பேராசியர் தொ.
பரமசிவன்
அவர்களுடன்
ஒரு
சந்திப்பு
கடந்த 05.06.2016 அன்று ஒரு புத்தக வெளியீட்டு விழா இருக்கிறது தங்களுக்கு ஆர்வமிருக்கிறதா என்று எழுத்தாளர், தோழர் மா. அமரேசன் அவர்களிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அவருடைய அழைப்பின் பேரில் 05.06.2016 அன்று கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவனை பின்புற பகுதியில் அமைந்துள்ள ஆசாநிவாஸ் அருகே அமைந்துள்ள கோத்தே இன்ஸ்டிடியூட்டில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டேன். இந்த விழாவில் தடாகம் பதிப்பகத்தின் சார்பில் 5 புத்தகங்களும் கலப்பை பதிப்பகத்தின் சார்பில் 1 புத்தகமும் வெளியிடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக, இயற்கை, ஈ, பேராண்மை, பொறம்போக்கு என்கிற பொதுவுடை போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் திரு. ஜனநாதன், சித்த மருத்துவர் மைக்கேல், கவிஞர் குட்டி ரேவதி, எழுத்தாளர்கள் பாமரன், சீனிவாசன், கோபி போன்றோர் இருந்தனர். அந்த நிகழ்வில் வெளிவந்த புத்தகங்களில் பெரும்பான்மை புத்தகங்கள் பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்களுடன் நடத்திய நேர்கானல்கள் தான் புத்தகமாக வெளியிடப்பட்டிருந்தது.
மேலும்,
அங்கு பேசியவர்களில் பெரும்பாலானோர் பேராசியர் தொ. பரமசிவன் அவர்களைப் பற்றியே பேசியிருந்தனர். ஒவ்வொருவர் பேசும் போதும் அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியையும் பேச்சில் உற்சாகத்தையும் கலந்தே பேசிக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவர் பேசும் போதும் இஸ்திரிப் பெட்டியில் கனிந்து கொண்டிருக்கும் நெருப்புக் கரி ஊத ஊத இன்னும்
எப்படி நன்கு எரிந்து வெப்பத்தைத் தருமோ. அது போல ஒவ்வொருவருடைய பேச்சும் ஊற்சாக வெப்பத்தை ஏற்றிக் கொண்டேயிருந்தது. அப்போதே அனைவருமே மகிழ்ச்சியடைய பேசிக் கொண்டிருக்கும் அந்த இனியவரை பார்த்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தேன். மேலும், அங்கு பேசியவர்கள் பேராசிரியர் அவர்கள் எப்போதும் தன்னைச் சுற்றி எவரேனும் இருப்பர், அவர்களுக்கெல்லாம் சமூகம், பண்பாடு, அரசியல் என்று எந்த தலைப்பில் நண்பர்கள் பேசினாலும், இவர் பேசிக் கொண்டிருப்பார். ஓய மாட்டார். ஒரு
நாளைக்கு அவர் நண்பர்களுக்கு வாங்கிக் கொடுக்கும் டீ செலவு மட்டும்
சராசரியாக ரூ. 150 வந்துவிடும். அப்படி அவரைச் சுற்றி நண்பர்கள் இருந்து கொண்டே இருப்பர். தற்போது நீரிழவு நோயால் ஒரு காலை இழந்து, தனிமையில் வாடி வருவதாகவும் எவரேனும் சென்று பேசினால் அவருக்கு உற்சாகம் பிறக்கும் என்றும் தெரிவித்தனர். பெரும்பாலான புத்தகங்கள் அவரைச் சார்ந்து வந்திருந்ததால் அவர் வந்து ஏற்புரை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அவருடைய நண்பர் திரு. கண்ணன் அவர்கள் தொ.ப. அவர்கள்
எழுதி கொடுத்தனுப்பிய 3 வரி செய்தியை இரத்தினச் சுருக்கமாக வாசித்தார். அதனைத் தொடர்ந்து திரு.
கண்ணன் அவர்கள் உதவியோடும் திருநெல்வேலியில் உள்ள கணித ஆசிரியர் திரு. நீல மேகம் மற்றும் எனது நண்பர் திரு. சுந்தர் ராஜ் ஆகியோர் உதவியுடன் திருநெல்வேலி தெற்கு கடைவீதி அருகே அமைந்திருக்கும் அவருடைய இல்லத்திற்கே சென்று 09.06.2016 ஆம் தேதியன்று அவரைச் சந்தித்தேன்.
அங்கு
அவருடன் நான் உரையாடிய போது விழாவில் பேசியவர்கள் ஏன் அவ்வளவு அருமையாகப் பேசினார்கள் என்பதனை உணர்ந்தேன். ஒன்றரை மணி நேரத்தில் எத்தனைச் செய்திகள்! எத்தனை இலக்கிய மேற்கோள்கள்! எத்தனைத் துறைகள்! என்று அவரது பேச்சு வியக்க வைக்கின்றது. அதுவும் என் வயதிற்கு சமமாக என்னிடம் பேசியது எண்ணி ஆனந்தம் கொண்டேன். நான் திருநெல்வேலி மாவட்டத்தில் பணி புரிந்த 2 வருடங்களில் இப்படி ஒருவரை சந்திக்காமல் மிஸ் பண்ணி விட்டோமே என்று வருந்தினேன். ஆனால், அவரைச் சந்தித்ததினால் ஏற்பட்ட மகிழ்ச்சி முந்தைய வாட்டத்தினை போக்கியது. அவரை
நான் பேட்டி எடுப்பதற்காகச் செல்லவில்லை. ஆர்வமிகுதியால் பார்த்து வரலாம் என்று தான் நினைத்தேன். ஆனால், அங்கே அவரிடம் பேசிய விஷயங்கள், பல புதிய செய்திகளைத்
தந்ததால் இதைப் பகிர்ந்து கொள்வது உங்களுக்கும் மகிழ்ச்சியளிக்கும் என்ற நம்பிக்கையில் இப்பதிவினை இடுகிறேன். இதில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் எவரையும் புண்படுத்தும் நோக்கத்தில் இல்லை. முற்றிலும் தெரிந்த உண்மைகளை தெரிவிப்பது மட்டுமே நோக்கமாகும்.
ஆதிச்சநல்லூர்:
ஆதிச்சநல்லூர்
போனா
என்ன
பார்க்கலாம்
ஐயா?
Prehistoric
and historic of athichanallore and Perumbavur ன்னு ஒரு
புத்தகம் இருக்கு, 15 ரூபா, அதை வாங்குங்க, அது ஃபுல் டீடெய்ல் இருக்கும், இப்ப சைட்ல ஒண்ணுமே கிடையாது. 1915 லே மூடிட்டான், இப்ப
மறுபடியும் 2005ல திறந்தாங்க. அதையும்
மூடிட்டான். 2005 இல தொறந்ததுல 35 செண்ட்
தான் தோண்டுனாங்க. 165 பானைதான் எடுத்தாங்க. மெட்டல் ஆப்ஜக்ட் ஒண்ணுமே கிடைக்கல, ஸ்கிரிப்ட் கிடைக்குமான்னு பார்த்தோம். ஸ்கிரிப்டும் ஒண்ணு கூட கிடைக்கல. ஆதிச்சநல்லூர்ல நமக்கு ஸ்கிரிப்ட் கிடைக்காதது நமக்குப் பெரிய தோல்வி. உள்ள எலும்பு பொறிபொறியா இருந்தத. எழுத்துன்னுட்டான்...கரியஅரவநாதனார் அப்படின்னு வாசிச்சும் காமிச்சிட்டான். சம்பத்ங்கற ஆளு. முதல்ல உற்சாகத்துல சொல்லிட்டு அப்புறம் மறைச்சிட்டாங்க. நாங்க போயி அதக் காட்டு பார்ப்போம்னு கேட்டோம். காட்ட மாட்டேன்னுட்டான். தப்பா சொல்லிட்டோம்னு தெரிஞ்சோன்ன மறைச்சிட்டாங்க.
மொத்தம்
150 ஏக்கர்ல 35 சென்ட்டில பார்த்திருக்காங்க! அதுவும் ஒரு ஏக்கர் காட்ட கூட வரலை! 2005 க்கு முந்தி escalation க்கு நாங்க ஒரு தடவை போயிருந்தோம். மாலிக்குன்னு ஒரு நார்த் இன்டியன் ஆர்க்கியாலஜிஸ்ட்
இருந்தான். அவன்கிட்ட கேட்டால் மெட்டல் ஆர்கியாலஜில பெர்லின்கார் ஜே கோர் கிடைச்சுதே
அது எங்க கிடைச்சுதுன்னு கேட்டேன். அது நடு முதுகுப் பகுதியில கிடைச்சுதுன்னு சொன்னான். அதே முதுகுப் பகுதியை ஒட்டித்தான் இப்பத் தோண்டினாங்க. முதுகுப் பகுதியில மெட்டல் ஆப்ஜக்ட் எதுவும் கிடைக்கல. சின்னக் குழந்தையோட ரிங்கு மட்டும் கிடைச்சது. ரிங்குன்னா கை வளையல். என்ன
விஷயம்னா ஆதிச்ச நல்லூர்ல வெள்ளி தவிர எல்லா மெட்டலும் கிடைச்சது.
நான் தினத்தந்தியில
வாராவாராம்
ஞாயிற்றுக்கிழமை
வெளிவரும்
பேப்பர்ல
ஆதிச்சநல்லூர்
- மண்மூடிய மகத்தான நாகரிகம்
என்ற
கட்டுரை
படிச்சிக்கிட்டு
வரேன்.
அதுல
தங்க
நெற்றிப்பட்டம்லாம்
கிடைச்சதா
தகவல்
வருதே.?
நிறைய
கிடைச்சது. கிட்டத்தட்ட 150 கிடைச்சது. ஸ்டேட் வந்துட்டுது என்பதற்கு அடையாளம். நெற்றிப்பட்டம் கட்டறான்னா... பட்டம் கட்டறான்னாலே ராஜா வந்துட்டான்னு அர்த்தம். அரசு வந்துட்டுன்னு அர்த்தம். இன்னைக்கும் நாம செத்த வீடுகள்ளையும் பட்டம் கட்டுறோம்ல. செத்துப்போனவனோட மகனுக்குப்பட்டம் கட்டறாங்க. அடுத்த தலைமுறைவந்துடுச்சுன்னு. அதான் அர்த்தம்.
இரும்புக் கண்டுபிடிப்பு:
ஆதிச்சநல்லூர்
மாதிரி
வேறு
ஏதாவது
நம்முடைய
பாரம்பரியம்,
நாகரீகம்
தெரியனும்னா
வேறு
எந்த
இடம் இருக்கு?
நான்
ரெண்டு இடம் கண்டுபிடிச்சேன். வீரவநல்லூர் ரெயில்வேஸ்டேஷன் நேரே தெற்கே ஒரு ஊரு இருக்கு ரெட்டியாப்பட்டின்னு பேரு. மண் மேடு மாதிரி ஒரு இது இருக்கும். 20 லாரி. Iron slags அது
வந்து இரும்பைக் காய்ச்சி உருக்கி ஊத்திய இடங்களில் ஒன்று. அது மேடு அளவுக்கு இருக்கும். எங்க பியூன் வந்து சொன்னாரு. அவருக்கும் பயிற்சி கொடுத்து வச்சிருந்தேன். அது 10 லாரி அளவுக்கு இருக்கும்னு சொன்னாரு. அரை
லாரி அளவுக்கே எங்கேயும் பார்க்க முடியாது. 10 லாரி அளவுக்கு இருக்கான்னு போனேன். நான் பார்த்ததுல என்ன கிடைச்சதுன்னா ஒரு சின்ன உலை தான் (தன் கையை விரித்துக் காட்டாமல் தன் உடல் அகலப்பகுதிக்குள்ளேயே கையைக் குவித்துக் காட்டினார்) இவ்வளவுதான். இந்த சைச வைச்சே நம்மாளுங்க இரும்ப காய்ச்சிருக்காங்க.
நான் அந்தத்
தொடர்ல
படிச்சிருக்கேன்.
தமிழ்நாட்டுக்காரங்கதான்
இரும்பக்
கண்டுபிடிச்சாங்கன்னு
போட்டிருக்கு?
இருக்கலாம்,
மாலிக் சொன்னான், 'நான் இந்தியா முழுவதும் சுத்தியிருக்கேன். தாமிரபரணி காரன் மாதிரி இரும்பை உருக்குற டெக்னாலஜி எங்கேயும் கிடையாதுன்னான். நான் கண்டுபிடிச்சேன் அந்த உலைல ஒரு மவுத் இருந்தது. அதே மாதிரி ஒரு உலை களக்காடுக்கும் சேரன்மாதேவிக்கும் இடையில உள்ள இடையங்குளத்துலேயும் கண்டுபிடிச்சேன்.
அங்க
Iron Pipes எடுத்தேன். இரும்ப உருக்கி ஊத்துறாங்கள்ல, டையிங்கும் இருந்தது. இரும்பு கம்பினு இப்ப சொல்றாங்களே, முறுக்குக் கம்பிங்க, தினமும் விளம்பரம் போடறாங்க. அதாவது 3 முறுக்குகளைக் கொண்டது. முறுக்குக் கம்பி எடுத்தேன். dye யோட எடுத்தேன். Mud Pipe ல எப்படி உருக்கி
ஊத்திருக்காங்கன்னு கண்டுபிடிச்சேன். Mud Pipe ப குளிர வைச்சாலோ
அல்லது காய வைச்சாலோ அதை ஈசியா உடைச்சிடலாம். ஒரு பைப்புல ஒரு கம்பி இரண்டு கம்பி மூனு கம்பியெல்லாம் உருக்கிருக்காங்க. எல்லாம் எடுத்தேன். TRY கம்பி மாதிரியே இருக்குங்க.
இங்க வைச்சிருக்கீங்களா
ஐயா,
நாங்க
பார்க்க
முடியுமா?
இல்லை,
எல்லாத்தையும் யுனிவர்சிட்டியில டிபார்ட்மெண்ட்ல வைச்சிருக்கேன். இன்னமும் இருக்கு. ஸ்டிபன்கிட்ட இருக்கு அவார்கிட்ட கேட்டா காட்டுவாரு. சின்ன சைஸ்தான் இத்தனைக்கும் உலை இருந்தது. அங்கு ஒன்னு எடுத்தோம். செந்தில் ரோஸ்மேரி காலேஜ் பக்கம் ஒரு உலையை எடுத்தாரு. உலை இருக்குற இடத்துல எல்லாம் நிறைய அயர்ன் ஸ்லாக்ஸ் இருக்கும்... இரும்பு கசடு. மண்ணும் இரும்பும் கலந்த கசடு நிறைய கிடக்கும். அதை வைச்சுத்தான் கண்டுபிடிக்கிறது. இவ்வளவு அளவு இருக்குற ஒரு சேம்பர்ல அந்த
டெக்னாலஜி அந்தக் அளவுல இரும்ப உருக்குற அளவுக்கு டெம்பரேச்சர் எப்படிக் கொண்டு வந்தான்? என்ன கேட்டலிஸ்ட்? எதோ ஒரு கேட்டலிஸ்ட் இருந்திருக்கு
நடிகர் கமல்ஹாசனின்
பெருமிதம்:
நடிகர் கமல்ஹாசன்
விஜய்
டிவியில்
காஃபி
வித்
அனுவில்,
அனுஹாசனுக்கு
அளித்தப்
பேட்டியில்
தொ.ப
அவர்களையும்,
'மக்களின்
தெய்வங்கள்'
என்கின்ற
தொ.
ப.
அவர்களுடைய
நூலினைப்
பற்றிக்
குறிப்பிடும்
வீடியோவினை
தொ.
ப.
அவர்களுக்குப்
போட்டுக்
காண்பித்தேன்.
அவர்
மிகவும்
மகிழ்ச்சியடைந்தார்.
அவரு
என்னைப் பத்தி ரெண்டு மூனு பேட்டி கொடுத்திருக்காரு. தசாவாதாரத்துல ஒரு வசனம் சொல்லியிருப்பாரு. கடவுள் இல்லைன்னா சொல்றேன். இருந்தா நல்லா இருக்கும்னுதான் சொல்றேன்.
இந்தப்
பேட்டி எடுக்கிற பொண்ணு, கமல் அண்ணன் பொண்ணு தானே?
ஆமாங்கய்யா,
சாருஹாசனுக்கு?
சுகாசினிக்கு?
தங்கச்சி
சுகாசினி
ஸ்கூல் படிக்கும்போதே எனக்குத் தெரியும். கமல்ஹாசன் அப்பாவும் நானும் பிரெண்டு.
கமல்ஹாசன்
அநியாயத்துக்கு ரீடர்ங்க, நம்மள மாதிரி படிக்கலைன்னாலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் நாலு மொழியும் தெரியும், நாலு அனுபவமும் தெரியும். டென்த் கூட பாஸ் பண்ணலை. டான்ஸ் மாஸ்டர் தங்கப்பனோட போய்ட்டாரு.
சமணமும் தமிழ்
எழுத்துக்களும்:
(தொ.ப. அவர்கள்
சமணமலையில்
அங்குள்ள
வட்டெழுத்துக்களைப்
பற்றி
விளக்கிச்
சொல்லும்
வீடியோவையும்
போட்டுக்
காட்டினேன்.)
அமெரிக்காவில்
இருந்து லோகநாதன் வந்திருந்தாங்க. இது அவங்க டீம்.
இந்த
வட்டெழுத்தைப் பத்தி நீங்க சொன்னது. ஓவ்வொரு எழுத்தையும் பத்தி நீங்க விளக்கிச் சொன்னது.
இந்த வட்டெழுத்து
மாதிரி
வேற
என்ன
இருக்குங்க
ஐயா?
பிராமி,
வட்டெழுத்து, தமிழ் இது மூன்றும் தான்.
பிராமியெல்லாம்
நீங்க ரெண்டே நாள்ல படிச்சிறலாம். ஆர்வமுள்ளவங்க பிராமி எழுத்த இரண்டே நாள்ல கத்துக்கலாம்.
இப்ப
இருக்குற எழுத்துக்களோட புரோட்டா பார்ம்தானே வட்டெழுத்து.. ச்சுக்கு.. சா னாவ இப்படி
சரிச்சி வச்ச மாதரி இருக்கும் ச். அதான் வட்டெழுத்து, வட்ட வட்டமா இருக்கும், கர்வ்ஸ் நிறைய இருக்கும் வட்டெழுத்து. ஆங்கில்ஸ் நிறைய இருக்கும் பிராமில. நம்ம இதுல கர்வ்சும் இருக்கும் ஆங்கில்சும் இருக்கும். அந்த ரெண்டும் படிச்சா நம்ம எழுத்த ஈசியா வாசிச்சிடலாம். 10 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு எதுவும் இல்லைல. வட்டெழுத்துத் தெரிஞ்சவங்க. அதுக்கு பிறகு வர்ற தமிழெழுத்துகளெல்லாம் ஈசியா வாசிச்சிடலாம்.
வட்டெழுத்துக்கள்
எல்லாம் நல்லா அச்சு எழுத்தா இருக்கும். நல்லா டெப்த் இருக்கும். 3 மிமி ஆழம் இருக்கும். நல்லா அழியாம நல்லா இருக்கும். ஐ காபியே எடுக்கலாம்.
எஸ்டாம்பேஜ் எடுக்க வேணாம். பிராமி கல்வெட்டெல்லாம் எஸ்டாம்பேஜி எடுக்கணும். எக்ஸ்டாம்பேஜின்னா பேப்பர்ல மையத் தடவி அதுல ஒட்டி வைச்சிடனும் அப்புறம் மையத் தடவி அப்புறம் படிக்கணும். இதெல்லாம் எக்ஸடாம்பேஜி (Estampage) எடுக்கத் தேவையில்லை. ஐ காபியாவே அப்படியே
எடுத்திடலாம்.
சமணர்கள்
8000 பேரை
மதுரையில்
கொன்றதாகக்
கேள்விப்பட்டோம்.
இது
உண்மையா?
8000 பேரா என்று
எனக்குத்தெரியாது. ஆனால், சமணர்களைக் கழுவேற்றிக் கொன்றது உண்மை.
அப்படியென்றால்
சமணர்கள்
மலைப்பகுதியில்
வாழ்ந்ததற்குக்
காரணம்
உயிர்
பயம்தானா?
இல்லை,
அவர்கள் நிர்வாணத்துறவிகள்.
அப்ப சமணர்கள்
மலையில
இருந்ததுக்கு
ஒரே
காரணம்
அவங்க
நிர்வாணத்
துறவியா
இருந்ததுதானா?
ஆமா,
அவங்க ஊருக்குள்ள இருக்க மாட்டாங்க.
ஏன்னா, நாங்க
கேள்விப்பட்டதெல்லாம்,
அவங்க
பயந்து
வாழ்ந்து
வந்துகிட்டு
இருக்காங்கன்னு
தான்
கேள்விப்
பட்டோம்.
அதற்காக
இல்லை.
சித்தன்னவாசல்
போயிருக்கும்
போது
நீங்க
சொன்னமாதிரி
சொல்லல.
ஒளிஞ்சி
கிடந்தாங்கன்னு
தான்
சொன்னாங்க.
அவன
கொல்றதுக்குக் கூப்பிட்டாக் கூட அவன் வருவான்ங்க. அவன் மரணத்துக்கு அஞ்சாதவன்.
பௌத்த மதம்
எப்படிங்கய்யா?
பௌத்த
மதம் அப்படியில்ல.
சமணத்துக்கும்
பௌத்ததுக்கும் என்ன பெரிய வித்தியாசம்னா... சமணர் நிர்வாணத்துறவி. எட்டு நாளைக்கு ஒரு தடவை சாப்பிடுவாங்க...! 16 நாளைக்கு ஒரு தடவை சாப்பிடுவாங்க...!!!
இன்னும்
இருக்காங்க. இன்னும் வந்தவாசிப் பக்கத்துல பொன்னூர்னு ஒரு ஊர் இருக்கு. காஞ்சிபுரம்
பக்கத்துல வந்தவாசி இருக்குல்ல அங்க பொன்னூர்ல இன்னும் ஒரு நிர்வாணத் துறவி இருக்காரு. அவரைப் பார்க்கப் போனோம். அன்னைக்கு அவரு முடியூர் போயிட்டாரு.
அவரு பேருங்கய்யா?
பொன்னூர்
மலைல இருக்க சாமின்னு கேட்டாத் தெரியும்.
இன்னும்
நிர்வாணமாத்தான் பிச்சைக்கு வாராங்க. அவரு வரும்போது மத்த ஆம்பளைங்க வேட்டிய வைச்சி அவரை மறைச்சிக்கிட்டே வருவாங்க. அவரு வேட்டிக்கு இந்தப் பக்கம் இருந்து வாங்கி (தன் இடக்கையின் மேல் வலக்கையை குவித்து தலையை முன்னே தாழ்த்திக் காட்டுகிறார்.) அப்படியே சாப்பிடுவார். ஒரு சாப்பாடு தான். அப்புறம் அடுத்த எட்டாவது நாள்தான். இன்னும் இருக்காங்க. குளிக்க மாட்டாங்க. ஆனா, அவங்க உடம்பெல்லாம் வீசாது. சாப்பாடே கிடையாதுல்ல. நாம சாப்புடுற சாப்பாடு, எண்ணெய் போக்குவரத்து, வேர்வை இதானே வீசறதுக்குக் காரணம். அவரு உடம்பு வீசாது. வேர்வை வந்தால் பக்தர்கள் துடைப்பாங்க.
பௌத்துத்துல
அப்படி கிடையாது. இந்த மாதிரி உபவாசம் இருக்குறது கிடையாது. 8 நாளைக்கு ஒருமுறை 16 நாளைக்கு ஒருமுறை அப்படியெல்லாம் கிடையாது. சமணன் வந்து கொன்னாலும் தப்பு, தின்னாலும் தப்பு. பௌத்தம் வந்து எவனோ கொன்னா நீ திங்கலாம் அப்படின்னு
இருக்கு. பௌத்த துறவிகள் ஈழத்துல இருக்காங்கல்ல? அவங்க நல்லா மீன் சாப்பிடுவான். வேலைகாரன்கிட்ட சொல்லி அனுப்புவான். உயிரோட இருக்க மீன வாங்கிட்டு வந்திரக் கூடாது. வாங்கிட்டு வந்து நாம அறுத்துக் கொன்னுறக்கூடாது. அவன் கொன்னு வச்சிருந்தான்னா நாம சாப்பிடலாம். பௌத்தத் துறவிகள் புலால் சாப்பிடுவாங்க. சமணத் துறவிகள் புலால் சாப்பிட மாட்டாங்க.
வடஆற்காடு
மாவட்டத்துல இன்னமும் ஒரு இலட்சம் சமணர்கள் இருக்காங்க. மதுரைக்கு வருவாங்க. சங்க காலத்திலேர்ந்து போக்குவரத்து அதிகம். ஒரு முறை ஒரு சமணத் துறவி வந்தாரு. ஒரு நாளு முழுக்கச் சாப்பிடல. ஏன்னு கேட்டா பஸ்ல வர்றப்ப ஒரு கறிக் கடையில ஆட்டை அறுத்து தொங்க விட்டதைப் பார்த்தாராம். பார்த்த பாவத்துக்கு ஒரு நாளு முழுக்க சாப்பிடாம இருந்திருக்கார்.
அது மாதிரி
இருக்கிறதெல்லாம்
பெரிய
விஷயம்..
நாம
தினமும்
எவ்வளவோ
பார்த்துப்
போய்கிட்டு
இருக்கோம்?
உயிர்கொலை
செய்யப்பட்ட ஆட்டப் பார்த்த பாவத்துக்கு ஒருநாள் முழுக்க சாப்பிடாம இருந்திருக்கார். அவரு மத நூல்கள் அப்படிச்சொல்லல.
அவராவே அந்தப் பாவத்தை எப்படிப் போக்குறதுன்னு சாப்பிடாம இருந்திருக்கார்.
உண்ணா
விரதம் இருந்து சாகுறது அங்க அனுமதிக்கப்பட்ட ஒரு விஷயம்.
சமணத்தல?
வினோபாவே இருந்தார்ல?
பூமிதான
இயக்கத்தை தோற்றுவித்தவர்.
96வது
வயசுல நாலு நாள் உண்ணாவிரதம் இருந்து 5வது நாள் செத்துப் போனாரு. இந்திரா காந்தி வந்து சொன்னுச்சு. உண்ணாவிரதம் இருந்து சாக வேணாம்னு.. இல்லை
எனக்கு வயசாயிடுச்சு. நான் செய்ய வேண்டிய கடமைகள் முடிஞ்சிருச்சி அப்படின்னு....அவரு... மிசாவை எதிர்த்தவரு. ஏன் வேலையெல்லாம் முடிஞ்சிபோச்சி இனிமே வாழ்றதில அர்த்தமில்லைன்னு சொல்லிட்டு கடைசியா எலுமிச்சம்பழமும் தேனும் கலந்து தண்ணிய சாப்பிடறாரு. அத மட்டும் சாப்பிட்டுட்டு
நாலு நாள் விரதம் இருந்து 5வது நாள் செத்துப் போறாரு.
வடக்கிருந்து
இறத்தல்
மாதிரில்ல
சொல்றீங்க?
வடக்கிருந்து
இறத்தலே அவங்களோடதுதான்.
சமணர்களோடதுதானா
அதுவும்?
சமணர்களோடதுதான்.
நிறைய ஹிஸ்டரி
படிச்சோம்னா
அங்கேர்ந்து
தொடங்கிதான்
வருது.
ஆனா
வெளியில
சும்ம
பேசணும்னா
கூட
உதாரணத்துக்கு
சமண
மலைக்குப்
போகணும்னு
சொன்னா
கூட..
அங்க
போனா
நெகடிவ்
எனர்ஜி
கிடைக்கும்னுதான்
சொல்றாங்க?
பக்தி
இயக்கம் வந்தபின்னாடி, சமணர்கள கண்டமேனிக்கு கேலி பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. ஆண்டிங்கறது ஒரு கேவலமான வார்;த்தை. மொட்டை ஒரு சிரிப்புக்கு இடமான வார்த்தை. மொட்டையப் பார்த்து ஏன் சிரிக்கிறோம். சைவன் சொல்லிக்கொடுத்தான். சமணர்களைப் பார்த்து சிரிக்கனும்னு. மொட்டையாண்டின்னா சிரிக்கணும்னு.
கெட்ட
வார்த்தை முழுக்க சமணர்களைப் பத்தியதுதான். மொட்டையே ஒரு கெட்ட வார்த்தை மாதிரிதானே பார்க்கறோம். மொட்டை, மொட்டாண்டி எல்லாம் அவங்களப் பத்தின கேலி வார்த்தைதான்.
மதுரைச்
சுத்தி எட்டு மலைல இருந்தாங்க. அதுல ஒண்ணு இந்த சமண மலை. இங்க ஒரு சமதளம் இருக்கும். இதுல ஒரு அஸ்திவாரத்தைக் கண்டுபிடிச்சேன். அஸ்திவாரத்து ஓரமா ஒரு எழுத்து ஒண்ணு தெரியிறதக் கண்டுபிடிச்சிட்டாரு வேதாச்சலம். அப்ப நான் நாகமலைப் புதுக்கோட்டைல இருந்தேன். அப்புறம் என் வீட்டுலேர்ந்து வாளியும் தண்ணியும் எடுத்துட்டுப் போயி கரண்டி வைச்சு சுத்தம் பண்ணி அந்தக் கல்வெட்ட வாசிச்சோம். வாசிச்சப்பத்தான் அந்த மலைக்குப் பேரு தெரிஞ்சது உருவகப் பெரும்பள்ளின்னு இருந்தது. பள்ளியினோட குணசேகர தேவர் சட்டம்னு இருந்துச்சு. நாங்க பார்த்த அஸ்திவாரக் கல்லுவந்து ஒரு பள்ளியோடது. 9 ஆம் நூற்றாண்டுல கீழ குயில் குடின்னு இருந்த ஊர். அது பேரு உயிர்குடின்னு கம்பர் சொல்றார். படிக்கப்படிக்க ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்.
கொடும்பாளுர்:
நிறைய
இடங்கள்ல இதோட அருமை நிறைய பேருக்குத் தெரியறதில்லை. இந்தக் கல்வெட்டுகள், வரைஞ்சிருக்கிறது பின்னாடி என்னாதுன்னு. உதாரணத்துக்கு நான் புதுக்கோட்டை மாவட்டத்துல வொர்க் பண்ணேன். அங்கே கொடும்பாளுர்னு ஒரு ஊர் இருக்கு. விராலிமலைக்குப் பக்கத்துல இருக்கு.
அது
கொடும்பாளுர்... மூவர் கோயிலு
பொன்னியின்
செல்வன்ல அந்த ஊரப்பத்தி எழுதுவாரு கல்கி.
பொன்னியின்
செல்வன் பெரிய வேளாளர் பத்தி ரொம்ப எழுதுவாரு
ஈழத்துப்
புட்ட பெரிய வேளாளர் ..ஈழத்துக்குப் போயி இராஜராஜனோட சேர்ந்து போயி போர்ல செத்தவரு.
வானதி
ஊராக காம்பிப்பாங்க.
அது
ஒரு சின்ன 10 குடிசை உள்ள ஊரா இருந்துச்சு. மூவர் கோயில தரை மட்டம் ஆக்கிட்டாங்க.
மூவர் கோயிலு
ஐவர்
கோயிலு
சுத்தமாக
தரை
மட்டமா
இருக்கு.
மூவர்
கோயிலுல
இரண்டு
கோயிலு
மட்டும்
நிக்குது.
போட்டோ
காமிக்கிறேன்
ஐயா.
உறைகிணறு ஒன்னு
இருக்கு.
உறைகிணறு
இல்லை தோண்டு கிணறுதான். வாட்ச் மேன் சொன்னாரு.
சைடுல படிக்கட்டெல்லாம்
இருக்கும்
ஐயா.
அதப்
பார்க்கிறதுக்கு
பாரின்லேர்ந்து
வந்து
போறாங்க.
ராஜராஜனோட
அப்பா கட்டியிருக்காருங்க அந்த கோயில.
ராஜராஜனுக்கு
முந்துன பிரியடு. தஞ்சாவூர் கோயில் கட்டுறதுக்கு முன்னாடி அதை செஞ்சுப் பார்த்தாங்களாம்.
உள்ள பிரமிடு
மாதிரி
இருக்குங்கய்யா.
ம்..
உள்ள கேவிட் பிரமிடு மாதிரி இருக்கும். இத செஞ்சிபார்த்திட்டு தஞ்சாவூர் கோயில
கட்டுறான். தஞ்சாவூர்ல கட்டுனது 1012 இது 907 லோ என்னவோ.
அந்த
நாட்டுக்குப் பேரு கோநாடு.
கோநாட்டு
கொடிநகரம் கொடும்பாளுர்னு வரும்.
அந்த கோயில்
மண்மூடிதான்
இருந்திருக்கு.
அதோட
கலசம்
தட்டுப்பட்டுத்தான்
அப்புறம்
தோண்டி
எடுத்தாங்க.
அதுமாதிரி
புதுக்கோட்டைல
அங்கங்க
சமணர்
சிலைகள்
இருக்கு.
அந்தக்
கோபுரம் அப்படியே மண்ணுக்குள்ள போயிடுச்சி. அப்புறம் தோண்டி எடுத்துட்டாங்க. ஆர்க்கியாலஜிகாரங்க நல்லா செய்வாங்க. மூவர் கோயில தோண்டி எடுத்திட்டாங்க.
இன்னொரு கோயில்
அந்த
இடத்துல
இல்லீங்களே.
ரெண்டு
கோயில்
நல்லா
நிக்குது.
போட்டோ
கூட
வைச்சிருக்கேன்.
நான்
இப்பக்கூட போயிட்டு வந்தேன். கல்லு அங்கங்க சிதறி சிதறிக் கடக்கும். எடுத்துரலாம். பாரின்லாம் ரிகன்ஸ்ட்ரக்ஷன் பண்ணிருவாங்க. Historical Reconstruction ன்னு பேரு. ரெண்டு கோயில் எடுத்தாச்சில்லஅந்த மாடல வைச்சு 3 வது கோயில கட்டிரலாம். ஐவர் கோயில் அஸ்திவாரம் மட்டும் இருக்கும்.
கொடும்பாளுர்
கோயில்ல வாட்ச்மேன் தான் சொன்னான்.. இதுக்குத் தண்ணி எங்கேருந்து வந்திச்சின்னு கேட்டேன். ஊர் பெரிய குளம் இருக்கு. அது ஹிஸ்டாரிக்கல உள்ளது. ஏன்னா,
கொடும்பை
நெடுங்குளம் னு இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில
அத ரெஃபர் பண்றார். கண்ணகி வந்த வழிங்க அது. கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால் (மதுரைக்காண்டம், 70)னு இளங்கோவடிகள் சொல்றாரு.
நடுவுல பிரமிடு கணக்கா இருக்கும் அங்க மல்லிகைப்பூ போட்டா கிணத்துக்கு வந்துடும்னு சொல்றாரு.
பாளையங்கோட்டை:
பாளையங்காய்வால்ல
இருந்து ராமர் கோயில் தெப்பத்துக்கு ஒரு பாதை இருக்கு. நிறைய தண்ணி இருக்கும் போது டென்னிஸ் பால் போடுவோம். அது அப்படியே வந்து ராமர் கோயில் தெப்பத்தில விழும்.
