Monday, 9 December 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 47:







திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 47:
கனவுநிலை உரைத்தல்:
கடந்த வாரம் நினைந்தவர் புலம்பல் அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம்; கனவுநிலை உரைத்தல் அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். கனவுநிலை உரைத்தல் என்பது காதலரை பிரிந்த நிலையில் வரும் கனவின் நிலையை உரைப்பதாகும்.இனி பிரிதலினால் எப்படியெல்லாம் காதலர்கள் கனவின் நிலையை எப்படி உரைத்தார்கள்  என்பதைக் காணலாம். 
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து -1211
பிரிவால் வருந்திக் கிடக்கும் காதலிக்கு எதுதான் ஆறுதல்? காதலியின் குறளாகத் திருவள்ளுவர் வெளிப்படுத்துவதை எதனை? ‘யான் பிரிவால் வருந்தி அயர்ந்து கண் உறங்கிய போது, காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு, யான் கைம்மாறாக என்ன விருந்து படைக்கப் போகின்றேன்?
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன் -1212
‘யான் விரும்பும் போது என்னுடைய கண்கள் உறங்குமானால், அப்பொழுது கனவில் தோன்றும் என்னுடைய காதலருக்கு, யான் தப்பிப் பிழைத்திருக்கும் உண்மையைச் சொல்வேன்”
நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்;டலின் உண்டென் உயிர் -1213
காதலரைப் பிரிந்து வாழும் நிலையில் எப்படித்தான் உயிர்வாழ்வது? காதலியின் குரலாக திருவள்ளுவர் சொல்வதைக் கேளுங்கள். ‘நேரில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவிலாவது கண்டு மகிழ்வதால் தான் என்னுடைய உயிர் நீங்காமல் இன்னும் நிலைத்திருக்கின்றது. 
  கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
  நல்காரை நாடித் தரற்கு -1214
  நேரில் அன்பு செய்யாத ஒருவரைத் தள்ளி வைப்பது கடினம், இருந்தாலும் அவருடன் மகிழ்ச்சியாக எப்படி வாழ்வது? இதோ, திருவள்ளுவர் சொல்கிறார்.
  ‘நனவில் அதாவது நேரில் இருக்கும் போது அன்பு செய்யாதக் காதலரைத் தேடி அழைத்துக் கொண்டுக் காட்டுகின்ற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கின்றது” 
அடுத்தக் குறளில் தன் தலைவனை எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கொண்ட தலைவியின் நிலையினைச் சொல்கிறார். 
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது -1215
‘முன்பு நான் நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனியதாக இருந்தது, இப்பொழுது நான் காணுகின்ற கனவும், காணும் பொழுதிலே எமக்கு இனியதாகவே உள்ளது” என்கிறார். 
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன் -1216
என்றும் நினைவில் வாழும் என்று இறந்தவர் வீட்டில் இருப்பவர்கள் தான் பதிவிடுவார்கள.; ஆனால், இந்தப் பதத்தைத் திருவள்ளுவர் எங்குப் பயன்படுத்துகிறார் என்று பாருங்கள்..., தலைவி சொல்கிறார்,’ நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லையென்றால், கனவில் வருகின்ற எம் காதலர் எம்மை விட்டு எப்போதுமே பிரியாதிருப்பார் அல்லவோ?” என்கிறார். அதாவது, நனவில் தான் அவர் வருவதும் பின்பும் பிரிவதும் வாடிக்கையாக இருக்கின்றது. அப்படி நனவு என்று இல்லாமல் கனவு மட்டும் தான் உள்ளதெனில் என்றென்றும் பிரியாத நிலை இருந்திருக்குமே என்று தலைவியின் மனதில் நின்று, பிரிவின் கொடுமையை உணர்த்துகிறார்.
நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது -1217
மேற்கண்ட குறளில், தலைவியின் செல்லக் கோபத்தை வெளிப்படுத்துகிறார் திருவள்ளுவர். ‘நனவில் வந்து அன்பு செய்யாத இந்தக் கொடுமையாளாரான என்னுடைய காதலர், கனவில் மட்டும் வந்து எம்மை வருத்துவது எதனாலோ?” என்று தலைவியின் நிலையாகக் காட்டுகிறார். என்னதான் அன்பிருந்தாலும் பிரிவு கோபத்தையும் ஏற்படுத்தத் தானேச் செய்யும்?
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து -1218
தலைவன் மீது அளவுகடந்த அன்பு கொண்ட தலைவியால் மட்டுமே இவ்வாறு சொல்ல இயலும், ‘தூக்கத்தில் கனவில் வந்து என் மீது தோளில் சாய்ந்து எனக்கு இன்பம் தந்த என்னவர், நான் விழித்துக் கொண்ட உடன் என் நெஞ்சில் தாவி நுழைந்துக் கொள்கிறார்” என்னே அருமையான கற்பனை. காதலரின் நிலையில் இருந்து தனிமையிலும் இனிமை காணும் உணர்வினை ஏற்படுத்துகின்றார். 
நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர் -1219
ஒருவர் மீது எந்தளவு அன்பிருந்தால், தன்னைப் பிரிந்திருக்கும் நிலையிலும் அவரை ஏற்று ஆறுதல் அடைய முடியும், இதோ திருவள்ளுவர் சொல்வதை பாருங்கள், ‘எந்த மகளிர் தன்னுடைய காதலரை அல்லது கணவரைத் தம்முடைய கனவில் காணவில்லையோ, அவரே, நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைஃகணவரைக் குறித்து மனம் நொந்து கொள்வார்கள்” என்று காதலி/தலைவி குறிப்பிடுவதாகச் சொல்கிறார். அதாவது தன் தலைவன் தன்னுடன் நனவில் இல்லையெனினும் கனவில் அவருடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றேன். ஆதலால் அவரிடம் எந்தக் கோபமும் இல்லை என்று நினைக்கிறாள். 
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர் -1220
என்னை விட்டு என்னுடைய காதலர் நனவில் விட்டுப் பிரிந்து போய்விட்டார் என்று இந்த ஊரார் சொல்கின்றார்களே? அவர் நாளும் என் கனவில் வருவதை அவர்கள் காண்பது கிடையாதோ?
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

No comments:

Post a Comment