திருக்குறள் காட்டும் தொழிலும் பொருளீட்டு முறைமையும்
தொழில் செய்யத் தொடங்கி, அறவழியில், பொருள் ஈட்டல், தொழிலுக்கு உகந்தது என்றும், அதன் வழி வந்த பொருளே, புதிய வேலை உருவாக்கி, தொழில்நுட்ப முன்னேற்றம் கண்டு, உலகளாவிய போட்டி திறன் உருவாக்கி, புதிய கண்டுபிடிப்பிற்கு வித்திட்டு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை பெற்று, சமூக சமத்துவம் தந்து, நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கும், நிலைத் தன்மைக்கும், பயன்தரும் என்பதை உலகிற்கே எடுத்துரைக்கிறது திருக்குறள்.
இயல் ஒன்று தொழில்:
ஏந்த ஒரு பொருளாதாரத்திலும் பொருளாதார நடவடிக்கையின் கணிசமான பகுதிக்கு தொழில்கள் இன்றியமையாதவை. வாழ்க்கை என்பது ஓர் அனுபவமாக இருக்கலாம். ஆனால், அதனை அனுபவிக்க சில அடிப்படை இலட்சியங்கள் உள்ளன என்பதைத் திருக்குறள் தெளிவாக எடுத்துரைக்கிறது.
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு- 247.
உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லை அதுபோல பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லை என்கிறார் திருவள்ளுவர்.
தொழிலைத் தேர்ந்தெடுத்தல்:
ஒரு செயலைத் தொடங்குகிறவன், செயல்முறை விளக்கத்தினை முன்பே அதைச் செய்து அறிந்தவர்களிடம் தெளிவாகக் கேட்டு செயலாற்றுதல் சிறப்பாகும்.
செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல் - 677
செயலைச் செய்கின்றவன் செய்ய வேண்டிய முறை, அந்தச் செயலின் உண்மையான இயல்பை அறிந்தவனுடைய கருத்தைத் தான் ஏற்றுக் கொள்வதாகும் என்கிறார்.
தொழில் செய்ய இடம் மற்றும் காலமறிதல்:
செயலுக்குத் தேவையான இடத்தையும், காலத்தையும் முறையாகத் தெரிவு செய்ய வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.
ஏண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின் -494
தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலை நெருங்கிச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்து விடுவார்.
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின் -484
ஒரு செயலை முடிப்பதற்கு ஏற்ற காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகவே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும் என்கிறார் திருவள்ளுவர்.
மூலதனமும் செய்யும் கருவியும்:
முதலிலார்க்கு ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை – 449
முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அது போல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை என்கிறார்.
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை -758
தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு ஒருவன் செயல் செய்தல், மலையின் மேல் ஏறி, யானைப் போரைக் கண்டாற் போன்றது என்கிறார் திருவள்ளுவர்.
தொழில் செய்வதற்குரிய கருவிகளையும், காலத்தையும், செய்யும் முறை, இந்தச் செயலால் ஏற்படப் போகின்ற அரிய பயன் ஆகியவற்றை திட்டமிட வேண்டும்.
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு – 631
செயலுக்கு உரிய கருவியும், ஏற்ற காலமும், செய்யும் வகையும், செய்யப்படும் அரிய செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன் என்கிறார்.
மேலும்,
அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின் - 483
செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய கருவிகளுடன் ஏற்ற காலத்தையும் அறிந்து செய்தால், அரிய செயல்கள் என்பவை உண்டோ? ஏன்கிறார் திருவள்ளுவர்.
நன்றி:
முனைவர் வெ. கீதாமீனாட்சி, பட்டதாரி ஆசிரியர் கணிதம், அரசு உயர்நிலைப்பள்ளி, கேகே நகர், திருச்சி
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி
No comments:
Post a Comment