திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-75:
திருவள்ளுவரின் கல்விக் கோட்பாடுகள்:
கடந்த வாரத்தின் திருவள்ளுவரின் கல்விக் கோட்பாடுகள் என்ற தலைப்பின் தொடர் பகுதியை இந்த வாரம் பார்ப்போம்.
2. கல்வியின் குறிக்கோள்:
‘உடம்பை வளர்த்தேன்.. உயிர் வளர்த்தேனே;” என்கிறார் திருமூலர். உலக மக்கள் ஒவ்வொருவரும் கல்வி கேள்விகளால் தாம் பெற்ற அறிவின் துணையால் தன்னுயிர்க்கு இன்பம் அளிக்கும் உடல் நலத்தைப் பேணி, மனப் பயிற்சிகளால் மனதில் உள்ள மாசுகளை நீக்கி, தன்னுயிர்க்கும் பிறஉயிருக்கும் இன்பம் நல்கும் மனநலம் பேண வேண்டும். உடல மற்றும் மனநலனை உடைய மனிதர் தன்னைக் காப்பதோடு மட்டுமின்றி தான் சார்ந்த இனத்தையும் காக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதற்குத் துணைநலம் ஆக்கமும் ஊக்கமும் வழங்கும். துணைநலம் என்று கூறுகையில் வளத்தக்க வாழ்வும் மனைத்தக்க மாண்பும் பொருந்திய துணையோடு, அறத்தோடும் வாழும் முதிர்ச்சி அடைந்த அறிவுடைய நல்வழி காட்டும் பெரியாரின் துணையையும் கொள்ள வேண்டும் என்ற குறிப்பையும் ஐயன் திருவள்ளுவர் அவர்கள் நமக்குத் தருகின்றார். உடல் நலம், மனநலம், .இனநலம், துணைநலம் ஆகிய நான்கின் இறுதிக் குறிக்கோளே செயல். செயல்,
‘உழைப்பு” என்ற வினைநலம் சிற்பதற்கேயாம். உழைப்பில் உடல் உழைப்பு, மூளை உழைப்பு என இருகூறுகள் இருந்நாலும் இரு உழைப்புகளுமே நாட்டின் மேம்பாட்டிற்கு பயன் அளிக்க வேண்டும். அழிவிற்கு பயன் தராமல் ஆக்கத்திற்கே ஊக்கம் அளிப்பதாக இருத்தல் வேண்டும்.
துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும் -651 என்ற திருக்குறளில் விளக்குகிறார்.
ஒருவனுக்கு வாய்ந்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும், அவன் செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும் என்று விளக்குகிறார்.
3. குடும்பத்தில் கல்வி:
குடும்பம் என்ற சொல்லாட்சி திருக்குறளுக்கு முந்தைய இலக்கியங்களில் கையாளப்பட்டதற்கு சான்று இல்லை என்று சொல்லப்படுகிறது. குடும்பமே இந்த மக்கட் சமுதாயத்தின் அடிப்படை அலகு. அந்தக் குடும்ப உறுப்பினர்கள் இல்வாழ்வான், வாழ்க்கைத் துணை, இல்லறத்தின் பயனாகக் கிட்டும் நன் மக்கட் செல்வங்கள் ஆவர். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கல்வி பயில வேண்டிய கடப்பாடு, உடையவர்களாவர். அதுவும் அறிவறிந்த, பழிச்சொல்லுக்கு ஆளாகாத பண்புடைய மக்கட் செல்வங்களே ஒவ்வொரு குடும்பத்தின் விழுமிய செல்வமாகும்.
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும் - 63
தம் மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும். திருவள்ளுவர் அவர்கள் குறிப்பிடுகையில் குடும்பத் தலைவனாக இருப்பவர் தன்னுடைய தாய், தந்தை, மனைவி மூவரையும் (குறள்-41) அயலாராக இருக்கக் கூடிய பற்றற்ற துறவி, வறியவர், குடும்பத்தை விட்டு வெளியேறி இரந்து வாழ்வோர் (குறள் -42) மற்றும் தெளிந்த அறிவுடையவர், வாழ்வாங்கு வாழ்வோர், விருந்தினர், சுற்றத்தாரோடு (குறள் -43) சேர்ந்து தன்னையும் பேணிக் கொள்ள கடமைப்பட்டவராக சொல்கிறார். அதே போல் குடும்பத்தலைவி தன்னை பேணிக் கொண்டு, தன் கணவனையும் பேணி, நாவடக்கம் உள்ளவளாகவும் முயற்சியாளியாகவும் திகழ வேண்டும். கணவர் மனைவி இருவருமே தம் மக்கட் செல்வங்களுக்குக் கல்வி கேள்வி வழங்கிச் சான்றோர் அவையில் முதல்வராகச் செய்தல் வேண்டும் (குறள்-67) என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
பிள்ளைகள் பேதைமை, புல்லறிவு, காரறிவு இவற்றை விலக்கி, அறிவைச் செலுத்தி, ஐம்புலனடக்கத்துடன் பகுத்தறிவு, பேரறிவு வாலறிவு என்ற வகையில் உயர்ந்து, அன்பு, நாணம், ஒப்புரவு, அருள், வாய்மை ஆகிய சான்றாண்மைப் பண்புகளுடன் ‘சான்றோன்” எனப் பிறர் பாராட்டும் வகையில் சிறக்க வேண்டும். (குறள்-69,70) அப்போதுதான் பெற்றோரும் அவர்களுடைய தவ வாழ்விற்காகப் பாராட்டப் பெறுவார்கள்.
4. சமுதாயக் கல்வி:
திருக்குறள் முழுமையுமே வாழ்க்கைக் கல்வியின் வழிகாட்டி. இந்நூலில் இல்வாழ்வான்-துறவி என்னும் இரு நெறியில் வாழும் குடிமக்கள், குடிகளை ஆளும் ஆட்சியாளர், அமைச்சர், தூதர், ஒற்றர், படைஞர், உழவர், மருத்துவர் போன்றோரைச் சுட்டி அவரவர்களுக்குரிய வாழ்வியல் அறங்களைக் கூறியுள்ளார். வாழ்க்கைக்குப் பொருள் முதன்மையாகும். ஆதனால் தான் ‘செய்க பொருளை” என்றும் (குறள்-759), சோம்பலில்லாமல் முயன்றால் அடியளந்தான் விரும்பியதைக் காட்டிலும் கூடுதலாக நிலமாண்டுப் பொருளைக் குவிக்க முடியும் என்றும் (குறள் -610) உழைப்பின் உயர்வை முதன்மைப்படுத்தியுள்ளார்.
கல்வி கற்க நல்ல வாய்ப்பு அமையவில்லையா, கவலைப்பட வேண்டாம், நல்ல செவி மட்டும் இருந்தால் மட்டும் போதுமானது, செவி வழிக் கற்றல் இயலும் எனக் கல்லாதவர்களுக்கும் கல்வி பயில வாய்ப்பு உண்டு என ஆற்றுப்படுத்துகிறார். நன்கு வேகவைத்துப் பக்குவப்படுத்தப்பட்ட அவித்த உணவு நாவிற்கு விருந்தாவது போன்று, ஒழுக்கமுடையார் ஆற்றும் பொழிவைக் கேட்டுச் ‘செவி உணவு’ கொள்ள வேண்டும். குறள்414, 415 ஆகியவற்றில் கற்றுணர்ந்தவர்களிடம் கேட்டறிந்து இன்புறுவதைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும் -416
ஆகவே தோடுகள் உடைய செவிகள் அல்ல, கல்வி கேள்விகளால் தோட்கப்பட்ட செவியே திருவள்ளுவர் விரும்பும் செவியாகும்.
5. ஆன்ம நேயக் கல்வி:
தனி மனிதக் கல்வி வாயிலாக உடல், மன நலம் பேணி, வினை நலம் சிறக்கப் பணியாற்றுவதே வள்ளுவரின் விழைவு. மேற்கண்ட கல்வி வாயிலாகப் பெற்ற அறிவின் பயன் என்ன? அறிவின் பயனாக வள்ளுவர் இயம்புவது யாதெனின் மனித நேயம் போற்றுவதும் அதன் மேல் நிலையாக ஆன்ம நேயம் போற்றுவதும் தான்.
அறிவினுள் எல்லாம் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல் - குறள் 203
தன்னைத்தான் காதல னாயின் எனைத் தொன்றும்
துன்னற்க தீவினைப் பால் -202
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல் -316
அறிவினா குவதுண்டோ பிறிதின் நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை -315
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர் -997
மேற்கண்ட குறட்பாக்கள் அனைத்தும் மாந்த நேயத்தை வலியுறுத்தும் குறட்பாக்கள் என்றால் மிகையில்லை.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை -322
என்கிறார். வள்ளுவர் வழங்கும் கல்வி தனி மனித நலம், குடும்ப நலம், சமுதாய நலம் பேணத் துணை புரிவதோடு கல்லார்க்கும் கல்வி நல்கி, மனித நேயத்துடன், ஆன்ம நேயம் போற்றி, அனைத்து உயிர்களும் வாழ வழிகாட்டும் வாழ்வியல் கல்வி என்றால் மிகையில்லை.
இக்காலச் சூழலில் திருவள்ளுவரின் கல்விக் கோட்பாடுகள் நாடு, மொழி, இனம், மதம் கடந்து உலக மாந்hர் ஒவ்வொருவரும் பயில வேண்டிய கோட்பாடுகள் தாம். ஆறிவியல் துறைகளில் மாந்த இனம் பல்வேறு முன்னேற்றங்களைக் கண்டிருப்பினும் மனிதனை மனிதன் நேசிக்கும் மாந்த நேயப் பண்பு பழங்காலத்தில் இருந்து நிலையிலிருந்து எள்ளளவும் முன்னேற்றம் பெறவில்லை என்பது கண்கூடாகத் தெரிகின்றது.
இந்நிலை மாற்றம் பெறுதல் பொருட்டு ஒவ்வொரு நாட்டு அரசும் திருக்குறளைப் பொதுமறையாக ஏற்று, திருக்குறளின் வாழ்வியல் கருத்துகளை வெகு மக்களுக்கு நவீன தகவல் தொடர்புச் சாதனங்களின் மூலமாகப் பரப்புதல் செய்தல் வேண்டும். திருக்குறள் வாழ்வு வாழ்ந்து வருகின்ற சான்றோர் பெருமக்களை முதன்மைப்படுத்திச் சிறப்பிக்க வேண்டும். தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை திருக்குறளைக் கட்டாயப் பாடமாக வைத்தல் வேண்டும்.
நன்றி:
திரு. க. கோபால்,இக்கால உலகிற்குத் திருக்குறள், தொகுதி-3, தொகுப்பாசிரியர் முனைவர் தி.சே. சுப்பராமன், முனைவர் சேயோன், பதிப்பாசிரியர் சா கிருட்டினமூர்த்தி, 2004, உலக தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி