Saturday, 19 May 2018

தமிழ் தேசிய தந்தை - அயோத்திதாசர் - சில குறிப்புகள்:



காத்தவராயன் என்ற இயற்பெயர் கொண்ட அயோத்திதாசர் 1845 வருடம் மே-20 ல் சென்னையில் பிறந்தார்.தனது தந்தையிடமும் காசி மேடு சதாவதாணி வைரக்கண் வேலாயுதம் புலவர் மற்றும் வல்லக்காளத்தி  வீ. அயோத்தி தாசர் பண்டிதர் ஆகியோரிடம் கல்வி பயின்றார். தனது குருவின் மீது கொண்ட பக்தியினால் தனது பெயரை அயோத்தி தாசர் என்று மாற்றி கொண்டார். 

அண்ணல் அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியாருக்கு முன்னதாகவே பகுத்தறிவு கருத்துக்களையும், சாதிய மறுப்பு கருத்துக்களையும் முன்னெடுத்தவர்.
ஆங்கிலம், சமஸ்கிருதம் மற்றும் பாலி மொழியறிவு பெற்றவர். 

திருக்குறள்:
உலக பொதுமறை நாம் பெருமையோடு பார்க்கும் திருக்குறள் நூற்றாண்டு காலங்களாக வழக்கில் இல்லாமல் இருந்தது. பெரும் கல்வி பின்புலத்தில் இருந்த குடும்பத்தில் பிறந்த இவர் தனது குடும்ப சேமிப்பு ஏடுகளில் இருந்து திருக்குறளை தொகுத்து மீட்டு எல்லீஸ் துரையிடம் சமர்ப்பித்தார். அதன் பிறகுதான் இன்றைய திருக்குறள் அச்சு வடிவில் வந்தது. 


தன்னுடைய 25 ஆவது வயதில், நீலகிரியில் தேயிலை தோட்ட பணியாளர்களையும் மலையின பழங்குடி மக்களையும் ஒருங்கிணைத்து "அத்வைதானந்த" சபையை நடத்தினார். இதன் மூலம் சாதி பேத உணர்வை ஒழிக்க முற்பட்டார். 


தமிழன்:
19.06.1907 ஆம் ஆண்டு "ஒரு பைசாத் தமிழன்" என்ற பெயரில் வார இதழ் வெளியிட்டார்.  ஓராண்டுக்குப் பிறகு வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அச்சுக்கூடமும் பத்திரிக்கை பெயரும் மாறுதல் அடைந்தது. 26.08.1908 இல் "ஒரு பைசா" நீக்கப்பெற்று "தமிழன்" என்ற பெயரில் பத்திரிக்கை வெளியிட்டார்.
 தமிழர்கள் அதிகம் வாழும் கர்நாடக கோலார் தங்க வயல், பர்மா, தென்னாபிரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழன் இதழ் பரவியது. 
இதழியலும் அரசியலிலும் நவீனம் குறித்த கருத்தாக்கங்கள் 'தமிழன்' இதழில் இருந்தே துவங்க பெற்றன என உறுதியாக கூறலாம். 

தமிழகத்தில் எந்த இயக்கமும் தோன்றாத காலத்தில் வேத மத, பிரமாணீய எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, தமிழ் மொழியுணர்வு, பகுத்தறிவு, சமூக நீதி பிரதிநிதித்துவம்.தலித் விடுதலை, சுயமரியாதை இந்தி எதிர்ப்பு, பெண் விடுதலை போன்ற கருத்துகளை 'தமிழன் இதழ் மூலம் எடுத்துரைத்தார். 
ஞான போதினி, பிரம்மா ஞான  போதினி , சுகிர்த வர்த்தமானி, நீலலோசினி, விகடத்தூதன், சுதேசமித்திரன், பிரபஞ்ச மித்ரன், புதுவை மித்திரன், நாஞ்சில் நேசன், தென்னிந்திய டைம்சு என வடமொழியிலும் ஆங்கிலத்திலும் வெளி வந்த காலத்தில் இன உணர்வோடு இனிய தமிழில் தமிழன் என பெயர் சூட்டி வார இதழை நடத்திய தமிழ் தேச உணர்வின் முன்னோடி.

பௌத்தம் 
பூர்வ தமிழ் மரபு சாதியில்லா சமூக அடிப்படையில் அமைந்திருந்தது என்ற பண்டிதரின் நிலைப்பாடு தமிழ் வரலாறு குறித்த அடிப்படியான் விவாதத்தை தொடங்கி வைத்தது.
தமிழை அடித்தள மக்களின் நிலைப்பாடுகளில் இருந்து வாசித்தார். 
கால அடிப்படையில் சைவத்தை விட சமண, பௌத்த சமயங்கள் மூத்தவை என தமிழ் இலக்கிய சான்றுகளின் வழியில் நிரூபித்தார். பூர்வ தமிழின் அறம். காப்பிய மரபுகள், இலக்கணம், இலக்கிய மரபுகள் ஆகியவற்றை சமண பௌத்த மரபுகளே நிலைப்படுத்தின என பண்டிதரால் எடுத்துக்காட்ட முடிந்தது
ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்குவதற்காக எழுப்பிய பண்பாட்டு , மதத் தடைகளை நீக்குவது மட்டுமே ஒடுக்கப்பட்ட மக்களின் மெய்யான விடுதலையை கொண்டுவரும். அதற்கான மரபுகளைத் தேடிக்கண்டுபிடிதார். அது "பௌத்தம்" என்ற சாதி ,வருண எதிர்ப்பு மதம்தான் பண்டிதருக்கு புகலிடமாகபட்டது. ஆல்காட்டின் உதவியோடு 1898 இல் பௌத்தம் தழுவினார்.
சென்னை இராயப்பேட்டையில் 'சாக்கிய பௌத்த சங்கம் ' நிறுவினார். சாதியற்ற திராவிடர்களுக்கு முன்னோர் வரலாறுகளையும் பௌத்த தன்மத்தையும் விளக்குதல் மற்றும் நற்பண்பிலும் சமய ஒழுக்கத்திலும் தலித்துகளை முன்னேற்றுதல் போன்ற நோக்கங்களாக இருந்தது.


இந்தியா:
 இந்திரன் என்னும் சொல் ஐந்திரன் என்னும் சொல்லின் திரிபு. அதாவது மகத  சக்கரவர்த்தித் திருமகன் சித்தார்த்தன் (புத்தர்) கல்லாத்தி (அரச மரம்) மரத்தினடியில் ஐம்பொறிகளை வென்றதால் ஐந்திரன் என்ற பெயர் பெற்றார். அதுவே இந்திரன் என்று திரிந்தது. புத்தரை வணங்கிய சங்கத்தார் இந்திரவிழா நாள் கொண்டாடினர். அந்த விழா எடுக்கும் காலமெல்லாம் மழை பெய்ததால் அந்த அனுபவத்தின் அடிப்படையில் மழைக்கு முன் காட்சியாகும்  வானவில்லை இந்திரதனுசென்றும் அவரை எப்போதும் நினைத்து கொண்டாடும் மக்களுக்கு இந்தியர்களென்றும் பெயர். இந்தியர்கள் வாசம் செய்யும் தேசம் இந்தியவென்றும், இந்திரமென்றும் வழங்கி வந்தனர். "தமிழ் மொழியில் பிறந்து, தமிழ் மொழியில் வளர்ந்து, தமிழ் மொழிக்குச் சொந்தமான பூர்வகுடிகள் சுதேசிகளுக்கு வழங்கவேண்டும். 'மேலும்' கருணை தாங்கிய ஆங்கில ஆட்சியாளர்களே சுதேசிகள் மீது கருணை பாவித்து ஆட்சி அதிகாரத்தை இத்தேச பூர்வகுடிகளுக்கு அளிப்பதே கருணையாகும். நேற்று குடியேறி வந்தவர்களையும், முன்னர் குடியேறி வந்தவர்களையும் சுதேசிகள் என கருதி அவர்களிடம் ஆட்சியை வழங்கினால் நாடு பாழாகி சீர் கெட்டுவிடும்' என நாடு விடுதலை பெற 35 ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரித்தார். (தமிழன் -30-10-1912)

திராவிட பாண்டியன்
கல்வியால் மட்டுமே தலித் மக்களை முன்னேற்ற முடியும் என்ற நம்பிக்கையில் தலித்துகளுக்காக ஒரு பெரிய பள்ளியை சென்னையில் நடத்திய அருட் திரு.டி. ஜான் ரத்தினம் அவர்களோடு நட்புகொண்டார், அவரோடு "திராவிட பாண்டியன்" இதழ் நடத்தினார்.

ஆதி தமிழன் :

பண்டிதருடைய காலத்தில் இந்துத்துவம் மீட்ருருவாக்கம் செய்த காலம். ப்ரம்மசமாஜம், ஆரியசமாஜம் போன்ற  அமைப்புகள் மூலம் இந்துக்கள் வலிய திணித்த காலம். 1861-1891 வரை 'யாரெல்லாம் கிறித்துவர்கள் இசுலாமியர்கள் இல்லையோ அவர்களெல்லாம் இந்து என பதிவு செய்த காலம். இந்து சமூகத்தின் தீண்டாமை, காணாமை, சாதீய கொடுமையை அதிகமாக அனுபவிக்கும் தலித்துகள் ஒருபோதும் 'இந்து' அடையாளத்தை ஏற்கக்கூடாது என்று அதற்கு மாற்றாக ஒரு அடையாளத்தை தேடினார். இதற்கிடையில் 1881 களில் ஆங்கில அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளில் புகுந்து தலித்துகளுக்கு தனித்துவமான அடையாளத்தை பதிவு செய்கிறார். "ஆதி தமிழன்" (Original Tamils ) என பதிவு செய்ய வேண்டுமென வற்புறுத்துகிறார். அப்போதெல்லாம் சாதிதான் தமிழனுக்கு அடையாளமாக இருந்தது. சாதியின் பெயரால்  சாதியற்ற தமிழர்களாக பதிவு செய்தார். இழிவான பெயர்களை மறுப்பது என்பது கூட சாதி ஒழிப்புக்கு வழி  என்றார். 

 அயோத்தி தாசர் நூல்கள்
  1. அம்பிகையம்மன் அருளிய திரிவாசகம்
  2. அம்பிகையம்மன் சரித்திரம்
  3. அரிச்சந்திரன் பொய்கள்
  4. ஆடிமாதத்தில் அம்மனை சிந்திக்கும் விவரம்
  5. இந்திரர் தேச சரித்திரம்
  6. இந்திரர் தேச பௌத்தர்கள் பண்டிகை விவரம்
  7. கபாலீஸன் சரித்திர ஆராய்ச்சி
  8. சாக்கிய முனிவரலாறு
  9. திருக்குறள் கடவுள் வாழ்த்து
  10. திருவள்ளுவர் வரலாறு
  11. நந்தன் சரித்திர தந்திரம்
  12. நூதன சாதிகளின் உள்வே பீடிகை
  13. புத்தர் எனும் இரவு பகலற்ற ஒளி
  14. புத்த மார்க்க வினா விடை
  15. மாளிய அமாவாசை எனும் மாவளி அமாவாசி தன்ம விவரம்
  16. முருக கடவுள் வரலாறு
  17. மோசோயவர்களின் மார்க்கம்
  18. யதார்த்த பிராமண வேதாந்த விவரம்
  19. விபூதி ஆராய்ச்சி
  20. விவாஹ விளக்கம்
  21. வேஷ பிராமண வேதாந்த விவரம்
  22. பூர்வ தமிழ்மொழியாம் புத்தாது ஆதிவேதம்
  23. வேஷபிராமண வேதாந்த விவரம்

நன்றி