திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 52:
திருவள்ளுவர் தினம் :
இன்று திருவள்ளுவர் தினம் என்பதால் இவர் இயற்றிய முப்பால் என்ற திருக்குறள் நம் கையில் கிடைக்க காரணமானவர்களைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போமா?
நவீன காலத்தில் முதல் சுவடி கிடைத்த இடம்:1526 மலையாளத்தில் கிரந்தமாக பாலக்கோட்டில் உள்ள ஒரு கோவிலில் கிடைத்துள்ளது.
1711 இத்தாலியில் இருந்து வந்திறங்கிய வீரமாமுனிவர், பரிமேழலகர் மலையாளத்தில் எழுதிய ‘பரிமேழலகர் விருத்தி” என்ற ‘மலையாள குறள் பாஷா” வீரமாமுனிவர் கையில் கிடைக்கிறது. இவரே திருக்குறளை ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தியவர். வீரமாமுனிவர் கின்டர்ஸ்லே டச்சு மற்றும் பிரெஞ்ச் மொழியில் மொழி பெயர்க்கிறார். 1794 திருக்குறளை பகுதியாக ஆங்கிலத்தில் முதன் முதலில் மொழி பெயர்த்தார். (முழுமையாக ஆங்கிலத்தில் முதலில் மொழி பெயர்த்தவர் ஜி;.யு. போப் அவர்கள்)
1809 -மதராஸ் மாகாண கலெக்டராக எல்லிஸ் பதவி ஏற்கிறார். இவர் மதராஸ் கல்விக் கழகம் என்ற அமைப்பை நிறுவுகிறார். தஞ்சை ஞானப் பிரகாசம் என்பவரை வைத்து தமிழ் ஓலைச் சுவடிகளைப் பதிப்பிடச் செய்கின்றார். (1812 ஆம் ஆண்டு முதன் முதலில் திருக்குறள் தமிழில் ஞானப்பிரகாசம் என்பவரால் அச்சிடப்பட்டது. )
மதுரை கலெக்டர் எல்லீஸ் துரையின் நண்பர் ஆர்லிங்டன் பிரபு. ஆர்லிங்டன் பிரபுவின் சமையல்காரர் அடுப்பெறிக்க வைத்திருந்த ஓலைச் சுவடியினை ஆர்லிங்டன் பிரபுவிடம் காட்டுகிறார். அது திருக்குறள் ஓலைச் சுவடி!
அந்த சமையல்காரர் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் தாத்தா ஆகும்.
(அயோத்திதாசப் பண்டிதர் திருக்குறளுக்கும் பௌத்தத்திற்கும் உள்ள தொடர்புகளை பல இடங்களில் விளக்குகிறார். அவர் எழுதிய ஒரு கட்டுரை ‘திரிகுறள்”. பௌத்த சமயக் கருத்துகள் வைதீகக் கருத்துகளாக மாற்றப்பட்டிருப்பதை திரிகுறளில் விளக்குகிறார்.) இப்படியாக ஆர்லிங்டன் பிரபுவிடம் இருந்து எல்லீஸ் அவர்களிடம் கிடைக்கிறது. 1812 ஆம் ஆண்டு திருக்குறள் அச்சிடப்படுகிறது.
1848 - பிரெஞ்சில் மஞ்சல் ஏரியல் என்பவர் மொழி பெயர்ப்பு செய்கிறார். அதனை அவர் ‘உலகப் பிரஜைகளுக்கு” என்ற தலைப்பில் வெளியிடுகிறார். எந்த மதத்தையும் சாராத உலகப் பொதுமறை என்று முதலில் மஞ்சல் ஏரியல் அழைக்கின்றார்.
இரஷ்ய அறிஞர் டால்ஸ்டாய் எழுதிய கடிதம் மூலம் காந்தியடிகளுக்கு திருக்குறள் பற்றித் தெரிய வருகிறது. ‘இன்னா செய்யாமை” என்ற அதிகாரத்தில் இருந்து டால்ஸ்டாய் 6 குறள்களை வாழ்க்கைப் பாடம் என்ற தலைப்பில் மேற்கோள் காட்டுகிறார். அதிலும்
அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை-315
என்ற குறள் தான் காந்தியின் மனதைப் புரட்டிப் போட்டிருக்கின்றது. காந்தியடிகள் திருக்குறளை அறிந்தது டால்ஸ்டாய் வழியாக…
டால்ஸ்டாய் கையில் கிடைத்தது ஜெர்மன் மொழி பெயர்ப்பு. அது அவர் கையில் கிடைக்கக் காரணமாக இருந்தது ஒரு தமிழ் அறிஞர். லுத்தரன் தேவாலய இந்திய பிரதிநிதி அவர் பெயர் காரல் கிரவுல் அடிகளார் என்பதாகும். இவர் ஜெர்மனியில் இருந்து வந்து தமிழ் கற்றுக் கொண்டு திருக்குறளை ஜெர்மனியில் மொழிபெயர்த்தார். அவர் திருக்குறளைப் பற்றி குறிப்பிடுகையில் ‘சாதி மதம் பற்றித் திருக்குறள் குறிப்பிடாததால் அது உலக மக்களுக்கான பொது மறையாக இருக்கிறது” என்கிறார்.
1908 இல் காந்திக்கு இரஷ்ய மொழியில் டால்ஸ்டாய் எழுதிய கடிதத்தை முதலில் ஆங்கிலத்திலும் பிறகு குஜராத்தியிலும் மொழி பெயர்த்துக் கூறியவர் துவாரக நாத் தாஸ் என்று அழைக்கப்படக் கூடிய தென்னாப்பிரிக்கத் தோழர்.
வ.உ.சி. அவர்களிடம் திருக்குறளின் மணக்குடவர் உரை ஓலைச் சுவடி கிடைக்கின்றது. வ.உ.சி. அவர்கள் 1908 இல் தனக்கென தனி அச்சகத்தை தன் வீட்டில் உருவாக்குகிறார். ஆங்கிலேயரால் கை செய்யப்பட்டு சிறைக்குச் சென்ற அவர் சிறையில் இருந்தவாரே இதற்கான பணியினை அவர் செய்து மணக்குடவர் உரையினை வெளியிட வைத்தார். நவீன திருக்குறள் உரைகளில் முதல் உரையினை தந்த பெருமைக்குரியர் வ.உ.சி.
வள்ளலாரின் ஆசிரியர் வேதகிரி முதலியார் அவர் திருக்குறளுக்கு ஒரு உரையினை எழுதியுள்ளார். 1850 ஆம் வருடப் பிரதி அதனை வள்ளலார் எப்போதும் தன் கையிலேயே வைத்திருப்பார்.
நாயனார் திருவள்ளுவர் என்று இருந்தவரை நம் தோழர் திருவள்ளுவர் என்று ஆக்கித் தந்த பெருமை பெரியாருக்கு உண்டு.
1914 இரவீந்தரநாத் தாகூர் அவர்கள் சென்னையில் உ.வே.சா அவர்களை சந்தித்தார். அவரிடம் இருந்து 100 குறட்பாக்கள் வங்க மொழியில் தாகூர் அவர்கள் அறிமுகப்படுத்துகிறார்.
அறிஞர் அண்ணா ‘குறள் என்ன புனித நூலா? என்று கேட்கிறார்கள். அது அதையும் தாண்டிய மனித வாழ்வியல் என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல் தம்பி...” என்று தம்பிக்கு கடிதமாக அறிஞர் அண்ணா கடிதம் எழுதியுள்ளார்.
கலைஞர் கருணாநிதி அவர்கள் வள்ளுவர் கோட்டம் கண்டு பளிங்கு கற்களில் குறள்களைப் பதித்திருக்கிறார். குறளோவியம் தந்து அரசுப் பேருந்துகள் முதல் அரசு அலுவலகங்கள் வரை குறளினைப் பதித்தார் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.
1812 எல்லிஸ் அவர்கள் திருக்குறளை தமிழில் அச்சிட்டபோது உடன் பணியாற்றியவர், சையது அப்துல் காதர் திருச்சியில் உள்ள ஜமால் முகம்மது கல்லூரியில் ஹஸ்ரத் சுரவர்த்தி என்பவர் திருக்குறளை உருது மொழிக்கு மொழி பெயர்த்துள்ளார். அரேபிய மொழிக்கு நயினார் முகம்மது சாகிப், டாக்டர் அகமத் சுபேயில் மொழி பெயர்த்துள்ளனர்.
கல்லூரிகளில் பல்கலைக்கழகங்களில் குறள்களுக்காகப் போராடி சாதித்தார் மு. வரதராசனார்.
வள்ளுவத்தை உழைக்கும் மக்களின் சொத்தாக்கினார் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்கள்.
திருக்குறளை வாழ்வாக்கி சுவாசித்து களம் கண்டார் திருக்குறள் முனுசாமியார். உலக நூலகங்கள் எல்லாவற்றிலும் தனித்தமிழ் முழக்கம் கண்டார் தேவநேயப் பாவாணர்.
உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடத்தி குறள் வளர்ச்சி நிதியினை வாரிக் கொடுத்தார் எம். ஜி. இராமச்சந்திரன் அவர்கள்.
குமரியில் உள்ள கம்பீரமான சிலையை அமைத்த கணபதி ஸ்தபதி அவர்கள் திருவள்ளுவர் எப்படி இருப்பார் என்ற கேள்விக்கு ‘பழைய உரையில் பரிதியார் உரையும், ஜைன உரையும், சோமேசர் உரையும், முதுமொழி வெண்பா, முருகேசர் முதுமொழி வெண்பா, சிவசிவ வெண்பா, இலங்கேச வெண்பா மற்றும் வடமாலை வெண்பா என்னும் குறள் படைத்தோன் சார்ந்த ஓலைச் சுவடிகளை சுட்டிக் காட்டி வள்ளுவர் இப்படித்தான் இருந்திருப்பார்” என பதிலுரைத்தார்.
சைமன் செட்டி என்ற இலங்கை அறிஞர் 1849 இல் ‘உலகின் ஆகச் சிறந்த மதச்சார்பின்மை ஆவணம் திருக்குறள், வள்ளுவனுக்கு உண்டோ மதம் சாதி அடையாளம்”
2011 சனவரி சீன மொழியில் திருக்குறள் மொழிபெயர்க்கப்படுகிறது. இதற்கு மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் உதவியுள்ளார். தன் வாழ்நாளின் இறுதிநாள் வரை தன் கோட் பாக்கெட்டில் திருக்குறளை சுமந்து சென்றவர் அப்துல் கலாம் அவர்கள். அவர் உலகத் திருக்குறள் மாநாட்டு உரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார். ‘புவியெனும் கோளின் மானுடம் முழுமைக்கும் என்றைக்குமான மனித நடத்தை நெறிகளை வழங்கும் ஒரே நூல் திருக்குறள். அது இறந்த காலம், நிகழ்காலம், மற்றும் மனிதனின் எதிர்காலத்தையும் இணைக்கும் புள்ளியாக வரலாற்றில் நிலைக்கிறது”.
அமெரிக்க இந்திய இயல் நிபுணர் (இண்டோலாஜிஸ்ட்) டபிள்யு நார்மன் பிரவுன் அவர்கள் ‘இந்திய மண்ணில் ஆகப் பழமையான இலக்கியப் பதிவு திராவிட மொழி தமிழில் உள்ளது. அவற்றில் கி.பி. 1 ஆம் நூற்றாண்டின் படைப்பு திருக்குறள். இதனைப் படைத்தவர் நெசவுத் தொழில் செய்த வள்ளுவர் எனும் சான்றுகள் உள்ளன” என்கிறார்.
கலாமின் சீன நண்பர் யூசி 2010 தைபேயில் உலகக் கவிஞர்களின் 30 ஆவது மாநாட்டில் அங்குக் கலாம் அவர்கள் யூசியிடம் சீன மொழியில் மொழி பெயர்க்கக் கேட்டுக் கொள்கிறார். அதனைத் தொடர்ந்து 2011 இல் சீனாவின் மாண்டரின் மொழியில் திருக்குறள் வெளிவருகின்றது. தைவானிய மொழியிலும் திருக்குறளை எடுத்துச் செல்கிறார் யூசி. அவருடைய கருத்து என்னவென்றால், ‘நீங்கள் கன்புசியசத்தைப் படியுங்கள், பைபிள், குரான், யூதர் நூல், மகா காஸ்டகலின் பௌத்த சிந்தனை என எதையும் படியுங்கள், அந்தந்த பூகோள பிராந்தியத்திற்கு உங்களைப் பொருத்திக் கொள்ள சிறிதேனும் திணற வேண்டியிருக்கும். திருக்குறளைப் படியுங்கள். உங்களிடம் அது நேரடியாகப் பேசும், உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் தோழமைக் குறள் அது ஒலிக்கும்”
புத்தகத்தில் இடம் பெற்றுள்ள பிற தகவல்கள்:
திருவள்ளுவர் ஆண்டு கி.மு. 31 என்று முன்மொழிந்தவர்: மறைமலையடிகள் (1921)
திருக்குறளில் உள்ள மொத்தச் சொற்கள்: 14000
திருக்குறளில் இடம் பெறாத தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கை: 37
னி என்ற எழுத்து 1705 முறை திருக்குறளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கம்பராமாயணத்தில் திருக்குறள் சுட்டிக்காட்டப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை: 61
சிலப்பதிகாரத்தில் திருக்குறள் சுட்டிக்காட்டப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை: 13
சீவக சிந்தாமணியில் திருக்குறள் சுட்டிக்காட்டப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை: 21
புறநானூற்றுப் பாடல்களில் திருக்குறள் சுட்டிக்காட்டப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை: 32
மணிமேகலையில் திருக்குறள் சுட்டிக்காட்டப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை: 37
கீழடியும் ஈரடியும் நம் இரு கண்கள் - ஆயிஷா இரா. நடராசன்
நன்றி: ஈரடிப்போர் - திருக்குறளுக்காக நடந்த 1000 வருட யுத்தம்
வாசித்தவர் - திரு. இரவிச்சந்திரன் அவர்கள்
No comments:
Post a Comment