Sunday, 20 August 2017

எழுதி முடித்த கதை -சிறுகதை 

ஆழ்வார்குறிச்சியின் இரண்டு பக்கங்களில் நெல்வயல்கள் நடுவில் உள்ள தார் சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் இருந்து தலையை இடப்பக்கமாக திருப்பிப் பார்த்தார் சங்கர். பொதிகை மலையில் இருந்து புறப்பட்ட தென்றல்; நெற்கதிர்களைக் கடந்து நெல் வயலில் ஆவியாகிக் கொண்டிருந்த நீரையும் சேர்த்து இழுத்து வந்து சங்கர் முகத்தினை குளிர்ந்த காற்றால் வருடியது. அந்த சுகத்தின் இனிமையில் தன் கண்களை மூடி உலகத்தினை மறந்து ஒரு நிமிடம் லயித்தார். அந்த சாலையைக் கடந்த ஒரு நிமிடம் சங்கருக்கு 50 வருடம் தவம் இருந்து பெற்ற ஒரு சுகத்தைக் கொடுத்தது. அந்த சுகத்தினூடே சடாரென்று ஒரு கதைக்கான கரு மனதில் கண நேரத்தில் சுழன்று சென்றது. தூக்கத்தில் கனவு கண்டு விழிப்பவன் போல திடீரென்று கண் விழித்துப் பார்த்தவர். மறுபடியும் கண்ணை மூடி கதையை மனதிற்குள்ளே விவரிக்க முயன்றார். தன் மனதிற்குள்ளேயே கதையை விரிவுபடுத்திக்கொண்டார். கண் மூடியிருந்தாலும் அவர் எண்ண ஓட்டத்தை அவருடைய புருவம் அவ்வப்போது சுருங்கியும் விரிந்தும் காட்டிக் கொண்டிருந்தது.



80 பக்க தமிழ் கட்டுரை நோட்டு... 30 பக்கமே எழுதப்பட்டிருந்து... மாதவனுக்கு பள்ளி விடுமுறையாதலால் அந்தக் கட்டுரை நோட்டு அவனுக்கு உபயோகப்படாது என்று தோன்றியது... இருந்தாலும் அவனிடம் ஒரு வார்த்தைக் கேட்டு விடுவோம் என்று மாதவனை அழைத்தாh.

'என்;னப்பா?'

'இந்த நோட்டு உனக்கு உபயோகப்படுமா?' கட்டுரை நோட்டைக் காண்பித்தார்.

'இல்லப்பா'

'சரி நான் பயன்படுத்திக்கிறேன்'

'ம்ப்பா...' ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான். வெளியில் கிரிக்கெட் பேட்டும் பாலுமாக நண்பர்கள் அவன் விடுதலைக்காகக் காத்திருந்தனர்.

சங்கர் அந்த நோட்டைத் திறந்து பார்த்தார். 'ஆறு தன் வரலாறு கூறுதல்'. சங்கருக்கு இளமைக் காலம் சுழன்று சென்றது. தானும் சிறு வயதில் 'ஆறு தன் வரலாறு கூறுதல்' கட்டுரை எழுதியிருந்ததை நினைவு கூர்;ந்தார். நல்லவேளை தன் மகனுக்கும் ஆற்றினை பார்க்கும் பாக்கியம் இருக்கிறது. பேரப் பிள்ளைக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை என்று எண்ணியவாறே... கதையைத் தொடங்குவதற்கு அந்தக் கட்டுரை நோட்டின் வெற்றுப்பக்கத்தைத் திருப்பினார்.

கதையின் தலைப்பை எழுத வேண்டும்... சரி.. அதை கடைசியில் எழுதிக் கொள்வோம்...

அந்தக் கட்டுரை நோட்டின் கடைசிப் பக்கத்தைத் திருப்பினார். அவர் யோசித்தக் கதைகளில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும் என்று நினைத்தவற்றை மறந்து விடாமல் இருப்பதற்காக சிறு சிறு குறிப்புகளை எழுதினார். அடுத்தபடியாக அந்தக் குறிப்புகளை வரிசைப் படுத்த வேண்டும். எந்தக் குறிப்புகளை எங்கே சேர்க்க வேண்டும். ஏதேனும் குறிப்பு உறுத்தலாக இருக்குமா அதனை நீக்க வேண்டுமா என்று தீர்மானிக்க வேண்டும்.

'என்னங்க கருவேப்பிலைய ஃப்ரிட்ஜ்ல வைக்க மறந்துட்டேன்' எடுத்து வைச்சிருங்க...

'சமையல்கட்டிலிருந்து மனைவி கண்ணம்மாவின் குரல் டிவி சத்தத்தையும் தாண்டி ஒலித்தது'

கவனம் முழுவதும் வரிசைப்படுத்த வேண்டும் என்று இருந்ததால்... அரைகுறையாக காதில் விழுந்ததை பொருட்படுத்தாமல் பேனாவின் மூடியைத் திறந்தார் சங்கர்.

'சொன்னது காதில விழுதா.... இல்லையா....' சத்தம் இரண்டு மடங்கு அதிகமாக எழுந்தது... சங்கரின் சிந்தனையை உலுக்கி சர்ரென்று கோபத்தை மூட்டியது.

'என்ன?'

'ஏன் என்ன கேட்டேன்னு தெரியாதா..?'

விறுவிறுவென்று சென்ற சங்கர் ஃபிரிட்ஜை திறந்து பார்த்தார். ரொம்ப நாளாக உள்ளே அழுகி மாதுளை வாயைப் பிளந்து கொண்டு தெரிந்தது. கண்ணை மூடி இருக்கும் பக்கம் திருப்பினார். ஒரே ஒரு முறை மட்டும் திறக்கப்பட்டு ஒரு வருடமாக ஃபிரிட்ஜிலேயே குடியிருக்கும் பேரிட்சை பாக்கெட்டும், hம் டப்பாவும் மேலும் கோபத்தை கூட்டியது. மறுபடியும் இடது பக்கம் தலையைத் திருப்பினார். ஆதில் சருகு போன்று உள்ள கருவேப்பிலைகள் என்னைத் தூக்கிக்கோ என்பது போல் அவரைப் பார்த்தது. வேக வேகமாக அந்தக் கறிவேப்பிலையை எடுத்து வந்து கண்ணம்மா முன் வேகமாக நீட்டினார்'

'என்னது இது?'

'கறிவேப்பிலை..'

'ஏன் என் தலையில வையேன்....'

கருவேப்பிலையை சற்று உயர்த்துவதுபோல் உயர்த்தி திரும்பவும் கீழே கொண்டுவந்தார்.

'நினைச்சேன், நீ இததான் பண்ணுவன்னு....நான் உன் கிட்ட என்ன கேட்டேன்?'

'நீதானேடி... ஃபிரிட்ஜில இருக்க கருவேப்பிலையை எடுத்து வரச் சொன்ன?'

'உன் காதுல ஈயத்த காய்ச்சி ஊத்த....என்னத்தத்தான் கவனிக்கிறியோ.... வெளியில இருக்கிற கருவேப்பிலையை...'

'கறிவேப்பிலை...'

'இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை... கறிவேப்பிலையை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கச் சொன்னேன் ஐயா... உள்ள கிடக்கிறத என் தலையில வைக்கச் சொல்லலை...

சங்கர் எதுவும் பேசாதவறாய் காய்ந்த கறிவேப்பிலையை குப்பைத் தொட்டியில் போட்டார் மனைவியைக் கவனித்துக் கொண்டே ? இல்லையென்றால் அதிலும் வேறு ஏதேனும் மாற்றுக் கருத்து வந்து விடக் கூடாது அல்லவா?;

மறுபடியும் எழுதலாம் என்று ஆரம்பித்த போது தொலைக்காட்சியில் செய்தி துவங்குவதற்கான சத்தம் கேட்டது. அப்படியே மூடி வைத்தார் சங்கர்.

செய்தி முடிந்த வேளையில் சாப்பிட்டுவிட்டு மறுபடி ஆரம்பிக்கலாம் என்று நினைத்த சங்கரை பால்ய நண்பர் ஆறுமுகம் வரவும் அவருடன் கிளம்பி வெளியே சென்று விட்டார். என்னதான் நண்பருடன் வெளியே அளாவிலானும் அவருடைய எண்ணம் முழுவதும் கதையை முடிக்க வெண்டும் என்ற எண்ணத்துடனே  இருந்தது.

அனைவரும் உறங்கியவுடன் எழுதலாம் என்று நோட்டைக் கையில் எடுத்தார். லைட்டை ஆஃப் பண்ண சொல்லி தூக்கத்தலிருந்தபடியே மகன் செல்வா எரிச்சலுற்றான். உடனே எழுந்து உட்கார்ந்து எழுதுவதற்காக வீட்டின் வெளியே வந்து லைட்டை ஆன் செய்தார் ஒரு திண்ணையில் சங்கரின் அப்பா தூங்கிக் கொண்டிருந்ததால் மறு திண்ணையில் உட்கார்ந்து எழுத எத்தனித்தார்...

'இந்த நேரத்தில என்னடா பண்ற?'

திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தவர் எதிரில் வெற்றிலையை மடித்து வாயில் போட்டுக் கொண்டே அவர் தந்தையை கவனித்தார்.

'தூங்கலையாப்பா?'

'எங்கடா, தூக்கம் வருது வயசாயிபோச்சுல... இனிமே இந்தக் கட்டை நிம்மதியா கடைசி தூக்கம் தூங்கறவரைக்கும் தூக்கம் இல்லாமத்தான் காலத்தைக கழிக்கணும்;, சரி நீ என்ன பண்ற ஏதாவது கணக்கு எழுதறியா?'

'இல்லப்பா... கதை ஒண்ணுத் தோணுச்சு, அதான் எழுதலாம்னு...'

கேட்டமாத்திரத்தில் அப்பா ஒன்றும் சொல்லாமல் வாயைக் கொப்பளித்துவிட்டு படுத்துக் கொண்டார். பாவம், அவரும் எப்படியாவது சங்கரின் கதையை பத்திரிக்கைகளில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு தான் இருந்தார். ஆனாலும், அவருக்கும் அந்த பாக்கியம் இன்னும் கிட்டவில்லை. இவன் சிறுவயதில் எப்படி ஆர்வத்தோடு இருந்தபோது சங்கரை ஊக்குவித்தாரோ அதே போலத்; தான் இப்போதும் இருக்கிறார்? ஆனாலும் சங்கரால் இப்போதும் கதையைத் தொடர முடியவில்லை...? என்ன செய்வது அப்பாவின் குறட்டை சத்தத்தின் மத்தியில் எழுதுவதற்கான சிந்தனையைவிட அப்போது ஏற்பட்ட மனஅழுத்தத்தை எப்படி சமாளிப்பது என்ற குழப்பத்தில் வீட்டிற்குள் சென்று படுத்துத் தூங்கிவிட்டார் சங்கர். அவருடைய பல பிரச்சனைகளை தீர்க்கும் ஆயுதமாக பல சமயங்களில் அவருடைய தூக்கம் மட்டுமே இருந்துள்ளது.

பதினைந்து நாட்கள் கடந்து விட்டது. ஒருவழியாக பல சிரமங்கள், இடையூறுகள் மத்தியில் ஒரு வழியாகக் கதையினை எழுதி முடித்து விட்டார் சங்கர். அதனை மகன் செல்வா புத்தகங்கள் வைத்திருக்கும் அலமாரியில் மற்ற புத்தகங்களின் மேல் வைத்துவிட்டு நூலகத்தை நோக்கி நடையைக் கட்டினார்.

அந்த ஊரில் இருக்கும் நூலகத்திற்கு இவருடைய வயதினை ஒத்தவர்கள் தான் தவராகச் செல்கின்றனர். அங்கு உள்ள மத்த புத்தகங்களைப் படிக்கின்றனரோ இல்லையோ அனைத்து செய்தித்தாள்களையும் புரட்டி முடித்துவிடுவர். அவ்வாறு அன்று நூலகத்திற்கு சென்று வார மற்றும் மாதாந்திர இதழ்களை தேடிப் பிடித்து அதன் முகவரிகளைக் குறித்துக் கொண்டார்.

மனதில் பெரிய உத்வேகம் அவருள் குடிகொண்டது. அவருடைய கால்கள் வீட்டை நோக்கி வேக வேகமாக நடையைக் கட்டின. வீட்டிற்கு வந்தால் அலமாரிகள் காலியாக இருந்தன. ஒரு புத்தகத்தையும் காணவில்லை கூடவே இவருடைய நோட்டும்....!

'செல்வாhhhh......!!!' ஆத்திரத்தில் கத்தினார் சங்கர்.

'என்னப்பா?'

'இங்க இருந்த நோட்டு எங்கடா?'

'இருப்பா.... வர்றேன்'

கையில் ஐந்தாறு மரவள்ளிக் கிழங்குகளை எடுத்து வந்து நீட்டினான்.

'என்னடா இது?'

'மரவள்ளிக் கிழங்கு விக்கிறவன் சைக்கிள்ல வந்தான்பா... அதான் அவன்கிட்ட நோட்டு புத்தகம்லாம் கொடுத்துட்டு இத வாங்கிட்டேன். நான்தான் அடுத்த வகுப்பு போறேன்ல இனிமே இது எதுக்கு?'

'அறிவு கெட்ட மூதேவி....' என்று கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டார்.

'என்னாச்சுடா...' கேட்டுக்கொண்டே சங்கரின் நண்பர் வீட்டிற்குள் நுழைந்தார்.

'இந்தப் பய என்ன காரியம் பண்ணி வைச்சிருக்கான் பாரு...' என்று சொல்லிக் கொண்டே மகனின் பக்கம் திரும்பினார்.  செல்வா வாசல் பக்கம் தலைதெறிக்க ஓடி மறைந்தான்.

'என்னடா... ஏன் போட்டு அடிச்சிகிட்டு இருக்க... பொதுவா நீ கையெல்லாம் ஓங்க மாட்டீயே... இன்னைக்கு என்னாச்சு?'

'ஆதங்கத்துல கோபப்பட்டு அடிச்சிட்டேன்டா... இந்த முறை கதை நல்லா வந்திருந்தது. ஆனால், அதை மரவள்ளிக் கிழங்குக்கு போட்டுட்டான்'

'சரி விடுடா... கதைதான் உனக்குத் தெரியும்ல... மறுபடி எழுதிட வேண்டியதுதானே?'

'ஹும்... எவ்வளவு கதை தெரியுமா? என் மனதில் உதித்தாலும் எழுத முடிவதில்லை. எழுதினாலும் பத்திரிக்கைக்கு அனுப்பினால் அதன் நிலை என்னவென்றே தெரிவதில்லை. இந்தக் கதையாவது நான் எழுதி முடித்துவிட்டு தொலைத்து விட்டேன்.. பல கதைகள் நான் எழுதாமலேயே தொலைத்து விட்டேன்... என் நினைவில் தோன்றி மறைந்த பல கதைகள் ஒரு வருடம் கழித்தோ அல்லது அதன் பின்னரோ ஏதோ ஒரு வடிவில் இன்னொருவர் வழியாக தோன்றி அதனை உலகமே பெருமிதமாக நினைக்கும் போது அருமையாக கோல் போடும் வாய்ப்புக் கிடைத்தும் பயன்படுத்தாத கால்பந்து வீரரைப் போல்தான் உணர்கிறேன். ஒரு காகம் கூட தான் தின்ற விதைகள் இன்னொரு இடத்தில் விழுந்து மரமாக பரிணமிக்க வைக்கின்றது. ஆனால், என் கதையும் அப்படித்தான் என் கதைக் கருவினை இன்னொருவருக்கு தோன்றி எங்கோ ஒருவர் அதே சிந்தனையை பிற்காலத்தில் உருவாக்குவது என் விதை வேறு எங்கோ முளைப்பதைப் போன்ற எண்ணம். ஆனால், அது என்னுடையாக விதையாக இருந்தது என்பதை சொல்வதற்கு எனக்கு உரிமையில்லை.ஒன்றை பெறுவதற்கு எதையாவது இழந்து தான் ஆக வேண்டியது கட்டாயமானதாக இருக்கிறது....' சொல்லும் போது சங்கரின் கண்களில் இருந்து எட்டிப் பார்த்த கண்ணீர் துளி சங்கர்; கதை போலவே வெளியே வர மனதில்லாமல் கண்ணிற்குள்ளே பரந்து கரைந்தது.