Wednesday, 31 December 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-102: திருக்குறளில் அரசியல்:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-102:
திருக்குறளில் அரசியல்: 
அரசியலில் ஒரு தலைவரின் சொல்வன்மை என்பது அவரது ஆளுமையை பிரதிபலிக்கிறது. திருவள்ளுவர் ‘அறம்” என்பதனை ஒரு தத்துவமாக மட்டும் கூறாமல், அதனைச் செயல்முறை அரசியலில் எவ்வாறு  பொருத்துவது என்பதையும் விளக்குகிறார்.  அரசியல் சூழலில் ‘புறங்கூறாமை’ என்பது மற்றவர்களின் நற்பெயருக்குப் பின்னால் களங்கம் விளைவிப்பதைக் குறிக்கிறது. இது இன்றைய காலத்து ‘Character Assassination’’ எனப்படும் ஆளுமைச் சிதைவிற்கு ஒப்பானது. ஒரு நாட்டின் அமைச்சரவையில் இருக்கும் உறுப்பினர்களுக்கு இடையே பரஸ்பர நம்பிக்கையும் மரியாதையும் இருக்க வேண்டும். ஆந்த நம்பிக்கை சிதையும்போது, நிர்வாகம் நிலைகுலையும் என்று திருவள்ளுவர் எச்சரிக்கிறார். 
இனி குறள்களுக்குச் செல்வோம். பின்வரும் குறளில்,
செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து -431 என்கிறார். அதாவது, தான் என்னும் அகங்காரம், கோபம் மற்றும் இழிவான நடத்தைகள் இல்லாத ஆட்சியாளர்களின் செல்வம்தான் மேன்மையானது என்கிறார். 
ஆட்சியாளருக்கு எவையெல்லாம் கேடானவைகள், எந்த சிந்தனைகள் அவர்களிடத்தில் இருக்கக்கூடாது என்பதனை திருவள்ளுவர் கூறுகிறார் பின்வரும் குறளில்
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு -432
அதாவது, நியாயமாக ஒருவருக்கு தேவைப்படுவதை கொடுக்காமல் இருப்பது, பெரியோர் என்று தெரிந்திருந்தும் தம்முடைய பதவிப் பெருமைக்காக வணங்காமல் இருப்பது மற்றும் இழிவான நடத்தைகள் ஆகியவற்;றில் மகிழ்ந்திருப்பது போன்றவை ஆட்சியாளருக்கு உரிய குற்றங்களாகும். 
அடுத்தக் குறளில், தலைவனானவன் எந்தளவிற்கு உண்மைத் தன்மையானவராக இருக்க வேண்டும், நீதியானவராக இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். அதாவது பழிபாவங்களுக்கு அஞ்சி நடப்பவர் சிறுதானிய வகைகளில் ஒன்றான தினையளவு குற்றம் வரும் என்றால் அதனை பனை அளவு பெரியது என்று கருதி வருந்துவார். 
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார் -433
அப்படி என்றால் பழிச் சொல் வரும் செயலை தவிர்த்து விடுவர் என்று புரிந்து கொள்ளலாம். உதாரணமாக இலஞ்சம் வாங்குதல், போதைப் பழக்கத்திற்கு ஆளாதல் போன்ற செயல்களில் இருந்து விலகிச் செல்வர் எனலாம். 

