திருவள்ளுவரின் கல்விக் கோட்பாடுகள்:
திருவள்ளுவர் தம் நூலை இயற்றியதன் நோக்கமே ‘அறன் வலியுறுத்தலாகும்”. தனி நெஞ்சத் தூய்மை என்னும் மாசில்லா மனம் பெறுதலைச் சார்ந்தே அவரின் கல்விக் கோட்பாடுகள் அமைகின்றன. அவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1. தனி மனிதக் கல்வி
2. குடும்பத்தில் கல்வி
3. சமுதாயத்தில் கல்வி
4. கல்லாதவர்க்கும் கல்வி
5. ஆன்ம நேயக் கல்வி
திருவள்ளுவரின் கல்விக் கோட்பாடுகளின் பயனாக மாந்தர் அனைவரும் முதற் கண் தம் உடல், மன வளத்தைப் பெருக்கி, தம்மைச் சார்ந்த இன நலத்தையும் தூயதாக்கி, ஒட்டு மொத்த சமுதாய நலஞ் சிறக்கும் வகையில் வினை நலம் பேண வேண்டும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில் தனி நெஞ்சத் தூய்மையுடன் வினையாற்றுதலை (உழைப்பை) முதன்மைப் படுத்தி உழைப்பால், அறிவால் உலக நலம் சிறக்க வேண்டும் என்பதே அவரின் விழைவு ஆகும்.
1. தனி மனிதனுக்குக் கல்வி:
கண்ணுடைய மக்கடள் பிறவி இரு பாலர்க்கும் கல்வி பொதுவானதாகும். ஆகவே, ஆண், பெண் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் கல்வி நல்க வேண்டும். ஆனால் பெரும்பாலான நாடுகளில் மக்கள் தொகையில் சரி பாதியாக விளங்கும் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டே வந்திருக்கின்றது. இந்நிலை மாற வேண்டும். கல்லாத மாந்தரைப் பார்த்து முகத்தில் கண்ணுக்குப் பதில் இரு புண்களை உடையோர் எனச் சாடுகிறார் வள்ளுவர்.
‘இன்று ஒரு சமுதாயத்தின் உயர்வு, ஒரு இனத்தின் முன்னேற்றம், அதன் அறிவு வளர்ச்சி நிலையை, அறிவுத் துறைகளில் ஏற்படும் வளர்ச்சியைக் கூர்ந்து கவனிக்கும் விழிப்பை, அதை வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளும் திறனைப் பொறுத்தது” என்கிறார் அறிஞர் வா.செ. குழந்தைசாமி அவர்கள்.
ஆகவே சமுதாயத்தின் உயர்வு அல்லது மேம்பாடு அச்சமுதாயத்தின் கல்வியறிவையும், துறைசார்ந்த அறிவையும், விழிப்புணர்வையும், அதனைப் பயனாக்கிக் கொள்ளும் திறனையும் சார்ந்தே அமையும் என்பது வெளிப்படை.
‘அறிவுடையார் எல்லாம் உடையார்” என்பது வள்ளுவம். ஆகவே, கண்ணுடைய இரு பாலரும் ‘எண்” எனப்படும் கணிதக் கல்வியையும் (அறிவியல்) எழுத்து எனப்படும் கலையியல் (இலக்கியம்) கல்வியையும் கற்க வேண்டிய கடப்பாடு உடையவர்களாவர்”
ஏண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு -392
கற்கவேண்டுவன காலத்துக்குக் காலம் வளருபவை, விரிபவை. அதனைக் கருத்தில் கொண்ட வள்ளுவர் இந்தந்த நூல்களைப் படி என்று கூறாமல், ‘கற்பவை கற்க” என்று கற்றலைப் பொதுமைப்படுத்தி, காலம், இடத்திற்குத் தக்கவாறு வேண்டும் நூலறிவைப் பெறுதற்குரிய கல்வியைக் கற்கப் பணிக்கிறார்.
கல்வி கற்கும் முறைகள்:
1. காலம், இடத்திற்கேற்பக் கற்க வேண்டிய நூல்கள் அனைத்தையும் கற்க வேண்டும்.
2. தம் மனத்தில் படியும் மாசுகள் நீங்கும் வகையிலும் தெளிவுபெறும் வகையிலும் கற்க வேண்டும்.
3. கற்று முடிந்த பின்னரும் கற்க வேண்டும்.
4. கசடறக் கற்ற செய்திகளைப் பின்பற்றி நடைமுறைப்படுத்தி வாழக் கற்க வேண்டும்.
5. உடையார் முன், இல்லார் பணிவுடன் திகழ்வது போல், செருக்கற்றுப் பணிவுடன் அமைந்து கற்றல் வேண்டும்.
6. சாகுந் தறுவாய் வரையில் கற்க வேண்டும். சாக்ரடீசு நஞ்சு அருந்தி மரணமடையும் தறுவாயில் கூட நூல் படிக்க விரும்பியதை ஒப்பு நோக்குதல் தகும்.
7. ஒன்றுபட்ட உள்ளத்தோடு (ஒருமையுடன்) கல்வி பயில வேண்டும் (உதாரணம்: வள்ளலாம், விவேகானந்தர் போன்றோர் கற்ற முறை)
8. கற்றோர் அவையில் அஞ்சாமல் மறுமொழி கூறும்பொருட்டு முறையாகவும், அளவறிந்தும் கற்றல் வேண்டும்.
9. பயன் தராத சொற்களைச் சொல்லாதிருக்குமாறு ஆய்ந்து ஆய்ந்து கற்றுப் பயன் தரும் சொற்களை மட்டுமே மொழியுமாறு கற்றல் வேண்டும். ‘பயனில சொல்லாமை” என்ற அதிகாரம் யாத்த வள்ளுவர் கூறுவது அனைத்தும் பயன் கருதியே ஆகும்.
10. தாம் கற்றதைப் பிறர் உணரும் வகையில் மொழியும் நாவன்மை மிக்கவராக அறிவுத் தெளிவுடன் கற்றல் வேண்டும். அத்தகைய நா நலமிக்கார் தம் பொழிவைக் கேட்போரை வயப்படுத்தும் வகையிலும் கேளாதவரையும் கேட்கத் தூண்டும் வகையிலும் மனம் பரப்பும் மலர் போன்று ஈர்க்கும் வகையிலும் கற்றுத் தெளிவு பெறல் வேண்டும்.
11. ஆக்கம் தரும் சொற்களை மட்டுமே பயன்படுத்துதல் வேண்டும். தாம் சொல்லும் சொல்லை வெற்றி கொள்ளும் சொல் இல்லா வகையிலும் திறனறிந்து சொல்லாட்சியைப் பயன்படுத்தும் வகையிலும் மீள மீள ஒதிக் கற்றல் வேண்டும்.
12. சாவாக் கல்வி குறித்தும் பயில்தல் வேண்டும்.
13. ‘உணவே மருந்து”’மருந்தே உணவு” என்கிற சித்த மருத்துவ மரபுப்படி, மிகனும் குறையினும் நோய் செய்யும், மாறுபாடான உணவை மறுத்து உண்க: அற்றது போற்றி உண்க் துய்க்கத் துவரப் பசித்து உண்க் போன்ற உணவுக் கொள்கைகளைக் கடைபிடித்து உடல் நலம்பேணும் கல்வியையும் கற்றல் வேண்டும்.
14. மனநலமே மன்னுயிர்க்கு ஆக்கம் என்பதால் மனதில் எளிதில் பற்றும் மாசுகளான பேராகை, பொறாமை, கடுஞ்சினம், வன்சொல் போன்றவை மனத்தில் படியா வண்ணம் பயிற்சி மேற்கொண்டு மனநலம் பேணும் கல்வியையும் கற்றல் வேண்டும். இத்தகைய குற்றங்கடிதலுக்குச் சிற்றினத் தொடர்பை விலக்கியும், அறத்துடன் வாழும் முதிர்ந்த அறிவுடைய பெரியோரைத் துணைக் கொண்டும் வாழ்தல் நலம் பயக்கும்.
இவ்வாறு குறள் வழிப் பயின்ற கல்வியாளர்கள் அறிவால் அகன்ற ஆன்றோர்களாகவும், பண்பால் மிளிரும் சான்றோர்களாகவும் திகழ்வர். ஆவர்கள் அன்பு, அடக்கம், ஒழுக்கம்;, பொறை, அருள், அறிவு, ஊக்கம்,ஆள்வினை, பண்பு, நாணுடைமை ஆகிய பத்து உடைமைகளைத் தம் அணிகலன்களாகக் கொள்வர். இவர்கள் கல்வி கேள்விகளால் கேட்கப்பட்ட செவி உடையவர்களாகவும், கண்ணோட்டமுள்ள கண் உடையவர்களாகவும், நாவடக்கம் உடைய நா உடையவர்களாகளும், மூக்கிற் கரும்புள்ளி போன்ற அளவு கூட கூடா ஓழுக்கமில்லாதவர்களாகவும், நாறும் மணத்தை முகரும் மூக்கு உடையவர்களாகவும், நிறை குணங்கள் அனைத்தையும் ஒருங்கே கொண்ட, விருப்பு, வெறுப்பற்ற தனக்கு நிகரில்லாத வாலறிவனின் தாளைக் கைக்கூப்பி வணங்கும் தலையுடையவர்களாகவும் திகழ்வதோடு, நன்றியில் பால் செலுத்தவல்ல பகுத்தாயும் மனமுடையவர்களாகவும் பரிணமித்து உயர்வர்.
நன்றி:
திரு. க. கோபால்,இக்கால உலகிற்குத் திருக்குறள், தொகுதி-3, தொகுப்பாசிரியர் முனைவர் தி.சே. சுப்பராமன், முனைவர் சேயோன், பதிப்பாசிரியர் சா கிருட்டினமூர்த்தி, 2004, உலக தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி
No comments:
Post a Comment