Sunday, 24 November 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 45:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 45:
தனிப்படர் மிகுதி:
கடந்த வாரம் பசப்புறு பருவரல் அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம்; தனிப்படர் மிகுதி அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். தனி- தனிமை, படர்-துன்பம், வருத்தம் , தனிமையினால் துன்பம் அதிகரித்து இருக்கும் நிலையினைக் குறிக்கிறது.
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி – 1191
உண்மையான மகிழ்ச்சி காதலர்களுக்கு எது? , இதோ திருவள்ளுவர் சொல்கிறார், ‘தாம் விரும்பும் காதலர், தம்மையும் விரும்பும் பேறு பெற்றவர்கள், காதல் வாழ்வின் பயனாகிய விதையற்ற கனியைப் பெற்றவரே ஆவர்” என்கிறார்.
வாழ்;வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி – 1192
காதலில் ஒருவரையொருவர் விரும்புவது எப்படியென்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார் என்று அறிவீர்களா? ‘தம்மை விரும்புபவருக்கு, அவரை விரும்புகிற காதலர் அளிக்கும் அன்பாது, உயிர் வாழும் உலகத்தவர்களுக்கு மேகம் மழைப் பொழிந்து காப்பாற்றுதலைப் போன்றது ஆகும்” என்கிறார்.
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு – 1193
உண்மையான அன்பினை உணர்த்தும் குறள் இது, ‘காதலரால் விரும்பப்படுகின்றவருக்கு, இடையில் பிரிந்து இருக்கக் கூடிய நிலையில் இருந்தாலும், தான் காதலிக்கப்படுவதால், மீண்டும் யாம் இன்பமாக வாழ்வோம் என்று இவருக்கு இருக்கும் செருக்கானது பொருத்தமானதுதான்” என்கிறார்.
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின் - 1194
தாம் மிகவும் விரும்பும் காதலரால் விரும்பப்படாவிட்டால், உலகத்தாரால் விரும்பப்படும் நிலையில் உள்ளவரும் நல்வினை பொருந்தியவர் இல்லை என்கிறார் திருவள்ளுவர்.
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை – 1195
காதலியின் ஏக்கமாகக் குறிப்பிடுகிறார், அதாவது, நாம் காதல் கொண்ட காதலர் தாமும் அதேபோன்று நம்மீது காதல் கொள்ளாதபோது, வேறு என்ன நமக்கு நன்மை செய்து விடப் போகிறார்? ஏன்று காதலி புலம்புவதாhகக் குறிப்பிடுகிறார்.
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது – 1196
காதல் எப்படி இருக்க வேண்டும், இரண்டு பக்கமும் சமமான அன்பு தானே? அப்படி இல்லாத நிலையினை வள்ளுவர் எவ்வாறு விளக்குகிறார். மேற்காணும் குறளில்? ‘காதல் ஒரு தலையானது “ என்றால் மிகவும் துயரமானது, காவடித் தண்டின் பாரத்தைப் போல இரு பக்கமும் ஒத்தபடி இருந்ததானால்  மட்டுமே அது மிகவும் இனிமையானதாக இருக்கும் என்கிறார்.
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான் - 1197
காதல் கடவுளான காமன் இருவரிடத்திலும் சமமாக நடக்காமல் ஒருவர் பக்கம் மட்டும் நின்று நடப்பதால், என் வருத்தத்தையும் துன்பத்தையும் அவன் கண்டுகொள்ள மாட்டான் போலும்! ஏன்கிறார் திருவள்ளுவர்.
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல் - 1198
தான் மிகவும் விரும்பிய தன்னுடைய காதலரின் இனிய சொல்லைக் கூடப் பெறாமல், உலகத்தில் வாழும் தலைவியைப் போன்ற கொடியவர் இவ்வுலகத்தில் வேறு யாரும் இல்லை என்கிறார். பிடித்தவரிடம் நாள்தோறும் பேசும் வாய்ப்பு இல்லாமல் இருப்பவரின் தவிப்பை உணர்த்துகிறார்.
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு -1199
தனக்குப் பிடித்துவிட்டால் தன்னை அன்பு செய்யாவிட்டாலும் அவர்தன் புகழைக் கேட்டால் மகிழும் தன்மையை சிலர் உணர்ந்திருக்கக்கூடும், வள்ளுவரும் அதற்கு விதிவிலக்கல்ல என்பது மேற்கூறிய குறளில் புலப்படுகிறது, ‘நான் விரும்பிய காதலர் மீண்டும் வந்து அன்பு செய்ய மாட்டார் என்றாலும், அவரைப் பற்றி யாராவது புகழ்ந்து சொல்லக் கேட்டதும், காதுகளுக்கு இனிமையாக இருக்கிறது” என்கிறார்.
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு - 1200
காதலியின் புலம்பலாகக் குறிப்பிடுகிறார், ‘நெஞ்சமே!, நீ வாழ்க! உன்னிடம் அன்பு இல்லாதவரிடம் உன் அளவற்ற துன்பத்தை சொல்லிக் கொண்டிருக்கின்றாயே? அங்கு ஆறுதல் எதிர்பார்ப்பதை விட கடலைத் தூர்ப்பது உனக்கு எளிதான வேலையாக இருக்கும்” என்கிறார்.

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி





No comments:

Post a Comment