ஒருவர் எத்தகைய நல்ல செயல்களில் ஈடுபட்டவராக இருந்தாலும் பல தான தர்மங்கள் செய்திருந்தாலும் அவர் செய்யும் ஒரு குற்றம் அவருடைய வாழ்வையே மாற்றிவிடும் நிலைக்குக் கொண்டு வந்துவிடும். ஆகவே, குற்றச் செயல்களைத் தவிர்ப்பது சாலச் சிறந்தது என்று குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். 
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை -434
குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதையே நோக்கமாகக் கொண்டு தன்னை எப்போதும் காத்துக் கொள்ள வேண்டும் என்கிறார். 
ஏந்த ஒரு செயலைச் செய்தாலும் திட்டமிட்டு செய்தல் சிறந்தது, உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்றால் மருத்துக் காப்பீடிற்கான தொகை குறைவு ஆனால், அந்த தொகை பெருஞ்செலவாகக் கருதி தவிர்த்து, அதில் ஆர்வம் காட்டாது செல்லும் நிலையானது திடீரென்று அக்குடும்பத்தில் சம்பாதிப்பவருக்கு அறுவை சிகிச்சை என்ற நிலை வந்தால் அவதிப்படும் நிலை ஏற்பட்டு விடுகிறது. பொருளாதார இழப்பு ஏற்படு;ம் நிலை உருவாகிறது. சில சமயம் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலை, நகையை இழக்கும் நிலை, வீடு அல்லது நிலத்தினை அடமானம் அல்லது விற்கும் நிலையளவு சென்று விடுகிறது. ஆனால், உரிய மருத்துக் காப்பீடு எடுத்திருப்பார்களேயானால் இந்த நிலையினை அவர்கள் தவிர்த்திருக்க முடியும். இதனையே திருவள்ளுவர்.
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் - 435 என்று குறிப்பிடுகிறார். 
 பிற்காலத்தில் வரக்கூடிய துன்பத்தை முன்கூட்டியே எண்ணித் தற்காத்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கைஇ நெருப்பின் முன்னால் வைக்கப்பட்ட வைக்கோல் போர் போல அழிந்துவிடும்  என்கிறார். ஆகவே, நாமும் வருகின்ற புத்தாண்டிலும் நம்முடைய முன்னேற்றத்தினை அது ஆரோக்கியமாக இருந்தாலும், பொருளாதாரமாக இருந்தாலும், குடும்ப நலமாக இருந்தாலும் தொலை நோக்குத் திட்டத்துடன் செயல்படும் போது, நமக்கான முடிவுகள் மகிழ்ச்சியை நமக்கு கொண்டு வந்து சேர்க்கிறது. அனைவரும் வரும் ஆங்கிலப் புத்தாண்டு நலமாகவும், வளமாகவும், மகிழ்வாகவும் அமைய வாழ்த்துக்கள். அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். 


தொடர்ந்து பார்ப்போம்...



குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு

Wednesday, 24 December 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-101:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-101:
திருக்குறளில் அரசியல்: 
திருக்குறளில் இதுவரை 100 வாரங்களைக் கடந்துள்ளோம். இதற்கு மேலான ஆதரவை அளித்த அனைத்து தோழர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தொடர்ந்து தங்களுடைய மேலான ஆதரவை அளிக்கக் கேட்டு;க் கெ
திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம். அதில்  அரசின் சிறப்பியல்புகளாக சிலவற்றை கடந்த வாரத்தில் பொருட்பாலில் இறைமாட்சி என்ற அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். 
இறைமாட்சியின் இறுதிப்பகுதியைப் பார்ப்போம். 
இன்று, ஊடகங்களில் குறிப்பாக சமூக வலைத் தளங்களில் பல பொறுப்பற்ற வார்த்தைகளையும் படிக்கவும் கேட்கவும் தகாத வார்த்தைகளையும் பார்க்கின்றோம். ஒரு விடயத்தை பொறுமையாகக் கையாளத் தெரியாதவர்களால் இது பெரிதும் நிகழ்கின்றது. ஆனால், நன்கு கற்றோர், அவர்களுக்கு பொறுப்புடனும், பொறுமையுடனும், தெளிவாகவும் தங்கள் கருத்துக்களை எடு;த்துரைத்து வருகின்றனர். அவர்களை நேரால் பார்த்தால் நமக்கே அவர்களைப் பாராட்டத் தூண்டும். இத்தகையரே ஆளுவதற்கும் தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள். திருவள்ளுவரும் இவர்களைத் தான் பாராட்டுகிறார் பின்வரும் குறளில்,
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு – 389 என்கிறார். 
குறைக் கூறும் தகுதி மிக்க பெரியோரின் சொற்கள் கேட்பதற்கு வெறுப்பாயிருந்தாலும் தனக்கு ஏற்பன அல்ல என்றாலும் வருவதை எண்ணிப் பொறுத்துக் கொள்ளும் பண்பினை உடைய வேந்தனின் குடை நிழலின் கீழ் உலகமே தங்கும் என்கிறார். 
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் 
உடையானாம் வேந்தர்க் கொளி -390
கொடையளிப்பதும், இரக்க குணமும், நடுநிலை தவறாமல் ஆட்சி செய்து செங்கோல் கொண்டிருப்பதும், மக்களைப் பேணிக் காப்பது ஆகிய நான்கையும் சிறப்பாய்ப் பெற்றவன் வேந்தர்க்கு எல்லாம் ஒளிவிளக்குப் போன்றவன் ஆவான் என்கிறார். 
அடுத்த அதிகாரங்களான கல்வி, கல்லாமை, கேள்வி மற்றும் அறிவுடைமை ஆகியவற்றில் பெரும்பாலானாவற்றை ஏற்கனவே நாம் பார்த்து விட்டதால் குற்றங்கூறாமை என்ற அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். 
அதற்கு முன் மேற்கூறிய அதிகாரத்தில் இருந்து சிறப்பம்சங்களைப் பற்றி மட்டும் அரசியல் நோக்கில் பார்ப்போம். 

