Sunday, 24 November 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 45:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 45:
தனிப்படர் மிகுதி:
கடந்த வாரம் பசப்புறு பருவரல் அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம்; தனிப்படர் மிகுதி அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். தனி- தனிமை, படர்-துன்பம், வருத்தம் , தனிமையினால் துன்பம் அதிகரித்து இருக்கும் நிலையினைக் குறிக்கிறது.
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி – 1191
உண்மையான மகிழ்ச்சி காதலர்களுக்கு எது? , இதோ திருவள்ளுவர் சொல்கிறார், ‘தாம் விரும்பும் காதலர், தம்மையும் விரும்பும் பேறு பெற்றவர்கள், காதல் வாழ்வின் பயனாகிய விதையற்ற கனியைப் பெற்றவரே ஆவர்” என்கிறார்.
வாழ்;வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி – 1192
காதலில் ஒருவரையொருவர் விரும்புவது எப்படியென்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார் என்று அறிவீர்களா? ‘தம்மை விரும்புபவருக்கு, அவரை விரும்புகிற காதலர் அளிக்கும் அன்பாது, உயிர் வாழும் உலகத்தவர்களுக்கு மேகம் மழைப் பொழிந்து காப்பாற்றுதலைப் போன்றது ஆகும்” என்கிறார்.
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு – 1193
உண்மையான அன்பினை உணர்த்தும் குறள் இது, ‘காதலரால் விரும்பப்படுகின்றவருக்கு, இடையில் பிரிந்து இருக்கக் கூடிய நிலையில் இருந்தாலும், தான் காதலிக்கப்படுவதால், மீண்டும் யாம் இன்பமாக வாழ்வோம் என்று இவருக்கு இருக்கும் செருக்கானது பொருத்தமானதுதான்” என்கிறார்.
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின் - 1194
தாம் மிகவும் விரும்பும் காதலரால் விரும்பப்படாவிட்டால், உலகத்தாரால் விரும்பப்படும் நிலையில் உள்ளவரும் நல்வினை பொருந்தியவர் இல்லை என்கிறார் திருவள்ளுவர்.
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை – 1195
காதலியின் ஏக்கமாகக் குறிப்பிடுகிறார், அதாவது, நாம் காதல் கொண்ட காதலர் தாமும் அதேபோன்று நம்மீது காதல் கொள்ளாதபோது, வேறு என்ன நமக்கு நன்மை செய்து விடப் போகிறார்? ஏன்று காதலி புலம்புவதாhகக் குறிப்பிடுகிறார்.
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது – 1196
காதல் எப்படி இருக்க வேண்டும், இரண்டு பக்கமும் சமமான அன்பு தானே? அப்படி இல்லாத நிலையினை வள்ளுவர் எவ்வாறு விளக்குகிறார். மேற்காணும் குறளில்? ‘காதல் ஒரு தலையானது “ என்றால் மிகவும் துயரமானது, காவடித் தண்டின் பாரத்தைப் போல இரு பக்கமும் ஒத்தபடி இருந்ததானால்  மட்டுமே அது மிகவும் இனிமையானதாக இருக்கும் என்கிறார்.
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான் - 1197
காதல் கடவுளான காமன் இருவரிடத்திலும் சமமாக நடக்காமல் ஒருவர் பக்கம் மட்டும் நின்று நடப்பதால், என் வருத்தத்தையும் துன்பத்தையும் அவன் கண்டுகொள்ள மாட்டான் போலும்! ஏன்கிறார் திருவள்ளுவர்.
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல் - 1198
தான் மிகவும் விரும்பிய தன்னுடைய காதலரின் இனிய சொல்லைக் கூடப் பெறாமல், உலகத்தில் வாழும் தலைவியைப் போன்ற கொடியவர் இவ்வுலகத்தில் வேறு யாரும் இல்லை என்கிறார். பிடித்தவரிடம் நாள்தோறும் பேசும் வாய்ப்பு இல்லாமல் இருப்பவரின் தவிப்பை உணர்த்துகிறார்.
