Tuesday, 3 June 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-71:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-71:
கல்வி குறித்துத் திருவள்ளுவர்

கடந்த சில வாரங்கள் தொழில் குறித்து திருவள்ளுவர் அவர்கள் கருத்துக்களை திருக்குறளில் இருந்து பார்த்தோம். இன்னும் பல வாரங்கள் கூட தொழில் குறித்தக் கருத்துக்களை மட்டுமே பார்க்க இயலும். ஆனால், தற்போது கல்விச்சாலைகள் திறக்கப்பட்டுள்ளதால், கல்வி குறித்து திருவள்ளுவர் பெருந்தகையின் கருத்துக்களைப் பார்ப்போம். இதில் கல்வி என்று நாம் பார்ப்பது கல்வியையும் கற்றலையும் குறிக்கின்றோம். திருக்குறளில் திருவள்ளுவர் நேரிடையாக கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை என்று நேரிடையாக அறத்துப்பாலில் தன்னுடைய கருத்துக்களைக் குறிப்பிட்டுள்ள வள்ளுவர் பெருமான். திருக்குறள் முழுமையையும் பல்வேறு விதங்களில் கற்றலைக் குறி;த்துக் குறிப்பிட்டுள்ளார். காலம் அறிதல், இடன் அறிதல், தெரிந்து தெளிதல், தெரிந்து வினையாடல், கண்ணோட்டம், சொல்வன்மை, குறிப்பறிதல், அவையறிதல், பொருள் செயல்வகை, நட்பாராய்தல் என்று பலநிலைகளிலும் பல்வேறு வகையில் கற்றலைக் குறித்து எடுத்துச் சொல்கின்றார். 
செல்வங்கள் இரண்டு வகையில் அடங்கும் அழியக் கூடியவை, அழியாமல் நிற்பவை. நாம் சேர்த்து வைக்கக் கூடிய செல்வங்களாகக் கருதக் கூடிய பணம், தங்கம், வெள்ளி, வைரம், உயிரினங்கள், நிலம் போன்றவை அழியலாம், பிறர் கை மாறலாம், நம்மிடமிருந்து கையகப்படுத்தப்படலாம். ஆனால், திருக்குறளில் உள்ள கருத்துக்கள், கற்றலின் மூலம் ஏற்படும் அறிவு, நுட்பம் ஆகியவை அழியாத செல்வங்கள் ஆகும். 
பொதுவாக திருவள்ளுவர் அவர்கள் கல்வித் துறையில் பல்வேறு துறை வளர்ச்சியினடிப்படையில் காலத்துக்குக் காலம் இடத்துக்கு இடம் மாறும் தன்மை கொண்ட விவரங்களைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து, கற்க வேண்டியவற்றைப் பட்டியலிடவில்லை. ஆகவே, கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்ட போதும் கால மாற்றத்திலும்  அவருடைய கருத்துக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படத் தக்கதாகவே உள்ளது. தனது குறளில் இலக்கண இலக்கியங்கள் குறித்தோ, ஆயக்கலைகளின் அருமை பெருமைகளைக் குறித்தோ அவை அரசனுக்கு உரியது என்றோ குறிப்பிடவில்லை மாறாக மக்கள் அனைவருக்கும் பொதுவாகக் கீழ்வருமாறு கற்ற வேண்டும் என்று குறிப்பிடுகிறார். 
கற்க கசடறக் கற்பவை கற்றபின் 
நிற்க அதற்குக் தக- 391 
அதாவது அனைவருக்கும் பொதுவானதாகவே கற்பவை கசடறக் கற்க வேண்டும் கற்றவற்றை உள்வாங்கி அதன்படி நடக்க வேண்டும் என்கிறார். 
அறிவியலின் அரசி கணிதம் என்று சொல்லாடல் உண்டு. வாழ்க்கைக் கணக்கிற்கு கணிதம் முக்கியம் என்பதை வள்ளுவர் நன்கு அறிவார். ஆகவேதான் எண்ணும் எழுத்தும் கண்களுக்கு ஒப்பாகும் என்று குறிப்பிடுகிறார். 
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் 
கண்ணென்ப வாழும் உயிர்க்கு – 392 அதாவது எண்கள் தொடர்புடைய கணிதம் மற்றும் எழுத்துத் தொடர்புடைய இலக்கியம் ஆகிய இரண்டும் வாழும் மக்களுக்கு இரண்டு கண்களாகக் கருதப்படுபவை என்கிறார். அப்படிக் எண்ணும் எழுத்தும் கற்கவில்லையெனில் அவர்கள் முகத்தில் இருப்பவை கண்கள் அல்ல வெறும் புண்களே என்று சாடுகின்றார். 
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர் - 393
படிக்கப் படிக்க உனக்கு அறிவு ஊற்றாக பெருக்கெடுக்கிறது என்கிறார் திருவள்ளுவர். ஒருவரைப் பார்த்து நீ ஒரு ஏழை என்றால் கோபம் வருவது குறைவு, சில சமயம் தன்னுடைய ஏழ்மையை ஏற்றுக் கொள்வதும் உண்டு. நம்முடைய மரபு விளையாட்டுகளில் ஒன்றான பல்லாங்குழி விளையாட்டும் அதைத் தான் உணர்த்துகிறது. சுரிசமமாக விளையாடும் இருவர் மத்தியில் ஒருவர் முத்துக்கள் மூலமும் தக்கம் மூலமும் அனைத்துக் காய்களையும் பெற்று வெற்றி பெறும் போது. தோற்றவரைப் பார்த்துக் ‘கஞ்சிக் குடி, கஞ்சிக் குடி” என்று பாடுவது உண்டு. நாம் எப்படி பரங்கியரிடம் அடிமைப் பட்டோம் என்பதில் இருந்து எழுந்த விளையாட்டு. அதில் தோற்றவர் தனது ஏழ்மையை ஏற்றுக் கொள்வார். ஆனால், ஒருவரைப் பார்த்து ‘உனக்கு அறிவு இருக்கா?” என்று கேட்டால் அந்தச் சொல்லை கேட்பவர் ஏற்றுக் கொள்ள விரும்புவதில்லை. ஆகவே, கல்வி என்பது அறிவின் ஊற்று என்று கல்வியின் மீது ஆர்வத்தை ஊட்டுகிறார் திருவள்ளுவர் பெருமான். 
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் 
கற்றனைத் தூறும் அறிவு -396 என்கிறார். மணற்பாங்கான இடத்தில் உள்ள கிணறு தோண்ட தோண்ட நீர் சுரந்து கொண்டே இருக்கும் அதுபோல பல நூல்களைக் கற்க அறிவு ஊறும் என்கிறார். இவரைப் போன்ற ஒரு ஊக்கமூட்டும் ஒருவர் உண்டா?
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

No comments:

Post a Comment