திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 50:
நெஞ்சோடு கிளத்தல்:
கடந்த வாரம் உறுப்பு நலன் அழிதல்; அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம்; நெஞ்சோடு கிளத்தல் அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். நெஞ்சோடு கிளத்தல் என்பது காதலரை பிரிந்த நிலையில் நெஞ்சோடு பேசுதல் அல்லது புலம்புதலைக் குறிப்பதாகும். வாருங்கள் நெஞ்சோடு என்ன பேசிக் கொள்கின்றார்கள் என்று பார்ப்போம்...
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து -1241
மேலே உள்ள குறட்பாவில் திருவள்ளுவர், தலைவி தன் நெஞ்சத்தைப் பார்த்துக் கேட்பது போல் அமைத்துள்ளார். ‘ நெஞ்சே! எதனாலும் தீராத எனக்குத் துன்பத்தை ஏற்படுத்தும் காதல் நோயை தீர்க்க, ஏதாவது ஒரு மருந்தை யோசித்து சொல்ல மாட்டாயா?” என்று கேட்பது போல் அமைத்துள்ளார். அடுத்தக் குறளில்,
காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு-1242 என்கிறார், அதாவது தன்னை நினைத்துப் பார்க்காதவரை நீ ஏன் நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்று தன் நெஞ்சிடம் செல்லக் கோபமாக பேசுகிறாள் தலைவி, ‘என் நெஞ்சே! நீ வாழ்ந்து போ: அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை எப்போதும் நினைத்து நினைத்து வருந்துவது உன்னுடைய அறிமையே ஆகும்” என்கிறார்.
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல் -1243
மேலே உள்ள குறட்பாவில், தன் தலைவன் தன்னை நினைக்கவில்லையே என்ற ஏக்கத்தின் நீட்சியை நெஞ்சோடு பேசும் உரையில் இருந்து விளங்குகிறது ‘நெஞ்சமே என்னிடம் இருந்து கொண்டே நீ என் அவரை நினைத்து வருந்துகிறாய்? இந்தத் துன்ப நோயை உண்டாக்கியவரிடம் இதுபோன்று அன்பு கொண்டு நம்மை நினைக்கும் தன்னை இல்லையே”
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று -1244
தன் தலைவனிடம் கோபம் இருந்தாலும் அவரைப் பார்க்க வேண்டும் என்ற தலைவியின் தீராத வேட்கையினை மேற்கூறிய குறளில் தெரியப்படுத்துகிறார் திருவள்ளுவர், “ எனது நெஞ்சே! நீ அவரிடம் செல்லும் போது, என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக, அவரைக் காண வேண்டும் என்று என் கண்கள் என்னைப் பிடுங்கித் தின்கின்றன”
செற்றார் எனக்கை விடல்;;;;;உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர் -1245
தன்னை நினைத்துப் பார்க்காமல் இருக்கும் தலைவனை நினைத்து கவலையுடன் நெஞ்சோடு பேசிக் கொண்டிருக்கிறாள் தலைவி, ‘நெஞ்சே! நாம் அவர்மீது விரும்பி அன்பு காட்டினாலும், நம்மை நாடாத அவர் நம்மை வெறுத்து விட்டார் என்று எண்ணிக் கைவிட முடியுமோ?” என்கிறார்.
கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு -1246
மேற்கூறிய குறளில், தலைவன் மீது பொய்யாகக் கோபம் கொள்ளும் நெஞ்சத்தைக் கடிந்து கொள்வதுபோல் இயற்றியுள்ளார் அய்யன். ‘என் நெஞ்சே! நான் அவருடன் ஊடினால் அந்த ஊடலை கூடி நீக்கும் திறமையுள்ள என் அன்பானவரைக் கண்டால் பொய்யாகவாவது கொஞ்சம் ஊடிய பிறகு ஊடலை விட்டுக் கூட மாட்டோம். இப்போது அதையும் விட்டுவிட்டு அவரைக் கொடியவர் போல ஏன் பொய்யாக வெறுப்பது போல இருக்கின்றாய், இதை விடுத்து அவரிடம் போயேன்...” என்று நெஞ்சத்திடம் ஆணையிடுகிறாள் தலைவி. அடுத்தப் பாடலிலும் தலைவி நெஞ்சிற்குக் கட்டளையிடுவது போலவே அமைத்துள்ளார்.
காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு -1247 என்கிறார். ‘நன்னெஞ்சே! ஒன்று காமத்தை விட்டு விடு, இல்லையென்றால் நாணத்தை விட்டு விடு, இந்த இரண்டையும் சேர்த்துப் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது” என்று கூறுகிறார்.
பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு-1248
பரிவுத் துயரத்தில் பாவம் , எப்படியெல்லாம் புலம்பித் தவிக்கிறாள், மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று அவ்வை சொன்னதுபோல், ஒருவர் மதிக்காத போது அவரிடம் வலிய சென்று பேசும் போது... என்ன உரைப்போ? ‘உன்னைத் தான் அவன் மதிக்கலையல்லவா.. அப்புறம் எப்படி கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம அவன்கிட்ட போய் பேசுற...அறிவு சுத்தமா இருக்காதா?’ என்போம், தலைவிக்கும் அப்பஇதுவும் அப்படி ஒரு தவிப்புத்தான். ‘என் நெஞ்சமே! நம்முடைய பிரிவுத் துன்பத்தால் நினைத்து அவர் வருந்தி நமக்கு இரங்கவில்லை.. வந்து அன்பு செய்யவில்லை என்று நான் ஏங்கித் திரிந்த காதலரின் பின் செல்கின்றாயே..அறிவற்ற பேதையே” என்கிறார் தலைவிஃகாதலி.
உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு -1249
புலம்பல் முடிகின்ற தருணம், ஆறுதல் வார்த்தைகள் தானே வெளிப்படும், அப்படிப்பட்ட குறளாக அமைந்துள்ளது மேலே உள்ள குறள், ‘என் நெஞ்சரே! என்னுடைய காதலர் என்னுடைய உள்ளத்தில் குடியிருக்கும் போது நீ அவரை நினைத்து யாரிடம் தேடிச் செல்கின்றாய்?” என்று செல்லமாய் பொய் கோபத்தை தன் நெஞ்சிடம் காட்டுவதுபோல் உரைக்கின்றார்.
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின் -1250
அடுத்தது ஆறுதலின் உச்சம், ஒரு படத்தில் கூட கதாநாயகன் சொல்வார், ‘நான் எங்கு அழுகிறேன், கண்ணு வேர்த்திருக்கு” என்று, அதுபோல நெஞ்சோடு பேசுதலையும் இறுதியில் முடித்து வைத்திருக்கின்றார் திருவள்ளுவர். ‘நம்மோடு சேர்ந்திருக்காமல் நம்மை கைவிட்டுச் சென்ற காதலரை நம் நெஞ்சிலேயே வைத்திருக்கும்போது இன்னும் மெலிந்து அழகிழந்து வருகின்றோமே” ஏன் அழகிழக்க வேண்டும். அவர்தான் நம்மிடம் இருக்கிறாரே பிரிய வில்லையே என்று ஆறுதல் படுத்திக் கொள்கிறார் தலைவி.
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி










