திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-104:
திருக்குறளில் அரசியல்:
திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம், அரசியலில் குற்றங்கூறாமை என்ற அதிகாரத்தில் இருந்து அரசியல் கருத்துக்களை கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் பெரியாரை துணைக்கோடல் என்ற அதிகாரத்தில் அரசியல் சார்ந்த கருத்துகளை திருவள்ளுவர் என்ன குறிப்பிடுகிறார் என்பதனைப் பார்ப்போம்.
இதில் தலைப்பினை வைத்து 2000 ஆண்டுகளுக்கு, நமது தெய்வப்புலவர், முன்பே பெரியார் என்று ஒருவர் வருவார் அவர் தமிழ்நாட்டில் பல சீர்;;திருத்தங்களைச் செய்வார். அவரை துணையாகக் கொள்ளுங்கள் என்று தீர்க்கதரிசனம் உரைத்துள்ளார் என்று எண்ணிவிட வேண்டாம். ஆனால், தன்னுடைய கருத்துக்களை உள்வாங்கியவர்கள் அனைவரும் பெரியாராக உயர்ந்திடுவர் என்பதனை நிச்சயம் தீர்க்கமாக உணர்ந்திருப்பார். இல்லையென்றால், இதோ இன்று போகிப் பண்டிகை, பல இலக்கியங்கள், இலக்கண நூல்கள், தமிழ் பாரம்பரியங்கள், மருத்துவம் என்று பலவும் ஓலைச்சுவடியில் இரகசியமாகவும் தொடர் தொடராக குடும்பம் குடும்பமாக கடத்தப்பட்டும் வந்த பல ஓலைச் சுவடிகள் தீயில் கருகின. ஆயினும், அதையெல்லாம், கடந்து, எங்கோ ஓலைச் சுவடியில் பாதுகாக்கப்பட்டு, கம்பராமாயணம், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி என்று பல இலக்கியங்களிலும் ஆங்காங்கே திருக்குறள் குறிப்புகள் எடுத்தாளப்பட்டும் கடந்து வந்திருந்தது என்றால், எவ்வளவு பெரிய பொக்கிஷமாக மக்கள் இதனை உணர்ந்திருப்பர். தமிழ் ஆர்வலர்கள் கடந்த 100 ஆண்டுகாலத்தில் இதற்காக தீவிரமாக உழைத்ததால், இன்று பல வடிவங்களில் நாம் திருக்குறளை அனுபவதித்து மகிழ்கின்றோம். இவையெல்லாம் நடந்ததற்கு சரியான பெரியார்கள் தான் காரணம்.
ஆம், அவர் பெரியார் என்றுக் குறிப்பிடுவது. வெறும் வயதி;ல் மூத்தவர்கள மட்டும் குறிப்பிடுவதில்லை, மாறாக, அறிவு, ஒழுக்கம், அனுபவம் மற்றும் துணிச்சல் மிக்க ஆலோசகர்களைக் குறிக்கிறது. ஒரு தலைவன் தன் அதிகாரத்தைத் தக்க வைக்கவும், மக்கள் நலன் காக்கவும் இத்தகையோரைத் துணையாகக் கொள்ள வேண்டும் என்கிறார்.
சரி, இனி திருக்குறள் வாயிலாக சென்று பார்ப்போம்..
முதல் குறளில்,
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல் -441 என்கிறார்.
அறத்தினை திறம்பட நுண்மையாக அறிந்தவராக முதிர்ந்த அறிவுடையவரின் நட்பினை கொள்ளும் திறன் அறிந்து ஆராய்ந்து அவரைத் துணையாகக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் திருவள்ளுவர். அவ்வாறு நட்பு கொள்வது என்பது வெறுமனே நட்புடன் இருப்பதில்லை, அது ஒரு மிகப் பெரிய அரசியல் முதலீடு ஆகும். தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற மமதை இல்லாமல், திறனுடைய பெரியோரின் அறிவுரையை ஏற்பது, தக்க சமயத்தில் உதவும்.
ஏன் பெரியோரைத் துணையாகக் கொள்ள வேண்டும்? அவரால் ஆலோசனை தவிர வேறு என்ன முக்கியமாகச் சொல்ல முடியும்? அனுபவம் எப்படி அரசியலுக்கு உதவும் என்று நீங்கள் ஒரு வேளை நினைக்கலாம். அடுத்தக் குறளில் சொல்கிறார் பாருங்கள்.
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல் -442 என்கிறார். இதனை விளக்கும் முன், ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். நமக்கானவர் யார்? ஏன்ற கேள்விக்குப் பதில், நமது கடினமான காலங்களில் நம்முடன் யார் துணையாக நமக்கு ஆதரவாக இருக்கிறார்களோ...அவர்களே நமக்கானவர்கள் ஆவார். வசதி வாய்ப்புகள் மற்றும் ஆடம்பரம் இருக்கும் போது நம்மோடு கூடி மகிழ்பவர்கள் நமக்கானவர்கள் இல்லை. அதே போல் தான், பல பெரியோர்கள் அந்தக் காலத்தில் அரசர்களாக இருந்தாலும் சரி, இந்தக் காலத்தில் ஆட்சியாளர்களாக இருந்தாலும் சரி, எத்தகைய துன்பம் நேரினும் ஆட்சியாளர்களோடு தோளோடு தோளாக நிற்கின்றனர். சிறைக்கும் சென்றுள்ளனர். இப்படிப்பட்டவர்கள் பொறுப்பில் இருக்கும் போது பொறுப்புடனும் செயல்படுகின்றனர். இவர்கள் ஆட்சியாளர்களுக்குக் கிடைக்கக்கூடிய மிகப்பெரிய அரண் ஆகும்.
இது போன்ற பெரியவர்களையே, திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். அதாவது, ‘வந்த துன்பங்களை அறிந்து அதனைப் போக்கி, மேலும், துன்பங்கள் வராமல் காக்கின்ற ஆற்றல் மிக்க பெரியவர்களைப் போற்றித் துணையாகக் கொள்ள வேண்டும் என்கிறார். இவர்கள்
எது ஒருவனுக்கு வலிமை? மல்யுத்தத்தில் எதிரியுடன் நேருக்கு நேர் சண்டை செய்வதா? தன்னை விட எளியவனை தொடர்ந்து ஆளுமை செலுத்தி நசுக்குவதா?
உடல் வலிமை, மன வலிமை ஆகியவை ஒரு ஆட்சியாளருக்கு முக்கியமான அம்சம் ஆனால், அதனிலும் வலிமை என்பது என்னவென்று திருவள்ளுவர் சொல்கிறார் என்பதைப் பார்ப்போமா?
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல் -443 என்கிறார்.
அதாவது, துறைப் பெரியவர்களுக்கு அவர் விரும்புகின்றவற்றைச் செய்து, அவரைத் தமக்கு உரியவராகச் செய்து கொள்வது அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும் என்கிறார். இத்தகையோரைப் பெறுவது எல்லா வலிமைகளையும் விட ஒரு ஆட்சியாளருக்கு மிகப் பெரிய வலிமையாகும்.
No comments:
Post a Comment