நேஷனல்
ஹைவேசுக்குக் கீழ வருது. வஉசி மைதானத்துக் கீழ வந்து நேஷனல் ஹைவேசுக்குக் கீழ வந்து. பேங்கு இருக்கு, அதுக்கும் கீழ வந்து ஒரு ஓடை போகுல்ல அதுக்கும் கீழ வந்து தெப்பக்குளத்துல தண்ணி விழும். நிறைய ஊர்கள்ல அதுமாதிரி சுருங்கைகள் இருக்கு. சோழாஸ் பீரியட்ல, பல்லவாஸ் பீரியட்ல இருந்தே இருக்கு. மட் பைப்புகளை வைச்சி.!
நிறைய சுரங்கப்
பாதைகள்லாம்
இருந்ததுன்னு
சொல்றாங்க.
பெரிய
அளவில இல்ல சின்ன அளவில. சுரங்கப்பாதைன்னா சுவற்றுக்கும் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் அவ்வளவுதான் நம்மாட்கள் இங்கேருந்து மதுரை வரைக்கும் இருக்குன்னு சொல்வாங்க அப்படியெல்லாம் இல்லை.
அன்னை
வேளாங்கண்ணி ஆஸ்பத்திரி பக்கத்துல போற வாய்க்கால் 10 ஆம் நூற்றாண்டு வாய்க்கால். ராஜராஜசோழன் கேரளாக்குப் போனப்ப அவன் யானை குதிரையெல்லாம் இந்த வாய்க்கால்ல இறங்கிதான் தண்ணி குடிச்சிட்டுப் போனது.
பாளையங்கோட்டைக்
கல்வெட்டுல ஸ்ரீநாரத வாய்க்கால்னு பேரு. தன்பொருந்தத்துத் தென்கரை அப்படின்னு பேரும் சொல்றான்.
தன்பொருந்தம்
னா தாமிரபரணி. அதுக்கு அப்படித்தான் பேரு. தன்பொருந்தப் பேராறு.
பேராறு
மட்டும் அப்படியே இருந்து பேராற்றங்கரைச் செல்வி பேராற்றுச் செல்வி. அதான் பேராச்சியம்மன்னு ஆயிடுச்சி.
பாளையங்கோட்டை
பத்தி மோனோ கிராஃபி எழுதியிருக்கேன். இன்னும் அச்சிக்கு வரலை.
963 ல ஆட்சிக்கு
வந்த ஸ்ரீ வில்லப ஸ்ரீ அவரோட மகன் பராந்தக வீர நாராயணன் கட்டின கோயில். அதனால பாளையங்கோட்டைக்குப் பேரே கீழ்வள்ள கோட்டத்து ஸ்ரீ வில்லப மங்களம் தான் பேரு. பாளையங்கோட்டையோட பேரே ஸ்ரீ வில்லப மங்களம்தான். அப்பாவோட பேர வைச்சு ஸ்ரீவில்லபஸ்ரீயோட மகன் அப்பா பேர வைச்சு ஸ்ரீ வில்லப மங்களம்னு பேர வைச்சிட்டான்.
அப்ப பாளையங்கோட்டை
என்று
எப்போது
பெயர்
வந்தது?
வெள்ளைக்காரர்கள்
கைப்பற்றிய பிறகு சர்க்கார் பாளையமா இல்ல ஜமீன் பாளையமானு கேட்கிறாங்க. இதுவந்து சர்க்கார் பாளையம். சிவகிரி, பாஞ்சாலங்குறிச்சி இதெல்லாம் ஜமீன் பாளையம். அதாவது ஜமீன் ஆளும் பகுதி. சர்க்கார் பாளையம்னா ஜமீன்கள் கையில் இல்லாத ஊர்கள் என்று அர்த்தம்.
FOI
COTA னு பர்ஸ்ட் எழுதுறான். வெள்ளைக்காரன் வரும்போதே கோட்டை சிதிலமாத்தான் இருந்தது. கான்சாயிப் வந்து ரினெவேட் பண்றான்.
மேட போலிஸ்
ஸ்டேஷ்னு
சொல்வாங்கள்ல
இப்பக்கூட
லூர்துநாதன்
சிலைகிட்ட
இருக்கே.
கோட்ட
மாதிரி
அது
என்ன?
அது
மேல கோட்டை வாசல். கோட்டையோட சென்டர் பாயிண்ட் எதுன்னா ஆயிரத்தம்மன் கோயிலு. தெற்கே லைப்ரரியில் இருந்து ஒரு ரோடு வருது. மேற்கே ஜான்ஸ் காலேஜியிலிருந்து ஒரு ரோடு வருது. இரண்டும் கிராஸ்கட் பண்ற இடத்துல சென்டரா போட்டு ஆயிரத்தம்மன் கோயிலு வரும். படை வீரர்கள் கும்பிடுகிற சாமி. உக்கிரமமான சாமி. ஆயிரம் படை வீரர்கள் இருந்தாங்கன்னு வச்சு ஆயிரத்தம்மன்னு பேரு வைச்சிட்டாங்க. மன்னார் கோயி;ல் பகுதியில நாலாயிரத்தம்மன்னு
ஒரு சாமி இருக்குல்ல? அங்க ஒரு படை வீடு இருந்துச்சி. நாலாயிரத்தம் கோயில் பக்கத்துல ஒரு மேடு இருக்குல்ல? அங்க தோண்டுனா நிறைய கிடைக்கும். அந்த சாமியும் இந்த சிலையும் ஒண்ணுபோல இருக்கும். உக்கிர சாமி. படைவீரர்கள் கும்பிடறத்துக்குன்னே கோயில் வைச்சிருந்தாங்க. இந்தக் கோயிலும் நரபலி வாங்கிற கோயில் தான். தன் தலையை அறுக்கிறமாதிரி ஒரு சிற்பம் இங்கேயே இருக்கு.
ராஜபாளையம்
பக்கத்துல தன்தலைவெட்டின்னு ஒரு சாமி இருக்கு.
பல்லாங்குழி ஆட்டம்:
நான்
பல்லாங்குழி பத்தி எழுதியிருக்கேன். ஸ்டேட் எவால்வ் ஆகும் போது கண்டுபிடிக்கப்பட்ட விளையாட்டு. அறியப்படாத தமிழக்த்துல (அறியப்படாத தமிழகம், பக்கம் 90, காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், பத்தாம் பதிப்பு 2016) கடைசில இருக்கும்.
பல்லாங்குழி
ஆட்டத்தைப் பார்த்திங்கன்னா. உனக்கு 7 குழி எனக்கு 7 குழி. ஓவ்வொரு குழியிலயும் சமமா 5 காய் இருக்கும். ஒரு ஆளுக்கு 35 காய். சமமான எண்ணிக்கையில தான் விளையாட்டுத் தொடங்கும். விளையாட்டு முடியும் போது கொஞ்சம் கொஞ்சமா ஒருத்தர் தன்னுடைய காயெல்லாம் இழந்துடுவாரு. ஆனால், உங்கக் காயை நான் பிடுங்கிக்கிட்டேன்னு உங்களுக்கு என் மேல கோபம் வராது. ஏன்னா, தெய்வம் குடுக்குது. உங்க தோல்வியை நீங்க மனப்பூர்வமா ஒத்துக்கிறீங்க. உங்க வறுமையை நீங்க மனப்பூர்வமா ஒத்துக்கிட்டீங்க. அந்த ஆட்டத்துல முக்கியமான விஷயம் என்னன்னா. 5 எண்ணிக்கையில தான் ஆட்டம் தொடங்குறோம். திரும்பி குழியில 5 எண்ணிக்கை சேரக் கூடாது. 4 சேர்ந்தவுடனே அது பசுன்னு சொல்லி எடுத்துக்கலாம். பசு மீன்ஸ் சிம்பல் ஆஃப் வெல்த். நீங்க விளையாடமலே கிடைக்கிற காய். திரும்ப 5 வரக்கூடாது. திட்டமிட்டு 5 வரக்கூடாதுன்னே விளையாட்டு. லக் பொருத்த விஷயம். லக்குங்கிறதுன்னு சொல்லாமலேயே நமக்குக் கிடைச்சது இவ்வளவுதான்னு ஒத்து;குவீங்க உங்க வறுமையை அதான் பல்லாங்குழி. கடைசில விளையாட்டு முடிஞ்சபிறகு 'கஞ்சிக்குடி, கஞ்சிக்குடி, கஞ்சிக்குடிம்பாங்க'. அதாவது உங்களை நான் கஞ்சி குடிக்க வைச்சிட்டேன்னு அர்த்தம்.
கருப்பு:
இன்னொன்னு
கருப்புனு (அறியப்படாத தமிழகம், பக்கம் 131, காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், பத்தாம் பதிப்பு 2016) ஒரு கட்டுரை. கருப்பு எப்படி பவர் சார்ந்து வைச்சிருந்தாங்கன்னு ஒரு விஷயம். அதாவது சிவப்புன்னா பவரோட சேர்ந்த நிறம், கருப்புன்னா ரூல்டோட நிறம்;. டீரெடிஷன்ல கருப்புத்தான் அழகான கலரு. ரேமண்ட்ஸ் கம்பெனியோட உடை பார்த்தீங்கன்னா கருப்புலதான் உடையணிவிச்சு ஷோ ரூம் வெளியில
தெரியிற மாதிரி வைச்சிருப்பான். கருப்புத்தான் தீர்க்கமான கலரு. கருப்புத்தான் அழகுங்கறது. நம்முடைய கடவுள் எல்லாம் கருப்புத்தான். அப்புறம் எப்படி கருப்பு அழகு இல்லாத கலராப் போச்சு அப்படின்னு எழுதியிருப்பேன். அந்தக் கட்டுரை பேரே கருப்பு. கருத்த புள்ளைக்கு நகைய போட்டு கண்ணுல ஒத்திக்கிலாம். சிவத்தப் புள்ளைக்கு நகையை போட்டு செருப்பால அடிக்கலாம்ங்கறது பழமொழி. நெருப்புல சூடு மிஞ்சியிருக்கிறமாதிரி கருப்பு அழகு மிஞ்சியிருக்கும்னு சொல்வாங்க. நான் எழுதினதுல எனக்குப் பிடிச்சக் கட்டுரை பல்லாங்குழியும் கருப்புங்கற இரண்டு கட்டுரையும். என்னைக் கேட்காமலேயே கருப்புங்கற கட்டுரையை பாடமா வைச்சிட்டாரு அறவாணன். இதை வைக்காதீங்கன்னு சொன்னேன். இதை வைச்சு கோட்டையாக் கட்டப் போறீங்கன்னு வைச்சிட்டாரு. 300 புள்ளைங்க B.A.. தமிழ் இலக்கியம் படிக்கிற புள்ளைங்க வாசிச்சிருக்காங்க. நடத்துற ஆசிரியர் எல்லாம் அருமையான நல்ல கட்டுரைசார்னு. கருப்பு நிறமுடைய புள்ளைங்களோட இன்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் போற மாதிரியான கட்டுரையா இருந்துச்சு. தாழ்வு மனப்பான்மை போறதுக்கு நல்ல மருந்தா இருந்துச்சு. நேத்து ஒரு ஸ்டுடன்ட் வந்தாரு கருப்பையான்னு பேரு. இந்துக் காலேஜில இப்ப பேராசிரியரா இருக்காரு. அவரு மனைவி புள்ளை கருப்பா இருக்குன்னு சொன்னாங்களாம். இந்தக் கருப்புக் கட்டுரை படிச்ச பிறகுதான் அவங்களுக்கு திருப்தியா இருந்துச்சாம். கருப்புக் கட்டுரைக்கு அவ்வளவு மவுசு.
நாகர்கோயில்ல எஸ்டி
வித்யாலயா போயிருந்தேன். நான் வராண்டாவுல போறப்பவே காமிச்சிட்டாங்க. இவர்தான் கருப்புக் கட்டுரை எழுதினவருன்னு. நான் வேற விஷயமா யுனிவர்சிட்டி சிண்டிகேட் மெம்பரா இருந்ததால கமிஷனரா போயிருந்தேன். இவர்தான் கருப்புக்கட்டுரை எழுதுனவங்கன்னு சொன்னதினால எல்லோரும் காத்துக்கிட்டு இருந்தாங்க. ....எனக்கு கொஞ்சம் நேரமாச்சு. பிள்ளைகள் காத்திருப்பாங்களான்னு கேட்டேன். பெல் அடிச்சபிறகு காலேஜ் முடிஞ்சபிறகு. இன்னும் அரைமணி நேரம் காத்திருந்தாங்க. அதற்கு அப்புறம்தான் பேசினேன் எல்லாம் அமைதியாக் கேட்டாங்க. கருப்புக் கட்டுரைக்கு நல்ல அங்கீகாரம் கிடைச்சது.
கிருஷ்ணன்
கருப்புத்தான். சாமி எல்லாம் கருப்புத்தான் அப்புறம் எப்படி சிவப்பு அழகான கலரா மாறினது? சோழாஸ்கு அப்புறம் வந்த இஸ்லாமியர்கள், விஜயநகர பேரரசுன்னு எல்லாமே சிகப்பு நிறம். ரூலர்ஸ் எல்லாம் சிகப்பு நிறம். பவரோட சேர்ந்ததாப் போச்சு. அதனால தான் சிகப்பு நிற தாசில் தாரு கேன் ஈசிலி கண்டம்ட் அதர்ஸ் னு ஆயிடுச்சி.
கருப்பு
நிற பெண்களுக்கு இன்பிரியாரிட்டி காம்பளக்ஸோட இருப்பவங்களுக்கு இது மாரல் பூஸ்ட்டா இருக்கும்னு நான் நினைக்கில. எனக்கு பெண்கள் சைக்காலஜி தெரியாது. டிகிரி பெண்களுக்கு நான் பாடம் எடுத்ததில்லை. ராணி அன்னா கல்லூhயில பாடம் எடுத்த பேராசிரியை சொன்னாங்க. கருப்புக் கட்டுரை ,பெண் பிள்ளைகளுக்கு பெரிய மாரல் பூஸ்ட்டு சார் கருத்த பிள்ளைகளுக்குன்னு சொன்னாங்க. அதான் எழுதினதோட பலன்.
We
are undergoing a period of cultural decay.. கலாச்சார சீரழிவு
நடக்கிற ஒரு காலத்தில நாம வாழ்கிறோம். ஒரு வித மயக்கத்துல இருக்காங்க. அதை மீட்டெடுக்க வேண்டியது தான் நம்ம பணி.
