Tuesday, 21 January 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 53:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 53:
அவர்வயின் விதும்பல்
கடந்த முறை நிறையழிதல் அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம்; அவர்வயின் விதும்பல் அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். அவர்வயின் விதும்பல்  என்பதில் அவரை நோக்கி விரைதல் என்பதாகும். காதலிக்கும் தோழிக்கும் நடக்கும் உரையாடலாகக் காட்டியுள்ளார் திருவள்ளுவர். 
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல் -1261
தன் தலைவனை காணாததால் தலைவியின் நிலை என்ன என்பதனை திருவள்ளுவர் தலைவியின் வழி நின்று விளக்குகிறார்? ‘அவர் சென்ற  நாளில் இருந்து சுவற்றில் நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டு விரல்கள் தேய்ந்து போயின.. அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்துக் கண்களிலும் ஒளி இழந்து அழகு கெட்டன” என்கிறார். 
இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல் 
கலங்கழியும் காரிகை நீத்து -1262
மேற்கூறிய குறளில் தலைவி தோழியிடம் பேசுவது போல அமைத்துள்ளார். ‘தோழியே! துலைவன் பிரிவினை நினைத்து துன்புற்று வருந்தும் நான், பிரிவுத் துன்பம் வராதிருக்க அவரை மறந்திருக்க முயற்சி செய்தேன் என்றால், என்னுடைய தோள்கள் அழகு நீங்கி மெலிந்து போய், வளையல்களும் கழன்று விழுவது உறுதியடி” என்கிறார்.
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன் -1263
மேற்கூறிய குறளில், பொருளீட்டச் சென்றுள்ள தலைவனை விட்டுக் கொடுக்காமல் பேசும் தோழியின் நிலையினைக் குறிக்கின்றார். ‘என்னுடன் கூடி இருப்பதைக் கூட விடுத்து, வெற்றியை அடைந்தே திரும்புவேன், என்று ஊக்கத்தையே துணையாகக் கொண்டு வேறு நாட்டிற்குச் சென்றுள்ள காதலர் திரும்பி வருவான் என்பதற்காகவே நான் உயிருடன் இருக்கின்றேன்” என்கிறார். அடுத்தக் குறளில் 
கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
    கோடுகொ டேறுமென் நெஞ்சு -1264
  எப்படியும் இன்று வந்து விடுவான் என்று துடிக்கும் தலைவியின் நிலைமை என்ன? இதோ காணுங்கள். ‘முன்பு கூடியிருந்த காதல் இன்பத்தையும் கைவிட்டுப் பிரிந்து சென்ற காதலரின் வருகையை நினைத்து நினைத்து என்னுடைய நெஞ்சம் மரக்கிளைகளின் மேல் ஏறிப் பார்க்கின்றதே!” என்கிறார். எத்தகைய தவிப்பு!
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு -1265
முந்தைய அதிகாரங்களில் பசலை நோய் பிரிவினால் ஏற்பட்டதைக் கண்டோம். மேற்கூறிய குறளில், அப்பசலை நோய் எப்போது போகும் என்று சொல்கிறார். ‘என் கண்கள் முழுக்க என்னவரைக் காண்பேனாக் அவரைக் கண்ட பிறகு என்னுடைய மெல்லிய தோளின் வாடிய பசலை நிறம் தானாகவே நீங்கி விடும்” என்கிறார் தலைவியின் வாயிலாக. 
வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன் 
பைதல்நோய் எல்லாம் கெட-1266
காதலியின் துன்ப நோய் எப்போது தீரும்? ‘என் காதலன் என்னிடம் ஒருநாள் வருவானாக் அவன் வந்த பிறகு என்னுடைய துன்ப நோய் எல்லாம் தீருமாறு நான் அவனிடம் இன்பம் துய்ப்பேன்” என்று துன்ப நோய்க்கான தீர்வை கூறுகிறார். 
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் விரன் -1267
நெடுநாள் தவிக்க விட்டுச் சென்றிருந்த காதலர் திரும்ப வந்து சேர்ந்தால் காதலியின் நிலை என்ன என்பதனை அவருடைய பார்வையில் இருந்தே விளக்குகிறார் திருவள்ளுவர்.’என்னுடைய கண்ணின் மணி போன்ற என்னுடைய காதலர் வருவார் என்றால்… நான் அவருடன் ஊடுவேனோ? அல்லது அவரின் பிரிவைத் தாங்காமல் அவரைத் தழுவிக் கொள்வேனோ? அல்லது ஊடுதல் மற்றும் கூடுதல் ஆகிய இரண்டையும் இணைத்துச் செய்வேனோ? ஏன்ன செய்வது ஒன்றுமே புரியவில்லையே” என்கிறார். 
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்;கம் விருந்து -1268
அடுத்தப் பாடல் தலைவனின் மனநிலையினைக் காட்டுகிறார் திருவள்ளுவர். ‘அரசன் இப்போரில் முனைந்து நின்று வெற்றி பெறுவாராக் அதற்குப் பிறகு நானும், என் வீட்டிற்குச் சென்று மாலைப் பொழுதினிலே என் மனைவியோடு விருந்து அனுபவிப்பேன்” என்று கூறுகிறார். 
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு -1269
வெகுநாள் கழித்து தன் காதலரை அல்லது தலைவனைப் பார்க்கும் தலைவிக்கு அந்த நாள் எப்படி இருக்கும்? இதோ கவனியுங்கள்... ‘தொலைவிடத்திற்குப் பிரிந்து சென்ற காதலர் வரும் நாளை மனதில் நினைத்து ஏங்கும் மகளிருக்கு, ஒரு நாள் என்பது ஏழுநாள் போல நீண்டதாகக் கழியும்”
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம் 
உள்ளம் உடைந்துக்கக் கால் -1270
எந்த அளவிற்குத் தான் துன்பத்தைத் தாங்க முடியும், விரக்தியின் உச்சத்திற்குச் சென்றால், எப்படி புலம்புவார்கள் என்பதனைத் தான் மேலே உள்ளக் குறளில் விளக்குகிறார் ஐயன் திருவள்ளுவர். ‘பிரிவுத் துயரத்தைத் தாங்காமல் நினைவழிந்து போய்விட்டால், அதற்குப் பிறகு அவர் திரும்ப வந்தாலும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டாலும், சந்திப்பதாலோ சந்தித்துக் கூடுவதினாலோ… ஏன்ன பயன்? ஒரு பயனும் இல்லை” என்கிறார். 

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

No comments:

Post a Comment