 

1. கல்வி: தலைவனுக்கான அடிப்படை தகுதி

அரசியலில் ஒரு தலைவன் அல்லது ஆட்சியாளன் வெறும் அதிகாரம் பெற்றால் மட்டும் போதாது; அவர் முறையான கல்வி கற்றிருக்க வேண்டும்.

·       அரசியல் தொடர்பு: ஒரு ஆட்சியாளர் சட்டங்கள், வரலாறு மற்றும் நிர்வாக முறைகளைக் கற்றிருக்க வேண்டும். (குறள் 391: கற்க கசடற...).

·       பயன்: கல்வி கற்ற தலைவரால் மட்டுமே தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்களை வகுக்க முடியும். ஆட்சியாளருக்குக் கல்வி என்பது 'கண்' போன்றது; அது இல்லாமல் ஆட்சி செய்வது இருட்டில் நடப்பதற்குச் சமம்.

2. கல்லாமை: ஆட்சியின் வீழ்ச்சி

அரசியலில் அறிவற்ற அல்லது படிக்காதவர்களின் கையில் அதிகாரம் கிடைத்தால் அது நாட்டிற்குப் பெரும் அழிவைத் தரும்.

·       அரசியல் தொடர்பு: கல்லாதவர் அவையில் (சட்டமன்றம்/நாடாளுமன்றம்) பேசுவது, சூதாடும் தளம் இல்லாமல் பகடை விளையாடுவதைப் போன்றது (குறள் 401).

·       விளைவு: படிக்காத ஆட்சியாளர் எவ்வளவு பெரிய செல்வந்தராகவோ அல்லது செல்வாக்கு மிக்கவராகவோ இருந்தாலும், கற்றறிந்தவர்களின் முன்னால் அவர் மதிக்கப்பட மாட்டார். இது நிர்வாகக் குழப்பத்திற்கு வழிவகுக்கும்.

3. கேள்வி: அமைச்சர்களும் ஆலோசனைகளும்

ஒரு சிறந்த அரசியல்வாதி தான் மட்டும் படித்திருந்தால் போதாது; அனுபவமிக்க அறிஞர்களின் ஆலோசனைகளைக் கேட்கும் பண்பைப் பெற்றிருக்க வேண்டும்.

·       அரசியல் தொடர்பு: மன்னர்கள் அல்லது அமைச்சர்கள் தாங்கள் படிக்காவிட்டாலும், கற்றவர்கள் சொல்லும் அறவுரைகளைக் கேட்டறிய வேண்டும் (குறள் 414).

·       பயன்: செவி வழியாகக் கிடைக்கும் இந்த 'கேள்வி அறிவு' ஒரு தலைவருக்கு நெருக்கடியான காலங்களில் கைகொடுக்கும். மற்றவர் கருத்தைக் கேட்பது ஒரு ஜனநாயகப் பண்பாகும்.

4. அறிவுடைமை: நிர்வாகத் திறன் (Governance)

கற்ற கல்வியையும், கேட்ட ஆலோசனைகளையும் கொண்டு சரியான முடிவுகளை எடுப்பதே ஒரு சிறந்த ஆட்சியாளரின் 'அறிவுடைமை' ஆகும்.

·       அரசியல் தொடர்பு: எது வந்தாலும் அதனைச் சமாளிக்கும் திறனே அறிவு. இது பகைவர்களால் கூட அழிக்க முடியாத ஒரு கோட்டை (குறள் 421).

·       பயன்: எப்பொருள் யார் யார் வாய்க் கேட்டாலும், அதன் மெய்ப்பொருளைக் காணும் திறன் (குறள் 423) ஒரு அரசியல்வாதிக்கு மிக முக்கியம். அப்போதுதான் அவர் வதந்திகளை நம்பாமல், நாட்டின் உண்மை நிலையை அறிந்து செயல்பட முடியும்.

 தொடர்ந்து பார்ப்போம்...


குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு


Wednesday, 17 December 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-100:

நாம் தற்போது திருக்குறளில் திருவள்ளுவரின் அரசியல் சார்ந்த கருத்துக்களைப் பார்த்து வருகிறோம். இதில் தற்போது இறைமாட்சி அதிகாரத்தில் அரசியல் குறித்தத் திருவள்ளுவரின் கருத்துக்களைப் பார்த்து வருகிறோம். 
இப்போது நாம் பார்க்க இருக்கும் குறளினை மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியாளர்கள் பயன்படுத்துவதைக் காண முடியும். ஏனெனில், இக்குறள் அரசியலில் அவ்வளவு வலிமை வாய்ந்தது.  நல்லாட்சி என்றால் என்ன ? என்று மக்கள் புரிந்து கொள்ளவும், மக்களுக்கு எவ்வாறு நல்லாட்சி வழங்குவது? ஏன்று ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்ளவும் மிகப்பெரிய விழிப்புணர்வினை விட்டுச் சென்றிருக்கிறார் திருவள்ளுவர். இக்குறளைக் காண்போமா?
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த 
வகுத்தலும் வல்ல தரசு- 385 என்கிறார். 
ஒரு அரசானது, அரசாங்கத்திற்கு பொருள் வரும் வழிகளை உருவாக்குதலும், வரும் பொருட்களை சேமித்து வைத்தலும், காத்து வருவதும், காத்தவற்றை தக்கவாறு வகுத்துச் செலவு செய்வதும் எனும் இவற்றில் திறமை மிக்கதே அரசு என்கிறார். இதனை தவறும் பட்சத்தில் அரசும் பாதிக்கப்படுகிறது. அதனால் மக்களும் துன்பமடைகின்றனர். 
அடுத்தக் குறளில், மன்னனானவன் எப்படிப்பட்ட தரத்தினை (ஞரயடவைல) உடையவனாக இருக்க வேண்டும். 
இதுவரை மன்னன் என்று நாம் ஒருவேளை மனதில் வரைந்திருந்த அ;ல்லது திரைப்படங்களில் ஊடகங்களில் காட்சிப்படுத்தப்பட்ட மன்னன் என்று நினைத்தால்...
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம் -386 
...மன்னன் என்பவன் அப்படி இல்லை, தன்னைக் காண வருபவர்கள் பார்க்கும் பொழுது மிக எளியவளானகவும், கடுமையான சொற்களைப் பயன்படுத்ததவனாகவும் இருக்க வேண்டும். அப்படி அரசன் விளங்கினால், அவனுடைய நாட்டை உலகமே உயர்வாகக் கூறும் என்கிறார். 
ஓவ்வொருவரும் தனது வாழ்நாளில் பிறப்பு முதல் இறப்பு வரை பல இன்ப துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அப்படி இருக்கையில், மன்னரைக் காண வரும்போது அது அவருக்குப் பெருந்துன்பமாக ஆகிவிட்டால்? அப்படியானால் ஆள்பவன் எப்படி இருக்க வேண்டும்?
அடுத்தக் குறளில், 
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு -387 என்கிறார். அதாவது, 
எந்த மன்னன் தன்னை நோக்கி வருபவர்களிடம் இனிய சொற்களுடன் பேசி தகுந்தவர்களுக்குப் பொருள் உதவிக் காக்கவும் ஆற்றல் பெற்ற மன்னனுக்கு தன்னுடைய குணத்தால் புகழோடு வாழ்வது மட்டும் அல்லாமல், தான் எப்படி இருக்க வேண்டும் என்று தன்னுடைய அரசை நினைத்தாரோ அப்படியே உலகமும் அமையும் என்கிறார் திருவள்ளுவர். 
இதுவல்லவோ வரம்...
மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்ற பாடலை கேட்டிருப்போம். ஆனால், பண்டைய காலத்தில் அரசனை தெய்வத்தன்மையாகப் பார்த்தனர், அதனால் கடவுள் இருக்கும் இடமாக கருதப்படும் இடத்தை கோவின் இல்லம் கோயில் அல்லது கோவில் என்று அழைத்தனர். ஆனால், திருவள்ளுவர் இதில் சற்றே மாறுபடுகிறார். ஏல்லா மனிதர்களும் மனிதர்கள்தான் !
ஆனால், திருவள்ளுவர் சொல்கிறார்.
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும் -388
இதற்கு மேல் ஒரு மன்னனுக்கு புகழாரமோ அல்லது பெருமையோ இருக்க முடியாது...
ஏனென்றால், தமக்கு அநீதி இழைக்கப்படும் போது மக்களின் கடைசி நம்பிக்கை அவர்களுக்குக் கிடைக்கும் நியாயம் தான். இதோ திருவள்ளுவர் சொல்கிறார். ஏந்த அரசன் நீதி முறைமைகளோடு ஆட்சி செய்து தன்னுடைய குடிமக்களைக் காப்பாற்றுகிறானோ, அவர் மக்கள் மத்தியில் தெய்வம் என்று சொல்லப்படும் உயர்நிலையிலே வைத்து மதிக்கப்படுவான் என்கிறார். இது சமூக ஒப்பந்த (ளுழஉயைட ஊழவெசயஉவ) கோட்பாட்டின் ஆரம்ப வடிவமாககக் கருதப்படுகிறது. பாதுகாப்பு மற்றும் நீதியை வெற்றிகரமாக வழங்குவதன் மூலம் சம்பாதிக்கப்படும் ஒரு செயல்பாட்டு அந்தஸ்தே தெய்வீகம் ஆகும். 

தொடர்ந்து பார்ப்போம்...

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின்  மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு

Wednesday, 10 December 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-99:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-99:
திருக்குறளில் அரசியல்: 

