கடந்த வாரம், தொழில் இயல், தொழிலைத் தேர்ந்தெடுத்தல், தொழில் செய்ய இடம் மற்றும் காலமறிதல் மற்றும் மூலதனமும் செய்யும் கருவியும் குறித்துப் பார்த்தோம்.
தொழில் செய்வதற்கானத் துணையை வினை செய்பவனைத் தேர்ந்தெடுத்தல்:
துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்- 651 என்கிறார் திருவள்ளுவர்.
அதாவது ஒருவருக்கு வாய்ந்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும், செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும் என்கிறார். ஆகையால்
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும் - 511 என்கிறார். அதாவது நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் ஆளப்படுவான் என்கிறார். ஆதலால் வினை செய்பவனை தேர்ந்தெடு என்கிறார்.
பயனாளர் மனத்தினை அறிதல்:
புயனாளரின் பண்புகைள ஆராய்ந்து, செயல் செய்ய வேண்டும் என்கிறார்.
நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை - 469 என்கிறார்.
அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவர்க்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால் நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும் - 128
தீய சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாக இருந்தாலும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும் என்கிறார்.
செயல் திறமை:
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வார்
திறப்பாட இலாஅ தவர் - 640
(செயல்களை செய்து முடிக்கும்) திறன் இல்லாதவர், முன்னே முறையாக எண்ணி வைத்திருந்தும் (செய்யும்போது) குறைவானவைகளையே செய்வர்.
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு - 634
(செய்யத்தக்க செயலை) ஆராய்தலும், அதற்குரிய வழிகளை ஆராய்ந்து செய்தலும், துணிவாகக் கருத்தைச் சொல்லுதலும் வல்லவன் அமைச்சன்.
செயல் திறமை உடையவனாக இருக்க வேண்டும் என்கிறார்.
தொழிலை தொடங்கிய பின்னர் பின்வாங்காமை:
உடைத்த்ம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர் - 473
தம்முடைய வலிமை இவ்வளவு என்று அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
ஏண்ணுவம் என்பது இழுக்கு - 467
செய்யத் தகுந்த செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும். துணிந்தபின் எண்ணிப் பார்க்கபலாம் என்பது குற்றமாகும்.
நடுவுநிலைமை:
நடுவு நிலைமையுடன் செயல்படுபவரின் வாணிகம் செழிப்புடனும் செம்மையுடனும் வளரும்.
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின் - 120
பிறர் பொருளையும் தம்பொருள் போல போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல வாணிக முறையாகும்.
அன்போடும் அறத்தோடும் நின்று பொருள் ஈட்டுதல்:
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை - 659
பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய்விடும், நல்வழியில் வந்தவை இழக்கப்பட்டாலும் பிறகு பயன் தரும்.
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை - 657
பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தைவிடச் சான்றோர் வினைத் தூய்மையோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது.
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை -656
பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்ற செயல்களை ஒருவன் செய்யக் கூடாது.
நன்றி:
முனைவர் வெ. கீதாமீனாட்சி, பட்டதாரி ஆசிரியர் கணிதம், அரசு உயர்நிலைப்பள்ளி, கேகே நகர், திருச்சி
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி