Wednesday, 16 September 2020

பெரியாரும் அண்ணாவும்





திராவிட அரசியலில் பெரியார் மற்றும் அண்ணா பெயரை குறிப்பிடாமல் இருக்க முடியாது. தமிழகத்தில் இருபெரும் துருவங்களாக இருந்தவர்கள். 
அண்ணாவையும் பெரியாரையும் இணைத்துப் பேசுவதென்றால் விபரம் அறிந்தவர்கள் அவர்கள் ஒற்றுமை இந்தி எதிர்ப்பு, தமிழ் தேசியம், சமூக நீதி, சுய மரியாதைத் திருமணங்கள், மற்றும் அவர்களுக்குள் இருந்து ஒரு சில எதிர்க்கருத்துக்கள் பேசாமல் இருக்க முடியாது.  

பெரியார் தேர்தல் ஜனநாயத்தில் சமூகநீதிக்கு  தீர்வு காண முடியாது ‘அதிகாரத்தில் இருப்பவர்கள் நேர்மையாளர்களாக இருக்க மாட்டார்கள்” என்று நம்பினார். ஆனால், அண்ணா அரசியல் களம் மூலமே சமூக மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று நம்பினார்.

 பெரியார் தமிழகத்தின் இழிநிலைக்குக் கறுப்புச் சட்டை அணிய வலியுறுத்தினார். ஆனால், அண்ணாவிற்கு அந்தக் கருத்தில் உடன்பாடில்லை. (ஆனாலும் சேலத்தில் நடந்த கருப்புச்சட்டை மாநாட்டில் அண்ணாவைத் தலைவராக்கி அவரை சாரட் வண்டியில் பயணம் செய்ய வைத்து, பெரியார் மாநாட்டு பந்தலுக்கு நடத்து வந்தார். அண்ணாவை கருப்புச் சட்டைக்கு ஆதரவாக இரண்டு மணி நேரம் பேச வைத்தது பெரியாரின் சாமர்த்தியம!;).

இந்திய சுதந்திரப் பிரகடனத்தை பெரியார் எஜமான்தான் மாறியிருக்கிறான், பிரிட்டிஷ்காரனாவது கல்வியை வழங்கினான், அனைத்துதர மக்களுக்கும் வாய்ப்புகளை வழங்கினான். ஆனால், இந்தியா சுதந்திரம் பெற்றால் உயர் ஜாதியினை சேர்;ந்தவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு மற்றவர்களை முன்னேற விட மாட்டார்கள் என்று நினைத்தார். எனவே, சுதந்திர பிரகடனத்தை ‘கருப்பு தினமாக” அறிவித்தார். அண்ணாவிற்கு அந்தக் கருத்திலும் உடன்பாடு காட்டவில்லை. மாறாக இரண்டு எதிரிகளில் ஒரு எதிரியிடம் இருந்து சுதந்திரம் கிடைத்துள்ளது. இது கொண்டாடப்பட வேண்டும் என்ற நிலையை வைத்தார். 

இந்தி எதிர்ப்பை துவக்கியவர் பெரியார் அதனை தீவிரமாக்கியவர் அண்ணா. 
அக்டோபர் 1948 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டில் ‘ஒரு தந்தை தன் மகனிடம் பொறுப்புகளை ஒப்படைப்பது போல எனது பொறுப்புகளை இன்னொருவரிடம் ஒப்படைப்பது மட்டுமே பொருத்தமானது ஆதலால் உங்கள் சிறந்த முன்னிலையில் பாதுகாப்பான சாவியினை அண்ணாவிடம் ஒப்படைக்கிறேன்” என்கிறார் பெரியார். 
அதற்கு மறுமொழியாக அண்ணா ‘அய்யாவின் அனுமதியினைப் பெறாமல் பாதுகாப்பைத் திறக்கமாட்டேன்” என்கிறார்.

அண்ணாவிற்கும் பெரியாருக்கும் ஒரு சில கருத்துகளில் மாறுபாடுகள் ஏற்பட்டாலும் அண்ணா பெரியாருக்கு உரிய மரியாதையை வழங்குவதில் எங்கும் நிறுத்தியதில்லை. 

தான் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்கும் போதும் பெரியாரிடம் ஆசி பெற்றே செல்கிறார். 

சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டபூர்வமாக்கினார். சுய மரியாதை திருமணத்திற்கு மூலகாரணம் பெரியார் ஆவார். 

பெரியார் மத நம்பிக்கைகளை எதிர்த்தார். அண்ணா மக்கள் நம்பிக்கைகளுக்கு வலுவூட்டினார். ஆதலால் திருமூலரின் வாக்கிலிருந்து எடுத்து ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று உரைத்தார்.

திராவிடர் கழகத்தை பெரியார் கழகத்தைப் பெரியார் தோற்றுவித்தார். திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்த அண்ணா பெரியார் பிறந்த நாள் அன்று  ‘திராவிட முன்னேற்றக் கழகத்தை” தோற்றுவித்தார். 

பெரியார் தனித்தமிழ்நாடு அமைய விரும்பினார். ஆனால், அண்ணா டெல்லியில் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து அதிக அதிகாரங்களைக் கொண்ட மாநில சுயாட்சியை விரும்பினார். 

பெரியார் கடவுள் வழிபாட்டினை எதிர்க்கும் விதமாக பிள்ளையார் சிலைகளை உடைத்தார். ஆனால், அண்ணா இனி பிள்ளையார் சிலையை உடைக்கப்போவதும் இல்லை, பிள்ளையாருக்குத் தேங்காய் உடைக்கப் போவதும் இல்லை என்று தனது நிலைப்பாட்டை உணர்த்தினார். 

பெரியார் நாடகங்களும் திரைப்படங்களும் மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கும் என்ற நம்பிக்கை இல்லை அது மக்களை மடையர்களாக ஆக்கும் என்று நம்பினார். அண்ணா தனது கருத்துக்களை பிரபலப்படுத்துவதற்கு நாடகங்களையும் திரைப்படங்களையும் பயன்படுத்தினார். 

தனக்குப் பிறகு டிரஸ்டின் பொறுப்புகளை அண்ணாவிடம் ஒப்படைக்கலாம் என்ற பெரியாரின் நிலைப்பாடு, அண்ணா பெரியாருடைய சில
கருத்துக்களில் மாறுபட்டு நிற்பதால் அண்ணா மீது பெரியாருக்கு நம்பிக்கைக் குறையலாயிற்று. அவரைத் தொடர்ந்து ஈவிகே சம்பத்திடம் ஒப்படைக்கலாம் என்றால் அவர் அண்ணாவின் மீது அதிக பற்று வைத்துள்ளார். இந்நிலையில் மணியம்மையிடம் டிரஸ்டினை ஒப்படைக்கும் நோக்கில் மணியம்மையினை மணந்தார். பல்வேறு கருத்து மாறுபாடுகள் அண்ணாவிற்கு இருந்தாலும் மணியம்மையினை பெரியார் திருமணம் அவரிடம் இருந்து விலகுவதற்கு உடனடிக் காரணமாகவும் சந்தர்ப்பமாகவும் அமைந்து விட்டது. அதனைத் தொடர்ந்து அண்ணாவின் ஆதரவாளர்கள் அனைவரும் அண்ணாவுடன் இணைந்து கொண்டனர். 

பொதுவாழ்வில் தளர்ச்சியடையாத பெரியார், சோர்வு கொண்டு நின்றிருந்த போது ஐயா, தாங்கள் ஒருபோதும் சோர்ந்து விடக் கூடாது, நான் பல சரித்திரங்களைப் படித்திருக்கிறேன். பல தத்துவவாதிகள் தங்களுடைய தத்துவங்கள் நிறைவேறிய காலத்தில் தாங்கள் உயிரோடு இருக்கவில்லை. அதனை வேறு யாரோ தான் நிறைவேற்றினார்கள். பிரான்சில் ரூசோ கண்ட கனவினை பிரெஞ்ச் புரட்சியின் மூலம் மாற்றியபோது அதைப் பார்க்க அவர் உயிருடன் இருக்கவில்லை. அதே போன்று மார்க்ஸ் உருவாக்கிய சோசலிச கொள்கைகளை இரசியப்புரட்சியின் லெனின் மாற்றியமைத்து சமதர்மக் கொள்கைகளைக் கொண்டு வந்தபோது மார்க்ஸ் உயிரோடு இருக்கவில்லை. ஆனால், தாங்கள் மட்டும் தான் உங்கள் காலத்திலேயே தத்துவங்களையும் கொண்டு வந்து சமூக மாற்றங்களையும் ஏற்படுத்தியவர். ஆகவே தாங்கள் சோர்ந்து விடல் ஆகாது” என்று தேற்றியவர் அண்ணா அவர்கள். 

இவ்வாறு பெரியாரும் அண்ணாவும் சமூக நீதிக் கொள்கைகளில் ஒன்றாக இருந்தாலும் செயல்படுத்துவதில் ஒருசில மாறுபாடுகளைக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

# செப்டம்பர் 15 - அண்ணா பிறந்தநாள் 
# செப்டம்பர் 17 - பெரியார் பிறந்தநாள்