்விற்கு அதிக முக்கியத்துவம் தேவை. 
(சில துறைகளில் நிறைய பயனாளிகள் தேவை இருப்பினும், திட்டத்தினை பற்றி மக்களுக்கு சரிவர தெரியப்படுத்தாதலும், திட்ட பலன்களை அடைவதில் உள்ள நடைமுறை சிக்கல்களினாலும்  நிதி பயனாளிகளுக்கு கிடைக்காமல் கோடிக்கணக்கில் திருப்பி அனுப்பப்படுவது கொடுமையின் உச்சம்)

ஒரு சில திறமையாளர்களே தேடுதலோடு தங்கள் லட்சியத்தினை அடைகின்றனர். சரியான ஆதரவாளரையும் கண்டறிந்து பலனடைகின்றனர்.ஆனால் அரசு அதிகம் முயற்சி எடுக்க வேண்டும் என்பது தான் இப்போது தேவையாக இருக்கிறது. 

இல்லையேல் சர்வதேச போட்டிகளில் கிடைக்கும் ஒரு சில பதக்ககங்களையும், அதனை வென்றவர்களையும் மட்டும் தான் பாராட்டி கொண்டிருப்போம். திறமையாளர்கள் இருந்தும் அவர்களுக்கான வாய்ப்புகள் சரிவர அமையாததாலும், ஊடகங்களில் வெற்றி பெற்றவர்களை பார்க்கும் பொழுது மற்ற திறமையாளர்கள் மனவருத்தம் அடைவதும், நம்மால் இதுபோல வரமுடியவில்லையே என்ற ஏக்கமும் ஆங்காங்கு அவ்வப்போது தோன்றி மறையும், நாமும் ஒவ்வொரு ஒலிம்பிக்கின் போதும், நம்மை விட வளர்ச்சியில் பின்தங்கிய நாடுகள் பதக்கங்களை அள்ளும்போது நாம் இங்கே ஒன்று, இரண்டு என்று எண்ணிக்கொண்டிருக்க வேண்டியது தான். இவ்வளவு பெரிய நாட்டில்   திறமையாளர்கள் இல்லையா என  பெருமூச்சு  ,விடுவதும், ஒன்றாவது கிடைத்ததே என்று ஆறுதல் அடைவதும்  நடக்க வேண்டாம் என்றால் விளையாட்டிற்கான திட்டங்கள், அதன் மூலம், பயிற்சி கூடங்கள், உபகரணங்கள், பயிற்சியாளர்கள்,  வீரர்களுக்கான அங்கீகாரங்கள், வேலை வாய்ப்புகள் இருப்பதும், தொழிற்கூடங்கள், பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு (CSR) திட்டங்களில்  விளையாட்டிற்கும் முக்கியத்துவம் அளித்தால்,  திறமையாளர்கள் அதிகம் சிரமமில்லாமல் வெளிவருவார்கள். 
ஏனெனில் சோதனைகள் மத்தியில்   சாதித்த சாந்தி, கோமதி, ஆரோக்கியராஜ் போன்றவர்கள் சொல்வது இதைத்தான்.
"எங்களை  போன்று நிறைய திறமையாளர்கள் இருக்கிறார்கள்.  நாங்கள் சிரமப்பட்டு போராடி  இடத்திற்கு வந்து விட்டோம். எங்களை போன்றவர்கள் தங்கள் திறமையை காட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே"
 இது நடந்ததென்றால் விளையாட்டு வீரர்கள் மட்டுமல்லாது பொது மக்களுக்கும் நல்லது தான். அப்போது தான் கிரிக்கெட் மட்டை  தூக்குவதை போன்று பிற விளையாட்டுகளும் அதிகம் விரும்பப்படும் விளையாடப்படும். 
நன்றி 
க.இ .ஆரோன் ஜோஷ்வா ரூஸ்வெல்ட்

Monday, 22 April 2019

உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம்

புத்தகத்தினை வாசிப்பவர்களுக்கும்  நேசிப்பவர்களுக்கும் பதிப்பிப்பவர்களுக்குமான நாள் 
#உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் 
இன்று புதிதாக ஏதேனும் புத்தகத்தினை வாங்குவோம் அல்லது படிக்க துவங்குவோம் 
எனது பங்கில் இன்றைய துவக்கம்:
 நா. முத்துக்குமார். அவர்களின் 'வேடிக்கை பார்ப்பவன்'

Thursday, 18 April 2019

உலக பாரம்பரிய தினம் (World Heritage Day)








ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் உலகத்தின் பாரம்பரிய இடங்களாக  சில இடங்களை தேர்வு செய்து அங்கீகாரம் வழங்கியிருக்கிறார்கள். 
அதில் முதலாவதாக  உலகமே வியந்து பார்க்க ஒரு விஷயமாக இருக்க ஆயிரம் வருஷத்துக்கு மேல இருக்கிற தஞ்சாவூர் பெரிய கோயிலை தேர்வு செய்துள்ளார்கள். 












இரண்டாவதாக சொல்ல வேண்டுமானால், இராஜராஜசோழன் போலவே எல்லா விதங்களிலும் திறமைவாய்ந்த அவருடைய மகன் ராஜேந்திர சோழன்  தன்னுடைய தந்தை கட்டிய பெரிய கோயில் போலவே ஒரு பெரிய கோயிலை  அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் கங்கை கொண்ட சோழபுரதில் காட்டினார். தன் தந்தையின் புகழ் கெட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து பெரிய கோயில் கோபுரத்தின் அளவை இந்த கோயில் தாண்டாதவாறு பார்த்து கொண்டார். 




அடுத்ததாக, புகழ்பெற்ற கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஐராவதேசுவரர் கோயில், இங்கு இசை படிக்கட்டுகளும், குதிரைகள் யானைகள் இழுத்து செல்வது போல் அமைக்கப்பட்டுள்ள ராஜகம்பிரான் மண்டபமும், 1000 வருடத்திற்க்கு முன்னரே இறைவிக்கென்று தனி கோவிலும் உள்ள பெருமை உடையது. 
கல்லிலே கலை வண்ணம் கண்டான் என்று சொல்ல சொல்லும் அளவிற்கு மகேந்திர பல்லவனால் துவக்கப்பட்ட மாமல்லபுர மரபு கடற்கரை கோவில் மற்றும் சிற்பங்கள், ,5 இரத கோயில்கள், கடற்கரை கோயில், அர்ச்சுனன் தபசு, குகைகள் என்று பல சிறப்பங்சங்களை கொண்டது. கல்கியின் சிவகாமியின் சபதம் படித்தவர்கள் இதனை பார்க்காமல் விட மாட்டார்கள். 




இந்தியாவின் பழமை வாய்ந்த மலை தொடருந்துப் பாதைகளில் ஒன்றான நீலகிரி மலை தொடருந்துப் பாதையும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.  1899-ல் திறக்கப்பட்ட இப்பாதை ஆரம்பத்தில் மதராஸ் இரயில்வே நிறுவனத்தால் இயக்கப்பட்டது. உலகில் 'நீராவி இயக்கி' பயன்படுத்தும் தொடருந்துகளில் இதுவும் ஒன்று. இப்பாதை வழியே புகழ் மிக்க நீலகிரி விரைவு ரயில் (Blue mountain express) இயங்குகிறது 
இவை எல்லாவற்றையும் விட  இமயமலையை விட வயதில் மூத்த நம்முடைய தென்மாநிலங்களில் முக்கியமாக  கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, மற்றும் மகாராஷ்டிரா சேர்த்து நீர் வளத்திற்கு முக்கிய ஜீவாதாரமாக மேற்கு தொடர்ச்சி மலை இருக்கிறது. இது வந்து உலகின் மிகச் சிறந்த ஒரு பல்லுயிர்ப்பெருக்க ஹாட்ஸ்பாட் என்று யுனெஸ்கோ நிறுவனம் இதனை அங்கீகரித்துள்ளனர். 
தமிழ்நாட்டுல் இது போன்ற பாரம்பரிய இடங்கள் உண்டு என்று எங்கிருந்தோ ஒருவர் வந்து நமது பகுதியை அங்கீகரிக்கிறார். 
ஆனால் நமது பகுதியிலேயே நாம் பெருமைப்படக் கூடிய பல இடங்கள் உதாரணமாக:
பழங்கால மனிதர்கள் வாழ்ந்ததாக கூறப்படும் குடியம் குகைகள் -திருவள்ளூர் மாவட்டம் 
சித்தன்னவாசல் போன்ற சித்திரபுகழ் தலங்கள் 
குடுமியான் மலை போன்ற குடைவரை கோயில் தலங்கள்
திருவரங்கம் போன்ற பெரிய கோபுர தலங்கள் 
வேலூர் கோட்டை, செஞ்சி, திருமயம்  போன்ற கோட்டை கொத்தளங்கள்  
மகாபலிபுரம், கொடும்பாளூர் போன்ற பழங்கால கட்டிடக்கலை கோயில்கள் 
கல்லணை, மணிமுத்தாறு, பாபநாசம், மேட்டூர்  போன்ற அணைகள் 
மாத்தூர் தொட்டிப்பாலம் 
போன்று எண்ணற்ற கட்டிடங்கள் பாரம்பரியத்தை பறைசாற்றுகின்றன.
அதுபோன்றே மணப்பாறை முறுக்கு, காஞ்சிபுரம் கோபுரம் இட்லி, திருநெல்வேலி அல்வா போன்ற  உணவுப் பாரம்பரியம்.
ஒகேனக்கல், குற்றாலம், திருப்பரப்பு, ஆகாயகங்கை போன்ற நீர் நிலைகளும்
ஊட்டி, கொடைக்கானல், கொல்லிமலை, பச்சைமலை போன்ற மலைப்பகுதிகளும் 
தாயம், கோலி போன்ற விளையாட்டுகள்








கரகாட்டம்,  சிலம்பாட்டம், போன்ற நாட்டுப்புற கலைகள்.
பாட்டி வைத்தியம் மற்றும்  சுடுமண் பொருட்கள், பழைய பொருட்கள் என்று நல்ல  பாரம்பரியங்கள் பல உள்ளன அதனை இப்போது கோடை காலத்தில் கண்டு மகிழ்வது நமது பாரம்பரியத்தை கண்டு ரசிக்கவும், உணர்ந்து மகிழ்ந்து வியக்கவும் வாய்ப்பாக அமையும்.

நன்றி!
க.இ .ஆரோன் ஜோஷ்வா ரூஸ்வெல்ட் 
நன்றி: