Tuesday, 28 January 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 54:







திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 54:

குறிப்பறிவுறுத்தல்
கடந்த வாரம் அவர்வயின் விதும்பல்   அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம்; குறிப்பறிவுறுத்தல் அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். குறிப்பறிவுறுத்தல் என்பது காதலர்கள் தன் குறிப்புகளை தெரிவித்தல் என்பதாகும். 
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு -1271
தன் காதலியின் குறிப்பிலிருந்து காதலனின் கூற்று மேற்கூறிய பாடலாகும்இ நீ வெளியே சொல்லாமல் மறைக்கப் பார்த்தாலும்இ உனது கண்கள் தடைகள் கடந்து சொல்லக்கூடிய செய்தி ஒன்று உண்டு; அதுதான் பிரிவை விரும்பாத காதல்” 
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் 
பெண்நிறைந்த நீர்மை பெரிது-1272
மேற்கூறியக் குறளும் காதலன் தன் காதலியைக் குறித்த வர்ணனையாகும். ‘கண் நிறைந்த பேரகும்இ மூங்கில் போன்ற அழகிய தோள்களும் உடைய என் காதலிக்குஇ பெண்மைத் தன்மையானது நிறைந்து விளங்கும் இயல்பானது மிகுதியாக உள்ளது”.
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு -1273
குறிப்பறிதலுக்கு உதாரணமாக இந்தக் குறள் உள்ளதுஇ ‘நூலில் கோத்த மணியினுள்ளே காணப்படுகின்ற நூலைப் போலஇ என்னுடைய காதலியின் அழகிற்குள் கிடந்து என்னை மயக்கும் வெளியே தெரியும் குறிப்பு உள்ளது”
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு -1274
காதலியின் புன்முறுவலுக்கு இப்படியொரு விளக்கத்தை கேள்விப்பட்டதில்லைஇ’மலராமல் இருக்கும் அரும்புகளுக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போல என்னுடைய காதலியின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்  பற்றிய எண்ணத்தின் குறிப்பும் உள்ளது” என்கிறார். 
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து -1275
மேற்கூறிய குறளில் காதலனுக்கு மருந்தாக அமைந்தது காதலியின் குறிப்பு என்கிறார். ‘நெருங்கிய வளையல்களை அணிந்திருக்கும் என் காதலி செய்து விட்டுச் சென்ற கள்ளமான குறிப்பானதுஇ என்னுடை மிகப் பெரிய துயரத்தைத் தீர்க்கும் ஓர் மருந்தை உடையதாக இருக்கின்றது” என்கிறார். 
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து -1276
மேற்கூறிய குறள்இ தலைவியின் பார்வையில் இருந்து தலைவன் பிரிவு குறித்த குறிப்பை அறிந்து கொள்வதாகக் காட்டுகிறார். ‘ஆரத் தழுவி அளவற்ற அன்பு காட்டி அவர் என்னைக் கூடுவது என்பது அவர் மீண்டும் என்னைப் பிரிந்துச் செல்லப் போகின்ற குறிப்பை உணர்த்துவது போல் இருக்கிறதே” என்று தலைவி நினைப்பதாகக் குறிப்பிடுகிறார்.
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும் 
முன்னம் உணர்ந்த வளை -1277
மேற்கூறிக குறளும் தலைவனின் குறிப்பை தலைவி உணர்ந்து கொண்டதாகவே காட்டுகிறார்.’ குளிர்ந்த நீர்த் துறைக்கு உரியவனாகிய நம் காதலன் என்னை உடலால் கூடி உள்ளத்தால் பிரிந்திருப்பதை என்னைக் காட்டிலும் என் கை வளையல்கள் முன்னமே அறிந்து கழன்று விட்டன” என்கிறார். 
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து -1278
தலைவியின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை குறிப்பால் உணர்ந்த தலைவி சொல்வதாவது ‘நேற்றுத் தான் என்னுடைய காதலர் எம்மைப் பிரிந்து சென்றால்இ நானும் அவரைப் பிரிந்து ஏழுநாட்கள் ஆனவரைப் போல மேனி பசலை படர்ந்தவராய் இருக்கின்றோமே?”
