Tuesday, 17 June 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-73:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-73:

வருவாய் பெருக்குதல்:
வருமானம் வரும் வழிகளை பெருகச் செய்பவன், செயலாற்றத் தகுந்தவன் என்கிறார் திருவள்ளுவர். 
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை -512 என்கிறார் திருவள்ளுவர். அதாவது பொருள் வரும் வழிகளைப் பெருகச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும் என்கிறார். 
புதிய வேலை உருவாக்க முதலீடு:
நல்ல செயலை தொடங்குவதற்கு மேலும் மேலும் முதலீடு செய்து அதன் வழி சமுதாயத்திற்கு உதவுவர் என்கிறார். 
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்- 463
பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது உள்ள முதலை இழந்துவிடக் காரணமான செயலை அறிவுடையவர் மேற்கொள்ள மாட்டார். 

தொழில்நுட்ப முன்னேற்றம்:

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து – 353 என்கிறார் திருவள்ளுவர். ஐயப்பாடுகளை தெளிந்த ஆராய்ச்சி வழியாகத் தீர்த்துக் கொண்டவர்களுக்கு பூமியை விட வானம் அருகில் இருப்பதாக ஊக்கம் ஏற்படும். அதன்படி அவர்கள் அரிய செயல்களை செய்பவர் என்று அதற்கான விளக்கமளிக்கிறார் கலைஞர். 

உலகளாவிய போட்டித் திறன்:

மன உறுதி கொண்டவர்கள் தொழில் திறமை, மன்னன் மனதிலும் பதிவதால், உலக மக்கள் பலராலும் மதிக்கப்படும் என்கிறார். 
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும் -665 என்ற குறளில் இதனை வெளிப்படுத்துகிறார். 

புதிய கண்டுபிடிப்புகள்:
 
புதிய கருத்துகள் செரிந்த சீர்மைகளே அறிவியலின் கண்டுபிடிப்புகள். ‘அறிவறிந்த” என்பது அறிவியலைக் குறிக்கும். அக்கால அறிவியலின் அடையாளச் சொல்லாக திருவள்ளுவரால் ஆக்கப்பட்டது என்கிறார் கோவை இளஞ்சேரன் அவர்கள். 

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின் -123
ஆறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப் பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும் என்கிறார். 
சுற்றுச்சூழல் நிலைத்தன்மை:

மனித மூலதனத்தைப் பெருக்குவதே சுற்றுச்சூழல் நிலைத் தன்மை. உறுப்புகளில் குறை குறுத்தல் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து, வினை செய்யாது இருத்தலே பழியாகும் என்கிறார் திருவள்ளுவர். 
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி – 618
நன்மை விளைக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி. 

சமூக சமத்துவம்:
பிறப்பினால் அனைவரும் சமம். 
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் -972
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரு தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை. 
ஒருவரை புற வடிவங்களை வைத்து மதிப்பிடாமல் வினையைக் கொண்டு மதிப்பிடுக என்கிறார். 
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல் - 279 என்கிறார். 
நேராகத் தோன்றினும் அம்பு கொடியது. வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது. மக்களின் பண்புகளையும் செயல் வகையால் உணர்ந்து கொள்ள வேண்டும். 

நாட்டின் பொருளாதார மேம்பாடு:
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு – 739
முயற்சி செய்து தேடாமலே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர். தேடி முயன்றால் வளம் தரும் நாடுகள் அல்ல. 

இத்துடன் சேர்ந்து கடந்த இரண்டு வாரங்களாக வந்த கட்டுரையின் தொகுப்புகள்: 
உலகத்திற்கே பொதுவான தொழிலைத் தேர்ந்தெடுத்தல் தொடங்கி, தொழில் சம்பந்தப்பட்ட எந்த ஒரு கூறுகளையும் விடாமல், எந்தெந்த நிலையில் எப்படி தொழில் செய்ய வேண்டும் என்பதை திருவள்ளுவர் எடுத்துரைக்கிறார். 
பொருள் ஈட்டும் அவசியம் தொடங்கி, பொருளீட்டு முறைமையை உலகிற்கே சொல்லி, நல்வழியில் பொருள் ஈட்ட, பொருளும் பெருகும், பொருள் பெற்றவனும் உயர்வான் என்கிறார் திருவள்ளுவர். 
உலகத்திற்கே பொதுவான தொழிலை, பயனீட்டாளர் மனம் அறிந்து நடத்தி, மேலும் முதலீடு செய்து புதிய வேலையை உருவாக்குதல், தொழில்நுட்த்தில் முன்னேற்றம், உலகளாவிய போட்டித் திறன், புதிய கண்டுபிடிப்பு, சுற்றுச்சூழல் நிலைத் தன்மை, சமூக சமத்துவம், வேலைவாய்ப்பு அளித்தல், நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கும், நிலைத் தன்மைக்கும் வேலை வாய்ப்பிலிருந்து புதுமைகளை வளர்ப்பது வரை, பல நன்மைகளை வழங்கும் தொழிலை செம்மையாகச் செய்ய, தற்சார்பு பெற உபாயம் கூறி, மக்கள் சமுதாயத்தை, மண் பயனுற வாழ வைத்தல் என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். 

நன்றி: 
முனைவர் வெ. கீதாமீனாட்சி, பட்டதாரி ஆசிரியர் கணிதம், அரசு உயர்நிலைப்பள்ளி, கேகே நகர், திருச்சி

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

No comments:

Post a Comment