Monday, 30 December 2019

நம்மாழ்வார் அய்யாவுடன் ஒரு நாள்:


ஆரம்பத்தில் நான் விஷயங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க ரொம்ப சிரமப்பட்டேன். ஆனால், பிறகு மக்களுக்கு புரியனும்னா அவர்கள் பாணியை தான் கடை பிடிக்க வேண்டும் என்று விடுகதை மற்றும் கதை மூலம் சொல்றேன் என்று ஒரு இரண்டு மணி நேரம் தான் (செப்டம்பர் மாதம் 2011 ஆம் வருடம், இடம் கரூர் ) பேசி இருப்பார். புவி வெப்பமடைதல் குறித்த பயிற்சியில் அவர் பேசும்போது எவருடைய கவனமும் சிதரவில்லை மிகுந்த ஆர்வமுடன கேட்டு கொண்டிருந்தோம். இப்போது நினைத்தாலும் ஞாபகத்தில் இருக்கிறது.
சிலவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
1.நுனி வீட்டுக்கு நடு மாடுக்கு அடி காட்டுக்கு (உதாரணமாக நெல் எடுத்துக் கொண்டோமானால் கதிரின் நுனியில் இருக்கும் நெல்லினை நாம் வீட்டிற்கு எடுத்து கொள்கிறோம் நடுபகுதியான வைக்கோலை மாட்டிற்கு கொடுக்கிறோம், அடி பகுதியினை வயல்காட்டிலேயே உழுது விட்டு விடுகிறோம்) பெரும்பாலான தானியங்கள் நாம் இப்படியே பயன்படுத்துகிறோம்.
2.  காயாகி பூவாவது எது (எப்போதும் பூவிற்கு பின்தான் காய் கிடைக்கும்) ?
தேங்காய், 
தேங்காய் பூத்து காயான பிறகு நாம் சமையலுக்கு தேங்காய் பூ சுரண்டி சமைக்கிறோம். இதிலிருந்து அவர் சொல்ல வருவது என்னவென்றால் 
தேங்காய் போல வளமாக இருந்த நிலங்கள் இப்போது கொட்டாங்குச்சிகள் போல வளமிழந்து கிடக்கின்றன. அதற்கு காரணம் மக்களை வேலைக்காக கும்பல் கும்பலாக அழைத்துச் செல்லும் பேருந்துகளும் வெளியில் இருந்து ஊருக்குள் குப்பைகளை கொட்டும் லாரிகளும் என்று சொல்கிறார்.
3. காயாகி பழமாகி மீண்டும் காயாவது எது?
பதில் : எலுமிச்சை ஊறுகாய் 
இதில் எலுமிச்சம் காயானது எலுமிச்சம் பழமான பிறகு நாம் அதனை ஊறுகாய் போடுகிறோம். ஊறும் காய், ஊறுகின்ற காய் மற்றும் ஊறிய காய் என்று முக்காலங்களிலும் அர்த்தம் தரும். இதில் இருந்து அவர் சொல்ல வரும் கருத்து  என்னவென்றால் ஊறுகாய் நெடுநாட்கள் கெடாமல் இருந்து வருவதற்கு காரணம் அதில் சேர்க்கப்பட்டிருக்கும் அதிகப்படியான உப்பு. அந்த உப்பானது கிருமிகளை அதாவது நுண்ணுயிர்களை கொள்ளும் தன்மை கொண்டது. அதனால் நெடுநாள் கெடாமல் இருக்கிறது. உயிர்கள் இருந்தால் சீக்கிரம் கெட்டுவிடும். அதுபோல் நாம் நமது நிலங்களில் செயற்கை உரங்கள் என்ற பெயரில் மண்ணில் உப்பை போட்டு போட்டு அதில் உள்ள நுண்ணயிர்கள் அனைத்தையும் கொன்று விடுகிறோம். பிறகு நிலம் பலன் தர வில்லை என வருந்துகிறோம். நுண்ணுயிர்கள் இல்லையெனில் என்னவாகும்? இப்படி கற்பனை செய்து கொள்ளுங்கள், நுண்ணுயிர்கள் இல்லாததால் புதைக்கப்படும் உடல்கள்  எதுவுமே மண்ணில் மட்காமல் இருந்துவிட்டால்? பூமியே சுடுகாடாக அல்லவா  காட்சி தரும். ஆகவே நிலத்தில் உப்பை கொட்டாதீர்கள்.

இது போன்று விவசாயம் என்றால் என்ன? எப்படி நமது நாட்டிற்கு பூச்சிமருந்துகள் வந்தது? தான் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன? எதிர்கொண்ட நம்பிக்கை துரோகங்கள்? சமூக பணியில் இருப்பவர்கள் எவ்வாறு தங்களை தயார் செய்ய வேண்டும் என்ற பல கருத்துக்கள். 

அவரை நேரில் கண்டது மட்டுமல்லாது அவர் உரையை நேரில் கேட்கவும் வாய்ப்பு கிடைத்தது மறக்க முடியாத தருணம். அவருடன் எடுத்து கொண்ட புகைப்படம் தவற விட்டு விட்டேனே என்ற ஏக்கம் இன்றும் என் நெஞ்சில் ஒரு ஓரத்தில் இருக்கவே செய்கிறது. 

அவருடன் தங்கி இருந்து விவசாயமும் விஷயங்களும் கற்று கொண்டவர்கள் கொடுத்து வைத்தவர்கள். 

டிசம்பர் 30, நம்மாழ்வார் ஐயா அவர்களின் நினைவு நாள்

Wednesday, 4 December 2019

தன்னார்வலர் தினம்

'தொண்டு செய்து பழுத்த பழம்' பெரியாரை குறித்து பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின்  உரை. இன்றும் இளைஞர்களின் எழுச்சிகளை நாம் பல்வேறு இடங்களில் காண்கிறோம். அசோகர் குளத்தை வெட்டினார், மரத்தை நட்டார்  என்ற மகத்துவத்தை வரலாறில் படித்த போது புரியவில்லை. வறட்சி அதன் அர்த்தத்தை நன்கு உணர்த்தி சென்றது. தண்ணீர் பஞ்சம், மாசடைந்த காற்று என்று எங்கு நோக்கினும் கூப்பாடுகள். எதிர்காலத்தில்  பிரச்சினை வராமல் இருக்கவும், தற்போது தற்காத்து கொள்ளவும், சமூக அக்கறை கொண்டு படிப்பினையும், வகிக்கும் பதவியையும் கழட்டி வைத்து களத்தில் இறங்கி பணிபுரிகின்றனர். நாள் தோறும் குளம் தூர் செய்த, மரக் கன்று  நட்ட, விதை பந்து வீசிய செய்திகள் பார்க்க முடிகிறது சுற்றுசூழல் மட்டுமல்ல ... கல்வி, சுகாதாரம், சமூக நீதி, குழந்தை பாதுகாப்பு, பசிப்பிணி நீக்கம் என பலதுறைகளிலும் பல்வேறு வகைகளிலும் சாதனை புரிந்து வருகின்றனர். இவர்களுக்கு அனைத்து  தரப்பு மக்களும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்த தன்னார்வலர்களில் பெரும்பாலானோர் பின்னணியில், வறுமை, வெறுமை, விரக்தி, தோல்வி ,உடல்நல பிரச்சினை என்ற பலவற்றையும் தாங்கி பணிபுரிபவர்களை கண்டிருக்கிறேன். ஆனால் அதனை பொது வெளியில் அவர்கள் காட்டுவதில்லை. தாங்கள் எடுத்த காரியம் சிறப்புற முடிகிறதா என்ற தீவிரமும் அதில் கிடைக்கும் முடிவில் கிடைக்கும் திருப்தியும் தன்னை சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியில் இருக்கச் செய்வதுமே இவர்கள் பணியாக இருக்கிறது. இவர்கள் பற்றி தெரியாத அரைகுறையாக தெரிந்தவர்கள் பேசும் விமர்சனங்களையும் இவர்கள் எதிர்கொள்ளாமல் இல்லை. என்னவாக இருந்தாலும் நல்ல பலனை எதிர்பார்த்து தன் கடனை செய்பவர்களை இந்நாளை விட்டால் வாழ்த்துவதற்கு வேறு சிறந்த நாள் எதுவுமில்லை.
தன்னலம் இருந்தாலும் இல்லையெனினும் பொது நலத்துடன் செயல்படும் அனைத்து தன்னார்வலர்களுக்கும் 
#தன்னார்வலர் தின வாழ்த்துகள்