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது -1279
மேற்கூறிய குறள்இ தலைவனை தலைவி தன் குறிப்பால் அன்பின் மிகுதியால் மிரட்டுவது போல் அமைத்துள்ளார். ‘நீ என்னைப் பிரிந்தால் இவைகள் என்னுடன் இருக்காது என்று கை வளையல்களைப் பார்த்தாள். துணையாக தன் மெல்லிய தோள்களும் மெலியும் என அவற்றைப் பார்த்தாள்இ இவை இரண்டும் நடக்காதபடி நீர் நடந்து கொள்ள வேண்டும் என்று தன் பாதங்களையும் பார்த்தாள்இ பிரிந்தால் நானும் உடன் வருவேன் என்ற ஒரு குறிப்பும் இதனுள் இருக்கிறது” என்கிறார். 
பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு -1280
பெண்மைக்கு மெருகூட்டுவது எது? ‘கண்ணினால் தன்னுடைய காதல் நோயினைத் தெரிவித்து குறிப்பால் பிரியாமல் இருக்குப் படி கேட்டுக்கொள்ளுதல்இ பெண் தன்மைக்கும் மேலும் சிறந்த பெண் தன்மை உடையது என்கிறார். 
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

Tuesday, 21 January 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 53:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 53:
அவர்வயின் விதும்பல்
கடந்த முறை நிறையழிதல் அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம்; அவர்வயின் விதும்பல் அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். அவர்வயின் விதும்பல்  என்பதில் அவரை நோக்கி விரைதல் என்பதாகும். காதலிக்கும் தோழிக்கும் நடக்கும் உரையாடலாகக் காட்டியுள்ளார் திருவள்ளுவர். 
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல் -1261
தன் தலைவனை காணாததால் தலைவியின் நிலை என்ன என்பதனை திருவள்ளுவர் தலைவியின் வழி நின்று விளக்குகிறார்? ‘அவர் சென்ற  நாளில் இருந்து சுவற்றில் நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டு விரல்கள் தேய்ந்து போயின.. அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்துக் கண்களிலும் ஒளி இழந்து அழகு கெட்டன” என்கிறார். 
இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல் 
கலங்கழியும் காரிகை நீத்து -1262
மேற்கூறிய குறளில் தலைவி தோழியிடம் பேசுவது போல அமைத்துள்ளார். ‘தோழியே! துலைவன் பிரிவினை நினைத்து துன்புற்று வருந்தும் நான், பிரிவுத் துன்பம் வராதிருக்க அவரை மறந்திருக்க முயற்சி செய்தேன் என்றால், என்னுடைய தோள்கள் அழகு நீங்கி மெலிந்து போய், வளையல்களும் கழன்று விழுவது உறுதியடி” என்கிறார்.
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன் -1263
மேற்கூறிய குறளில், பொருளீட்டச் சென்றுள்ள தலைவனை விட்டுக் கொடுக்காமல் பேசும் தோழியின் நிலையினைக் குறிக்கின்றார். ‘என்னுடன் கூடி இருப்பதைக் கூட விடுத்து, வெற்றியை அடைந்தே திரும்புவேன், என்று ஊக்கத்தையே துணையாகக் கொண்டு வேறு நாட்டிற்குச் சென்றுள்ள காதலர் திரும்பி வருவான் என்பதற்காகவே நான் உயிருடன் இருக்கின்றேன்” என்கிறார். அடுத்தக் குறளில் 
கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
    கோடுகொ டேறுமென் நெஞ்சு -1264
  எப்படியும் இன்று வந்து விடுவான் என்று துடிக்கும் தலைவியின் நிலைமை என்ன? இதோ காணுங்கள். ‘முன்பு கூடியிருந்த காதல் இன்பத்தையும் கைவிட்டுப் பிரிந்து சென்ற காதலரின் வருகையை நினைத்து நினைத்து என்னுடைய நெஞ்சம் மரக்கிளைகளின் மேல் ஏறிப் பார்க்கின்றதே!” என்கிறார். எத்தகைய தவிப்பு!
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு -1265
முந்தைய அதிகாரங்களில் பசலை நோய் பிரிவினால் ஏற்பட்டதைக் கண்டோம். மேற்கூறிய குறளில், அப்பசலை நோய் எப்போது போகும் என்று சொல்கிறார். ‘என் கண்கள் முழுக்க என்னவரைக் காண்பேனாக் அவரைக் கண்ட பிறகு என்னுடைய மெல்லிய தோளின் வாடிய பசலை நிறம் தானாகவே நீங்கி விடும்” என்கிறார் தலைவியின் வாயிலாக. 
வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன் 
பைதல்நோய் எல்லாம் கெட-1266
காதலியின் துன்ப நோய் எப்போது தீரும்? ‘என் காதலன் என்னிடம் ஒருநாள் வருவானாக் அவன் வந்த பிறகு என்னுடைய துன்ப நோய் எல்லாம் தீருமாறு நான் அவனிடம் இன்பம் துய்ப்பேன்” என்று துன்ப நோய்க்கான தீர்வை கூறுகிறார். 
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் விரன் -1267
நெடுநாள் தவிக்க விட்டுச் சென்றிருந்த காதலர் திரும்ப வந்து சேர்ந்தால் காதலியின் நிலை என்ன என்பதனை அவருடைய பார்வையில் இருந்தே விளக்குகிறார் திருவள்ளுவர்.’என்னுடைய கண்ணின் மணி போன்ற என்னுடைய காதலர் வருவார் என்றால்… நான் அவருடன் ஊடுவேனோ? அல்லது அவரின் பிரிவைத் தாங்காமல் அவரைத் தழுவிக் கொள்வேனோ? அல்லது ஊடுதல் மற்றும் கூடுதல் ஆகிய இரண்டையும் இணைத்துச் செய்வேனோ? ஏன்ன செய்வது ஒன்றுமே புரியவில்லையே” என்கிறார். 
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்;கம் விருந்து -1268
அடுத்தப் பாடல் தலைவனின் மனநிலையினைக் காட்டுகிறார் திருவள்ளுவர். ‘அரசன் இப்போரில் முனைந்து நின்று வெற்றி பெறுவாராக் அதற்குப் பிறகு நானும், என் வீட்டிற்குச் சென்று மாலைப் பொழுதினிலே என் மனைவியோடு விருந்து அனுபவிப்பேன்” என்று கூறுகிறார். 
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு -1269
வெகுநாள் கழித்து தன் காதலரை அல்லது தலைவனைப் பார்க்கும் தலைவிக்கு அந்த நாள் எப்படி இருக்கும்? இதோ கவனியுங்கள்... ‘தொலைவிடத்திற்குப் பிரிந்து சென்ற காதலர் வரும் நாளை மனதில் நினைத்து ஏங்கும் மகளிருக்கு, ஒரு நாள் என்பது ஏழுநாள் போல நீண்டதாகக் கழியும்”
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம் 
உள்ளம் உடைந்துக்கக் கால் -1270
எந்த அளவிற்குத் தான் துன்பத்தைத் தாங்க முடியும், விரக்தியின் உச்சத்திற்குச் சென்றால், எப்படி புலம்புவார்கள் என்பதனைத் தான் மேலே உள்ளக் குறளில் விளக்குகிறார் ஐயன் திருவள்ளுவர். ‘பிரிவுத் துயரத்தைத் தாங்காமல் நினைவழிந்து போய்விட்டால், அதற்குப் பிறகு அவர் திரும்ப வந்தாலும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டாலும், சந்திப்பதாலோ சந்தித்துக் கூடுவதினாலோ… ஏன்ன பயன்? ஒரு பயனும் இல்லை” என்கிறார். 

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

Tuesday, 14 January 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 52:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 52:
திருவள்ளுவர் தினம் :

இன்று திருவள்ளுவர் தினம் என்பதால் இவர் இயற்றிய முப்பால் என்ற திருக்குறள் நம் கையில் கிடைக்க காரணமானவர்களைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போமா?
நவீன காலத்தில் முதல் சுவடி கிடைத்த இடம்:1526 மலையாளத்தில் கிரந்தமாக பாலக்கோட்டில் உள்ள ஒரு கோவிலில் கிடைத்துள்ளது. 
1711 இத்தாலியில் இருந்து வந்திறங்கிய வீரமாமுனிவர், பரிமேழலகர் மலையாளத்தில் எழுதிய ‘பரிமேழலகர் விருத்தி” என்ற ‘மலையாள குறள் பாஷா” வீரமாமுனிவர் கையில் கிடைக்கிறது. இவரே திருக்குறளை ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தியவர். வீரமாமுனிவர் கின்டர்ஸ்லே டச்சு மற்றும் பிரெஞ்ச் மொழியில் மொழி பெயர்க்கிறார். 1794 திருக்குறளை பகுதியாக ஆங்கிலத்தில் முதன் முதலில் மொழி பெயர்த்தார். (முழுமையாக ஆங்கிலத்தில் முதலில் மொழி பெயர்த்தவர் ஜி;.யு. போப் அவர்கள்) 
1809 -மதராஸ் மாகாண கலெக்டராக எல்லிஸ் பதவி ஏற்கிறார். இவர் மதராஸ் கல்விக் கழகம் என்ற அமைப்பை நிறுவுகிறார். தஞ்சை ஞானப் பிரகாசம் என்பவரை வைத்து தமிழ் ஓலைச் சுவடிகளைப் பதிப்பிடச் செய்கின்றார். (1812 ஆம் ஆண்டு முதன் முதலில் திருக்குறள் தமிழில் ஞானப்பிரகாசம் என்பவரால் அச்சிடப்பட்டது. )
மதுரை கலெக்டர் எல்லீஸ் துரையின் நண்பர் ஆர்லிங்டன் பிரபு. ஆர்லிங்டன் பிரபுவின் சமையல்காரர் அடுப்பெறிக்க வைத்திருந்த ஓலைச் சுவடியினை ஆர்லிங்டன் பிரபுவிடம் காட்டுகிறார். அது திருக்குறள் ஓலைச் சுவடி! 
அந்த சமையல்காரர் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் தாத்தா ஆகும். 
(அயோத்திதாசப் பண்டிதர் திருக்குறளுக்கும் பௌத்தத்திற்கும் உள்ள தொடர்புகளை பல இடங்களில் விளக்குகிறார். அவர் எழுதிய ஒரு கட்டுரை ‘திரிகுறள்”. பௌத்த சமயக் கருத்துகள் வைதீகக் கருத்துகளாக மாற்றப்பட்டிருப்பதை திரிகுறளில் விளக்குகிறார்.) இப்படியாக ஆர்லிங்டன் பிரபுவிடம் இருந்து எல்லீஸ் அவர்களிடம் கிடைக்கிறது. 1812 ஆம் ஆண்டு திருக்குறள் அச்சிடப்படுகிறது. 
1848 - பிரெஞ்சில் மஞ்சல் ஏரியல் என்பவர் மொழி பெயர்ப்பு செய்கிறார். அதனை அவர் ‘உலகப் பிரஜைகளுக்கு” என்ற தலைப்பில் வெளியிடுகிறார். எந்த மதத்தையும் சாராத உலகப் பொதுமறை என்று முதலில் மஞ்சல் ஏரியல் அழைக்கின்றார். 
இரஷ்ய அறிஞர் டால்ஸ்டாய் எழுதிய கடிதம் மூலம் காந்தியடிகளுக்கு திருக்குறள் பற்றித் தெரிய வருகிறது. ‘இன்னா செய்யாமை” என்ற அதிகாரத்தில் இருந்து டால்ஸ்டாய் 6 குறள்களை வாழ்க்கைப் பாடம் என்ற தலைப்பில் மேற்கோள் காட்டுகிறார்.  அதிலும் 
அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை-315 
என்ற குறள் தான் காந்தியின் மனதைப் புரட்டிப் போட்டிருக்கின்றது.  காந்தியடிகள் திருக்குறளை அறிந்தது டால்ஸ்டாய் வழியாக…
டால்ஸ்டாய் கையில் கிடைத்தது ஜெர்மன் மொழி பெயர்ப்பு. அது அவர் கையில் கிடைக்கக் காரணமாக இருந்தது ஒரு தமிழ் அறிஞர். லுத்தரன் தேவாலய இந்திய பிரதிநிதி அவர் பெயர் காரல் கிரவுல் அடிகளார் என்பதாகும். இவர் ஜெர்மனியில் இருந்து வந்து தமிழ் கற்றுக் கொண்டு திருக்குறளை ஜெர்மனியில் மொழிபெயர்த்தார். அவர் திருக்குறளைப் பற்றி குறிப்பிடுகையில் ‘சாதி மதம் பற்றித் திருக்குறள் குறிப்பிடாததால் அது உலக மக்களுக்கான பொது மறையாக இருக்கிறது” என்கிறார். 
1908 இல் காந்திக்கு இரஷ்ய மொழியில்  டால்ஸ்டாய் எழுதிய கடிதத்தை முதலில் ஆங்கிலத்திலும் பிறகு குஜராத்தியிலும் மொழி பெயர்த்துக் கூறியவர் துவாரக நாத் தாஸ் என்று அழைக்கப்படக் கூடிய தென்னாப்பிரிக்கத் தோழர். 
வ.உ.சி. அவர்களிடம் திருக்குறளின் மணக்குடவர் உரை ஓலைச் சுவடி கிடைக்கின்றது. வ.உ.சி. அவர்கள் 1908 இல் தனக்கென தனி அச்சகத்தை தன் வீட்டில் உருவாக்குகிறார். ஆங்கிலேயரால் கை செய்யப்பட்டு சிறைக்குச் சென்ற அவர் சிறையில் இருந்தவாரே இதற்கான பணியினை அவர் செய்து மணக்குடவர் உரையினை வெளியிட வைத்தார். நவீன திருக்குறள் உரைகளில் முதல் உரையினை தந்த பெருமைக்குரியர் வ.உ.சி. 
வள்ளலாரின் ஆசிரியர் வேதகிரி முதலியார் அவர் திருக்குறளுக்கு ஒரு உரையினை எழுதியுள்ளார். 1850 ஆம் வருடப் பிரதி அதனை வள்ளலார் எப்போதும் தன் கையிலேயே வைத்திருப்பார். 
நாயனார் திருவள்ளுவர் என்று இருந்தவரை நம் தோழர் திருவள்ளுவர் என்று ஆக்கித் தந்த பெருமை பெரியாருக்கு உண்டு. 
1914 இரவீந்தரநாத் தாகூர் அவர்கள் சென்னையில் உ.வே.சா அவர்களை சந்தித்தார். அவரிடம் இருந்து 100 குறட்பாக்கள் வங்க மொழியில் தாகூர் அவர்கள் அறிமுகப்படுத்துகிறார். 
அறிஞர் அண்ணா ‘குறள் என்ன புனித நூலா? என்று கேட்கிறார்கள். அது அதையும் தாண்டிய மனித வாழ்வியல் என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல் தம்பி...” என்று தம்பிக்கு கடிதமாக அறிஞர் அண்ணா கடிதம் எழுதியுள்ளார். 
கலைஞர் கருணாநிதி அவர்கள் வள்ளுவர் கோட்டம் கண்டு பளிங்கு கற்களில் குறள்களைப் பதித்திருக்கிறார். குறளோவியம் தந்து அரசுப் பேருந்துகள் முதல் அரசு அலுவலகங்கள் வரை குறளினைப் பதித்தார் முத்தமிழ் அறிஞர் கலைஞர். 
1812 எல்லிஸ் அவர்கள் திருக்குறளை தமிழில் அச்சிட்டபோது உடன் பணியாற்றியவர், சையது அப்துல் காதர் திருச்சியில் உள்ள ஜமால் முகம்மது கல்லூரியில் ஹஸ்ரத் சுரவர்த்தி என்பவர் திருக்குறளை உருது மொழிக்கு மொழி பெயர்த்துள்ளார். அரேபிய மொழிக்கு நயினார் முகம்மது சாகிப், டாக்டர் அகமத் சுபேயில் மொழி பெயர்த்துள்ளனர். 
கல்லூரிகளில் பல்கலைக்கழகங்களில் குறள்களுக்காகப் போராடி சாதித்தார் மு. வரதராசனார். 
வள்ளுவத்தை உழைக்கும் மக்களின் சொத்தாக்கினார் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்கள். 
திருக்குறளை வாழ்வாக்கி சுவாசித்து களம் கண்டார் திருக்குறள் முனுசாமியார். உலக நூலகங்கள் எல்லாவற்றிலும் தனித்தமிழ் முழக்கம் கண்டார் தேவநேயப் பாவாணர்.  
உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடத்தி குறள் வளர்ச்சி நிதியினை வாரிக் கொடுத்தார் எம். ஜி. இராமச்சந்திரன் அவர்கள். 
குமரியில் உள்ள கம்பீரமான சிலையை அமைத்த கணபதி ஸ்தபதி அவர்கள் திருவள்ளுவர் எப்படி இருப்பார் என்ற கேள்விக்கு ‘பழைய உரையில் பரிதியார் உரையும், ஜைன உரையும், சோமேசர் உரையும், முதுமொழி வெண்பா, முருகேசர் முதுமொழி வெண்பா, சிவசிவ வெண்பா, இலங்கேச வெண்பா மற்றும் வடமாலை வெண்பா என்னும் குறள் படைத்தோன் சார்ந்த ஓலைச் சுவடிகளை சுட்டிக் காட்டி வள்ளுவர் இப்படித்தான் இருந்திருப்பார்” என பதிலுரைத்தார். 
சைமன் செட்டி என்ற இலங்கை அறிஞர் 1849 இல் ‘உலகின் ஆகச் சிறந்த மதச்சார்பின்மை  ஆவணம் திருக்குறள், வள்ளுவனுக்கு உண்டோ மதம் சாதி அடையாளம்”
2011 சனவரி சீன மொழியில் திருக்குறள் மொழிபெயர்க்கப்படுகிறது. இதற்கு மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் உதவியுள்ளார். தன் வாழ்நாளின் இறுதிநாள் வரை தன் கோட் பாக்கெட்டில் திருக்குறளை சுமந்து சென்றவர் அப்துல் கலாம் அவர்கள். அவர் உலகத் திருக்குறள் மாநாட்டு உரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார். ‘புவியெனும் கோளின் மானுடம் முழுமைக்கும் என்றைக்குமான மனித நடத்தை நெறிகளை வழங்கும் ஒரே நூல் திருக்குறள். அது இறந்த காலம், நிகழ்காலம், மற்றும் மனிதனின் எதிர்காலத்தையும் இணைக்கும் புள்ளியாக வரலாற்றில் நிலைக்கிறது”. 
அமெரிக்க இந்திய இயல் நிபுணர் (இண்டோலாஜிஸ்ட்) டபிள்யு நார்மன் பிரவுன் அவர்கள் ‘இந்திய மண்ணில் ஆகப் பழமையான இலக்கியப் பதிவு திராவிட மொழி தமிழில் உள்ளது. அவற்றில் கி.பி. 1 ஆம் நூற்றாண்டின் படைப்பு திருக்குறள். இதனைப் படைத்தவர் நெசவுத் தொழில் செய்த வள்ளுவர் எனும் சான்றுகள் உள்ளன” என்கிறார்.
கலாமின் சீன நண்பர் யூசி 2010 தைபேயில் உலகக் கவிஞர்களின் 30 ஆவது மாநாட்டில் அங்குக் கலாம் அவர்கள் யூசியிடம் சீன மொழியில் மொழி பெயர்க்கக் கேட்டுக் கொள்கிறார். அதனைத் தொடர்ந்து 2011 இல் சீனாவின் மாண்டரின் மொழியில் திருக்குறள் வெளிவருகின்றது. தைவானிய மொழியிலும் திருக்குறளை எடுத்துச் செல்கிறார் யூசி. அவருடைய கருத்து என்னவென்றால், ‘நீங்கள் கன்புசியசத்தைப் படியுங்கள், பைபிள், குரான், யூதர் நூல், மகா காஸ்டகலின் பௌத்த சிந்தனை என எதையும் படியுங்கள், அந்தந்த பூகோள பிராந்தியத்திற்கு உங்களைப் பொருத்திக் கொள்ள சிறிதேனும் திணற வேண்டியிருக்கும். திருக்குறளைப் படியுங்கள். உங்களிடம் அது நேரடியாகப் பேசும், உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் தோழமைக் குறள் அது ஒலிக்கும்” 
புத்தகத்தில் இடம் பெற்றுள்ள பிற தகவல்கள்:
திருவள்ளுவர் ஆண்டு கி.மு. 31 என்று முன்மொழிந்தவர்: மறைமலையடிகள் (1921)
திருக்குறளில் உள்ள மொத்தச் சொற்கள்: 14000
திருக்குறளில் இடம் பெறாத தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கை: 37
னி என்ற எழுத்து 1705 முறை திருக்குறளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 
கம்பராமாயணத்தில் திருக்குறள் சுட்டிக்காட்டப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை: 61