மீட்டுக்
கொண்டு வரதுக்கு என்ன பண்ணனும்?
பேசணும்,
தொடர்ந்து பேசணும். அப்படி பேசுதனால இப்பக் கமல்ஹாசன் வந்தார்ல.
உப்பு:
சங்க
காலத்துல உப்புதான் பெரிய marketable commodity யா இருந்தது. வியாபாரத்தோட
துவக்கம் உப்புதான். ஆதிச்சநல்லூர் மக்களும் உப்பு போட்டு தான் சாப்பிட்டிருக்காங்க. உப்பு கொண்டாந்து விக்கிறவனுக்கு காசு கொடுத்திருப்பான்ல. உப்பு தான் வணிகத்தின்தொடக்கம். உப்பு வாணிக முத்தூர்னு ஒரு ஊரே இருக்கு. உப்பு வாணிகம் அப்ப அந்த ஊர்ல இருந்திருக்கு. உப்பு வணிகம் பண்றதுக்குன்னு அப்பத் தனியா இருந்தான். உமணன்னு பேரு. அப்புறம் பிற்காலத்துல என்ன பேருன்னு தெரியலை. நாங்க சின்ன பிள்ளையா இருந்தபோது புளியங்கொட்டையை வாங்கிட்டு உப்பு விப்பாங்க. வண்டி கட்டிட்டு வருவாங்க.
மார்கழி
மாதச்சுல காலைல 5 மணிக்கெல்லாம் உப்பு விப்பாங்க பார்த்திருக்கீங்களா?
வெள்ளாளர்கள்
நிறைய இருக்கப்பகுதியில நிறைய விப்பாங்க. பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், வி.கே. புரம்
ஏன்னா உப்பில்லாம யாரும்'மாசப்புறப்பு உப்பு வாங்கலையா உப்பு, உப்பு'ன்னு விப்பாங்க.
ஏன் அப்படி
விக்கிறாங்க?
அப்படி
வாங்கினா செல்வம் பெருகும்னு ஒரு நம்பிக்கை. உப்புங்கறது உறவின் தொடர்ச்சி. புதுசா கல்யாணம் ஆன பெண்ணை வீட்டுக்குப்
போறப்ப ஒரு பாத்திரத்தில உப்பை வைச்சிக் கொண்டு போவாள். புது உறவு நான் வந்திருக்கேன்னு அர்த்தப்படுத்திறத்துக்காக.
காரணப்பெயர்கள்:
தெய்வங்களும்
சமூக மரபுகளும், என்ற புத்தகத்தில் deities பத்தி எழுதியிருப்பேன். தெய்வம்
என்பதோர் சித்தம் உண்டாகின்னு என்று திருவாசகத்தில எழுதியிருப்பார். அதை வெச்சி தான் தெய்வம் என்பதோர்னு ஓரு புத்தகம் எழுதினேன். தெய்வம்ங்கறது எப்படி வந்தது. அது எப்படி நம்ம மூளைல உட்கார்ந்து ஆட்சி செய்து என்பதெல்லாம விளக்கி எழுதியிருப்பேன்.
லோகாம்பாள்ம்பாங்க,
உலகம்மன்னு சொல்லுவாங்க. பாபநாசம் கோயில்ல இருக்கறதுகூட உலகம்மன் தானே. அரசகுடும்பத்துப் பெண்கள் இறந்து போனா உலகம்மன்னு வைப்பாங்க. மூனாங் கொண்ட அம்மன்னு சொல்வாங்க. வள்ளியூர்ல இருக்கு. மூன்று யுகங்கொண்ட அம்மன். மூன்று யுகம் கொண்டாள்ங்கறது ராணிம்மாக்குப் பேரு. ராணி செத்துப் புதைச்சா. எல்லாத்துக்கும் பின்னாடி ஒரு historical anecdote ஒன்னு இருக்கும் அந்த இலைய உறுவிட்லாம். மரக்காணம் பகுதி போயிருக்கீங்களா? அங்க இருக்க ஏரியாக்கு இடைக்கநாடுன்னு பேரு. சங்க இலக்கியத்தில வரும் இடைகளின்நாட்டு நல்லோர் மட்டத்தனார்னு. இடைகளின் நாடு. இரண்டு பெரிய நாடுகளுக்கு இடையில் உள்ளது என்று பொருள். இடைகளின் நாடு. இன்னமும் இடைக்க நாடுன்னு இருக்கும். இது மாதரி நிறைய இருக்கு.
நானும் அது
மாதிரி
கேள்விப்
பட்டிருக்கேன்
பெரம்பலூர்
மாவட்டத்துல
வாலிகண்ட
புரம்னு
இருக்கு.
அங்க
வாலி
ராமரைப்பார்த்ததால
அந்தப்
பெயர்வந்ததாக்
கேள்விப்பட்டேன்.
மேலும்,
அங்கேயே
பக்கத்துல
சிறுகுடல்னு
ஒரு
ஊரு
பேரு
இருக்கு.
அங்க
அந்தப்
பேரு
சம்மந்தமா
விசாரிக்கும்
போது.
வாலிக்கும்
சுக்ரீவனுக்கும்
சண்டை
நடந்த
போது,
ராமர்
வில்லால்
அடிச்சப்ப
வாலியோட
ஒரு
சிறுகுடல்
பிச்சிக்கிட்டு
வந்து
விழுந்த
இடம்
இந்த
ஊர்
அதனால
இந்தப்
பேருன்னு
சொன்னாங்க.
இது
இரண்டையும்
ஒப்பிட்டுப்
பார்க்கும்
போது
இராமாயண
கதை
அந்த
இடத்தில்
நடந்திருக்கும்னு
தான்
நினைக்கத்
தோணுது?
புராண
மரபுகள் உண்மையாக எடுத்துக்கொள்ள முடியாது. இராவணன் சடாயுவை வெட்டிட்டான். இந்த இடத்திலதான் கீழ விழுந்தான்னு ஒரு 100 ஊர் சடாயுத்துறைன்னே இருக்கும்.
ஊர் பேரு
அது
பொருந்தும்படியாகத்தானே
வருது?
ஊர்
பேரு மாறி மாறி வரும், ஒரு உதாரணம் சொல்றேன், திருச்சிலேர்ந்து கரூர் போற வழியில பழங்சங்கடம்னு ஒரு ஊரு. கண்டக்டர் பழஞ்சங்கடம், பழஞ்சங்கடம் இறங்குன்னான்.
இது என்னடா புது சங்கடமா இருக்குன்னு. அந்த ஊர்ல ஏதாவது பழைய கோயில் இருக்கான்னு பார்த்துக் கல்வெட்டைப் பார்த்தா. அது பழைய ஜெயங்கொண்ட சோழபுரம். பழைய ஜெயங்கொண்டம் இப்ப பழஞ்சங்கடமாயிடுச்சி.
அடுத்த
முறை நான் உங்களைப் பார்க்க வரும் போது உங்களுடைய புத்தகம் குறைந்தது இரண்டையாவது முடித்து வந்தபிறகு உங்களைப் பார்க்கிறேன் என்ற உறுதிமொழியோடு அங்கிருந்து நானும் எனது நண்பரும் கிளம்பினோம்.
No comments:
Post a Comment