திருக்குறளில் அரசியல் என்னும் தலைப்பில் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். கடந்த வாரம், நல்ல அரசனுக்கு என்னவெல்லாம் பௌதிக ரீதியாக இருக்க வேண்டும் என்று பார்த்தோம். 
அடுத்தபடியாக, அரசின் பௌதிகச் சொத்துகளை நிர்வகிக்கத் தேவையான உளவியல் மற்றும் நடத்தைப் பண்புகளை திருவள்ளுவர் உடனடியாகக் குறிப்பிடுகிறார்.  
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு - குறள் 382
இன்றியமையாத குணங்களாக அஞ்சாமை , ஈகை (கொடை), அறிவு (ஞானம்) மற்றும் ஊக்கம் (விடாமுயற்சி) ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார். இதில் 
அஞ்சாமை என்பது வெறும் போர்களத் துணிவினை மட்டுமல்லாது, கடினமான சூழல்களில் முடிவுகளை எடுப்பது குறித்த தார்மீகத் துணிவு மற்றும் எந்த மாதிரியான விமர்சனங்களையும் எதிர்கொள்ளும் அறிவுசார்ந்த துணிவைக் குறிப்பிடுகிறார். பயந்து நடுங்கும் தலைவர் தன்னுடைய அரசு முடங்குவதற்குக் காரணமாகி விடுகிறார். 
ஈகை என்று பார்க்கையில் செல்வம் மற்றும் நலத்திட்டங்களைப் பகிர்ந்தளிக்கும் மனப்பான்மையினைக் குறிப்பிடுகிறார். நவீன காலக்கட்டத்தில், இது சமூக நலம் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் சமமான பகிர்ந்தளித்தலையும் அர்த்தப்படுத்துகிறது. 
அறிவு (!ஞானம் ) என்பது விமர்சனச் சிந்தனை, கற்றல் மற்றும் பொய்யிலிருந்து உண்மையை அறியும் திறன் ஆகியவற்றினைக் குறிக்கிறது. திருக்குறள் முழுமையையும் பார்த்தால் திருவள்ளுவர் அறிவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது தெரியவரும். இது நிர்வாக அடிப்படையில் ஒரு அறிவுசார் செயல்பாடு என்பதனைக் காட்டுகிறது. 
ஊக்கம் அல்லது விடாமுயற்சி அல்லது ஆற்றல் என்பது சோர்வற்ற உற்சாகம் மற்றும் உழைப்பினைக் குறிக்கிறது. அரசு என்பது ஒழுங்கின்மையைக் குறைக்கும் ஒரு இயந்திரம், தலைவரிடமிருந்து தொடர்ந்து ஆற்றல் அடிநிலை வரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும். தலைவரிடமிருந்து தொடர்ந்து ஆற்றல் கிடைக்கவில்லை என்றால், ஒழுங்கு குழப்பமாக மாறும் ஆதலால் தொடர் ஊக்கமானது முக்கியமான ஒன்றாகும். 

மேலே அரசனின் தலையாயக் குணநலன்களைக் குறிப்பிட்ட திருவள்ளுவர் அடுத்தக் குறளில் அரசனின் பண்புகளாக இருக்க வேண்டியவற்றைத் தெளிவுபடுத்துகிறார். 
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் 
நீங்கா நிலனான் பவர்க்கு -383 என்கிறார். 
‘தூங்காதே தம்பித் தூங்காதே...” என்ற பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் பாடலைக் கேட்டிருப்போம். அதில் தனது கடமைகளை தாமதப்படுத்துவதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதனை ‘தூங்காதே” என்று விவரித்திருப்பார். இங்கேயும் திருவள்ளுவர் முன்னரே அவ்விதம் கூறிவிட்டார். நாட்டை ஆளும் மன்னவருக்கு காலம் தாழ்த்தாத தன்மை (தூங்காமை), அனைத்தையும் அறியும் கல்வி, தீயவற்றை எதிர்க்கின்ற போதிலும் நல்லவற்றை செய்வதற்கு ஏற்ற துணிவு ஆகியவை நாட்டை ஆளும் மன்னவரை விட்டு நீங்காமல் எப்போதும் நீடித்து இருக்க வேண்டும் என்கிறார். 
அத்தோடு நில்லாமல் சிறந்த அரசன் எனப்படுபவன் யார்? ஏன்று அடுத்தக் குறளில் விளக்குகிறார். 
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு-384
அதாவது ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் (மக்களின் நலனை முதன்மையாக வைத்து செயல்படுதல்) இருந்து விலகாமல், அறமற்ற கொடுமைகள் தன் நாட்டில் நடைபெறாமல் விலக்கியும் (மதுவிலக்கு, மதத் தூண்டுதல்கள் போன்றவை) வீரத்தில் குறைபடாத மானத்தையும் உடையவனே சிறந்த அரசன் என்கிறார். மேற்கூறிய குறளின் மூலம் அறத்தையும், மறத்தையும் ஒருங்கே வலியுறுத்துகிறார் திருவள்ளுவர். 

தொடர்ந்து பார்ப்போம்...

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின்  மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு


Friday, 5 December 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-98:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-98:
திருக்குறளில் அரசியல்: 

திருவள்ளுவரின் திருக்குறளில் உள்ள அரசியல் சார்ந்த 25 அதிகாரங்களையும் 4 கருப்பொருட்களாகப் பிரிக்கலாம். இதில் இறைமாட்சிக்கென்று (அரசன்) 5 அதிகாரங்களையும் அமைச்சரவைக்கென்று (குழு) 10 அதிகாரங்களையும் ஆட்சி முறைக்கென்று (நீதி) 5 அதிகாரங்களையும் தன்னடக்கத்திற்கென்று 5 அதிகாரங்களையும் திருவள்ளுவர் நமக்கு வழங்கியுள்ளார். குறட்பாக்களில் திருவள்ளுவர் ஆட்சி செய்பவரின் தகுதிகளை விடவும் அதிகமாக, அவரைச் சுற்றியுள்ள அமைச்சரவை மற்றும் நிர்வாக செயல்பாடுகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்பது தெரிகிறது. 
அரசியல் பிரிவானது, இராஜ்யத்தின் புவியியல் எல்லைகளையோ அல்லது மன்னரின் தெய்வீக வம்சாவளியோ அல்லது கஜானாவின் செல்வம் குவிப்பது குறித்து துவக்கவில்லை, மாறாக, இது இறைமாட்சி (அரசனின் சிறப்பு) என்கிற அதிகாரத்துடன் தொடங்குகிறது. அதாவது, பொருள் வளங்களைக் காட்டிலும், மனித மூலதனத்திற்கும், தார்மீக அதிகாரத்திற்கும் முன்னுரிமை அளிக்கிறது.
அரசின் இலக்கணம்: 
அரசியல் பிரிவின் துவக்கக் குறளானது நவீன அரசியல் வரையறைகளுக்கு இணையாக, அரசின் முழுமையான அரசியல் வரையறைகளுக்கு சமமாக, அரசின் முழுமையான அரசியலமைப்பு வரையறையை வழங்குகிறது.
கீழ்க்காணும் குறளை நோக்குகையில்,
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு (குறள் 381)  என்று குறிப்பிடுகிறார்.
திருவள்ளுவர் அதிகாரத்தின் முதல் குறளிளேயே பெரும்பாலும் நாம் அதிகாரத் தலைப்பிற்கான வரையறையை கொடுத்துவிடுகிறார். இதிலும் அப்படித்தான். சிறந்த இராணுவம், மகிழ்ச்சியான மக்கள், நிறைந்த கருவூலம், திறமையான அமைச்சர்கள், நல்ல நட்பு நாடுகள் மற்றும் வலிமையான அரண் ஆகியவற்றை உடையவரே அரசர்களுள் சிங்கம் போன்றவர் ஆவார் என்கிறார். மேற்கூறிய அனைத்தும் எளிதாக நடந்து விடுவதில்லை. இப்போது அணி ஒற்றுமைக்கே பெருநிறுவனங்களில் ஏகப்பட்ட நிர்வாக மேலாண்மை பயிற்சிகள் எடுக்கப்படுகிறன்றன. மக்களாட்சி காலத்திலேயே இப்படி என்றால், மன்னராட்சி காலத்தில் இந்த நிலையினை எட்ட வேண்டும் என்றால், அரச பொறுப்பில் இருப்பவர் எத்தகைய நிர்வாக மேலாண்மை கொண்டிருக்க வேண்டும்? கூட இருப்பவர்கள் சிறந்தவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில் பெரும்பாலும் நாம் எதிர்கொள்ளக் கூடிய பிரச்சனைகள் நமக்கு அருகில் இருப்பவர்கள் மூலமே ஏற்படுகிறது. அதிகாரப் பசிக்காக துரோகங்கள் மத்தியில், எதிரிகள் மத்தியில் பிரச்சனைகளை கண்டறிதல் அதனை சரி செய்தல் மட்டுமல்லாது மேற்கூறிய அனைத்தும் கட்டமைப்பது உண்மையிலேயே சாதாரண காரியமல்ல..
மேற்கூறிய ஆறு அங்கங்களும் சாணக்கியரின் ‘அர்த்த சாஸ்திரத்தில்” காணப்படும் சப்தாங்க (ஏழு அங்கங்கள்) கோட்பாட்டுடன் ஒத்துப் போகின்றன. இருந்த போதிலும் கருத்தாக்கத்தில் ஒரு முக்கிய வேறுபாடும் உள்ளது. கௌடில்யர் அரசனை (ஸ்வாமி) முதல் அங்கமாகப் பட்டியலிட்டு, பின்னர் மற்ற ஆறையும் குறிப்பிடுகிறார். ஆனால் திருவள்ளுவர், ஒரு நுட்பமான சொல்லாட்சி மாற்றத்தின் மூலம், அரசனை மற்ற ஆறு கூறுகளையும் உடையவனாக (Pழளளநளளழச) மாற்றுகிறார். அரசன் வெறுமனே ஒரு அங்கம் மட்டுமல்லாமல் ; அவன் மற்ற ஆறையும் ஒருங்கிணைக்கும் உயிருள்ள சக்தியாகக் குறிப்பிடுகிறார். அவற்றை சரியாகக் கையாளும் ‘சிங்கம்” எனக் குறிப்பிடுகிறார். 
இந்த ஆறு கூறுகளின் இடைவினையே திருக்குறளுடைய அரசியல் சூழமைப்பின் அடிப்படையாகும்:
1. படை: வன்முறையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசின் முதல் தேவையாக இருக்கிறது. இது வெளிப்புறத்திலிருந்து வரும் ஆக்கிரமிப்பிற்கு எதிராக இறையாண்மையை உறுதி செய்கிறது. 
2. குடி: மக்கள் தொகையே சட்டப்பூர்வமான தன்மை மற்றும் உற்பத்தித் திறனின் ஆதாராமாக இருக்கிறது. மக்கள் இல்லாமல் அரசன் இருக்க இயலாது, முரண்பாடானதாக இருக்கும்.
3. கூழ்: படை மற்றும் நிர்வாகத்தைத் தக்க வைக்கத் தேவையான குறையாத வளத்தைக் குறிக்கின்றது. 
4. அமைச்சு: அரசின் விருப்பத்தைச் செயல்படுத்தும் அதிகார வர்க்கம் ஆகும். 
5. நட்பு : எந்த அரசும் தனித்தீவு அல்ல, அரச தந்திரம் ரீதியான செல்வாக்கு என்பதும் ஒரு வகையான அதிகாரம் ஆகும். 
6. அரண்: பாதுகாப்பின் உள்கட்டமைப்பு (சுவர்கள் மற்றும் புவியியல் நன்மைகள்). 
மேலும், அரசனுக்கும் அரசுக்கும் என்ன தேவைகள் இருக்கிறது என்பதை வரும் வாரங்களில் பார்ப்போம். 
தாமதத்திற்கு பொறுத்துக் கொள்க...
தொடர்ந்து பார்ப்போம்...

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின்  மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு