திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-67:
திருக்குறளில் தொழிலாளர் மேலாண்மை:
மேலாண்மைக் கோட்பாடுகளை 2000 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறளில் திருவள்ளுவர் வழங்கி இருக்கிறார். இவர் வகுத்த மேலாண்மைக் கோட்பாடுகள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடியவை. ஆராய்ந்து செயலைத் தேர்ந்தெடுத்து, திட்டமிட்டுச் செயலை தகுதியானவரிடம் ஒப்படைத்து, அறிவுடையோரின் நட்பை பேணி, தீமை செய்யாது பொருள் ஈட்ட வேண்டும் என்று மனித சமுதாயத்திற்கு வழிகாட்டுகிறது திருக்குறள்.
திருக்குறள் உணர்த்தும் முகாமைத்துவக் கருமங்கள் கணித்தல்:
கணித்தல் என்பது, கடந்த கால நிகழ்வுகள், நிகழ்காலப் போக்குகள் ஆகியவற்றின் அடிப்படையில் எதிர்காலத்தைத் தோராயமாகக் கணக்கிடுதல் ஆகும். கணித்தல் இல்லாமல் ஒரு திட்டத்தின் வாய்ப்புகளைப் பற்றி அறிந்து கொள்வது கடினம்.
தெரிந்து செயல்வகை என்ற அதிகாரத்தில் காணப்படும் பின்வரும் குறட்பாக்கள் கணித்தலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன.
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழி பயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல் - 461
ஒரு செயலைத் தொடங்குமுன் அதனால் அழிவதையும், அழிந்தபின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.
தெளிவிலதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர் -464
இழிவு தருவதாகிய குற்றத்திற்கு அஞ்சுகின்றவர், இன்ன ஊதியம் பயக்கும் என்னும் தெளிவு இல்லாத செயலைத் தொடங்க மாட்டார்.
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும் - 535
இடையூறுகளை முன்னே அறிந்து காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வரும்போது தன் பிழையை நினைந்து இரங்குவான். எனவே, தரவுகளைச் சேகரித்துச் சரியாக கணிப்பது, ஒரு திட்டத்தின் முன்னேற்றத்தை ஊக்குவிக்க உதவும்.
திட்டமிடுதல்:
திட்டமிடுதல் என்பது மேலாண்மையின் மிக முக்கியமானக் கூறுகளுள் ஒன்று. இது நிறுவனத்தின் குறிக்கோள்களை அடைவதற்கானப் பாதையை முன்கூட்டியே வகுத்து, நிறுவனத்தின் செயல்பாடுகளை வழி நடத்துவதற்கான தளமாகச் செயல்படுகிறது. கூன்ட்ஸ், ஓ’டோனலின் ஆகியோர் தங்கள் நூலில் ‘திட்டமிடுதல் என்பது, என்ன செய்ய வேண்டும், எப்பொழுது செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பனவற்றை முன்கூட்டியே தீர்மானிக்கும் செயல். அது நாம் இருக்கும் இடத்திற்கு நாம் செல்ல விரும்பும் இடத்திற்கும் இடையிலான இடைவெளிக்கு ஒரு பாலமாக அமைகிறது என்று குறிப்பிடுகின்றனர். இந்தக் கருத்தை விளக்கும் குறட்பாக்கள் சிலவற்றை இப்பொழுது பார்க்கலாம்.
வகையறச்சூழாது எழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோர் ஆறு – 465
ஒரு செயலைச் செய்யக் கூடிய வகைகளையெல்லாம் முற்றும் ஆராயாமல் அச்செயலைத் தொடங்குவது, பகைவரை (போட்டியாளரை) மேன்மேலும் வலிமைப்படுத்த உதவும் வழியாகும்.
எண்ணித் துணிகக் கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு -467 செய்யத் தகுந்த செயலையும் வழிகளையும் எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும். துணிந்தபின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும் - 468
ஒரு செயலை முடிக்கும் வழி அறியாது தொடங்கினால், பலர் சேர்ந்து துணை செய்தாலும், அச்செயல் கெட்டுப் போகும் .சிறந்த திட்டமிடுதலின் மூலம், தொழிலாளர்களின் செயற்திறனை மேம்படுத்த முடியும் என்பதை வள்ளுவர் வலியுறுத்துகிறார்.
நன்றி: திருமிகு. மேனகாநரேசு, க்ளைன்ஸ்போரோ, நியூஜெர்சி
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி
No comments:
Post a Comment