Monday, 20 May 2019

அயோத்திதாசர்

தோழர் அமரேசன் அவர்களின் 'தகவல் தொடர்பும் தமிழ்ப் பாட்டியும்' புத்தகத்தில் தான் முதன் முதலாக அவ்வை குறித்து புதிய தகவல்கள் அறிவதற்கும், அயோத்திதாசர் அவர்களின் எழுத்துக்களை உள்ளார்ந்து நான் படிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. அது முதற்கொண்டு அயோத்திதாசரை படித்ததில் பல ஆச்சரியங்களை கண்டேன்.
இன்று அவருடைய பிறந்த நாள், இந்நாளில் அவரை பற்றிய சில பதிவுகளை வைப்பது நலமாக இருக்கும் என்று கருதி சில குறிப்புகளை வைக்கிறேன்.
காத்தவராயன் என்ற இயற்பெயர் கொண்ட அயோத்திதாசர் தனது தந்தையிடமும் காசி மேடு சதாவணி வைரக்கண் வேலாயுதம் புலவர் மற்றும் வல்லக்காளத்தி வீ. அயோத்தி தாசர் பண்டிதர் ஆகியோரிடம் கல்வி பயின்றார். தனது குருவின் மீது கொண்ட பக்தியினால் தனது பெயரை அயோத்தி தாசர் என்று மாற்றி கொண்டார்.
அண்ணல் அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியாருக்கு முன்னதாகவே பகுத்தறிவு கருத்துகளையும், சாதிய மறுப்பு கருத்துகளையும் முன்னெடுத்தவர்.
திராவிடர்:
மக்கள் தொகை கணக்கெடுப்பு 1911 ஆம் வருடம் நடந்தது. ஆனால், 1910 டிசம்பர் 14 ஆம் தேதி தமிழன் இதழில் அரசுக்கு மனு எழுதுகிறார் " அன்னவரும் தங்களை திராவிடர்கள்
இந்த தேசத்தின் பூர்வாதாரங்களை கொண்டும், பூர்வாதாரங்களின் அடிப்படை வாயிலாகவும், நாம் அத்தனை பேரும் சாதி, மதம், பேதங்கள் நிறைந்த இந்துக்கள் இல்லை, நாங்கள் சாதி, மதம், பேதங்கள் அற்ற திராவிடர்கள் என்று பதிவு செய்யுங்கள்" என்ற வேண்டுகோளை வைக்கிறார்.
திருக்குறள்:
உலக பொதுமறை நாம் பெருமையோடு பார்க்கும் திருக்குறள் நூற்றாண்டு காலங்களாக வழக்கில் இல்லாமல் இருந்தது, பெரும் கல்வி பின்புலத்தில் இருந்து குடும்பத்தில் பிறந்த இவர், தனது குடும்ப சேமிப்பு ஏடுகளில் இருந்து திருக்குறளை தொகுத்து மீட்டு எல்லீஸ் துரையிடம் சமர்ப்பித்தார். அதன் பிறகுதான் இன்றைய திருக்குறள் அச்சு வடிவில் வந்தது.
"ஒரு பைசாத் தமிழன்" என்ற பெயரில் வார இதழ் வெளியிட்டார். 1 வருடத்திற்கு பிறகு பலரின் வேண்டுகோளுக்கிணங்க "தமிழன்" என்ற பெயரில் வெளியிட்டார். இந்த இதழ் தமிழர்கள் அதிகம் வாழும் கர்நாடக கோலார் தங்க வயல், பர்மா, தென்னாப்பிரிக்கா , சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பரவியது.
இதழியலிலும் அரசியலிலும் நவீனம் குறித்த கருத்தாக்கங்கள் "தமிழன்" இதழில் இருந்தே துவங்க பெற்றன என கூறலாம்.
தமிழகத்தில் எந்த இயக்கமும் தோன்றாத காலத்தில், வேத, மத , பிரமாணீய எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, தமிழ் மொழியுணர்வு, பகுத்தறிவு, சமூக நீதி பிரதிநித்துவம், தலித் விடுதலை, சுயமரியாதை இந்தி எதிர்ப்பு, பெண் விடுதலை போன்ற கருத்துக்களை 'தமிழன்' இதழ் மூலம் எடுத்துரைத்தார்.
பூர்வ தமிழ் மரபு சாதியில்லா சமூக அடிப்படையில் அமைந்திருந்தது என்ற பண்டிதரின் நிலைப்பாடு தமிழ் வரலாறு குறித்த அடிப்படையான விவாதத்தைத் தொடங்கி வைத்தது.
தமிழை அடித்தள மக்களின் நிலைப்பாடுகளில் இருந்து வாசித்தார். கால அடிப்படையில் சைவத்தை விட சமண, பௌத்த சமயங்கள் மூத்தவை என தமிழ் இலக்கிய சான்றுகளின் வழியில் நிரூபித்தார். பூர்வ தமிழின் அறம் , காப்பிய மரபுகள், இலக்கணம், இலக்கிய மரபுகள் ஆகியவற்றை சமண பௌத்த மரபுகளே நிலைப்படுத்தின என பண்டிதரால் எடுத்து காட்ட முடிந்தது.
"தமிழ் மொழியில் பிறந்து, தமிழ் மொழியில் வளர்ந்து, தமிழ் மொழிக்கு சொந்தமான பூர்வ குடிகள் சுதேசிகளுக்கு வழங்க வேண்டும். நேற்று குடியேறி வந்தவர்களையும், முன்னர் குடியேறி வந்தவர்களையும் சுதேசிகள் என கருதி ஆட்சியை அவர்களிடம் வழங்கினால் நாடு பாழாகி சீர் கெட்டு விடும்" என நாடு விடுதலை பெற 35 ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரித்தார் (தமிழன்-30-10-1992).
பண்டிதருடைய காலம் இந்துத்துவம் மீட்டுருவாக்கம் செய்த காலம்,1861-1891 வரை யாரெல்லாம் கிறிஸ்தவர்கள், இசுலாமியர்கள் இல்லையோ அவர்களெல்லாம் இந்து என பதிவு செய்த காலம். இந்து சமூகத்தின் தீண்டாமை, காணாமை, சாதீய கொடுமைகளை அதிகம் அனுபவித்த 'தலித்துகள்' ஒரு போதும் இந்து அடையாளத்தை ஏற்கக்கூடாது என்று அதற்கு மாற்றாக ஒரு அடையாளத்தை தேடினார். இதற்கிடையில் 1881 களில் ஆங்கில அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளில் புகுந்து தலித்துகளுக்கு தனித்துவமான அடையாளத்தை பதிவு செய்கிறார்."ஆதி தமிழன்" என பதிவு செய்ய வற்புறுத்துகிறார். அப்போதெல்லாம் சாதிதான் தமிழனுக்கு அடையாளமாக இருந்தது. சாதியின் பெயரால் சாதியற்ற பதிவு செய்தார்.
இவர் திராவிட அரசியலின் முன்னோடி ஆவார்.

No comments:

Post a Comment