Monday, 16 December 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 48:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 48:
பொழுதுகண்டு இரங்கல் :
கடந்த வாரம் கனவுநிலை உரைத்தல்; அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம்; பொழுதுகண்டு இரங்கல் அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். பொழுதுகண்டு இரங்கல் என்பது காதலரை பிரிந்த நிலையில் தலைவி மாலை பொழுதினைக் கண்டு வருந்தும் நிலையை உணர்த்துவதாகும். தன் தலைவனை பிரிந்திருக்கும் நிலையில் வருகின்ற ஒவ்வொரு மாலைவேளையும் தலைவிக்கு எவ்வளவு கொடுமையாக நகர்கின்றது என்பதனை திருவள்ளுவர் தலைவியின் பார்வையில் இருந்து விளக்குகின்றார். வாருங்கள் நாமும் சென்று பார்ப்போம்... 
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது -1221
தலைவரைப் பிரிந்திருக்கும் தலைவிக்கு ஒவ்வொரு நாள் மாலைப் பொழுதும் நரகத்தில் இருப்பது போல் நகர்வதை பின்வருமாறு உணர்த்துகிறார் திருவள்ளுவர்,
‘பொழுதே நீ மாலைக் காலமே அல்ல மாறாக காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிவால் கலங்கியிருக்கும் மகளிரின் உயிரை உண்ணும் முடிவு காலம்... நீ வாழ்க!”
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை -1222
மேற்காணும் குறளில், தன் பார்வையில் தலைவி பார்த்து அதற்காக வருத்தப்படும் நிலையை உணர்த்துகிறார். மிகுதியான துன்பத்தில் இருக்கையில் ஒருவருக்கு ஏற்படும் உளவியலை உணர்த்துகிறார் அய்யன். ‘ மயங்கிய மாலைப் பொழுதே என்னைப் போலவே நீயும் துன்பத்துடன் தோன்றுகின்றாயே, உன்னுடைய துணையும் என்னுடைய காதலர் போல இரக்கம் அற்றதோ?”
 பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும் -1223
மாலைநேர பொழுது தலைவர் இருந்தபோது எனக்கு நன்மை செய்தது இப்போது ஏன் துன்பளிக்கிறது என்று தலைவியின் வருத்தத்தைப் பதிவு செய்கிறார் பின்வருமாறு, ‘
என் காதலர் என்னுடன் இருந்தபோது பயந்து பசலை நிறத்தில் வந்த மாலைப் பொழுதானது இப்போது எனக்கு வருத்தும் ஏற்பட்டுத் துன்பத்தை மேன்மேலும் அதிகரிக்கும்படியாக நாளும் வருகின்றது.”
காதலர் இ;ல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும் -1224
மாலைப்பொழுது பயமுறுத்தும் மாலைப்பொழுதாக அமையுமோ? ஏவ்விதம்? காதலியின் கூற்றைக் கேளுங்கள், ‘காதலர் அருகில் இல்லாத காலத்தில் கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவதைப் போல இந்த மாலைப் பொழுது என் உயிரைக் கொல்வதற்காக வருகின்றதே”
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை -1225
காதலர் இல்லாத பொழுது காலையும் மாலையும் எவ்விதம் இருக்கின்றன என்று தலைவியின் பார்வையில் இருந்து பின்வருமாறு சொல்கிறார் வள்ளுவர். ‘காலைப் பொழுதுக்கு நான் செய்த நன்மை என்ன? என்னை இப்படி பெரிதும் வாட்டி வதைக்கின்ற மாலைப் பொழுதிற்கு நான் செய்த தீமைதான் என்ன?”
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன் -1226
‘மாலைப் பொழுது இந்த அளவிற்கு துன்பத்தை ஏற்படுத்தும் என்பதை காதலர் என்னைப் பிரியாமல் என்னுடன் கூடியிருந்த அந்தக் காலத்தில் நான் அறியவே இல்லையே” என்று காதலன் தன்னுடைன் மகிழ்ச்சியாக இருந்த மாலை நேரத்தை எண்ணிப் பார்க்கிறார் காதலி. 
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய் -1227
ஒரு கணம் ஒரு யுகமாக ஏன் மாறிப் போனதோ என்பது போல காதலர் இல்லாத பொழுதுகள் எவ்விதம் இருக்கின்றன என்று காதலி உணர்கிறார்? ‘இந்தக் காதல் என்பது காலையிலே அரும்பாகத் தோன்றி பகலெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப் பொழுதிலே முதிர்ச்சியடைந்து மலரும் ஒரு நோயாகும்.” 
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை -1228
மனதிற்கு இனிமை இல்லாதபோது அமைதி இல்லாதபோது நமக்குப் பிடித்தவைகளும் பிடிக்காமல் போவதுண்டு, தலைவனைப் பிரிந்த தலைவி மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? ‘முன்பு எனக்கு இனிதாய் ஒலித்த ஆயனின் இனிமையான புல்லாங்குழலின் இசையானது மாலைப் பொழுதுக்கு தூதாகி வந்தது மட்டும் இல்லாமல் என்னைக் கொல்லும் படைக்கருவியின் ஓசைபோல் அல்லவா காதில் ஒலிக்கிறது”
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து -1229
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று இன்புற்றுறிக்கும் போது சொல்வோம், அதுவே வருத்தத்தின் உச்சத்தில் இருந்தால்? ‘அறிவு மயங்கும் படியாக மாலைப்பொழுது வந்து படரும் வேளையில் இந்த ஊரும் மயங்கி என்னைப் போல துன்பத்தை அடையும்”.
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர் -1230
மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ? ஜோடி குயிலோன்னு பாடி பறந்ததைத் தான் தேடுதோ? என்று தலைவியின் நிலை ஒவ்வொரு மாலையும் நகர்வதின் துன்பத்தை விளக்குகிறார் பின்வருமாறு, ‘பொருளை ஈட்டுவதற்காகப் பிரிந்து சென்ற காதலரை நினைத்துப் பிரிவுத் துன்பத்தாலே போகாமல் இருந்த எனது உயிரானது இந்த மாலைப் பொழுதிலே நலிவுற்று மடிந்து போகின்றதே”.
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி





No comments:

Post a Comment