திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-84:
ஒழுக்கமுடைமை:
கடந்த வாரம் ஒழுக்கமுடைமை அதிகாரத்தின் முதற் பகுதியை பார்த்தோம் இந்த வாரம் இரண்டு பகுதியைப் பார்ப்போம்.
எவருமே தமக்கு இழிவு ஏற்படுவதை விரும்புவதில்லை. இருந்தாலும் சிறு சலனத்திற்கும் மதிப்பளிப்பவர்கள் அதனை முறையாக கடைப்பிடிப்பதும் இல்லை. ஆகவே, மன வலிமை அதிகமாக இருப்பவர்கள் ஒழுக்கத்தை தீர்க்கமாக கடைபிடிப்பர் என்பதனை பின்வரும் குறளில் தெளிவுபடுத்துகிறார்.
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து -136 என்கிறார். அதாவது, மனவலிமை உடையவர், ஒழுக்கம் தவறுவதால் தனக்கு இழிவு ஏற்படும் என்பதனை அறிந்து கொண்டு, சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் தன்னைக் காத்துக் கொள்வர்.
சராசரி மனிதர்களே பெரும்பாலும் வாழும் இவ்வுலகில் ஒருவரைப் பற்றிய அவதூறுகள் வெகு எளிதாக வீசப்படுகிறது. அவ்வாறு வீசப்படும் அவதூறுகளைத் தடுப்பதும் ஒருவர் தான் கைக்கொள்ளக் கூடியது ஒழுக்கமே ஆகும். ஆகவே, திருவள்ளுவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி -137
ஒழுக்கத்தால் எல்லோருமே மேன்மை அடைவார்கள், ஒழுக்கத்திலிருந்து தவறுவதால் அடையத் தகாத பெரும் பழியையும் அடைவார்கள் என்கிறார்.
நமக்கும் நம்மைச் சுற்றி இருப்பவர்களும் ஒருவர் ஒழுக்கமாக இருக்கிறார் என்பது மகிழ்ச்சியையே கொடுக்கிறது. ஏனெனில், ஒழுக்கமாக இருக்கையில் அதற்கான செலவு குறைகிறது, ஆதலால் சேமிக்க முடிகிறது. ஒழுக்கமின்மையால் ஏற்படும் உடல் உபாதைகளும் தடுக்கப்படுகிறது. உதாரணமாக குடிப்பழக்கம் உடையவரை கற்பனை செய்து பாருங்கள், அவருடைய உடல் நிலையையும் குடிப்பழக்கத்தால் அவருடைய குடும்பம் அடையும் இன்னலையும் கவனித்தால் அது எவ்வளவு கொடியது என்று உணரப்படும். ஆகவே ஒழுக்கம் பேணுவதே சிறந்தது என்பதனை
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பைத் தரும் -138 என்கிறார் திருவள்ளுவர். அதாவது,
நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும், தீய ஒழுக்கமோ எக்காலத்திலும் துன்பத்தையே தரும் என்கிறார்.
அடுத்தக் குறளில், தீவிரமாக ஒழுக்கத்தினைக் கடைப்பிடிப்பதனைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல் -139
மறந்தும் தீயச் சொற்ளைத் தம்முடைய வாயினால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்களுக்கு ஒரு போதும் பொருந்தாத ஒரு பண்பாகும். ஆகவே, கோபமே வந்தாலும் பாவம் செய்யாமல் இருப்பது நலம்.
அடுத்தக் குறளில்
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார் -140 என்கிறார்.
உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் என்னும் பண்போடு வாழக் கற்காதவர்கள், பல நூல்களைக் கற்றிருந்தாலும் அறிவில்லாதவரே ஆவர் என்கிறார். ஆகவே ஒழுக்கத்துடன் வாழ்வதே சிறந்த வாழ்வு என்பதனை வள்ளுவர் அவர்கள் உணர்த்துகிறார்.