Monday, 6 January 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 51:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 51:
நிறையழிதல்:
கடந்த வாரம் நெஞ்சோடு கிளத்தல்;; அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம்; நிறையழிதல் அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். நிறையழிதல் என்பதில் நிறை என்பது மன உறுதியினைக் குறிக்கிறது. காதலரை அல்லது தலைவரை பிரிந்து வாழ முடியும் என்ற நிலை தலைவிக்கு குன்றுவதைக் குறிப்பதாகும். அதாவது தலைவனைப் பிரிந்து இனியும் வாழ இயலாது என்ற நிலையில் இருப்பதைக் குறிப்பதாகும். தலைவனைப் பிரிந்து வாழ இயலாது என்றால், எதனால் அப்படி ஏற்படுகிறது?
முதல் குறளிலேயே தலைவியின் நிலைக்கான காரணத்தை விளக்கி விடுகிறார். ‘இந்த காதல் வேட்கையானது கோடாரியாக மாறி, நாணம் என்னும் தாழ்ப்பாள் பொறுத்தப்பட்ட நிறை எனப்படும் கதவினை உடைத்துத் தகர்த்து விடுகின்றதே!” என்கிறார். இதிலிருந்தே தலைவியின் நிலை தங்களுக்குப் புலப்படும் என்று நினைக்கின்றேன்.. 
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு -1251
அடுத்தக் குறளில் காமத்தின் கொடுமையினை விளக்குகின்றார். 
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில் -1252
‘எல்லோருமே, வேலையில்லாமல் உறங்கும் நடுச்சாமத்திலும் வந்து என்னுடைய நெஞ்சத்தில் ஆதிக்கம் செலுத்து என்னை அலைக்கழிப்பதால், இந்தக் காதல் வேட்கை எனப்படுவது என்றுமே இரக்கம் இல்லாதது ஆகும்” என்கிறார். 
மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும் -1253
மேலே உள்ள குறளில், தும்மலை அடக்குவது சிரமம் என்பதை எல்லோரும் அறிவோம், அந்தத் தும்மலினை உதாரணமாகக் கொண்டு அமைத்துள்ள குறளைப் பாருங்கள்,’நான் காதல் வேட்கையை என்னுள்ளே மறைக்கவே எண்ணுவேன்; ஆனால், அது எப்படி தும்மலை போலவே தானே வெளிப்பட்டு விடுகிறது” என்று தலைவியின் கூற்றாக காட்டுகிறார். 
நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும் -1254
‘நான் மனஉறுதி கொண்டவள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், ஆனால், எனது காதல் ஆசையானது என்னுள் மறைந்திருந்த எல்லையைக் கடந்து பொதுவெளியில் வெளிப்படுகின்றதே” என்று தன்னுள் காதல் உணர்வுகளை அடக்க இயலாதவளுக்கு அவடைய குறிப்புகளும் உடல் மாற்றங்களும் வெளிப்படுத்திவிடுவதை சொல்வதாக மேற்கூறிய குறளில ;காட்டுகிறார். 
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று -1255
முந்தைய அதிகாரத்தில் நெஞ்சோடு பேசும் தலைவி, எப்படி நம்மைக் கண்டுகொள்ளாதவரிடம் வெட்கமே இல்லாமல் நாடி செல்கிறாய்? ஏன்று கேட்பார். இந்;தக் குறளில் ஒரு ஒப்புரவு நிலைக்கு வந்து விடுவதை நாம் அறிய முடிகிறது. 
‘தன்னை வெறுத்து பிரிந்து சென்றவர் பின்னே செல்லாமல், தானும் அவரை விட்டுப் பிரிந்து நிற்கும் மன அடக்கத்தைக் காதல் நோயை அறியாதவர் பெற முடியாது. காதல் நோயை; உற்றவரால் அறிந்திருப்பதில்லை...
  செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
  எற்றென்னை உற்ற துயர் -1256
  என்னடா இந்த நெஞ்சம்...? வெறுத்தவரின் பின் செல்கிறதே? அப்படி என்னதான் மாயம் செய்தானோ? ஏன்று கேட்க வைக்கும் குறள் மேலே உள்ளதாகும். ‘என்னைப் வெறுத்துக் கைவிட்டு நீங்கிய காதலரின் பின்னே நான் போய் சேர வேண்டும் என்று என்னைப் பிடிந்த இந்த காதல் நோய் எத்தகைய தன்மை வாய்ந்தது?” எந்த அளவிற்கு கொடியது என்று காதலி கேட்பது போல் குறளை வடித்திருக்கிறார் ஐயன் திருவள்ளுவர். 
நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின் -1257
நாணம் என்ற சொல் நான் மறந்த தருணம் எது என்று காதலி விளக்குவதாக அமைத்திருக்கிறார் இக்குறளை...’என்னால் விரும்பப்பட்ட காதலர் காதல் ஆசையில் நான் விரும்பியதைச் செய்தபோது, நானும் நாணம் என்று சொல்லப்படும் ஒரு பண்பை அறியாமலேயே இருந்தேன்” என்கிறார் காதலி. இதிலிருந்து தன்னிலை மறந்தத் தன்மையினை நிறையழிதலைக் குறிப்பிடுகிறார். 
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை -1258
அந்த காதலன் பலமான என்னை எப்படி இளக வைத்தான்? என்று காதலியின் நிலையில் இருந்து சொல்கிறார் திருவள்ளுவர்.’ என்னுடைய பெண்மை என்னும் அரணை உடைத்து அழிக்கும் அரணாக அல்லவோ இருக்கின்றன... பல மாயங்களையும் அறிந்த கள்வனாகிய என் காதலனின் பணிவான சொற்கள்?”
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு -1259
நெடுநாள் நண்பர்கள் பல நாள் பகையுடன் இருந்தாலும், திடீரென்று ஒருநாள் பார்க்கும் தன்னுடைய பகையையும் மறந்து நட்பைத் தெரிவிப்பதுண்டு. இந்த நிகழ்வினை காதலனை வெகுநாள் கழித்து சந்தித்த காதலியின் நிலை என்ன என்பதனை ஐயன் வள்ளுவர் காதலியின் நிலை நின்று விவரிப்பதைப் பாருங்கள்.
‘ஊடுவேன் என்று எண்ணிக் கொண்டு அவர் முன் நிற்காது அப்பால் சென்றேன். ஆனால்  என்னுடைய நெஞ்சம் என்னை விட்டு அவரோடு கலக்கத் தொடங்குவதைக் கண்டு இனியும் அது முடியாது என்று அவரைத் தழுவிக் கொண்டேன்”
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல் -1260
கொழுப்பினை நெருப்பிலே இட்டால் என்னாகும்? உருகும். நிறையழிதலில் இவ்வுருவகத்தை எப்படிப் பயன்படுத்துகிறார் ஐயன்? ‘கொழுப்பைத் தீயில் போட்டால் உருகின்ற நெஞ்சை உடைய என்னை போன்ற மகளிருக்கு, கூடிக் களித்த பிறகு ஊடல் கொண்டு அதில் உறுதியாக நிற்கும் தன்மை தான் உண்டோ?” என்கிறார்.



தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

No comments:

Post a Comment