Sunday, 17 May 2020

பயணத்தின் பாதையில்




சிவா கொஞ்சம் தாராளமாக செலவு செய்பவன். அப்பாவின் பணத்தை ஊதாரித்தனமாக நண்பர்களோடு செலவு செய்து வந்தான். உனக்குப் புரியும் படி சொல்லனும்னா டீ குடிக்கனும்னு தோணுனாலே பக்கத்து ஊருக்கு வண்டியை எடுத்துப் போயி தான் குடிப்பான். இவனுக்கு டிரெஸ் எடுக்கனும்னா அவன் ஃபிரெண்டுக்கும் சேர்த்து டிரெஸ் எடுப்பான் அப்படி செலவு செய்து வந்தான். அவன் வீட்டில் எல்லோருமே இவனை நினைத்து வருத்தப்பட்டனர். ஆனால், ரொம்ப நாள் தவம் இருந்து பெற்ற பிள்ளையாதலால், ஒன்றும் சொல்வதில்லை. அவனுக்கு தங்கை இருக்கிறாள் இருந்தாலும் சிவா தான் செல்லப் பிள்ளையாக இருந்தான்.
 அப்படி இருக்கையில், ஒரு முறை சிவாவோட அப்பா அவருடைய நண்பர் வீட்டு திருமணத்திற்கு செல்வதற்காக திட்டமிட்டு, ஒரு மொய் கவரில் ரூ.1001 ஐ போட்டு வீட்டில் உள்ள டேபிளில் வைத்து விட்டு உடை மாற்றிக்கொண்டிருந்த வேளையில் அந்தப் பக்கம் வந்த சிவா, கவரில் இருந்து 1000 ரூபாயை எடுத்துவிட்டு ஒரு ரூபாயை மட்டும் விட்டுச் சென்றான். அவனுடைய அப்பாவும் அதைக் கவனிக்காமல் திருமணத்திற்கு சென்று விட்டார். நல்லவேளையாக திருமண மண்டபத்தில் எதேச்சையாக கவரைப் பார்த்திருக்கிறார். உடனே டென்ஷனாகி விட்டார்
மஉடனே பக்கத்துல இருக்கிற ஒரு ஏடிஎம் சென்டர்ல போயி காச எடுத்து கவர்ல போட்டு கொடுத்துட்டு வந்துட்டாரு.கோபமாக வீட்டிற்கு வந்த அவரு  பெல்ட்டாலே அடி வெளுத்திட்டாரு”
“அப்பதான் சிவா, முடிவு பண்ணான், இவங்க காச எதிர்பார்த்தாதானே இவ்வளவு பிரச்சனையும், இனிமே இவங்ககிட்ட காசு வாங்காம சுயமா சம்பாதிச்சு முன்னேறனும்னு முடிவு பண்ணினான். அதனால உடனே அவன் ரூமுக்கு போயி ஒரு லெட்டர் எழுதினான். அந்த லெட்டரில் தன்னை யாரும் தேட வேண்டாம் என்றும், தான் வேலை தேடி செல்வதாகவும் எழுதினான
“அப்ப வீட்டை விட்டு வெளியே போவது காரில்தானா?”
“இல்லை, அப்பாவிடம் எதுவும் எதிர்பார்க்கக்கூடாது என்று முடிவு செய்த அவன், தன்னுடைய தாத்தாவோட சைக்கிளை எடுத்துச் சென்றான். ஏனென்றால் தாத்தாவோட சொத்து பேரனுக்குத்தானே என்ற லாஜிக்கில் தாத்தாவோட சைக்கிளை எடுத்தான். அத்தோடு தாத்தாவின் சட்டைப் பையில் துளாவியபோது, ஒரு மூன்று 100 ரூபாய் நோட்டுகள் மட்டுமே இருந்தது. அதை எடுத்துக் கொண்டு கிளம்பினான். அவன் பயணத்தில் வெயில், மழை, புயல் போன்றவற்றை சந்திக்க வாய்ப்பு நேரிடலாம் அல்லவா, அதனால், பேக்பேக்கில் சில துணிமணிகளை எடுத்துக் கொண்டு தொப்பி ஒன்றையும் தலையில் மாட்டினான். அவன் திருச்சி மாவட்டத்தி;ல் அரியலூர் பார்டரிலர் இருந்தான். அங்கிருந்து சைக்கிளிலே திருச்சி, கரூர், காங்கேயம் வழியாக திருப்பூர் சென்று விடலாம் என்பது அவன் திட்டமாக இருந்தது. ஆதலால், மதிய நேரத்தில் வீட்டில் எல்லோரும் தூங்கும் நேரம் பார்த்து கிளம்பினான். சைக்கிளை எடுத்துக்கிளம்பும் போது அந்தக் குரல் கேட்டது “எங்க மாப்ளே கிளம்புறீங்க?” ஊர்கதையையே வழக்கமாகப் பேசும், மாமா அண்ணாசாமி கேட்டார். சிவாவின் முகமே சுருங்கியது, அவர் முகத்தைப் பார்த்துவிட்டுச் சென்றால் எந்த காரியமும் உருப்படாது என்பதில் ஸ்டாராங்கான நம்பிக்கை இருந்தது. அதனால் பதில் பேசாது சைக்கிளை ஓட்டினான்.
கொஞ்ச தூரம் சென்றதும் அவனுடைய அறிவியல் வாத்தியார் துரைசிங்கம் எதிரில் சென்றார். சிவா அவருக்கு வணக்கம் வைத்தான், என்ன ஆச்சர்யம்…! எப்போதுமே பதில் வணக்கம் போடாத அவர் அன்று அவன் வணக்கத்தை ஏற்றுக் கொண்டார். ஒருவேளை அவன் ஊரை விட்டுச் செல்வதில் அவர் நிம்மதியாக உணர்ந்திருப்பாரோ என்னவோ?
சிவா தொடர்ந்து சைக்கிளை அழுத்தி ஊரின் எல்லையை அடைந்தான். அங்கே இருந்த எல்லைக் கல்லில் இனிமேல் இந்த ஊர் பக்கம் திரும்ப மாட்டேன் என்ற வைராக்கியம்த்துடன் உச்சா போய் விட்டு கிளம்பினான்.
தொடர்ந்து சைக்கிளை அழுத்திக் கொண்டிருந்தான் சிவா, இயற்கையான காற்று, சாலை இருமங்கிலும் ஆவாரம் செடியின் நிறமும் ரசித்துக் கொண்டே சென்றான். கொஞ்சதூரம் சென்றதும் தான் அந்தக் குரங்குக் கூட்டத்தை சிவா கவனித்தான், ஆங்காங்கே நான்கும் மூன்றுமாய் ஒரு இருபது குரங்குகள் ஓடிக்கொண்டிருந்தன. அவற்றில் சில ரோட்டின் ஓரத்தில் உள்ள பிளாஸ்டிக் கேரி பைகளை துலாவி அதிலிருந்து கிடைப்பதை வேக வேக சாப்பிட்டுக் கொண்டிருந்தன. ஒரு பெரிய குரங்கு மற்றொரு குரங்கை வேகவேகமாக துரத்திக் கொண்டிருந்தது. குட்டிக் குரங்குகள் தாவி தாவி ஒன்றின் மேல் ஒன்று தாவியும், அடித்தும், கடித்தும் விளையாடிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் சிவாவுக்கு ஒரு அச்சம் ஏற்பட்டது. ஏனென்றால் வரும் வழியில் ஒரு நாய் கடிப்பதற்கு தன் மேல் தாவியபோது கால்கள் இரண்டையும் மேலே தூக்கி தப்பியது சிவாவுக்கு நினைவுக்கு வந்தது. அங்கே ஒரு நாய்க்கே அப்படி என்றால் இருபது குரங்குகளை எப்படி சமாளிப்பேன் என்று நினைத்தவாறே சைக்கிளை மிதித்தான் சிவா. அவனுடைய பயத்தில் இதயம் படபடவென்று அடித்தது. ஏற்கனவே சைக்கிள் மிதித்தில் வியர்த்திருந்தது இப்போது மிகவும் அதிகமாக வியர்த்தது. படபடப்பு அதிகமானதில் வேகமாக பெடல் செய்ய ஆரம்பித்தான் சிவா. எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக அழுத்தினான். பயத்தில் எழுந்து நின்று பெடல் செய்ய ஆரம்பித்தான். அதில் அவன் தலையில் இருந்த தொப்பியை கவனிக்க மறந்து விட்டான். நியூட்டன்ங்கற விஞ்ஞானி ‘ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர் வினை உண்டு’ன்னு கண்டுபிடிச்சு சொன்னார். புரியிற மாதிரி சொல்லணும்னா  விரல்ல இரப்பர் பேண்டை மாட்டிக்கிட்டு அத இழுத்து விட்டா திரும்பி வந்து உன்ன அடிக்கும்ல அதுதான். அதுமாதிரி சிவா சைக்கிளை வேகமாக பெடல் செய்யும்போது அடித்த எதிர்காற்றில் அவன் தொப்பி பறந்து அதுவும் அந்த குரங்குகள் நின்று கொண்டிருந்த பகுதியில் விழுந்தது. பதட்டத்தில் உறைந்து விடுவான் போல அப்படி இருந்தது அவனுக்கு. இருந்தாலும் அவனுக்கு மிகவும் பிடித்த தொப்பி என்பதால். மெதுவாக அந்தக் குரங்குகளை நோக்கி சென்று தொப்பியை எடுத்துக் கொண்டு ஒரே ஓட்டமாக சைக்கிளை நோக்கி ஓடினான். இவன் ஓடியதைக் கண்டு பதறி குரங்குகள் எதிர் திசையில் ஓடின. மற்ற குரங்குகள் இந்த நடவடிக்கைகளைக் கண்டு அமைதியாக மரத்தில் சாய்ந்தது. தூங்கும் நேரம் போல…!
ஒரு வழியாகக் கடந்து விட்டோம் என்கிற நிம்மதியில் சைக்கிளை மிதித்தான் சிவா, அதிகமாக வியர்த்ததாலும், களைப்பிலும் தண்ணீர் தாகம் எடுக்க ஆரம்பித்தது. தண்ணீர் எங்கே கிடைக்கும் என்று சுற்றி முற்றி பார்த்துக்கொண்டே சைக்கிளை அழுத்தினான். தார் ரோட்டில் இருந்து வெப்பம் வேறு அதிகமாக கீழிருந்து மேலே ஏறிக் கொண்டிருந்தது. அப்போது தான் சிவாவுக்கு ஆறுதல் தரும் வகையில் தூரத்தில் ஒரு ஐஸ் விற்பவன் ஐஸ் பெட்டியை சைக்கிளில் கட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தது தெரிந்தது. அப்பாடா! நல்லவேளை தாகம் தீர்;த்துக் கொள்வதற்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது, ஐஸை சாப்பிட்டு தாகம் அடக்கலாம், எப்படியும் இந்த சாலையில் தான் வர வேண்டும் என்று எண்ணியவாறே அருகில் இருந்த வேப்ப மரத்தின் கீழ் சைக்கிளை நிறுத்தி தரையில் அமர்ந்தான். வேப்பமர குளி;ர்ந்த காற்று அவனை மென்மையாக வருடியது. அதன் இனிமையை தலையை தூக்கியபடி கைகளை பின்புறம் வைத்துத் தாங்கி கால்களை நீட்டிக் கொண்டு உட்கார்ந்தபடியே அனுபவித்தான்.
ஐஸ் விற்பவன் வந்த பாதையை நோக்கினான், ஐயையோ! ஐஸ் விற்பவனைக் காணவில்லை! தாகம் தணிக்க அப்போது இருந்த ஒரு வாய்ப்பையும் இழக்க மனம் வரவில்லை. ஆதலால், அவசர அவசரமாக எழுந்து ஐஸ் விற்பவன் வந்த திசையை நோக்கி சைக்கிளை அழுத்தினான். கொஞ்சதூரம் சென்ற போது வலது பக்கம் ஒரு மண் குறுக்குப்பாதை திரும்புவது தூரத்தில் இருந்தே தெரிந்தது. ஒரு வேளை அந்த வழியாகச் சென்றிக்க வேண்டும் என்று தோன்றியது. சப்பாத்திக் கள்ளி அந்தப் பாதையின் இருபுறமும் வேலியாக வைத்திருந்ததால் ஐஸ் விற்பவன் தூரத்தில் இருந்து சரியாகத் தெரியவில்லை. கிட்டத்தட்ட அந்த குறுக்குப் பாதையை நெருங்கினேன். ஒரு சிறு இடைவெளியில் அந்த ஐஸ் விற்பவன் நின்று கொண்டிருந்தது தெரிந்தது.
ஆனால், அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்…? சைக்கிளை அப்படியே நிறுத்தி கவனித்தான். அந்த ஐஸ் விற்பவன் சேமியா ஐஸ், தேங்காய் ஐஸ்,  பால் ஐஸ் என்று
ஒன்றொன்றாக எடுத்து ஒன்று அல்லது இரண்டு முறை சப்பிவிட்டு திரும்பி உள்ளே ஐஸ் பெட்டியில் வைத்தான். அடப்பாவி! இப்படி பண்றானே? தாகம் எடுத்தால் ஏதாவது ஒரு ஐஸை சாப்பிட்டு தாகத்தைத் தீர்;த்துக் கொள்ளலாம் அல்லவா? அதை விட்டுவிட்டு ஐஸை சப்பி சப்பி திரும்பி உள்ளே வைத்தால் என்ன அர்த்தம்? இதைத் தான் நாம் சாப்பிட வேண்டுமா? இது நுகர்வோருக்கு செய்யும் துரோகம் அல்லவா, ஒரு ஐஸில் என்;ன இலாபம் வந்து விடப் போகிறது. இவன்கிட்டேயா நான் போயி ஐஸ் வாங்கிச் சாப்பிடனும்னு நெனச்சேன், அதுக்குப் பேசாமல் தாகத்தோடவே இருந்துவிடலாம்னு கிளம்பினான் சிவா, அவனுக்கு அப்போதுதான் புரிந்தது.
எவ்வளவு நாள் நாம ஹோட்டல்ல சாப்பிடறோம், அது என்ன சுத்தமா, சுகாதாரமா இருக்குன்னு பார்க்கறோமா என்ன? எத்தனை குளிர்பானத்துல பூச்சிகள் விழுந்து கிடக்கிறதை நாம் பேப்பரில் படிக்கிறோம்? எத்தனை பளபளப்பான காய்கறிகள் வேக்ஸ் தடவியும், பூச்சிமருந்துடனும் வருகின்றன? எத்தனை தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் நமது மத்தியில் எளிதில் உலவுறதப் பார்க்கிறோம?. எத்தனை மருந்து மாத்திரைகள் தடை செய்யப்பட்டவை தடையில்லாமல் விற்கப்படுவதை பார்க்கிறோம்? ஆனால், இதையெல்லாம் யார் கேட்கிறார்கள் ஆங்காங்கு ஒரு 10 பேர் மைக் போட்டு சத்தம் போடுவது மட்டும் தான் தெரிகிறது. ஆனால், அதனால் தீர்க்கமான முடிவு கிடைப்பதில்லையே. அதையெல்லாம் பார்க்கும் போது, ஐஸ் விக்கிறவன் செஞ்சது சின்னதுதான். ஆனால், அதுவும் தப்புதான்.
அடுத்த அரை கிலோ மீட்டர் தூரத்தில் இளநீர் குலைகளுடன் வந்தவரை மறித்து இளநீர் அருந்தி ஒருவழியாக தாகத்தைத் தீர்த்துக் கொண்டான். ஒரு வழியாக சைக்கிளை அழுத்தி நகரத்தையும் அடைந்தான். ஆனால், இப்போது அவனுக்கு சைக்கிளை அழுத்துவது மிகவும் சிரமமாக இருந்தது. வேக வேகமாகக் கடந்து செல்லும் வாகனங்கள், ஓய்வில்லாத இரைச்சல், துர்நாற்றம், வானளாவிய கட்டிடங்கள், ஓரே கட்டிடத்தில் 50 குடும்பங்கள், எங்கு நோக்கினும் விளம்பரத் தட்டிகள், சினிமா போஸ்டர்கள், அதிரடியாக செல்லும் ஆட்டோக்கள், சாக்கடையாகச் செல்லும் வாய்க்கால்கள் என நகரத்திற்குள் நுழைந்தவுடன் சிவாவை திக்கு முக்காட வைத்தன. ஆங்காங்கு இரண்டும் மூன்றுமாய் பிரியும் சாலைகளால் குழப்பத்தில் இருந்த சிவா, ஏதோ ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து தேர்ந்தெடுத்து செல்ல முற்பட்டான். ஒருமுறை சாலையை தேர்ந்தெடுத்து செல்லும் போது அது வட்டமாக திரும்பி அவன் ஆரம்பித்த இடத்திலேயே அவனை விட்டது. அப்போது தீர்மானம் எடுத்தான். இனி நாமே சுயமாக முடிவெடுத்து போகாமல் யாரிடமாவது விசாரித்து போக வேண்டும் என்று!. அதன்படியே விசாரித்து செல்லலாம் என முற்பட்டவனுக்கு ஒரு டீ அருந்திவிட்டு செல்லலாம் என்ற யோசனை தோன்றியது. அவனுடைய ஒரே எண்ணம் எப்படியாவது திருச்சியில் இருந்து திருப்பூருக்கு சைக்கிளிலேயே சென்று விட வேண்டும் என்பதுதான்.
டீ குடிக்கச் சென்றவனை ஒரு முதியவர் வழிமறித்தாh. அவருக்கு வயது ஒரு 65 இருக்கும், சிவாவிடம் வந்து தான் ஒரு கணக்கு வாத்தியார் என்றும் தன் ஊர்; என்று ஏதோ ஒரு கிராமத்தின் பெயரைச் சொன்னார். அந்தக் கிராமமும் சிவாவுக்கு தெரிந்த கிராமம் தான்! அவர் தற்போது தன்னுடைய மகள் வீட்டிற்கு வந்ததாகவும், தன்னுடையக் கையில் இருந்த பணத்தைத் தொலைத்து விட்டதாகவும், ஒரு ஏழு ரூபாய் இருந்தால் தருமாறு சிவாவிடம் கேட்டார். சிவா ஏற்கனவே கையில் குறைவாகத்தான் காசு வைத்திருந்தான். ‘கிட்டத்தட்ட நானும் உங்க மாதிரிதான் என்ன, நீங்க கேட்டுட்டீங்க நான் கேட்கலை அவ்வளவுதான்…’ என்று சொல்வதற்கு வாய் வருகிறது. இருந்தாலும், சமாளித்துக் கொண்டு ‘இல்லை’ என்பது போல் தலையை ஆட்டுகிறான். அவரும், இவனிடம் வேலை ஆகாது என்று எண்ணிக்கொண்டே அடுத்து வந்த ஒரு கல்லூரி மாணவனிடம் பேச ஆரம்பித்தார். ஆனால், அந்த மாணவனோ அவர் சொல்வதை முழுசாகக் கூட கேட்கவில்லை, சடாரென ஒரு பத்து ரூபாய் தாளை அவரிடம் நீட்டினான். அவர் சொல்ல வந்த நன்றியைக் கூட கண்டுகொள்ளாமல் வேகவேகமாக கிளம்பினான். சிவாவுக்கு அந்த இளைஞன் கொடுத்த காசானது, ஒருவேளை அவன் அப்பாவினுடைய சம்பாத்தியமாக இருக்கும் என்பது புரிந்தது. அப்பா இருக்கும் போது நம்மை அறியாமலேயே நமக்கு பணபலம் வந்துவிடுகிறது, அதனால் தான் நாம் பணத்தின் மதிப்பைத் தெரியாமல் இருந்துவிட்டோம் என்று ஏதோ ஒரு மூலையில் லேசாக உணர ஆரம்பித்தான். இருந்தாலும் அந்த முதியவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைக் கேட்காமலேயே காசு கொடுத்தது கொஞ்சம் ஓவர் தான். ஒருவேளை இதுபோல் மனிதர்களை அவன் அதிகம் சந்தித்திருப்பானோ என்னவோ? என்று யோசித்துக் கொண்டே அந்த முதியவரைக் கண்டு அதிர்ச்சியடைந்தான். ஏனென்றால், சிவாவிற்கு தெரியும் அந்த இளைஞன் கொடுத்த காசு அந்த முதியவருக்கு தன் ஊருக்குப் போக போதுமானதாக இருக்கும் என்று! ஆனால், அந்த முதியவர் மேலும் சில ஆட்களை அணுகி அதே போல் கேட்டு காசு பெற்றுக் கொண்டிருந்தார்! பிறகு தனியாக சென்று தன்னுடைய சட்டை கை மடிப்பை எடுத்துவிட்டார். அதில் ஒரு 100 ரூபாய் நோட்டும் சில பத்து ரூபாய் நோட்டுகளும் கொஞ்சம் சில்லரையும் இருந்தது. சிவாவுக்கு பார்த்தவுடன் தூக்கிவாரிப்போட்டது, அடப்பாவமே, இப்படியா மக்களை ஏமாற்றி காசு சம்பாதிப்பது? அவர் சொல்வதை உண்மை என்று நம்பி தானே வருத்தப்பட்டு காசு கொடுக்கிறார்கள். அது என்ன மக்கள் வைக்கும் நம்பிக்கையுடன் விளையாடுவது? அதனால் தான், உண்மையிலேயே உதவி தேவைப்படுபவர்களுக்கும்  உதவி கிடைக்காமல் போய்விடுகிறது. மனதுக்குள் நொந்த சிவா மேற்கொண்டு கிளம்ப எத்தனிக்கும் வேலையில் இரண்டு கடை தள்ளி அவனுடைய பெரியப்பா டீ அருந்திக் கொண்டிருநததைக் கவனித்தான். இவனுக்கும் சந்தோஷம் தாங்கமுடியவில்லை. பெரியப்பா என்றால் சிவாவிற்கு எப்பவும் கொள்ளைப் பிரியம்.
‘பெரியப்பா....’ ஆர்வத்தில் கத்திக் கூப்பிட்டான். அவர் சடாரெனத் திரும்பினார். அவர் முகத்தில் கோபம் அப்படி ஒரு கோபம் கொப்பளித்தது!
 “உடனே சிவா தான் வீட்டை விட்டு ஓடி வந்ததை நினைத்து சுதாரித்தவனாய்  சைக்கிளை அவசர அவசரமாகத் திருப்பினான். அதனை புரிந்து கொண்ட பெரியப்பா, ‘டேய், நில்றா’ என்ற குரலைத் தொடர்ந்து வேகமாக அவனை நெருங்கி வந்தார். அவர் கண்கள் சிவந்திருந்தது. “லெட்டரா எழுதி வச்சுட்டு வர்றே.. மவனே…’ என்று வார்த்தையை முடிப்பதற்குள் ‘பளார்’ என்று சிவா கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார். அத்துடன் நிறுத்தாமல் சிவாவின் காதைப் பிடித்து திருகினார். திருகலின் வலி தாளாமல் சிவா அப்படியே எம்பி குதி காலில் நின்றான். அந்தத் திருகலில் அவன் கண்ணில் இருந்து அவனையறியாமல் கண்ணீர் துளி எட்டிப் பார்த்தது.
அப்புறம் அவன் அப்பா அவன் ஆசைப்பட்ட மாதிரியே அவனை திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் சேர்த்து விட்டார். முதல் மாத சம்பளமும் வாங்கினான். அந்தக் காசை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று சிவாவிற்கு தெரியவில்லை. தனக்கு அறை வாடகை கொடுப்பது, சாப்பாடு கடன் அடைப்பது என்று செலவுகள் இருந்தாலும் சிவாவிற்கு செலவு செய்ய மனது வரவில்லை.
திடீரென்று ஒரு யோசனை வந்தவனாய் பக்கத்தில் இருக்கும் வங்கிக்குச் சென்று தன் தந்தையின் வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பினான். அனுப்பிய கையுடன் தந்தைக்கு போன் செய்து பேசினான். தந்தைக்கு ஒரு கணம் பேச்சு வரவில்லை. இருந்தும் சமாளித்தவராய், ‘ஏண்டா, எல்லா காசும் எனக்கு அனுப்பிட்டா, நீ என்ன பண்ணுவ? இங்க நாங்க நல்லாத்தான் இருக்கோம், வேணும்னா உங்க அம்மாகிட்ட கொடுக்கிறதுக்காக ஒரு 1000 ரூபாய் மட்டும் இருக்கட்டும் அவ உன் காசுங்கறதால கடவுளே கொடுத்ததா நினைச்சு சந்தோஷப் படுவா. மத்த காசெல்லாம் உனக்கு அனுப்பிடறேன். நீ நல்லதா டிரெஸ் எடுத்துக்க, உனக்கு கூலிங் கிளாஸ் பிடிக்கும்ல ரே பான் கிளாஸா வாங்கிக்க.. உனக்கு புடிச்ச மாதிரி இரு. ஆனால், பணம் உன்னோட சம்பாத்யம் அத மட்டும் மறக்காத…”
“அப்பா… கடைசியாக முடித்ததில் ஒரு அர்த்தம் இருந்தது. அது என் சம்பாத்யம் நான் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். தன் வீட்டில் இருக்கும் தாத்தா, பாட்டி, அம்மா, நான் மற்றும் எனது தங்கையுடன் என் தந்தையும் சேர்த்தால் மொத்தம் ஆறு பேர் ஆனால், அனைவரையும் அப்பா சொன்ன அந்த ஒரே சம்பளத்தின் மூலம் முகம் சுளிக்காது காப்பாற்றி வந்தார். எவ்வளவு பாடு படுத்தியிருப்பேன்? ;ஆனாலும் எங்கிட்ட பாசத்த மட்டும் தானே காட்டினார். அப்பா… நீங்க உண்மையிலேயே கிரேட் பா” சிவா தன் தந்தை தனக்காக செய்த தியாகங்களை நினைத்துப் பார்த்தான். தன் அறையில் யாரும் இல்லை என்பதை உணர்ந்த அவன் விம்மி விம்மி அழுதான். தான் எவ்வளவு அலட்சியமாக, ஊதாரியாக நடந்திருக்கிறேன். இந்தப் பணத்தைச் சம்பாதிக்க என் அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டும். கண்களைத் துடைத்துக் கொண்டான். சிவாவின் இதயத்தில் இருந்து ஒரு பாரம் குறைந்தது போன்று இலேசாக உணர்ந்தான். அது அவனுக்கு சுகமாக இருந்தது. இனி அப்பாவின் பாரத்தை நான்; சுமக்கப் போகிறேன். சுகமான சுமைதான்…!
புது உற்சாகம் கிடைத்தவனாய் சிவா வேலைக்குக் கிளம்பினான் சிவா.

Sunday, 3 May 2020

நமது விளையாட்டுக்கள்


நமது விளையாட்டுக்கள் பகுதியினை இதுநாள் வரை பார்த்து ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்.
விளையாட்டுகள் வரிசையில் இன்னும் நிறைய இருக்கிறது.
கோலி  (பேந்தா, சதுரப் பேந்தா, இருகுழியாட்டம், முக்குழியாட்டம், ஒன்பது குழியாட்டம், தெல் போன்றவை)
வண்டி விளையாட்டுகள் (டயர் வண்டி, நுங்கு வண்டி போன்றவை)
கிளித்தட்டு (பாரிக்கோடு போன்ற ஆட்ட முறை)
மரக்குரங்கு
பம்பரம் (ஓயாக்கட்டை, தலையாரி, உடைத்தகட்டை, பம்பரக்குத்து, இருவட்டக்குத்து போன்றவை)
சில்லி விளையாட்டுகள்
கிட்டிபுள்
பிள்ளையார் பந்து
காயா பழமா
கிச்சுக் கிச்சுத் தாம்பூலம்
பட்டம்
ஏழுகல் அல்லது  7 ஸ்டார்
குதிரைக்குக் காணங்கட்டுதல்
உந்திப்பற
வரிசை விளையாட்டுகள்
குதிரைச்சில்லி
நிலாக்குப்பல்
நின்றால் பிடித்துக் கொள்
சங்கிலி புங்கிலி கதவைத் திற
கிளியா கிளியா
டிக் டிக்
.
.
.
என்று பட்டியல் நீள்கிறது.
ஆனால், விளையாட்டுகளைப் புத்தக வடிவில் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கான பிண்ணனி பணிகள், விளையாட்டுகளை ஒருங்கிணைத்தல், குறிப்பிட்ட வடிவமைப்பின் கீழ் விளக்குதல், அதற்கான படங்களை உருவாக்குதல் என பல பணிகள் இருப்பதனால் முகநூலில் விளையாட்டுகள் பதிவினை எழுதுவதை தற்போது நிறுத்துகிறேன்.
தாங்கள் ஒருவேளை தங்களுக்குத் தெரிந்த விளையாட்டுகள் ஏதேனும் பதிவு செய்தால் அது நான் வைத்திருக்கும் விளையாட்டு பட்டியலில் இல்லையென்றால் அந்த விளையாட்டுகளும் சேர்த்துக் கொள்ளப்படும்.
தங்களுடைய மேலான ஆதரவுகளுக்கு நன்றி!

Saturday, 2 May 2020

நமது விளையாட்டுக்கள் 30

கண்ணாம் பொத்தி:
இந்த விளையாட்டு கண்களைப் பொத்தி விளையாடுவதால் கண்ணாம்பொத்தி என்றும் அழைக்கப்படுகிறது. கண்ணாம்பொத்தி என்ற வார்த்தை திரிந்து கொச்சைவடிவில் கண்ணாம்பூச்சி என்றும் கண்ணாமூச்சி என்றும் வழங்கப்படுகிறது.
குறைந்தது 5 நபர்கள் இருத்தல் நலம்.
இதில் விளையாடுபவர்களை முட்டை எனக் கருதப்படுவர்.
 இந்த விளையாட்டில் மூத்தவராக இருக்கும் ஒருவர் பட்டவரின் கண்களை இறுகப் பொத்திக் கொள்வார்.
மூத்தவர்: கண்ணாம் கண்ணாம் பூச்சி
காட்டுத் தலைப் பூச்சி
முட்டை பூச்சி
மொழுகு தண்ணி பூச்சி
மொத்தம் எத்தனை முட்டை இட்ட?
(உடனே பட்டவர் ஒளிந்திருக்கும் நபர்களின் எண்ணிக்கையை சொல்லுவார். உதாரணமாக ஒளிந்திருப்பவர்களின் எண்ணிக்கை 8 என்றால்)
பிள்ளை: எட்டு முட்டை
மூத்தவர்: எட்டுமுட்டையில ஊளை முட்டையை தின்றுவிட்டு
நல்ல முட்டையைக் கொண்டு வா
என்று கூறி கண்களைத் திறந்து விடுவார். பட்டவர்கள் உடனே ஒளிந்திருக்கும் நபர்களை கண்டறிந்து அவர்களைத் தொட வேண்டும். யாரை முதலில் தொட்டாரோ அவர் பட்டவராக இருப்பர். அடுத்து அவருடையக் கண்களைப் பொத்த வேண்டும். பட்டவர் கண்டுபிடித்து பிடிப்பதற்குள் ஒளிந்திருப்பவர்கள் ஓடிவந்து கண்களைப் பொத்தியவரை வந்து தொட்டு விட்டால் பட்டவர் அவர்களைத் தொடக் கூடாது. அனைவரும் வந்து தொட்டு விட்டால் பட்டவர் கண்களை மறுபடியும் பொத்தி விளையாட வேண்டும்.
இந்தப்பாடல் கீழ்கண்டவாறும் பாடப்படுகிறது.
மூத்தவர்: கண்ணாம் பொத்தியாரே, கண்ணாம் பொத்தியாரே!
பிள்ளை : என்ன?
மூத்தவர்: எத்தனை முட்டையிட்டாய்?
பிள்ளை : எட்டு முட்டையிட்டேன்
மூத்தவர்: அவற்றுள் ஆறு முட்டையைப் பொரித்துத் தின்றுவிட்டு, ஒரு முட்டையைப் புளித்தத் தண்ணீரில் போட்டுவிட்டு, ஒரு முட்;டையைப் பிடித்துக் கொண்டு வா
மேற்கூறிய பாடலை புலால் உண்ணாதவர்கள் கீழ்க்கண்டவாறு பாடுவர்
மூத்தவர்: எத்தனைப் பழம் பறித்தாய்?
பிள்ளை : எட்டுப் பழம்
மூத்தவர்: அவற்றுள் ஒரு பழத்தைப் பிள்ளையாருக்குப் படைத்துவிட்டு, 6 பழத்தை அறுத்துத் தின்றுவிட்டு, ஒரு பழத்தைப் பிடித்துக் கொண்டு வா
என்று பாடுவார்.
இந்த விளையாட்டில் பட்டவரை பாம்பாகவும் ஒளிந்திருப்பவர்களை முட்டைகளாகவும் கருதும் வழக்கமும் உண்டு.
பள்ளிக்குச் செல்லாமல் ஒளிந்து திரியும் திண்ணைப் பள்ளி மாணவர்களை பிடித்து வருவதில் இருந்தோ அல்லது சிறைக்குத் தப்பி ஒளிந்து திரியும் குற்றவாளிகளை ஊர்காவலர் பிடித்துவருதில் இருந்தோ இந்த விளையாட்டு தோன்றியிருக்கலாம் என தேவநேயப் பாவாணர் குறிப்பிடுகிறார்.
நன்றி:
தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்
படம்:
https://yourstory.com/tamil/7f37e2d242-the-ancient-tamil-trad

Friday, 1 May 2020

நமது விளையாட்டுக்கள் 29

குலை குலையாய் முந்திரிக்காய்:
இவ்விளையாட்டில் வரும் பாடலின் முதல் வரியைக் கொண்டு இவ்விளையாட்டின் பெயர் அமைந்துள்ளது.
இந்த விளையாட்டிற்கு 10 நபர்களாவது இருத்தல் வேண்டும்.
இதில் ஏதேனும் ஒரு முறையில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் நரியாக மற்றவர்களை வலம் வருவார். மற்றவர்கள் வட்டமாக அமர்ந்திருப்பர்.
நரிக்கும் உட்கார்ந்திருப்பவர்களுக்கும் நடக்கும் உரையாடல் போல் இந்த விளையாட்டு அமையும்.
பாடல் பின்வருமாறு அமையும்: (பாடல் இடத்திற்கேற்ப மாறுபடலாம்)
நரி: குலைகுலையாய் முந்திரிக்காய்
அமர்ந்திருப்போர்: நரியே நரியே சுற்றிவா
நரி: ஓட்டு மேல ஏறுவேன்
அமர்ந்திருப்போர்: ஈட்டியால குத்துவேன்
நரி: பச்சரிசி தின்பேன்
அமர்ந்திருப்போர்: பல்லை உடைப்பேன்.
நரி: சுடச்சுடக் காப்பி
அமர்ந்திருப்போர்: சூடான காப்பி
நரி: எத்தனைப் பெட்டியைக் காணோம் 
அமர்ந்திருப்போர்: தேடித் தேடிப் பார்க்கிறேன்
நரி: சும்மா பசிக்குது
அமர்ந்திருப்போர்: சோறு போட்டுத் தின்னு
நரி : கப்பல் கவுந்து போச்சு
என்று சொன்னதும் அனைவரும் குனிந்து கொள்வர். நரியாக இருப்பவர் யார் மீதாவது துணியை வீசிவிட்டு சுற்றி வருவார். அதற்குள் யார் மீது துணி விழுந்துள்ளது என்பதை துணி யார் மீது விழுந்துள்ளதோ அவர் கவனித்து விட்டு அவர் சுற்றி வருவதற்குள் நரியாக இருப்பவரைத் தொட்டுவிட்டால். நரியாக இருப்பவரே மறுபடியும் நரியாக வலம் வருவார். இல்லையெனில் நரியாக சுற்றி வந்தவர் ;யார் மீது துணியை போட்டாரோ அவர் நரியை விரட்டி பிடிப்பதற்குள், எழுந்தவர் இடத்தில் உள்ள காலியான இடத்தில் நரியாக இருந்தவர் அமர்ந்து கொள்வார். அவரைப் பிடிக்க முடியாமல் போனவர் இப்போது நரியாக சுற்றி வருவார். ஒருவேளை தன் மீது துணி விழுந்ததைக் கவனிக்காமல் இருந்து அதற்குள் நரியாக இருந்தவர் சுற்றி அந்த இடத்திற்கு வந்துவிட்டால் துணி எவர் மீது இருக்கிறதோ அவரை முதுகில் தட்டி எழுப்பி நரியாக இருந்தவர் அமர்ந்து கொள்வார்.
இந்த விளையாட்டில் பயன்படுத்தப்படும் துணியை திரிபோல சுற்றிப் பயன்படுத்துவதால் இந்த விளையாட்டிற்கு திரித்திரி பந்தம் என்ற பெயரும் உண்டு.
பாண்டி நாட்டு முறையில் விளையாடுபவர்கள் வட்டமாக அமராமல் நேராக அமர்ந்து விளையாடுவர். இதற்கு யானைத்திரி என்று பெயர்.
நன்றி:
தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்