Friday, 2 November 2018

மனிதருள் மாணிக்கம்


எங்கள் மன்றல் நாளில் காலையிலேயே பெற்றோரிடம் ஆசி வாங்கியாயிற்று. பொது வாழ்க்கையில் அவ்வப்போது ஈடுபடும் எங்களுக்கு, ஊக்கம் கிடைக்க பொது வாழ்விலேயே தன்னை அர்ப்பணித்து மனிதருள் மாணிக்கமாக விளங்கும் ஒருவரை சந்திப்பதுதான் பொருத்தமானதாக இருக்கும் என்று நினைத்தோம். 
பொதுவாழ்வில் தூய்மை, நேர்மை மற்றும் எளிமை என்ற சிறந்த பண்புகளுடன் வாழ்ந்துவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஐயா திரு. ஆர். நல்லக்கண்ணு அவர்களை வெகுநாட்களாகவே எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என்ற வேட்கை இருந்தது. இன்று அவரை எளிதில் சந்திக்க இயலுமா?, வீட்டில் கூட்டமாக ஆட்கள் இருப்பரா?, ஆசி மட்டும் வாங்கிவிட்டு உடனே திரும்பிவிடுவோ ?என்று யோசனையிலேயே சென்றோம். 
நாங்கள் எதிர்பாராதவிதமாகவும், ஆச்சரியம் அளிக்கும் வகையிலும் அவ்வளவு பெரிய மனுஷர், 16 வயதில் இருந்தே பொதுவாழ்வில் இருந்து வருபவர், மணல் கொள்ளை, சாதீய அநீதி, நதிநீர் பிரச்சினை, சமூக நீதி, என்று பல வழிகளிலும் தொண்டாற்றியவர், 90வது வயதிற்கு மேலும் போராடிக்கொண்டிருக்கும் போராளி, எழுத்தாளர் என்று பல்முகத் தன்மை கொண்டவர், பேச வாய்ப்புக் கிடைக்குமா என்று எதிர்பார்த்திருந்தோம் ஆனால் மிகவும் எளிமையாகவும் உற்சாகத்துடனும் இரண்டு மணி நேரம் எங்களுடன் உரையாற்றினார். 
அவருடைய பொதுவாழ்க்கைத் துவக்கம், கலைஞர் மு. கருணாநிதி, தொ.ப. அவர்களின் பண்பாட்டு அசைவுகள், நம்மாழ்வார், சகாயம் இ.ஆ.ப., சிறுவாணி, தாமிரபரணி நதிநீர் பிரச்சனைகள், சுற்றுச்சூழல் பிரச்சனைகள், பெண்கள் பாதுகாப்பு, கௌரவக் கொலைகள், பரியேறும் பெருமாள் சினிமா, எங்களுடைய பிண்ணனி போன்றவற்றைக் குறித்து ஆர்வமுடன் பேசினார். எங்களையும் வாழ்த்தி வழியனுப்பினார். 
அவரிடம் பேசியவற்றில் முக்கியமான விடயங்களாக நாங்கள் உணர்ந்தவை:
• நாம் நல்லகாரியம் செய்வதற்கு பொதுவெளியில் தான் வர வேண்டும் என்று அவசியமில்லை. நாம் பணிபுரியும் இடத்திலேயே செய்யலாம்.
• இயற்கை வளத்தைப் பாதுகாப்பது ஒவ்வொருவருடைய பொறுப்பாக உணர வேண்டும்.
• நீர்நிலைகள், மணல் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும்.
• நிறையப் படிக்க வேண்டும்
கூடவே எனது மகள் ஆரண்யா, அவரிடம் சென்று கடலை மிட்டாய் கேட்டது (ஐயாவும் உடனே சென்று தன் வீட்டில் இருந்து, வாழைப்பழம், வேர்கடலை, முறுக்கு ஆகியவற்றை எடுத்துவந்து கொடுத்தார்), காரல் மார்க்ஸ் சிலையைப் பார்த்து ‘பெரியார் தாத்தா’ என்று அழைத்தது, அவர் வீட்டில் சுற்றித்திரிந்த ஓணானை விரட்டிச் சென்றது(நகரத்தில் ஓணானைப் பார்ப்பது அபூர்வம்!), அவரிடம் வேர்கடலையை பெற்று சாப்பிட்டது. அவருடன் சேர்ந்து புத்தகம் தேடியது. அவர் வீட்டில் உள்ள செடிகள், பூக்கள் என்று சுற்றி சுற்றி விளையாடியது என்று எங்களையும் ஐயாவையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினாள். 
அவர் தொகுத்த 'அணிந்துரைகள், முன்னுரைகள், மதிப்புரைகள் புத்தகத்தினையும்', மற்றும் ஜென்னி மார்க்ஸ் அவர்கள் எழுதிய 'எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை புத்தகத்தினையும்' கையொப்பமிட்டு எங்களுக்கு பரிசளித்தார்.

# நிறைவாக இருந்தது எங்கள் நாள்.

No comments:

Post a Comment