Wednesday, 9 April 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-64:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-64:

திருவள்ளுவரும் தொழிலாளர் நலமும்:
தொழிலாளி என்பவர் யார்?
ஒரு நபர் முதலாளியால் நேரடியாகவோ அல்லது முகவரின் மூலமாகவோ, முதலாளிக்குத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ, கூலி கொடுத்தோ அல்லது கூலி கொடுக்காமலோ, உற்பத்தி நடைமுறையில் அல்லது உற்பத்திக்குப் பயன்படும் இயந்திரங்களைச் சுத்தம் செய்து பராமரிப்பதில் அல்லது உற்பத்திக்குத் தொடர்புடைய வேறு எந்தச் செயலிலும் ஈடுபடுத்தப்பட்டால் அந்நபர் தொழிலாளி” என இந்தியத் தொழிற் சாலைகள் சட்டம் 1948ன் பிரிவு2 (ட) வரையறுக்கிறது. ஆனால் செந்நாப்போதர் தொழிலாளர் என்போர்,
1. தம் உடம்பையும் பிறர்க்குக் உரிமையாக்கி வாழ்பவர்
2. பிறர் பொருளைத் தம் பொருள் போல் போற்றிச் செய்பவர்
3. அறிவு, தோற்றப் பொலிவு, ஆய்ந்து தெளிந்த கல்வி செறிவைப் பெற்றுத் தூது உரைப்பவர். 
4. தன் அழிவுக்கு அஞ்சாமல் அரசனுக்கு நன்மை  தேடித்தரும் நல்ல தூதர்
5. தம் கையால் தொழில் செய்து உணவு தேடி உண்ணும் இயல்புடையவர்
6. உலகத்தின் அச்சாணி எனப்படும் உழுதொழில் செய்பவர்
7. பசி என்று இரவாமல் இரப்பார்க்குக் கொடுப்பவர்
8. ஞாலம் கருதி செயல்படுபவர் என வருணனை செய்கின்றார். 
‘தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் மிருகங்கள் போல் நடத்தப்படுகிற பாட்டாளி கூலி ஏழை மக்கள்தான் எனக்கு கண்வலியாய் இருப்பவர்கள். அவர்களை சம மனிதர்களாக ஆக்குவது தான் எனது கண ;நோய்க்குப் பரிகாரம் “ (விடுதலை 15.10.1967) என்று தந்தை பெரியார் கண்ணீர் வடிக்கிறார்.  இதனை
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சம் துணையல் வழி -1299
என்ற' தலைவியின் கூற்றானது பாட்டாளி கூலி மக்களின் துன்பங்களைக் கண்டுத் துயர் உறுவோருக்கும் அவர் தம் நெஞ்சமே துணையாக இல்லர்விட்டால் வேறு யார் துணையாக இருப்பார்? ஏன்னுமிடத்திற்குப் பொருந்துகின்றது. 
தொழிலாளர் நலனில் வள்ளவரின் புரட்சி:
‘முதலாளிக்கு ஏற்படும் இலாபத்தில் சரிபங்கு தொழிலாளிக்கும் கொடுக்க வேண்டும்; . தொழிலாளர்களால் தானே இலாபம் ஏற்பட்டது ஆகவே தொழிலாளிக்கும் இலாபம் கொடுக்க வேண்டும்”’தொழிலாளி மகன் தொழிலாளியாக இருக்கக் கூடாது என்பது எனது இலட்சியச் சொல்” என்றும் புரட்சி செய்கிறார் தந்தைப் பெரியார். ஆனால், வள்ளுவரோ,
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் 
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை -322 என்கிறார். கிடைத்த இலாபத்தைத் தொழிலாளர்களுக்குப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு, பல உயிர்களைக் காப்பாற்றுவது முதலாளியின் தலையாய அறமாகும் என்று அன்றே புரட்சி செய்துள்ளார். 
பரத்தூண் மரீஇ யவனைப் பசி என்னும்
தீப்பிணி தீண்டல் அரிது -227 என்கிறார் திருவள்ளுவர். இக்குறளில் பகுத்து உண் என்று வலியுறுத்துகின்றார். 
‘சமுதாய விளை பொருள் முழுவதும் தமது விளைபொருள் என்கிற முறையில் தொழிலாளர்களுக்குச் சொந்தமாகும். ஏனெனில், அவர்கள் மட்டுமே உண்மையாக உற்பத்தியாளர்கள்” என்னும் ரிக்கார்டோ தத்துவத்தின் செயல் பாட்டிற்கு வழிகோலியவர் வள்ளுவர் அவர்களே... இதனை
‘முதலிலார்க்கு ஊதிய மில்லை மதலையாம்”- 449 என்ற குறளில் உழைப்பவருக்கே உற்பத்திப் பொருள் சொந்தம் என்று உரைக்கின்றார். 
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

No comments:

Post a Comment