Monday, 19 November 2018

உலக கழிப்பறை தினம்:


அன்றொரு நாள் சென்னையில் இருந்து திருச்சியை நோக்கி பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். பேருந்து சென்னையின் கடைசி சுங்க கட்டண வாயிலை கடந்து சென்று கொண்டிருந்தது. திடீரென்று பேருந்துக்குள் துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. பேருந்தில் பயணம் செய்தவர்கள் ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன் பார்த்தனர். சிலர் எதற்கும் நாம் எதாவது அசிங்கத்தை மிதித்து விட்டோமா என தங்கள் பாதணிகளை ஒருமுறை நைசாக பார்த்துக்கொண்டனர். ஓட்டுநர் கைக்குட்டையை முகத்தில் கட்டிக்கொண்டார். துர்நாற்றம் மிக நெருக்கத்திலும் மிக அதிகமாகவும் வீச ஆரம்பித்தது. சிலர் துர்நாற்றம் தாங்க இயலாமல் மூக்கை இருக்க பற்றி கொண்டு தலையையும் பிடித்துக்கொண்டு தலையையும் குனிந்துகொண்டனர். சில குமட்டல் சத்தமும் கேட்டது. அப்போது ஓட்டுநர் பேருந்திற்கு முன்னே சென்ற வாகனத்தை நோக்கி கையை காட்டினார். அப்போதுதான் அனைவரும் அந்த வாகனத்தை கவனித்தனர். அந்த வாகனம் மல க்கழிவுகளை எங்கேயோ கொட்டிவிட்டு சென்று கொண்டிருக்கிறது. அதன் கதவுகள் மூடப்படவில்லை. ஓட்டுநர் பேருந்தை மிக மிக வேகமாக இயக்கி அந்த வாகனத்தை கடந்தார். இரண்டு நிமிடங்கள் கடந்த பின்னரே அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பினர்.
இதனை சொல்வதற்கு காரணம், தற்போது அனைவரும் கழிப்பறையை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நமது முன்னோர்கள் கூட கழிப்பறைககளை பயன்படுத்தினார் என்று அகழ்வாராய்ச்சிகள் மூலம் நாம் காண முடிகிறது. அதனை நினைத்து ஒரு வகையில் பெருமை கொண்டாலும் இன்னொரு வகையில், கழிவுகள் முறையாக அகற்றப்படாத சூழல் இன்னும் நிகழ்கிறது என்கிற கசப்பான உண்மையை நாம் உணர்ந்துதான் ஆக வேண்டும். 
- குப்பைகள் கழிவுகள் நன் முறையில் அகற்றப்படுவது வீட்டில் இருந்தே துவங்கவேண்டியது அவசியமாக இருக்கிறது. 
- வாய்ப்பிருப்பவர்கள், சுற்று சூழலை பாதிக்காத (ECO-SAN) போன்ற கழிவறைகளை கட்டமைக்கலாம்.
- செரிமான தொட்டிகள் (septic tank ) கட்டப்படும்போது முறையாக கட்டப்படுகிறதா என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். நிலத்தடி நீரின் பாதுகாப்பும் முக்கியம்.

அரசு கீழே உள்ளவைகளை கவனத்தில் கொண்டால்...
- செரிமான தொட்டிகளில் கழிவுகளை உறிஞ்சு செல்பவர்கள் அவைகளை எவ்விதம் அகற்றுகின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டும். பொது வெளிகளில் கொட்டப்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
- பொது இடங்களில் மக்கள் அசுத்தம் செய்வதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் (பல இடங்களில் ஆட்டோ ஓட்டுநர்களும், தன்னார்வலர்களும், மக்கள் அசுத்தம் செய்வதை தவிர்க்க சுவரில் தெய்வங்களின் படங்களை வரைந்து வைத்து தடுக்கின்றனர்)
- பொது கழிப்பறைகள் நன்முறையில் பராமரிக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் (மக்களின் ஒத்துழைப்பும் மிக அவசியம்)
- முக்கியமாக சாக்கடைகள் வழியாகவோ அல்லது பிற வழிகளில் வெளியேற்றப்படும் திட மற்றும் திரவ கழிவுகள் எங்கு செல்கின்றன. அவைகள் முறையாக சுத்திகரிக்கப்படுகின்றனவா என்பதை கவனிக்க வேண்டியது அரசின் முக்கிய பணியாகும். 
- திட திரவ கழிவுகள் பொது நீர் நிலைகளில் கலக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். (தேம்ஸ் நதி மீட்டெடுக்கப்பட்டது போல் கழிவு ஆறாக செல்லும் நீர்நிலைகள் சுத்திகரிக்கப்பட்டு பாதுகாக்கப் பட வேண்டும்)
- கழிவுகளை சுத்திகரித்தல், மறுசுழற்சி செய்தல் போன்றவற்றை குறித்து நிறைய ஆராய்ச்சிகள் ஊக்குப்பிக்கப்பட வேண்டும். முக்கியமாக நகரங்களில் கழிவு மேலாண்மை குறித்த ஆராய்ச்சிகள் அதிகமாக ஊக்குவிக்கப்படவேண்டும். 
- பல்வேறு வகையான கழிவு மறுசுழற்சி மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டமைக்கப்பட்ட வேண்டும். (முடிந்தவரை இயற்கை சார்ந்த அல்லது நுண்ணுயிர் ஊக்கிகள் மூலம் இருப்பது சிறந்ததாக இருக்கும் என்று கருதுகிறேன்)
- கழிவு மேலாண்மைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். நவீன உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு மக்கள் நேரிடையாக கழிவுகளை கையாளுவதை தவிர்க்கப்பட வேண்டும்.

....புதிது புதிதாக உருவெடுக்கும் நோய் தொற்றுகளில் இருந்து மக்களையும் எதிர்கால சந்ததியையும் காப்பாற்ற இயலும், மேலும், நாம் கண்ட இயற்கை வளங்களையும் கொஞ்சமாவது அவர்களும் கண்டு அதன் பயனை முழுமையாக அனுபவிக்க இயலும் என்றே 
நம்புகிறேன்.நன்றி!

No comments:

Post a Comment