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு -1199
தனக்குப் பிடித்துவிட்டால் தன்னை அன்பு செய்யாவிட்டாலும் அவர்தன் புகழைக் கேட்டால் மகிழும் தன்மையை சிலர் உணர்ந்திருக்கக்கூடும், வள்ளுவரும் அதற்கு விதிவிலக்கல்ல என்பது மேற்கூறிய குறளில் புலப்படுகிறது, ‘நான் விரும்பிய காதலர் மீண்டும் வந்து அன்பு செய்ய மாட்டார் என்றாலும், அவரைப் பற்றி யாராவது புகழ்ந்து சொல்லக் கேட்டதும், காதுகளுக்கு இனிமையாக இருக்கிறது” என்கிறார்.
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு - 1200
காதலியின் புலம்பலாகக் குறிப்பிடுகிறார், ‘நெஞ்சமே!, நீ வாழ்க! உன்னிடம் அன்பு இல்லாதவரிடம் உன் அளவற்ற துன்பத்தை சொல்லிக் கொண்டிருக்கின்றாயே? அங்கு ஆறுதல் எதிர்பார்ப்பதை விட கடலைத் தூர்ப்பது உனக்கு எளிதான வேலையாக இருக்கும்” என்கிறார்.

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி





Monday, 18 November 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 44:





திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 44:
பசப்புறு பருவரல்:
கடந்த வாரம் ; கண்விதுப்பழிதல்; அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம்; பசப்புறு பருவரல் அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். பசப்புறு பருவரல்; என்பது பசுமை , தலைவி தலைவனைக் காணாமல் அவளின் உடல் நிறம் மாறிக் கிடத்தல் அல்லது அதனால் ஏற்படும் துன்பம் என்று அர்த்தமாகிறது. இனி குறள்களையும் அதன் அர்த்தத்தையும் பார்ப்போம். 
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற -1181
முதல் குறளில் தன் காதலர் பிரிந்ததால் ஏற்பட்ட பசலை நோயைக் குறித்துத் தெரிவிக்கிறார் காதலி, என்னை விரும்பிய என்னவரைப் பிரிவதற்குச் சம்மதித்த நான் இப்பொழுது அதனால் ஏற்பட்ட பசலை உற்ற தன்மையை யாருக்குச் சென்று எடுத்துச் சொல்வேன்? ஏன்று புலம்புவதாக அமைத்துள்ளார். 
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு -1182
ஏதற்கெல்லாம் இறுமாப்பு என்று கணக்கில்லாமல், நோய் பற்றியதையும் பெருமையாக என்னும் காதலியை என்னவென்று சொல்வது, இதோ, அவள் கூற்றை கேளுங்கள்,’இந்தப் பசலை நிறமானது, எனக்கு என் காதலர் தந்தார் என்னும் பெருமிதத்தோடு என் உடலின் மேல் உரிமையோடு பற்றிப் படர்ந்து என் மேனி எங்கும் நிறைக்கின்றதே!” என்கிறார். 
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும்தந்து -1183
காதலனை நோக்கி காதலி புகார் சொல்வதாக அமைத்துள்ளார் மேற்கூறிய குறளை... 
என் காதலர் என்னுடைய அழகையும் என்னுடைய நாணத்தையும் அவர் தன்னோடு எடுத்துக் கொண்டார். அதற்கு கைம்மாறாக காதல் நோயையும் பசலையையும் தந்து விட்டுச் சென்றுள்ளார் என்கிறார். 
பின்வரும் குறளை...
உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு -1184
காதலி செல்லமாக புகார் சொல்வதாக அமைத்துள்ளார் திருவள்ளுவர். ‘அவரையே நான்நினைத்துக் கொண்டிருப்பேன், அவருடைய திறன்களைப் பற்றியே பேசுவேன், அப்படி இருந்த போதும் என்னையறியாமல் பசலை வந்தது வஞ்சனையோ?” 
உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனிமேல் பசப்பூர் வது-1185
எவ்வளவு விரைவாக தன் காதலின் பிரிவை தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்ற காதலின் நிலையாக மேலே உள்ள குறள் அமைந்துள்ளது, ‘அதோ பார், என் காதலர் என்னைப் பிரிந்து சென்று கொண்டிருக்கிறார், இதோ பார், அதற்குள்ளேயே என் உடலில் பசலையான வந்து பற்றிப் படருகின்றது” என்று பிரிவின் தாக்கத்தினை காதலியின் வாயிலாக விளக்குகிறார். 
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு -1186
மேற்கூறிய குறள் ஒரு உவமைக் குறளாகும், விளக்கு எப்பொழுது ஒளி மங்கும் கவ்விக் கொள்ளலாம் என்று காத்திருக்கும் இருள் போல, என்னுடைய தலைவனின் தழுவலை எப்பொழுது தளரும் அப்பொழுது படர்ந்து விடலாம் என்று பசலை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறது என்கிறார் திருவள்ளுவர். 
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளி;க்கொள் வற்றே பசப்பு -1187
சிறிய பிரிவையும் தாங்கிக் கொள்ள இயலாத அன்பின் வெளிப்பாட்டை மேற்காணும் குறளில் குறிப்பிடுகிறார். ‘தலைவனைத் தழுவியபடியே இருந்தேன், பக்கத்தில் சிறிது புரண்டேன், அந்தப் பிரிவிற்கே பசலை நிறத்தை அள்ளிக் கொள்வது போல் என் மீது வந்து பரவி விட்டதே” என்று தலைவி எண்ணுகிறார். 
பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத் 
துறந்தார் அவர்என்பார் இல் -1188
ஊராரின் பழிச்சொல்லைத் தாங்க முடியாத உணர்வாக காதலி குறிப்பிடுவதாக, திருவள்ளுவர் குறிப்பிடுகிறார், ‘இங்கே இவள் காதலனைப் பிரிந்ததால் பசலை நோய் உற்றால் என்று சொல்கிறார்களே தவிர, இவளைக் காதலர் கைவிட்டு பிரிந்து சென்றார், என்று சொல்பவர் யாரும் இல்லையே?” என்று வருந்துகிறார் காதலி. 
அடுத்தக் குறளில் பிரிந்தாலும், தன் காதலர் நலமாக இருக்க வேண்டும் என்ற காதலின் வெளிப்பாட்டினைக் காட்டுகிறார் காதலியின் கூற்றாக..
பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின் -1189
என்னிடம் இருந்து பிரிந்து செல்வதை என்னை ஒப்புக் கொள்ள வைத்து பிரிந்து சென்ற என் காதலர் நலமாக இருக்கின்றார் என்றால்,  என்னுடை மேனி உள்ளபடியே பசலை நோயினை அடைவதாக...
பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின் -1190
உண்மையான அன்பென்றால், அன்பானவரை விட்டுக் கொடுப்பதில்லை, மேற்கூறிய குறளிலும் அப்படித்தான் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். தலைவி தனக்குள்ளே கூறிக் கொள்ளும் ஆறுதல் தான் அது, ‘என்னுடைய ஒப்புதலுடன் என்னை விட்டு பிரிந்து போனவரைப் பற்றி தூற்றிப்பேசாமல், நான் பசலைப் பெற்றேன் என்று பேர் வாங்குவது எனக்கு நல்லதே” என்று தன்னுடைய தலைவரை விட்டுக்கொடுக்காமல் தலைவி பேசுவதை உணர முடியும். 

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

Monday, 11 November 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 43:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 43:
கண்விதுப்பழிதல்:
கடந்த வாரம் ; படர் மெலிந்திரங்கல் அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம்; கண்விதுப்பழிதல் அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். கண்விதுப்பழிதல் என்பது; கண்கள் (தலைவனைக் காணாமல் ) துடித்து வருந்துதல் என்பதாகும்;. இனி குறள்களையும் அதன் அர்த்தத்தையும் பார்ப்போம். 
கண்தாம் கலுழ்வ தெவன்கொலோதண்டா நோய்
தாம்காட்ட யாம்கண் டது -1171
இந்தக் கண்கள் அன்று அவரைக் காட்டியதால் தானே தீராத இந்தக் காதல் நோய் ஏற்பட்டது. இன்று அதேக் கண்கள் அவரை என்னிடம் காட்டச் சொல்லி அழுவது எதனாலோ? ஏன்று காதலி கேட்பதாகக் குறிப்பிடுகிறார். அடுத்தக் குறளில்,
  தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
  பைதல் உழப்பது எவன் -1172 என்கிறார். 
  அதாவது, வரப்போவதை முன்கூட்டியே ஆராய்ந்து உணராமல், அன்று அவரை பார்த்து மகிழ்ந்த மை தீட்டிய கண்கள் இன்று இந்தத் துயரத்திற்குக் காரணம் தாம் தான் என்று உணராமல், தாமும் துன்பப்படுவது எதனாலோ? ஏன்று கேட்கிறார். 
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து -1173
அன்று தாமாகவே வேகமாக முந்திச் சென்று அவரைப் பார்த்து மகிழ்ந்த கண்கள் , இன்று தாமே அழுகின்றன. இதைப் பார்க்கும் போது சிரிப்பாகத் தான் இருக்கின்றது என்று காதலி சொல்கிறார். அடுத்தப் பாடலில், 

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து -1174
அன்று, நான் தப்பிப் பிழைக்க முடியாத தீராத காதல் துன்பத்தை என்னிடத்தில் உண்டாக்கி நிறுத்திய என் கண்கள், இன்று தாமும் அழுவதற்கு இல்லாதபடி நீர் வற்றிப் போய் விட்டன. 
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக் 
காமநோய் செய்தஎன் கண் -1175
கடல்கொள்ள முடியாத அளவிற்குக் காமநோயினை எனக்கு உண்டாக்கிய எனது கண்கள், அந்தத் தீவினையால் தாமும் உறங்காமல் இவ்விரவுப் பொழுதில் துன்பத்தினை அடைகின்றன.
ஓஒஇனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தூஅம் இதற்பட் டது -1176
எமக்கு இந்தக் காமநோயை ஏற்படுது;திய கண்கள், தானும் தூங்காமல் இப்படி அழுகையில் ஈடுபட்டுதும் பார்ப்பதற்கு நன்றாகத் தான் இருக்கிறது என்று காதலி தெரிவிப்பதாகக் குறிப்பிடுகிறார். என்னை காதலில் சிக்க வைத்தது இந்தக் கண்கள் தானே இப்போது நீயும் சேர்ந்தே அனுபவி என்று காதலி சோகத்திலும் ஒரு ஆறுதலாய் பேசிக் கொள்வதாகக் குறிப்பிடுகிறார். 
உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண் -1177
அன்று அவரை கண்டு மகிழ்ந்து இழைந்து குழைந்து இரசித்த கண்கள், இன்று தூக்கமில்லாமல் வருந்தி வருந்தி தன்னுடன் உள்ள கண்ணீரும் வற்றி போகட்டும்.
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் 
காணாது அமைவில கண் -1178 
என்னை அரவணைக்கும் எண்ணம் இல்லாமல் வெறும் பேச்சில் மட்டுமே அன்பு காட்டியவர் இவ்விடத்திலே இருக்கின்றார். ஆனால், அதனால் என்ன தான் பயன்? இருந்தாலும் அவரைக் காணாமல் என் கண்கள் அமைதியாக இருக்க மாட்டேன் என்கிறதே?
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண் -1179
காதலர் வராதபோது வழியிலே விழி வைத்து அவர் எப்போது வருவாரோ என்று என் கண்கள் தூங்குவதில்லை. காதலர் வந்தாலும் அவர் எங்கே உடனே பிரிந்து சென்று விடுவாரோ அன்று அஞ்சியே தூங்காமல் கண்கள் விழித்திருக்கின்றன. இவ்வாறு இரண்டு வழியிலும் தூங்காமல் தாங்க முடியாத துன்பத்தை எனது கண்கள் அனுபவிக்கின்றது.
மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து -1180
அடிக்கப்படும் பறைபோன்று என்னுடைய மனதினுள் இருப்பதை அழுதே காட்டிக் கொடுத்து விடும் கண்களைப் போன்ற எம்மைப் போன்றவரிடத்தில் இருந்து இரகசியத்தை அறிந்து கொள்வது ஊராருக்கு ஒன்று கடினமான செயல் இல்லை. 

Monday, 4 November 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 42:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 42:
படர் மெலிந்து இரங்கல்:
கடந்த வாரம் படர் மெலிந்திரங்கல் அதிகாரத்தில் இருந்து முதல் பகுதியைப் பார்த்தோம். இந்த வாரம் படர் மெலிந்திரங்கல் அதிகாரத்தில் இருந்து இரண்டாவது பகுதியைப் பார்ப்போம்.
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது -1166
பிரிவுத் துயரமானது சேர்ந்திருக்கும் போது கிடைக்கும் இன்பத்தினை விட மிகப் பெரியது என்பதனை இவ்வாறு குறிப்பிடுகிறார். காமம் மகிழ்விக்கும்போது கிடைக்கும் இன்பமானது கடல் அளவு பெரியது. ஆனால், பிரிவுத் துன்பத்தால் வருந்தும் போது, அவ்வரு




த்தமானது கடலை விட மிகப் பெரியதாக உள்ளது என்கிறார். 
அடுத்தக் குறளில்,
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன் -1167 என்கிறார். 
அதாவது;, இந்த நள்ளிரவிலும், யான் ஒருத்தியே தூங்காமல் வருந்தியபடியே இருக்கின்றேன். அதனால், காமம் என்னும் கடுமையான வெள்ளத்தை நீந்தியும் என்னால் அதன் கரையைக் காண முடியாமல் தவிக்கிறேன் என்று காதலியின் கூற்றாகத் தெரிவிக்கிறார். 
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை -1168 
மேற்கூறிய குறளில், இரவில் தனித்துக் கிடப்பதின் நிலையினை பின்வருமாறு விளக்குகிறார். இரவே!, இந்த உலகில் உள்ள எல்லா உயிர்களையும் உறங்கச் செய்துவிட்டு, பாவம் இப்போது என்னைத் தவிர வேறு துணையில்லாமல் இருக்கிறாய் என்று கூறுகிறார். 
கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள்
நெடிய கழியும் இரா -1169
ஒருவருக்கு வயிற்றில் உபாதை என்று எடுத்துக் கொள்வோம், அதுவும் இரவு நேரத்தில் என்றால் அவர் அதனைப் எப்படிக் கழிப்பார் என்று கற்பனை செய்து பாருங்கள்! அதுபோல காதலி இப்படிக் குறிப்பிடுகிறார். இப்போதெல்லாம் பிரிவுத் துன்பத்தினால், எனது இரவு நேரம் நீண்ட காலமாகின்றது. இப்படி மிகப் பெரிய இரவின் கொடுமையானது என்னைப் விட்டுப் பிரிந்து போன என் கணவரின் கொடுமையிலும் இவை மிகக் கடுமையான கொடுமையாக இருக்கிறது என்கிறார். 
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண் -1170
தன் இயலாமையை காதலியால் எப்படி வெளிப்படுத்த முடியும்? நாம் அனைவரும் அறிவோம் மனதின் கற்பனைக்கு எல்லையே இல்லை. இதனை வள்ளுவர் எப்படி உணர்த்துகிறார். இதோ, காதலியின் வார்த்தையாக குறிப்பிடுவதைக் கவனியுங்கள். 
என் மனதைப் போல காதலர் உள்ள இடத்திற்குச் செல்ல முடியுமானால், என் கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில் நீந்த வேண்டிய அவசியமில்லை என்கிறார்.