சிலப்பதிகாரத்தில் திருக்குறள் சுட்டிக்காட்டப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை: 13 
சீவக சிந்தாமணியில் திருக்குறள் சுட்டிக்காட்டப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை: 21
புறநானூற்றுப் பாடல்களில் திருக்குறள் சுட்டிக்காட்டப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை: 32
மணிமேகலையில் திருக்குறள் சுட்டிக்காட்டப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை: 37
கீழடியும் ஈரடியும் நம் இரு கண்கள் - ஆயிஷா இரா. நடராசன் 

நன்றி: ஈரடிப்போர் - திருக்குறளுக்காக நடந்த 1000 வருட யுத்தம்
வாசித்தவர் - திரு. இரவிச்சந்திரன் அவர்கள்

Monday, 6 January 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 51:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 51:
நிறையழிதல்:
கடந்த வாரம் நெஞ்சோடு கிளத்தல்;; அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம்; நிறையழிதல் அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். நிறையழிதல் என்பதில் நிறை என்பது மன உறுதியினைக் குறிக்கிறது. காதலரை அல்லது தலைவரை பிரிந்து வாழ முடியும் என்ற நிலை தலைவிக்கு குன்றுவதைக் குறிப்பதாகும். அதாவது தலைவனைப் பிரிந்து இனியும் வாழ இயலாது என்ற நிலையில் இருப்பதைக் குறிப்பதாகும். தலைவனைப் பிரிந்து வாழ இயலாது என்றால், எதனால் அப்படி ஏற்படுகிறது?
முதல் குறளிலேயே தலைவியின் நிலைக்கான காரணத்தை விளக்கி விடுகிறார். ‘இந்த காதல் வேட்கையானது கோடாரியாக மாறி, நாணம் என்னும் தாழ்ப்பாள் பொறுத்தப்பட்ட நிறை எனப்படும் கதவினை உடைத்துத் தகர்த்து விடுகின்றதே!” என்கிறார். இதிலிருந்தே தலைவியின் நிலை தங்களுக்குப் புலப்படும் என்று நினைக்கின்றேன்.. 
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு -1251
அடுத்தக் குறளில் காமத்தின் கொடுமையினை விளக்குகின்றார். 
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில் -1252
‘எல்லோருமே, வேலையில்லாமல் உறங்கும் நடுச்சாமத்திலும் வந்து என்னுடைய நெஞ்சத்தில் ஆதிக்கம் செலுத்து என்னை அலைக்கழிப்பதால், இந்தக் காதல் வேட்கை எனப்படுவது என்றுமே இரக்கம் இல்லாதது ஆகும்” என்கிறார். 
மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும் -1253
மேலே உள்ள குறளில், தும்மலை அடக்குவது சிரமம் என்பதை எல்லோரும் அறிவோம், அந்தத் தும்மலினை உதாரணமாகக் கொண்டு அமைத்துள்ள குறளைப் பாருங்கள்,’நான் காதல் வேட்கையை என்னுள்ளே மறைக்கவே எண்ணுவேன்; ஆனால், அது எப்படி தும்மலை போலவே தானே வெளிப்பட்டு விடுகிறது” என்று தலைவியின் கூற்றாக காட்டுகிறார். 
நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும் -1254
‘நான் மனஉறுதி கொண்டவள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், ஆனால், எனது காதல் ஆசையானது என்னுள் மறைந்திருந்த எல்லையைக் கடந்து பொதுவெளியில் வெளிப்படுகின்றதே” என்று தன்னுள் காதல் உணர்வுகளை அடக்க இயலாதவளுக்கு அவடைய குறிப்புகளும் உடல் மாற்றங்களும் வெளிப்படுத்திவிடுவதை சொல்வதாக மேற்கூறிய குறளில ;காட்டுகிறார். 
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று -1255
முந்தைய அதிகாரத்தில் நெஞ்சோடு பேசும் தலைவி, எப்படி நம்மைக் கண்டுகொள்ளாதவரிடம் வெட்கமே இல்லாமல் நாடி செல்கிறாய்? ஏன்று கேட்பார். இந்;தக் குறளில் ஒரு ஒப்புரவு நிலைக்கு வந்து விடுவதை நாம் அறிய முடிகிறது. 
‘தன்னை வெறுத்து பிரிந்து சென்றவர் பின்னே செல்லாமல், தானும் அவரை விட்டுப் பிரிந்து நிற்கும் மன அடக்கத்தைக் காதல் நோயை அறியாதவர் பெற முடியாது. காதல் நோயை; உற்றவரால் அறிந்திருப்பதில்லை...
  செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
  எற்றென்னை உற்ற துயர் -1256
  என்னடா இந்த நெஞ்சம்...? வெறுத்தவரின் பின் செல்கிறதே? அப்படி என்னதான் மாயம் செய்தானோ? ஏன்று கேட்க வைக்கும் குறள் மேலே உள்ளதாகும். ‘என்னைப் வெறுத்துக் கைவிட்டு நீங்கிய காதலரின் பின்னே நான் போய் சேர வேண்டும் என்று என்னைப் பிடிந்த இந்த காதல் நோய் எத்தகைய தன்மை வாய்ந்தது?” எந்த அளவிற்கு கொடியது என்று காதலி கேட்பது போல் குறளை வடித்திருக்கிறார் ஐயன் திருவள்ளுவர். 
நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின் -1257
நாணம் என்ற சொல் நான் மறந்த தருணம் எது என்று காதலி விளக்குவதாக அமைத்திருக்கிறார் இக்குறளை...’என்னால் விரும்பப்பட்ட காதலர் காதல் ஆசையில் நான் விரும்பியதைச் செய்தபோது, நானும் நாணம் என்று சொல்லப்படும் ஒரு பண்பை அறியாமலேயே இருந்தேன்” என்கிறார் காதலி. இதிலிருந்து தன்னிலை மறந்தத் தன்மையினை நிறையழிதலைக் குறிப்பிடுகிறார். 
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை -1258
அந்த காதலன் பலமான என்னை எப்படி இளக வைத்தான்? என்று காதலியின் நிலையில் இருந்து சொல்கிறார் திருவள்ளுவர்.’ என்னுடைய பெண்மை என்னும் அரணை உடைத்து அழிக்கும் அரணாக அல்லவோ இருக்கின்றன... பல மாயங்களையும் அறிந்த கள்வனாகிய என் காதலனின் பணிவான சொற்கள்?”
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு -1259
நெடுநாள் நண்பர்கள் பல நாள் பகையுடன் இருந்தாலும், திடீரென்று ஒருநாள் பார்க்கும் தன்னுடைய பகையையும் மறந்து நட்பைத் தெரிவிப்பதுண்டு. இந்த நிகழ்வினை காதலனை வெகுநாள் கழித்து சந்தித்த காதலியின் நிலை என்ன என்பதனை ஐயன் வள்ளுவர் காதலியின் நிலை நின்று விவரிப்பதைப் பாருங்கள்.
‘ஊடுவேன் என்று எண்ணிக் கொண்டு அவர் முன் நிற்காது அப்பால் சென்றேன். ஆனால்  என்னுடைய நெஞ்சம் என்னை விட்டு அவரோடு கலக்கத் தொடங்குவதைக் கண்டு இனியும் அது முடியாது என்று அவரைத் தழுவிக் கொண்டேன்”
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல் -1260
கொழுப்பினை நெருப்பிலே இட்டால் என்னாகும்? உருகும். நிறையழிதலில் இவ்வுருவகத்தை எப்படிப் பயன்படுத்துகிறார் ஐயன்? ‘கொழுப்பைத் தீயில் போட்டால் உருகின்ற நெஞ்சை உடைய என்னை போன்ற மகளிருக்கு, கூடிக் களித்த பிறகு ஊடல் கொண்டு அதில் உறுதியாக நிற்கும் தன்மை தான் உண்டோ?” என்கிறார்.



தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி