Wednesday, 23 April 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-66:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-66:

தொழிலாளர் சங்கத்தின் முன்னோடி திருவள்ளுவர்:
‘தொழிலளார்களுக்கும், முதலாளிகளுக்கும் இடையே உள்ள உறவுகளை ஒழுங்கு முறைப்படுத்துவதற்கு உருவாக்கப்படும் அமைப்பு தொழிற்சங்கம்” எனச் சட்டத்தில் பிரிவு 2(லீ) வரையறை செய்கிறது. இதனை,
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கனி – 118 என்னும் திருக்குறளில் நடுவுநிலைமை போற்றுவதே தொழிற்சங்கம் என்பதன் அழகாகும் என்று உரைக்கும் திருவள்ளுவர் தொழிற்சங்கத்தின் முன்னோடி என்றால் மிகையாகாது!. வள்ளுவரின் இக்குறளின் வழிநின்று 1926ஆம் ஆண்டு இந்தியாவில் தொழிற்சங்கங்கள் சட்டம் இயற்றப்பட்டன. 
தொழிலாளர் நலனிற்கு வள்ளுவரின் சட்டங்கள்:
தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் வேலை நிலைமைகள், வேலை நேரம், விடுமுறை நாட்கள், உடல் ஆரோக்கியம், ஊதியக் குறைவு, உழைப்பு சுரண்டல் போன்ற செயல்களில் தொழிலாளர்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு எதிராக பாரதிதாசன் கொதிப்படைந்து,
‘கந்தை யணிந்தோம் இரு
கையை விரித்தெங்கள் மெய்யிiணுப் போர்த்தோம்”
‘வதிக்கிப் பிழிந்தே சொத்தை
வடி கட்டி எம்மைத் துடிக்க விட்டீரே!”
‘கப்பல்களாக இனித்
தொழும்பர்களாக மிதித்திட வேண்டாம்”
என்று பாடியுள்ளார். 
ஆனால், அன்றே திருவள்ளுவர் தொழிலாளர் கொடுமைகளை களைந்து வாழ்க்கை நலனைப் பாதுகாக்கும் சட்டத்தின் முன்னோடியாக செயல்பட்டுள்ளார். 
‘பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்”-528 தொழிலாளரின் அவரவர் சிறப்பை நோக்க வேண்டும் எனவும், ‘நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்-553” முதலாளி தொழிலாளரின் நன்மை தீமைகளை நாள்தோறும் ஆராய வேண்டும் எனவும், ‘குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்-544” தொழிலாளர்களை அன்போடு நடத்த வேண்டும் எனவும், ‘இறைகாக்கும் வைபக மெல்லாம் அவனை-547” தொழிலாளர்களை நீதி நேர்மையுடன் கையாள வேண்டும் எனவும், திருக்குறளில் யாத்துள்ளார். மேலும், குறள்கள், 542, 548,549 என்பதன் வாயிலாக முதலாளி தொழிலாளரின் நல வாழ்வில் செங்கோல் செலுத்தும் ஆட்சி முறைமையை விளக்குகின்றார். நம் அரசும், வள்ளுவப் பெருந்தகையின் வழியைப் பின்பற்றியே, தொழிலாளர்களின் நலவாழ்வை உறுதி செய்யும் அரணாக நின்று, தொழிற் சாலைகள் சட்டத்தை 1948 ஆம் ஆண்டு இயற்றியுள்ளது. 
சுருக்கமாக ‘பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்சால மிகுத்துப் பெயின்-475” என்று முதலாளிகளை எச்சரிக்கை செய்யும் நான்முகனார், தனது திருக்குறள் மூலம் ‘உலக வளர்ச்சியைத் தீர்மானிக்கும் தொழிலாளர்களின் நலம் காப்போம்” என்று தெளிவுபடுத்துகிறார். 

நன்றி:
திருமிகு. சி.லதா, முதுகலை ஆசிரியர், வரலாறு, அரசினர் மேல்நிலைப்பள்ளி பூவாளுர்,திருக்குறள் உலக நூல் திருவள்ளுவரின் தொழிலியற் சிந்தனைகள், தொகுத்தவர் முனைவர் தாமரை, பூங்கோதைப் பதிப்பகம், 2025

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

Sunday, 20 April 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-65:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-65:

தொழிலாளர் ஒற்றுமைக்கு வள்ளுவர் குறள்கள்:
நாளொன்றுக்கு 18 மணி நேரம் வேலை வாங்கும் முதலாளித்துவ கொடுமை இருந்தது, ‘உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள், நீங்கள் இழப்பதற்கு எதுவுமில்லை, கை விலங்குகளைத் தவிர” என்று முழக்கமிட்டார் காரல் மார்க்ஸ், இதனை
‘இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிகலூக்கும் தன்மை யவர் -855 என்று ஒற்றுமையை யாராலும் வெல்ல முடியாது என்கிறார். 
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்N கஉள -527 என்று முழக்கமிடுகிறார். காக்கைப் போலத் தொழிலாளர்கள் ஒன்றுபட்டதால் தான் 8 மணி நேர வேலை,  8 மணி நேர பொழுபோக்கு, 8 மணி நேர ஓய்வு கோரிக்கை போராட்டங்கள் வெற்றி பெற்றது. 
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல் -795
என்னும் குறளில் தொழிலாளர்களின் சமூக அவலங்களை இடித்துரைக்கும் உலகப் பெரியோர்களின் தொடர்பைப் பற்றுக என்றும் குறள்கள் 441, 442, 447 என்பதன் வாயிலாகவும் வழிகாட்டும் வள்ளுவர் ‘உலகின் முதல் சமூக சீர்த்திருத்தவாதி” என்று போற்றப்படுகிறார். 
உழைப்போடு ஏற்படக்கூடிய ஆபத்துகள் வழக்கமானது எனத் தொழிலாளி கருத வேண்டும் என்பதனால் இழப்பீடு தரப்படவி;ல்லை. இதனை,
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை -315
எனக் கூறும் திருவள்ளுவர் அவர்கள் 316, 317, 318, 319 மற்றும் 320 குறள்களின் வாயிலாகவும் பிற உயிர்களை துன்பம் செய்யக் கூடாது என்று  அறிவுறுத்துகின்றார். 
இத் தெய்வப்புலவரின் வழிநின்றே ‘வேலை செய்கின்ற போது நிகழக் கூடிய விபத்தினால் விளைகின்ற சேதங்களுக்காக, தொழிலாளருக்கு வேலையளிப்போன் இழப்பீடு தர வேண்டும்” என்று இந்தியத் தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டம் 1923 ஆம் ஆண்டு இயற்றப்பட்டு சமூக நீதி பாதுகாக்கப்பட்டது. 
திருவள்ளுவர் கூறும் தொழிலாளி முதலாளி உறவுகள்:
முதலாளி தொழிலாளி உறவுகள் நல்லுறவாக அமையப் பெறின் தொழில்வளம் பெருகும், அமையப் பெறாவிடின் தொழில் நலிவுறும் என்பதனை
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் -72
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிரிக்கு – 73
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் - 74 என்னும் குறள்களில் முதலாளி, தொழிலாளி உறவுகள் பற்றுள்ளத்தோடு இணைந்திருப்பதன் பயனை எடுத்தியம்புகிறார் திருவள்ளுவர். 
மேலும்,
என்பிலதனை வெயில் போலக் காயுமே -77
அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கை வன்பாற்கண்-78 என்னும் குறள்களிலும் 78, 79 குறள்களிலும் முதலாளி தொழிலாளி உறவுகள் நல்லுறவாக அமையப் பெறாத நிலையில் விளையும் சீர்கேடுகளையும் விளக்குகின்றார். 
வள்ளுவர் நேசிக்கும் முதலாளி தொழிலாளியின் கடமைகள்:
உம்மைப் போலவே அயரையும் நேசி என்கிறார் இயேசு கிறிஸ்து. முதலாளி தொழிலாளி ஒருவொருக் கொருவர் அண்டையிலிருப்பவர்கள். ஒருவர் இன்னொருவர் விரும்பியளிக்கும் ஒத்துழைப்பை நாடிப் பெற வேண்டும் என்றார் மகாத்மா காந்தி. இதனை முன்னரே
கடனறிந்து காலம் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை – 687
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு 
உறுதி பயப்பதால் தூது – 690
என்கிறார் வள்ளுவர். மேலும், 685, 686, 688,689 என்ற குறள்கள் வாயிலாகவும் தொழிலாளர்கள், முதலாளிக்கு ஈன வேண்டிய ஒத்துழைப்பை நல்குகிறார். மேலும்,
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை யென்று வைக்கப்படும் -388 என்று முதலாளி தொழிலாளருக்கு ஆற்ற வேண்டிய கடமைகளைக் குறள்கள் 386, 387, 389, 390 வாயிலாகவும் எடுத்துக் காட்டுகின்றார். 

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

Wednesday, 9 April 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-64:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-64:

திருவள்ளுவரும் தொழிலாளர் நலமும்:
தொழிலாளி என்பவர் யார்?
ஒரு நபர் முதலாளியால் நேரடியாகவோ அல்லது முகவரின் மூலமாகவோ, முதலாளிக்குத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ, கூலி கொடுத்தோ அல்லது கூலி கொடுக்காமலோ, உற்பத்தி நடைமுறையில் அல்லது உற்பத்திக்குப் பயன்படும் இயந்திரங்களைச் சுத்தம் செய்து பராமரிப்பதில் அல்லது உற்பத்திக்குத் தொடர்புடைய வேறு எந்தச் செயலிலும் ஈடுபடுத்தப்பட்டால் அந்நபர் தொழிலாளி” என இந்தியத் தொழிற் சாலைகள் சட்டம் 1948ன் பிரிவு2 (ட) வரையறுக்கிறது. ஆனால் செந்நாப்போதர் தொழிலாளர் என்போர்,
1. தம் உடம்பையும் பிறர்க்குக் உரிமையாக்கி வாழ்பவர்
2. பிறர் பொருளைத் தம் பொருள் போல் போற்றிச் செய்பவர்
3. அறிவு, தோற்றப் பொலிவு, ஆய்ந்து தெளிந்த கல்வி செறிவைப் பெற்றுத் தூது உரைப்பவர். 
4. தன் அழிவுக்கு அஞ்சாமல் அரசனுக்கு நன்மை  தேடித்தரும் நல்ல தூதர்
5. தம் கையால் தொழில் செய்து உணவு தேடி உண்ணும் இயல்புடையவர்
6. உலகத்தின் அச்சாணி எனப்படும் உழுதொழில் செய்பவர்
7. பசி என்று இரவாமல் இரப்பார்க்குக் கொடுப்பவர்
8. ஞாலம் கருதி செயல்படுபவர் என வருணனை செய்கின்றார். 
‘தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் மிருகங்கள் போல் நடத்தப்படுகிற பாட்டாளி கூலி ஏழை மக்கள்தான் எனக்கு கண்வலியாய் இருப்பவர்கள். அவர்களை சம மனிதர்களாக ஆக்குவது தான் எனது கண ;நோய்க்குப் பரிகாரம் “ (விடுதலை 15.10.1967) என்று தந்தை பெரியார் கண்ணீர் வடிக்கிறார்.  இதனை
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சம் துணையல் வழி -1299
என்ற' தலைவியின் கூற்றானது பாட்டாளி கூலி மக்களின் துன்பங்களைக் கண்டுத் துயர் உறுவோருக்கும் அவர் தம் நெஞ்சமே துணையாக இல்லர்விட்டால் வேறு யார் துணையாக இருப்பார்? ஏன்னுமிடத்திற்குப் பொருந்துகின்றது. 
தொழிலாளர் நலனில் வள்ளவரின் புரட்சி:
‘முதலாளிக்கு ஏற்படும் இலாபத்தில் சரிபங்கு தொழிலாளிக்கும் கொடுக்க வேண்டும்; . தொழிலாளர்களால் தானே இலாபம் ஏற்பட்டது ஆகவே தொழிலாளிக்கும் இலாபம் கொடுக்க வேண்டும்”’தொழிலாளி மகன் தொழிலாளியாக இருக்கக் கூடாது என்பது எனது இலட்சியச் சொல்” என்றும் புரட்சி செய்கிறார் தந்தைப் பெரியார். ஆனால், வள்ளுவரோ,
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் 
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை -322 என்கிறார். கிடைத்த இலாபத்தைத் தொழிலாளர்களுக்குப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு, பல உயிர்களைக் காப்பாற்றுவது முதலாளியின் தலையாய அறமாகும் என்று அன்றே புரட்சி செய்துள்ளார். 
பரத்தூண் மரீஇ யவனைப் பசி என்னும்
தீப்பிணி தீண்டல் அரிது -227 என்கிறார் திருவள்ளுவர். இக்குறளில் பகுத்து உண் என்று வலியுறுத்துகின்றார். 
‘சமுதாய விளை பொருள் முழுவதும் தமது விளைபொருள் என்கிற முறையில் தொழிலாளர்களுக்குச் சொந்தமாகும். ஏனெனில், அவர்கள் மட்டுமே உண்மையாக உற்பத்தியாளர்கள்” என்னும் ரிக்கார்டோ தத்துவத்தின் செயல் பாட்டிற்கு வழிகோலியவர் வள்ளுவர் அவர்களே... இதனை
‘முதலிலார்க்கு ஊதிய மில்லை மதலையாம்”- 449 என்ற குறளில் உழைப்பவருக்கே உற்பத்திப் பொருள் சொந்தம் என்று உரைக்கின்றார். 
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

Tuesday, 1 April 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-63:






திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-63:

திருவள்ளுவர் சுட்டும் தொழில்கள்:
‘பிறப்பினால் எவர்க்கும் -உலகில் பெருமை வாராதப்பா! சிறப்பு வேண்டுமெனில் -நல்ல செய்கை வேண்டுமப்பா!”என்கிறார் கவிமணி தேசிக விநாயகம் அவர்கள் இவர் திருக்குறளின் கீழ்க்கண்ட வரிகளில் உந்தப்பட்டு எழுதியிருக்க வேண்டும். 
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய் தொழில் வேற்றுமையான் -972 
அதாவது பிறப்பினால் அனைவரும் சமம், அவர்களில் செய்தொழில் நேர்த்தியால்தான் அவர்களின் சிறப்பு வேறுபடும் என்கிறார். 
நான் ஏற்கனவே திருக்குறளில் 65 வகையான தொழில்களை குறிப்பிட்டுள்ளார் என்று தெரிவித்திருந்தேன். அவற்றில் சிலவற்றைக் காண்போமா?
ஆசானில் இருந்து ஆரம்பிப்போம்...
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில் -394.
புலவரின் தொழிலினைக் குறிப்பிடுகிறார். எல்லோருடனும் மகிழ்ந்திருந்து ஒன்று சேர்ந்து இனி எப்போது இவ்வாறு உள்ளம் மகிழ பேசிக் களித்திருப்போம் என்று ஏங்க வைத்து பிரிவதுதான் புலவர் தொழிலாகக் குறிப்பிடுகிறார். 
வேந்தன் தொழில்:
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில் -549
குடிகளைப் பகைவர்களிடமிருந்து காத்தும், அவர்களுக்கு நன்மை செய்து பேணியும், குற்றங்களை நீக்கியும் முறை செய்தால் வேந்தனுக்குக் குற்றம் இல்லை. அதுவே அவன் தொழில் என்கிறார் திருவள்ளுவர். 
மேலும்
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் 
வல்வறிதல் வேந்தன் தொழில் - 582
எல்லோருக்கும் நிகழ்கின்ற எல்லாவற்றையும் எல்லாக் காலத்திலும், மிகவும் விரைவாக ஒற்றர்மூலம் அறிந்து கொள்ளுதல் வேந்தனுக்கு உரிய தொழிலாகும் என்கிறார். 
அறுதொழில்:
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் 
காவலன் காவான் எனின் -560
இதில் அறுதொழில் என்பதற்கு பலரும் பல்வேறுக் கருத்துக்களைக் குறிப்பிடுகின்றனர். சிந்தனைச் செம்மல் திரு.கு.ச. ஆனந்தன் அறுதொழில் என்பதற்கு உழவு, வாணிகம், ஓவியம், சிற்பம் (கல், உலோகம், மரம், சுதை, மண், தந்தம், சுண்ணம், வண்ணம்), கல்வி (வித்தை, அறிவியல், சாத்திரங்கள் மற்றும் நுண்கலைகள் மெழுகு போன்றவற்றால் செய்யப்படுபவை) எனக் குறிக்கின்றார். திருக்குறளார் வீ. முனிசாமி, உழவர், வாணிகர், ஆசிரியர், கம்மியர், கலைஞர், மருத்துவர் எனக் குறிப்பிடுகிறார். திரு. மழபாடி. ஆறு. இளங்கோவன் அவர்கள் அறுதொழில் என்பது துணிநெய்தல் தொழிலைக் குறிப்பிடுகிறார். குறைந்து துணி நெய்வோர் கூட நெசவுத் தொழிலின் அடிப்படையாம் நூலைக் கூட மறந்து விடுவர் என்று குறிப்பிடுகிறார்.
பேதைத் தொழில்:
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில் -833
பழிக்கு நாணாதிருத்தல், நோக்கத்துடன் செயல்படாதிருத்தல், எவரிடத்தும் அன்பற்று இருத்தல் என எதையும் ஒழுங்காகப் பேணாமலிருத்தல் பேதைகளின் தொழில் என்கிறார் திருவள்ளுவர்.
கும்கி:
வினையான் வினையாக்கிக் கோடல் நனைவுகள்
யானையால் யானையாத் தற்று – 678
ஒரு செயலைச் செய்யும் போதோ மற்றொரு செயலையும் செய்து முடிக்கும் திறன் யானையால் யானையைப் பிடிப்பது போன்றது என்கிறார். 
கப்பல் ஓட்டுதல் தேர் ஓட்டுதல்:
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து -496 என்கிறார்.
கடலில் நாவாய் செலுத்துல், நிலத்தில் பெருந்தேர் இயக்குதலையும் தொழிலெனக் குறிப்பிடுpறார். 
கொல்லுதல் கொல்லாமைதலை (35) கொல்லாமை கோறல் (321) வாணிகம் செய்தல் (120) பறவை வேட்டையாடல் வேட்டுவன் (274) மழித்தல் (280) மரம் ஏறுதல் (476) பாடுதல் இசைக் கருவிகள் இசைத்தல் (573) நகை செய்தல் (888) மருத்துவம் (950) விலங்குகளை வேட்டையாடுதல் (771) திருடுதல் (283,284) கூத்தாடுதல் (332), கேடான செயல்களை செய்தல் (201), உழவு அதிகாரம் 104 மற்றும் (212,14,872) நூல் நூற்றல் (1273), பறையறைதல் (1076, 1180) மரக்கலம் செய்தல் (1068), புணை (306), உளப்பணி (581), கள் இறக்குதல் விற்றல் (கள்ளுண்ணாமை அதிகாரம் 94), தேர் செய்தல் (667) களை எடுத்தல் (550), மண் சிற்பம் செய்தல் (407) ஆநிரை மேய்த்தல் (1228) இரும்பை வெட்டுதல் (821) வரைதல் எழுதுங்கால் (1285) ஆகிய தொழில்களும் திருக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி